ஒரு பெரீய கொம்பானை

வெகுநாட்களாக எனக்கிருந்த சந்தேகம் மதமும் பகுத்தறிவாதமும் மனிதன் உருவாக்கியதா அல்லது ஒன்றன் பின் ஒன்று உருவாகியதா என. இதனுள்ளேயே அர்த்தம் இருப்பதாய் உணர்கிறேன். பகுத்தறிவாதம் மதத்தை எதிர்க்கும் நோக்குடனேயே இல்லை. மாறாக இயற்கையுடன் ஒன்றான அமைதி நிரம்பிய வாழ்வியல் முறைக்கு வித்திடும் ஒன்று எனக் கொள்ளலாம். ஆக இயற்கைக்காக போராடும் ஒருவனைக் கூட பகுத்தறிவாதி என்று சொல்ல நினைக்கிறேன். இதை மதத்துடன் இணைத்ததன் காரணம் நம் நாட்டில் செய்யப்படும் எல்லா விஷயங்களும் மதங்கள் சார்ந்து இயங்கி வந்திருக்கின்றன. மதக் கதைகளின் மூலமே அறங்கள் போதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மதங்களும் தனக்கே உண்டான மத நூல்களில் கதைகளின் மூலம் அறத்தை போதிக்கிறார்கள். இந்த போதனைகள் இயற்கையையும் உள்ளடக்குகின்றது.

சில நேரங்களில் இதை ஒடுக்குதலாகவும் பார்க்கலாம். ஆனால் மனிதன் கடவுளை ஒரு ஸ்தூலமாக்கியதன் மூலம் எல்லாவற்றையும் அதனுள் அடக்க முனைந்திருக்கிறான். செய்யும் எல்லா செயல்களுக்கும் நிகழும் அனைத்து சம்பவங்களுக்கும் காரணத்தை கடவுளிடம் வைக்க நினைத்தான். இவை வாய்மொழிச் சொல்லாடல்களாகவும் பிராந்தியங்களிடமும் நெறிமுறைகளாகவும் மாற்றம் கொண்டிருக்கின்றன. அரைக்கால்சராய் போட்டுக் கொண்டு படிக்கும் நேரத்தில் அம்மா கையை தரையில் ஊன்றி படிக்காதே என்பாள். ஏன் என்றால் பூமாதேவி நீ படிக்கறத எடுத்துக்குவா என்பாள். சந்தேகமே வரும் பூமாதேவிக்கு படிப்பறிவில்லையா என!

ஒவ்வொரு வீட்டிலும் வாய்மொழிக் கதைகள் நிறைய இருக்கின்றன. இவற்றையெல்லாம் தர்க்கமாக்க யாரும் முனைவதில்லை. அப்படி முனையும் தருணத்தில் கடவுளை நிந்திப்பவனாக காஃபிராக சித்தரிகப்படுகிறான். அடையாளப்படுத்தப்படுகிறான். அவனுக்குள் ஒரு உண்மை இருக்கக் கூடும் என்று யாரும் எண்ணுவதில்லை. இன்னுமொரு விஷயமும் இதனுள் இருக்கிறது. முழுதும் அறிந்த ஒருவனால் தான் அதை எதிர்த்து தீர்க்கமாக பேச இயலும். ஆக வாதியும் பிரதிவாதியும் ஒரு விஷயத்தை சம அளவில் அறிந்திருக்கிறார்கள் என்பது ஒரு சாராருக்கு தெரிவதில்லை. குருட்டுத் தனமாக நம்பிக்கைகளை பின்பற்றுகிறார்கள். இன்னமும் சரியாக சொல்லவேண்டுமெனில் நிறுவப்பட்ட நம்பிக்கைகளை பின்பற்றுகிறார்கள்.

இதுவரை சொல்லப்பட்ட விஷயங்கள் யாவும் விதிமுறைகள் போன்றது. எல்லோருமே இதனை கடந்து தான் வர வேண்டியிருக்கிறது. மதத்தை கடந்து தான் அவரவர் விருப்பத்திற்கு இணங்க எதிர்க்கவோ ஆதரிக்கவோ ஆரம்பிக்கிறார்கள். இந்த கடந்து போகும் தருணங்களில் நாம் சிறுவர்களாக வெகுளிகளாக வெள்ளந்திகளாக இருக்கிறோம். சொல்பவற்றையெல்லாம் எளிதிள் மனதுள் படியும் தருணத்தில் எல்லாமே விதைக்கப்படுகின்றது. இந்த வெகுளியான உலகத்திடம் நிறுவப்பட்ட நம்பிக்கைகள் எப்படி ஆட்டம் காண்கிறது என்பதை நாவலாக்கியிருக்கிறார் மலையாளத்து எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர். தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் குளச்சல் மு.யூசுப். நாவலின் பெயர் “எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது”.இதே நிலவியலை கையிலெடுத்து கதையின் நாயகிக்கு இதையே கற்பித உலகமாக்கியிருக்கிறார். நாவலின் மையம் இசுலாமிய மதத்தில் இருக்கிறது. ஹிந்து மற்றும் கிறித்துவ மத கதைகளையும் அதனிலிருந்து சமூகத்திற்கு கொடுக்கப்பட்ட அறம் சார்ந்தும் கதைகளில் குறைந்தபட்சம் வாசித்திருக்கிறேன். இந்நிலையில் தான் இந்நாவலை வாசிக்க நேர்ந்தது. கீரனூர் ஜாகீர்ராஜா முன்வைக்கும் வட்டார இசுலாமிய போக்கு அம்மதம் தெரியாத என்னைப் போன்றோருக்கு கடினமாகவே இருக்கிறது. மற்றவர்களைப் பற்றி தெரியவில்லை எனக்கு கடினம் தான். இவரோ இசுலாமிய மதப்போக்கை எளிமையாக விரிவாக்கி அதை பகடியும் செய்கிறார். சாத்தான் நன்னம்பிக்கைகள் அறங்கள் கூறப்படும் விதம் எல்லாவற்றையும் மிக அழகாக சொல்லுகிறார்.

நாவலில் மதம் சார்ந்து நிறைய இருந்தாலும் ஒரு விஷயம் என்னை பாதிக்கவே செய்தது. எழுத்தும் சிந்தனையும் மதத்தை எதிர்க்கும் என்பதை மதங்கள் போதிக்கின்றது. இதனாலேயே நாவலில் சில கதாபாத்திரங்கள் படித்தவர்களை காஃபிர்கள் என்று சொல்லுகிறார்கள். அதே நேரம் இசுலாமிய மத நூலில் வரும் முதல் வரி யாதெனில் “வாசிப்பீராக! எழுதவும் வாசிக்கவும் படியுங்கள்”. இதை கதைமாந்தர்கள் தர்க்கமாக்குகிறார்கள் ஏன் படித்து கடவுளை நான் வழிபடக் கூடாது என்று. இந்த தர்க்கத்தை மேற்கொள்ளும் கதாபாத்திரமான நிஸார் அகமது நாவலின் தனிப்பட்ட சிந்தனாவாதியாக தெரிகிறான். ஒருவேளை இது பஷீராகவே இருக்கக் கூடுமோ என்னும் அளவு இந்நாவலின் அமைப்பு இருக்கிறது. அந்த கதாபாத்திரம் மட்டும் ஆழமாக சித்தரிகப்படுகிறது, இத்தனைக்கும் குறுகிய பக்கங்களில்.

நாவலின் சிறப்பே இந்நாவலின் தலைப்பு தான். மலையாளத்தில் உப்பப்பா எனில் தாத்தா. தாத்தாவிடம் ஒரு யானை இருந்திருக்கிறது. இதை அவரின் மகளான குஞ்ஞுதாச்சுமாவுக்கு தெரிந்து அதை அவளின் மகளான குஞ்ஞுபாத்துமாவுக்கு சொல்லுகிறாள். வசனத்தாலேயே அவள் ஈர்க்கப்பட்டுவிடுகிறாள். இந்த வசனம் மட்டுமே நாவல் முழுக்க வருகின்றதே ஒழிய யானை வரமறுக்கிறது. யானை வரக் கூடிய எல்லா சாத்தியங்களையும் நாவல் கைகொள்கிறது. எழுதப்படும் விதம் அப்படி இருக்கிறது. இதை குறியீடாக்குகிறார்.

யானையை வைத்திருந்ததால் கம்பீரமான குடும்பம் என்னும் நிலையில் அம்மா இருக்கிறாள். மதத்தை அவர்கள் தான் முழுதுமாக பின்பற்றுகிறார்கள் என்னும் கர்வத்துடன் வாழ்கிறாள். குடும்பநிலை எதிர்திசையில் பயணிக்கும் போதும் அவளுடன் கர்வமும் யானையின் சொல்லாடல்களும் இணைபிரியாமல் வருகின்றன. மகளான குஞ்ஞுபாத்துமா தான் நாயகி. வெகுளி. வெள்ளந்தி யாவும்.

இவளைச் சுற்றி காஃபிர்களாக சொல்லப்படுபவர்களும் இருக்கிறார்கள். வேறு சில மக்களால் சித்தரிக்கப்படுகிறார்கள். இதுதான் மதம் என்று போதிப்பவர்களும் இருக்கிறார்கள். இருத்தலை சந்தேகிப்பவர்களும் இருக்கிறார்கள். சுருங்க சொன்னால் கேள்விகளை எழுப்பக் கூடிய எல்லா சாத்தியப்பாடுகளையும் சுற்றி வைத்துக் கொண்டு நாவலில் பயணிக்கிறாள். அவளின் பயணம் எங்குமே சோகமயமானதாக இல்லை. நாவல் முழுக்க அவள் விளையாடிக் கொண்டே இருக்கிறாள். திருமணம் என்னும் சம்பவத்தை இணைக்கும் தருணத்தில் மட்டுமே அவள் பதின் வயதினையொத்தவள் என்பதை உணரமுடிகிறது.

அதற்கான சின்ன உதாரணம் எனில் அவள் கொள்ளும் கோபத்திற்கான காரணம் அவளுடைய பெயரை வேறு சிலரும் வைத்திருக்கிறார்களே என. இந்த குழந்தைத் தனமான விஷயத்தை கைகொள்ளும் பஷீர் அதை தேசியமயமாக்குகிறார். மேல்தட்டு மக்களும் கீழ்தட்டு மக்களும் ஒரே பெயரை வைத்திருக்கிறார்கள். அதற்கு பஷீர் சொல்லும் வார்த்தைகள் யாதெனில்

தனபாக்கியவான்களின் பெயரை ஏழை பாழைகள் வைத்துக்கொள்ளக்கூடாது என்று சட்டமொன்றுமில்லை. ஒருவேளை இதன் மூலமாவது இவை இரண்டும் சந்தித்துவிடாதா என்கிற ஆசைதான்!

இவளுடைய உலகத்தை மிக சிரத்தையாக குழந்தையையொத்து இயற்றியிருக்கிறார். குழந்தைகளின் உலகம் முழுக்க போதிக்கப்பட்ட அறத்தால் நிரம்பியிருக்கிறது. அந்த அறத்தை யதார்த்த வாழ்வில் அவர்கள் பழகுகிறார்கள். அனுபவங்கள் கிடைக்கின்றது. இங்கு குஞ்ஞுபாத்துமா பறவைகளிடம், தன் இரத்தத்தை உறிஞ்சும் அட்டையிடம் பாவம் செய்யாதே என்று போதிக்கிறாள். பேசுகிறாள். இயற்கையாலேயே சந்தோஷம் கொள்கிறாள். ஆனால் மீனை தின்பது சரியா என்னும் கேள்வி அவளின் வயதை அவளுக்கு நினைவூட்டுகின்றது.

இது மட்டுமில்லாமல் இவள் சந்திக்கும் நபர்கள் அவர்கள் மூலம் அவள் அறியும் விஷயங்கள் யாவுமே யதார்த்த வாழ்வில் விடுக்கப்படும் மர்மங்களின் உருவத்தை கொடுக்கின்றது. சில விடுபடாத விஷயங்கள் ஏமாற்றங்களை கொடுக்கின்றன. விடுபடும் சில விஷயங்கள் அதிசயிக்கதக்க உணர்வை கொடுக்கின்றன. இரண்டும் இணையும் உருவம் தான் குஞ்ஞுபாத்துமா.

பஷீரின் எழுத்துமுறையை சொல்லியே ஆக வேண்டும். நிறுவப்பட்ட நம்பிக்கைகளை வெகுளித்தனத்தை முன்வைத்து உடைக்கும் பஷீர் யானையை உடைக்கும் விதம் தான் உச்சம். அதை நான் சொல்லமாட்டேன். வாசிப்பில் அது கொடுக்கும் சிரிப்பும் புளகாங்கிதமும் அனுபவம் சார்ந்த ஒன்று. இங்கு மட்டுமல்லாமல் எழுத்தை கையாளும் விதமும் தமிழில் வாசிக்கவே கற்பனை செய்யவொண்ணா விதமாய் இருக்கிறது. மலையாளம் அறிந்து வாசித்தால் அது கொடுக்கக் கூடிய உணர்ச்சியை யூகிக்கவே முடியவில்லை. மனைவியின் படாடோபங்களை காண ஒவ்வாமல் கணவன் சண்டையிடுகிறான்.  அதற்கு இவர் உபயோகிக்கும் வார்த்தைகள்

“பல்லைக் கடித்தபடி மெதுவான குரலில் சொன்னார்
‘நீ சாவுடி.’
கணவனும் மனைவியும்!”

கடைசி வரியில் இருக்கும் ஆழத்தை உணர்ந்து கொள்ள முடிகிறதா ? வாசகனின் வாசிக்கும் உணர்ச்சியை எழுத்தின் மூலம் கட்டுபடுத்துகிறார். இதற்கு எதிர் திசையில் நிஸார் அகமத்தை நாவலில் அறிமுகம் செய்யும் இடத்தில் அவனை கற்பனையில் சித்தரிக்கவே முடியாத வண்ணம், ஆனால் அழகியலில் கொஞ்சமும் குறைவில்லாமல் மர்மமாக கூறிச் செல்கிறார். அழகியல் இசையைப் போல நாவல் முழுக்க வேறு வேறு விதங்களில் நிரம்பி இருக்கின்றது.

இந்நாவல் வாசித்து முடிக்கும் போதும் சரி இதை எழுதும் போதும் சரி, எனக்கும் சொல்லத் தோன்றுகிறது

“எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது. ஒரு பெரீய கொம்பானை”

வாசித்தால் உங்களையும் சொல்லவைக்கும் அற்புதமான புனைவு.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக