மானுடத் தீமையின் கதைசொல்லிஎல்லோருடைய சிறந்த நாவல்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒரு முக்கிய நாவல் தான் ஆ.மாதவனின் கிருஷ்ணப் பருந்து. ஆ.மாதவனின் எழுத்தில் நான் வாசிக்கும் முதல் நாவலும் இது தான்.

ஆ.மாதவனின் எழுத்துலகமும் சரி புனைவுலகமும் சரி என்னை ஈர்க்கவே செய்கிறது. தங்குதடையற்ற கதைசொல்லியாக கதையை சொல்லிக் கொண்டே செல்கிறார். குறுகிய அளவிலான கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து எல்லோருக்கும் தேவையான கதைகளை புனைந்து முழுமையை கொடுக்கிறார்.

ஆரம்ப காலத்திலிருந்து மனிதனுக்குள் நன்மையும் தீமையும் கலந்து தான் இருக்கிறது. எல்லா முன்னிற்கும் நூல்களிலும் அதாவது புராணங்களிலும் நன்மை தீமை ஆகிய இரண்டையும் சமமாகவே கொடுத்திருப்பார்கள். இரண்டில் எடுத்துக் கொள்ள வேண்டியது என்னவோ நுகர்பவர்களின் விருப்பமாக எப்போதும் விடப்பட்டிருக்கிறது. மனித மனத்தினுள் கூட நன்மை தீமை ஆகிய இரண்டும் தான் விதைக்கப்பட்டிருக்கிறது. இரண்டுமே புறத்தோற்றத்தில் வெளிப்பட்டுக் கொண்டும் இருக்கிறது. சதவிகிதங்களில் தான் பிரதான வேறுபாடுகளே அமைகின்றன. ஊர் முழுக்க நன்மைகளையே செய்து கொண்டிருந்தாலும் மனதோரம் வழிந்து கொண்டிருக்கும் தீமைகளையும் கழிவிரக்கங்களையும் யாரும் கண்டு கொள்ளப்போவதில்லை. ஆக மனிதர்கள் எல்லோருமே புறத்தில் ஒரு பிம்பத்தை சுமந்து கொண்டு திரிகிறார்கள்.

இதையும் இரட்டைத் தன்மை என்று சொல்லலாம். காலங்காலமாக நம் சினிமாக்களிலும் இலக்கியங்களிலும் காட்டப்படும் நல்லவனினுள் இருக்கும் தீய குணமும் ரௌடி தாதா போன்ற தீக்குணம் கொண்டவர்களின் மனதில் நல்ல குணங்களும் பொதிந்து இருப்பது. யதார்த்தமாக இந்த குணம் மனிதர்களின் மனதில் எப்படி இருக்கிறது ? இந்த இரு குணங்களுக்கும் மையத்தில் இருக்கும் கோடு மிக மெல்லியது. இந்த மெல்லியதான கோடு மெது மெதுவாக பெரிதாகி பின் உணர்ச்சிகளால் தூண்டப்பெற்று வேறு ஒரு நிலைக்கு செல்கிறோம். அந்நிலை நாம் புறத்தில் ஏனையோருக்கு காட்டும் உருவத்தின் பின்புறமாக இருக்கும். இந்த பிம்ப நிலை மெல்லிய கோடு பின் செல்லும்நிலை என யாவற்றையும் திறம்பட நாவலாக்கியிருக்கிறார். இந்நாவலின் மொழி தான் என்னை மிகவும் ஈர்த்த விஷயம்.

இந்நாவல் நிறைய விஷயங்களை பேசுகின்றது. மனிதனின் அகம் தேடும் விஷயம் தான் என்ன என்னும் கேள்விக்கு பூடகமான பதிலை சொல்லுகின்றது. நாம் உன்னதம் தரிசனம் என்று என்னவெல்லாமோ சொல்லி எங்கெல்லாமோ சென்று கொண்டிருக்கிறோம். இந்நாவலில் ரவி என்னும் ஓவியன் வருகிறான். அவன் வாழ்க்கையும் அவன் மூலமாக நாயகன் குருஸ்வாமியின் ஒரு வாரகால சொல்லமுடியாத இருத்தலும் தான் அந்த வாழ்க்கைக்கான பலன் என்று நாவலின் மூலம் ஆசிரியர் முன்வைக்கிறார். ரவி கோயில் சுவற்றில் வீட்டு சுவற்றில் கடை போர்டுகளில் எழுதுபவன். அவனுக்கு அந்த வேலையில் நாட்டம் இல்லை. கோயிலில் இருக்கும் மர்மமான சிருங்காரங்களை கொண்ட சிற்பங்களை வரைய ஆசைப்படுகிறான். குருஸ்வாமியை வரைய ஆசைப்படுகிறான். அதில் கிடைக்கும் பலன்களை எதிர்பார்க்கிறான். அழகான எழுத்துகள் அவனுக்கு ஒரு வரம் என்பதை அவன் உணர்வதாலேயே அதை உன்னதமான கலைக்கு அற்பணம் செய்ய ஆசை கொள்கிறான். ரவி பங்கு பெறும் ஒவ்வொரு பக்கங்களும் கலைத்துவம் நிரம்பி காணப்படுகின்றன.

குருஸ்வாமி தான் நாவலின் நாயகன். நாவல் முழுக்க அவன் பார்வையில் நகர்கின்றது. வானில் வட்டமிடும் பருந்தை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். உயரத்திலிருந்து பார்க்கின்றது. எல்லோரையும் பார்க்கின்றது. அந்த பருந்தினால் சிறு கண்களினுள் பேதங்களில்லாமல் எல்லோரையும் அடக்கிக் கொள்ள முடியும். அதையே தான் குருஸ்வாமியும் செய்கிறார். அவர் வாழும் தெருவின் வரலாறும் இருக்கும் மக்களின் அகமாற்றங்களும் அவருள் பதிவாகிக் கொண்டே இருக்கின்றன. அவருக்கோ அந்த பதிவுகள் பிடிக்கவில்லை. கோயிலில் சன்னதியினுள் அடைந்து கிடக்கும் கடவுளின் கற்சிலையை விட வெளிப்பிரகாரத்தில் இருக்கும் சிற்பம் பிடித்திருக்கிறது. அதை அவருள் வர்ணிக்கும் விதத்தை பாருங்கள் “திரண்ட முலையும், திறந்த பெண்மையுமாக ஜனன உறுப்பினுள் அண்ட சராசரத்தையும் அடக்கி, அத்தனை காமாக்னியையும் பஸ்மீகாரம் செய்துவிட்ட காமசொரூபி. . .” என்று அவரும் ரவியும் சொல்கிறார்கள். ரவி அதையும் வரையப் பார்க்கிறான்.

நாவலில் ஓவியம் மட்டுமல்ல, இசையும் பங்குபெறுகிறது. எல்லாமே தேடலுடன் இருக்க வேண்டும் என்பது தான் பிரதானமாக முன்வைக்கப்பட்டுகிறது. கதாபாத்திர கூட்டத்தில் தனியாக இருக்கும் மனிதன் நாயகன் குருஸ்வாமி தான். அதனால் தானோ என்னவோ வேட்கை மிகு வாசிப்பை மேற்கொள்கிறான். அது அங்கு இருக்கும் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

இவர்களைத் தவிர என்னை ஈர்க்கும் ஒரு பாத்திரம் பார்வதி. நாவலில் இருக்கும் பெருத்த மௌனம் இந்த கதாபாத்திரம். எங்கேனும் பேசினால் கூட சீக்கிரம் மௌனத்தில் சென்று அமிழ்ந்துவிட வேண்டும் என்னும் அவசரத்தை இப்பாத்திரத்தில் நன்கு உணர முடியும். குருஸ்வாமியால் எல்லா மனிதர்களின் நடவடிக்கைகளையும் பார்த்துக் கொண்டு ஜீரணிக்க முடியாமல் மனதளவில் திணர முடியும் எனில் பார்வதியால் குருஸ்வாமியை. அதற்கு அவள் எடுத்துக் கொள்ளும் வெளி தான் மௌனம்.

கதை என்று சொல்லப்போனால் வேலப்பன் என்பவனை வளர்ப்பு மகனாக வளர்க்கிறார் குருஸ்வாமி. அவன் காதலித்து மணம் செய்து கொள்கிறான். அவர்களுக்கு உறுதுணையாக எதிர்ப்பை கண்டு அஞ்சாமல் குருஸ்வாமி இருக்கிறார். பின் அவன் தொழிலாளர்கள் கூட்டத்தில் தன்னை சேர்த்துக் கொள்ளும் போது அதிகார வர்க்கம் சார்ந்து கோபம் எழுகிறது. எழுகிறது என்பதை விட அவனுடைய சகாக்கள் அவனுள் விதைக்கிறார்கள். உறவுகளை கட்டுடைத்து வளர்த்த குருஸ்வாமியையே மனதால் வெறுக்கிறான். எதிர்ப்பை காட்டுகிறான். இந்த அக வேறுபாடுகளின் விளைவு என்ன ஆயிற்று என்பதையே நாவல் பேசுகிறது. இதனுடைய பக்கங்களில் சொல்வது எல்லாம் அங்கிருப்பவர்களின் வரலாற்றை.

குருஸ்வாமி ஒரு பருந்தை போல தனக்கான பிரம்மாண்டமான வெளியில் பறக்க நினைக்கிறார். அமைதியாக. அந்த அமைதியை மனதிலிருந்து நாடுகிறார். கிடைப்பதற்கான அனுகூலங்கள் எல்லாம் இருக்கின்றன. உணர்ச்சிகளுக்குள் பொதிந்து இருக்கின்றன. அந்த உணர்ச்சிகள் அவருடைய தனிப்பட்ட கடந்தகால தாம்பத்யத்தில் ஒளிந்து இருக்கிறது. அது வெளிப்படும் போது வாசகனாய் நமக்கு ஒரு பிரமிப்பும் நாவலுக்கான முடிவும் நெருங்கி வருகின்றன.

இந்த நாவலின் மொழி அழகியல் நிரம்பியதாய் இருக்கிறது. கதையை விட்டு நம்மை அகற்றாமல் சிந்தித்தாலும் கதைக்குள்ளேயே சிந்திக்க வைக்கும் அளவிலான மொழி. நாவலின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஏற்ற இறக்கமில்லாமல் ஒரே வேகத்தில் மொழியை கையாள்கிறார். கதை தனக்குள் கொண்டிருக்கும் வீரியத்தை மட்டும் நம் அகமாற்றங்காளாக கொடுத்துச் செல்கிறது.

இந்த பதிவிற்கு மானுடத் தீமையின் கதைசொல்லி என்று தலைப்பிட்டதன் காரணம் இந்நூலின் பின்னிணைப்பு தான். நூறு பக்க நாவலுக்கு ஜெயமொகன் எழுதியிருக்கும் முப்பது பக்க கட்டுரை! நாவலையே மறக்கடிக்கும் விதம் இந்த கட்டுரை ஆழமாக இருப்பதே என் வருத்தம். அதை முடிக்கும் போது ஜெயமோகனின் நூலை வாசித்தோமோ என்னும் உணர்வை கொடுத்துவிடுகிறது. இருந்தாலும் அதில் அவரே ஒரு வரியை சொல்லியிருக்கிறார் – விமரிசிகன் கொள்ளும் பகுப்புகள்மீது ஓர் எல்லைக்கு மேல் வாசகன் நம்பிக்கை கொள்ளலாகாது.

ஆ.மாதவனின் உலகம் என்று அவர் எழுதியிருக்கும் கட்டுரை இலக்கிய விரும்பியாக எனக்கு பிடித்தே இருக்கிறது. கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களையும் அவர்தம் நூல்களையும், அதற்கும் அஃதாவது அது வெளியான காலத்திற்கும் அப்போது தமிழ் நாட்டில் நிலவிய விமர்சன பார்வைகளையும் முன்வைத்திருக்கிறார். எல்லா இஸங்களையும்(ரொமாண்டிஸம், மார்டனிஸம். . . ) விளக்கியும் செல்கிறார். இலக்கியம் சார்ந்த மாபெரும் அறிமுகமாக இக்கட்டுரை நிச்சயம் அமையும்.

இலக்கிய பிரியர்களில் அநேகம் பேர் இலக்கியம் தன் அகத்தினுள் கேள்விகளை கேட்க வேண்டும் அது சார்ந்த அகத் தேடல்கள் அவர்களுக்கே உண்டான தரிசனங்களை காட்ட வேண்டும் என்று நிறைய நூல்களை தேடி வாசிக்கிறார்கள். ஜெயமோகன் இக்கட்டுரையில் இலக்கியவாதி கேள்விகளை கேட்கக் கூடாது அப்படி கேட்பதாக இருப்பின் அவனே தன் சுயகோட்பாட்டில் தீர்மானமாய் இல்லை என்கிறார். என் தர்க்கம் ஒருவேளை அந்த எழுத்தாளன் தன் படைப்பில் தன் ஆய்வுகளை கதைகளாக எழுதி அப்படைப்பாகிய பதிலிலிருந்து கேள்வியை வாசகனுக்கு கொடுத்திருக்கலாம் அல்லவா. நான் வாசித்த கொஞ்ச அளவிலான நூல்களில் இதையே உணர்ந்திருக்கிறேன்.

மேலும் இந்த கட்டுரை கிருஷ்ணப் பருந்து நாவலுக்கான கட்டுரையே அல்ல. கட்டுரையின் முக்கால்வாசிப் பகுதி அவருடைய சிறுகதைத் தளத்தையே அதிகம் பேசுகின்றது. ஓரே சமாதானம் கிருஷ்ணபருந்து ஆ.மாதவனின் சிறுகதை உலகின் நீட்சி என்று அவர் சொல்லுவது தான். என் வேண்டுகோள் இக்கட்டுரையை நாவலை வாசித்து சில நாட்கள் கழித்து வாசகர்கள் வாசித்தால் கிருஷ்ணபருந்து கொடுத்த உணர்வையும் அனுபவித்ததாய் இருக்கும் ஜெயமோகனின் தர்க்கத்தையும் அறிந்ததாய் இருக்கும்!

ஆ.மாதவனை தமிழ் இலக்கிய நல்லுலகம் கண்டு கொள்ளாமல் போனதற்கும் அவர் எழுதிய காலகட்டத்தில் வேறு ஒருவரை கொண்டாடிய சமூகம் கொண்டிருந்த மனநிலையையும் சொல்லி, எந்த விதத்தில் அவர் பிற இலக்கியவாதிகளை விட முன்னிற்கிறார் என்பதையும் கூறி ஜெயமோகன் ஆ.மாதவனைப் பற்றி சொன்ன வரிகளே இப்பதிவின் தலைப்பு.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக