இருத்தலும் ஒரு அரசியல் நிலை

இரண்டாம் உலகப் போருக்கு பின் அமேரிக்காவிற்கும் சோவியத் யூனியனிற்கும் இடையே பனிப்போர் நிகழ ஆரம்பித்தது. இது அதிகாரத்தை வெளிக்காடுவதற்கான காரணத்துடன் நிகழ்ந்தது. அப்போது செகஸ்லோவாக்கியா நாடு சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டில் இருந்தது. கம்யூனிஸக் கொள்கையை மையமாக கொண்ட எட்டு நாடுகளை இணைத்து வார்ஸா என்னும் உடன்பாட்டை நிறைவேற்ற நினைத்தது சோவியத் யூனியன். அது தற்காப்பிற்காகவும் போருக்காகவுமான உடன்பாடு. அதில் செகஸ்லோவாக்கியா ஒத்து போகவில்லை. பொருளாதார, அரசியல் மற்றும் கலை ரீதியான சுதந்திரம் வேண்டும் என்று முன்னே நின்றது ஒரு கூட்டமாய். கம்யூனிசம் மார்க்ஸிஸம் மற்றும் லெனினிஸம் ஆகிய யாவும் இணைந்து செகஸ்லோவாக்கியாவிற்கென ஒரு சட்டத்தை நிறுவ நினைத்தனர். மேலும் நாட்டை மூன்றாக பிரிக்கவும் முடிவு செய்திருந்தனர். இந்த தனி நாட்டிற்கான முன்னேற்பாடுகளை முன்னெடுத்து செய்தவராக வரலாற்றில் தெரிபவர் அலெசாண்டர் ட்யூபெக். இவர்கள் ஒத்து போகாததினால் சோவியத் யூனியன் இவர்கள் மேலேயே போர் தொடுத்தது. நாட்டின் நிலை குலையத் துவங்கியது. இருந்தாலும் இந்த சுதந்திர உணர்வு என்னும் விஷயம் மக்களினூடே பரவ ஆரம்பித்திருந்தது. இதை தனிமனிதத்துவாதத்தின் ஆரம்பம் என்று கூட கூறலாம்.

அஃதாவது நாட்டை வேற்று நாட்டவர்கள் ஒடுக்கும் போது ஒவ்வொருவர் செய்யும் செயல்களும் நாட்டிற்காக தத்தமது எதிர்ப்பை காட்டும் விதமாக மட்டுமே அமைய வேண்டும் என்றிருந்த நிலை மக்களின் மனதிலிருந்து அகன்று சுயானுபவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் அதற்காக தான் நம் நாடு தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதை கொள்கைகளாக மக்கள் அறிந்து கொண்டிருந்தனர். ஆனால் நாடு அழிந்து கொண்டு வருவதையே அவர்கள் கண்டனர். ட்யூபெக் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். அவர் இருக்கும் வரை அங்கிருந்த கலைஞர்களுக்கு கிடைத்த கட்டற்ற சுதந்திரம் அவருக்கு பின்னால் வந்த ஹுஸாக்கால் பரிக்கப்பட்டது. அரசியல் நிலைகளை விமர்சித்த எல்லா அறிவுஜீவிகளையும் அரசாங்க வேலைகளில் இருப்பின் அங்கிருந்து அந்த அரசு தூக்கியெறிந்தது. அரசு ஊழியனாக சேவை செய்து கொண்டிருந்தவர்கள் ஒவ்வொரு நாளின் சாப்பாட்டிற்காக சிறு சிறு வேலைகளை செய்ய ஆரம்பித்தனர். படித்த படிப்பிற்கு இழிவான வேலைகளாக கருதப்பட்டன. சிலர் நாட்டை விட்டே வெளியேறினர்.

இந்த எல்லா செயல்பாட்டையும் ப்ரேக் ஸ்ப்ரிங்(prague spring) என்று கூறுகிறார்கள். இந்த கலகங்கள் அதிகமாக ப்ரேக் என்னும் இடத்தில் நிகழ்ந்திருக்கின்றன. இது செக் நாட்டின் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று. அப்போது கலை இலக்கியத்திலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்த நிகழ்வுகளை பதிவு செய்த எழுத்தாளர்களை கூட வரலாற்றின் பெயரில் பிரித்தனர். அப்படி பிரிக்கப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவர் மிலன் குந்தேரா. அவருடைய குறிப்பிட்ட படைப்பு இந்த காலகட்டத்தை பற்றி வந்தமையால் அந்த குறிப்பிட்ட நாவலும் வரலாற்றின் அம்சத்தில் ஒன்றாக இருக்கிறது. அது தான் அவருடைய THE UNBEARABLE LIGHTNESS OF BEING.மேலிருந்து சொன்னா எல்லா காலத்திலும் தனி மனிதனின், ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரின் மனமும் எப்படிப்பட்ட மாற்றங்களை, வாழ்வை அனுபவித்திருக்கின்றன என்பதயும், பிரிவுபட்ட இலக்கிய அரசியல் வாழ்வையும் மிக அழகாக காதல் மற்றும் காமம் ரசம் மிகுந்து கொடுத்திருக்கிறார்.

எவ்வளவு வசீகரமான தலைப்பு பாருங்கள்! அன்றாடம் வாழும் வாழ்வில் எத்தனையோ விஷயங்கள் நமக்கு மன உளைச்சலை கொடுத்த வண்ணமே இருக்கின்றன. எல்லா விஷயங்களையும் கடக்க நினைக்கிறோம். கோயில்களில் கூட்டம் கூட்டமாக மக்கள் குமிழுகிறார்கள். அவர்களின் அருகில் சென்று வேண்டுதலை ஒட்டுக் கேட்டால் எல்லாமே என் பாரத்தை எப்படியாவது இறக்கி வையுங்கள் என்பதாகவே இருக்கும். மிலன் குந்தேரா தர்க்கத்துடனேயே ஆரம்பிக்கிறார். உலகில் எல்லாமே இரட்டைத் தன்மைகளை பெற்றிருக்கின்றன. அவற்றுள் ஒன்று தான் இந்த கணம் மற்றும் கணமற்ற தன்மை. அதை மென்மை என்று கூட சொல்லலாம்.

இறந்து போனவன் மறுபிறவி எடுத்து திரும்ப வருகிறான் என்னும் கூற்றில் ஆரம்பித்து அப்படி வருவதாயின் கடந்து சென்ற சுமைகளை இறக்கி வைக்க அவன் மறுபிறவி எடுக்கிறான் என்னும் கோட்பாட்டை எதிர்க்கிறார். இந்த கூற்று உண்மையெனில் ஏன் மென்மையை பகட்டாக நாம் உடுத்திக் கொள்ள கூடாது என்கிறார். நாம் கணம் என நினைக்கும் எல்லாமே ஆராய்ந்து பார்க்க போனால் மென்மையின் சுவடுகள். குழப்பத்தில் இருக்கும் போது நாம் நம் கணத்தையே மறக்கிறோம். காதலில் இருக்கும் போது நம்மையே மறக்கிறோம். அதே போல் காமத்தில், அடுத்தவனின் மரணத்தில், பிடித்தவர்களின் பிரிவில், ஆக எல்லாமே ஒரு சுமையை நினைவுகளாய் நம்முள் ஏற்றிவிட்டு செல்வதாய் கற்பிதம் செய்து கொண்டிருக்கிறோம். உண்மையில் அவை மென்மையானவை. நம்மால் மென்மையை தாங்கிக் கொள்ள முடியவில்லை. சுமையை கற்பனை செய்து கொண்ட நம் மனம் மென்மை தான் சுமையாக நம் கற்பனையில் இருக்கிறது என்பதை ஏற்க மறுக்கிறது. இந்த விஷயத்தை சொல்வதற்கு குந்தேராவிற்கு ஒரு நாவல் தேவைப்படுகிறது. இருந்தும் அவரால் முழுமையை சொல்ல முடியவில்லை. நாவல் முழுக்க இந்த கோடுபாடு அல்லது தத்துவம் அழகியல் நிரம்பியதாய் வசீகரமாய் குறுக்கும் நெடுக்குமாய் நம்மை அலைக்கழிக்கிறது.

நாவலின் பிரதான பாத்திரங்கள் – தொமாஸ், தெரெஸா, சபினா, ஃப்ரான்ஸ்.

தொமாஸ் – ஏற்கனவே மணமானவன். விவாகரத்தாகி மகனை காண முடியாமல் தவித்து சொந்தத்தை பிரிந்து, ஏன் இவ்வுலகத்தையே பிரிந்து தனித்து வாழ வேண்டும் என்று முடிவெடுக்கிறான். பெண்கள் தான் அவனின் ஈர்ப்பு. எத்தனை பெண்ணுடன் காமம் கொண்டாலும் அவனால் பெண் மீது இருக்கும் மோகத்தை குறைக்க முடியவில்லை. மேலே சொன்ன அந்நாட்டின் அரசியல் மாற்றம் முழுவதையும் இப்பாத்திரம் மூலமாக மிக அழகாக விவரிக்கிறார். அவன் ஒரு மருத்துவன். எப்படி இந்த அரசியல் பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறான், அவன் மனம் எப்படியெல்லாம் மாற்றம் கொள்கிறது என்பது இவனுடைய கதை. அவனுக்கு இருக்கும் பெரும் சவால் தெரேஸா. அவள் அவனுடைய வாழ்க்கையில் தற்செயலாக நுழைந்த பின் காதலின் சுவடுகளை அவனுக்குள்ளேயே தர்க்கம் செய்து பார்க்கிறான்.

தெரேஸா – உடலும் ஆன்மாவும் தனித்தனிதானே ? இது தான் தெரேசாவின் பிரதான கேள்வி. அவளுடைய அம்மா எப்போதுமே எல்லோர் உடலும் ஒன்று போலத் தான் என்று கூறிக் கொண்டே இருந்தாள். இதுவே அவளுள் ஆழமாக பதிந்து போக தனக்கென ஒரு ஆன்மாவும் உடலும் வேண்டாமா ? உடலுக்குண்டான உணர்வும் ஆன்மாவின் தேவையும் வேறு வேறுதானே என்று அவள் அனுபவங்களை தேடி செல்கிறாள். அப்படி இருக்கும் போது தான் தொமாஸை சந்திக்கிறாள். தொமாஸை சந்திக்கும் போதிலிருந்து அவளுடைய வாழ்க்கை எப்படி அம்மாவின் கோட்பாட்டை பழிவாங்குகிறது என்பதை தெளிவுற விளக்குகிறார் குந்தேரா. எந்த ஒரு கட்டத்திலும் தன் உடல் பிற உடலுடன் மனதாலும் இணைந்திரக் கூடாது என்னும் முனைப்புடனேயே இப்பாத்திரம் நாவல் முழுக்க பயணிக்கிறது. உடலையும் ஆன்மாவையும் அவள் தனித்தனியே உணரும் தருணங்கள் உணர்ச்சிகளின் எல்லைகளை வாசகனுக்கு காட்டுகின்றன. அவளுக்கு வரும் கனவுகள் அதற்காக அவள் கொள்ளும் பயங்கள் என்று உணர்ச்சிகளால் நிரம்பிய பாத்திரமாக தெரேஸா தெரிகிறாள்.

சபினா மற்றும் ஃப்ரான்ஸ் –  இவர்களை இணைத்து சொல்வதன் காரணம் முந்தைய ஜோடிகளில் குந்தேரா உருவாக்கும் கதையை வேறு கோணத்தில் இந்த ஜோடியில் புனைகிறார். தொமாஸிற்காக தெரேஸா மனத்தில் கொள்ளும் மாற்றங்களைப் போலவே இங்கு சபீனாவிற்காக ஃப்ரான்ஸ் கொள்ளும் மாற்றங்கள் ஆச்சர்யமாய் இருக்கின்றன. மேலும் முந்தைய ஜோடியில் இருக்கும் மாற்றங்கள் பலவீனங்கள் சார்ந்தது. இந்த ஜோடியிலோ ஆண்மை சார்ந்தது. சபினா தொமாஸிற்கும் தோழி. அவள் ஒரு எக்ஸென்ட்ரிக். அதற்கு சிறந்த சான்று அவள் தொமாஸிற்கு எழுதிய கடித வரிகள்,

I want to make love to you in my studio. It will be like a stage surrounded by people. The audience won’t be allowed up close, but they won’t be able to take their eyes off us. . .

தெரேஸாவும் சபினாவும் சந்திக்கும் இடங்கள் யாவையையும் மிக அழகாக வரித்துள்ளார். காரணம் தெரேஸா தனக்குள் இருக்கும் பலவீனங்களை வெளிக்காட்ட நினைக்கிறாள். வேறொரு ஆடவனிடம் தன்னை அடிமையாக்கிக் கொள்ள நினைக்கிறாள். அதே சபினா தனக்குள் இருக்கும் ஆசைகளை வெளிக்கொணர நினைக்கிறாள். கொண்டாட நினைக்கிறாள். தன் சந்தோஷத்தினுள் ஆடவன் பங்கு கொள்ள வேண்டும் என்று ஆசை கொள்கிறாள். நாவலில் வரும் அவளுடைய தொப்பி இந்த உணர்வை மிக அழகாக சொல்கிறது. இருவரும் இணையும் இடங்கள் யாதெனில் அவரவர்கள் கொள்ளும் இச்சைகளின் முடிவுகள். அவர்களாக எடுப்பதில்லை. அந்த கணத்திலிருந்து அவர்களின் வாழ்க்கை மாறுகின்றது.

அரசியல் நெருக்கடிகளால் பயந்து போயிருக்கும் தொமாசின் மனத்தையும் தொமாஸிற்காக ஏங்கும் தெரேஸாவின் மனத்தையும் இணையும் தருணத்தில் உருவாகும் ஓவியத்தை நாவலின் முடிவாக்குகிறார். சபீனா எதிர்பார்க்கும் ஃப்ரான்ஸின் பலமும் ஃப்ரான்ஸ் அவளிடம் காட்ட முனையும் பலத்தையும் அதனால் ஏற்படும் அக வேறுபாடல்களையும் நாவல் முடிவாக்குகிறார்.

நாவல் முழுக்க வாழ்வில் இருக்கும் இரட்டை தன்மைகளை பேசிக் கொண்டே செல்கிறார். எல்லா இரட்டை தன்மைகளின் முடிவுகளிலும் ஒரு உணர்வு மட்டுமே மிச்சமாய் இருக்கிறது. அந்த எல்லா உணர்வுகளையுமே மென்மையானவை என்கிறார். உதாரணத்திற்கு அரசியலுடன் இணைத்து அவர் எழுதும் கதை ஈடிபஸின் கதை. ஈடிபஸ் தாய் எனத் தெரியாமலேயே புணர்கிறான். தாய் என்றறிந்தவுடன் அவன் மனம் ஒத்துக் கொள்வதில்லை. தெரியாமல் செய்தது குற்றமாகாது என்பதை அவன் மனம் ஏற்கவில்லை. ஒன்றுமற்றவனாகிப் போகும் தருணத்தையும் குந்தேரா கணமற்ற தன்மை என்கிறார்.

இதை இன்னமும் ஆழமாக விளக்குவதற்காகவே கரீனின் என்னும் நாயை நாவலில் வைத்திருக்கிறார். விலங்குலளுடன் மனிதன் இருக்கும் போது தான் அவன் அவனாக இல்லாமல் இருக்கிறான். அவனும் விலங்கென உணர்கிறான் என்கிறார். தெரேஸா மற்றும் கரீனின் உறவை அன்பு நெகிழ எழுதியிருக்கிறார். மேலும் இந்த விஷயங்கள் அந்த நிலவியலின் அரசியலை தத்துவங்களுடனும் இதிகாச புராணங்களுடனும் கூட இணைத்து தர்க்கம் செய்கிறார். பைபிளையும் அறிவியலையும் இணைத்து அதன் வார்த்தைகளினின்றே மனிதன் எப்படி அதிகார வெறி பிடித்தவனாக மாறுகிறான் என்பதையும் எத்தருணத்தில் அவன் யாதுமற்றவனாக இருக்க விருப்பம் கொள்கிறான் என்பதையும் விளக்குகிறார்.

நிறைய குறிப்புகளையும் மேற்கோள்களையும் குறித்து வைப்பது என் வழக்கம். யாதொன்றயும் உபயோகம் செய்ய முடியாமல் போய்விட்டது. நாவல் அவ்வளவு தூரம் என்னை ஈர்த்துவிட்டது. மிலன் குந்தேராவை சாரு நிவேதிதாவின் நூல் வழியாகவே அறிந்து கொண்டேன். பின் இணையத்தில் அவருடைய மொழிபெயர்ப்பு சிறுகதை ஒன்றை வாசிக்க நேர்ந்தது. அது கொடுத்த நேரடி அனுபவத்தில் மூன்று நாவல்களை வாங்கியிருக்கிறேன்.

குந்தேராவின் எழுத்துமுறை வசீகரமானதாய் இருக்கிறது. வாசிக்கும் விஷயம் நாவல் தான் உண்மையென நம்பிவிடாதே என்னும் தோரணையிலேயே கதையை சொல்லி செல்கிறார். நாவலில் வரும் அவர் வரிகளையே பாருங்கள்

The characters in my novels are my own unrealized possibilities. That is why I am equally fond of them and equally horrified by them. Each one has crossed a border that I myself have circumvented. It is that crossed border (the border beyond which my own ‘I’ ends) which attracts me most. For beyond that border begins the secret the novel asks about. The novel is not the author’s confession ; it is an investigation of human life in the trap the world has become. But enough. Let us return to Tomas

நான் லீனியர் பாணியில் தொமாஸ்-தெரேஸா மற்றும் ஃப்ரான்ஸ்-சபினா மற்றும் தத்துவ கலை இலக்கிய விசாரங்களை தொகுத்து நாவலாக்கியிருக்கிறார். நாவலின் முடிவை இடையில் அவரே சொல்வதும், இடையிடையில் நுழைந்து வேறு இதிகாச பாத்திரங்களோடு நாவல் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை ஒப்பீடு செய்வதும், முதல் பகுதியில் விட்ட கதையின் தொடர்ச்சியை ஏழாம் பகுதியில் விட்டதன் தொடர்ச்சி என்று சொல்லியே தொடர்வதும், புரிந்து கொள்ளப்படாத வார்த்தைகள் என்று தலைப்பிட்டு சொல்ல நினைத்த கதையை வேறு வடிவத்தில் சொல்வதும் என்று நாவல் அமைப்பினிடையே விளையாடுகிறார். எல்லாவற்றையும் முன்கூட்டியே சொல்லியும் எழுத்தினூடே அவர் கொடுக்கும் சுவாரஸ்யம் தான் நாவலை கடைசி வரை வாசிப்பில் உயிர்பித்து வைத்திருப்பதின் சூட்சுமம்.

நாவலின் அநேக இடங்களில் சிரிப்பையே வரவைக்கிறார். நாயகனின் குழப்பத் தன்மையில் கூட ஒருவித சிரிப்பையே, பகடியையே எழுத்தில் கொடுக்கிறார். தொமாஸ் வீடொன்றிற்கு கண்ணாடி துடைக்க செல்கிறான். அங்கிருக்கும் பெண் அவனை காமுற நினைக்கிறாள். முத்தம் வரை தான் செல்கிறது. தொமாஸ் நிறுத்திவிடுகிறான். அடுத்த வீட்டிற்கு செல்ல வேண்டும் அப்போது தான் பணம் கிடைக்கும் என. கிளம்பும் போது துடைத்துவிட்டதாக கையெழுத்திட வேண்டிய படிவத்தை அந்த பெண் கேட்கிறாள். தொமாஸ் மறுக்கும் போது அவள் சொல்லும் வார்த்தைகளை பாருங்கள்,

After all I am not paying for it, my husband is. And you’re not being paid for it, the state is. The transaction has nothing whatever to do with the two of us

அரசியல் சார்ந்து அவர் முன்வைக்கும் பகடிகள், தனிமனிதன் மற்றும் அரசியல் நிலைபாடுகளை ஒப்புமைபடுத்தும் விஷயங்கள் தத்துவ விசாரங்கள் எல்லாமே பகடிகள் மூலமாகவே இருக்கின்றன. இந்த பகடிகளும் நாவலின் அமைப்பும் இந்நாவலை பின்நவீனத்துவ நாவலாக்குகின்றது. கதையென இந்நாவலில் எதையுமே நம்மால் வரையறுக்க முடியாது. காலநிலைமாற்றத்தில் சிக்கித் தவிக்கும் சில மனிதர்களின் வாழ்க்கை. அவர்களுக்கு இருக்கும் ஒரே உணர்வு

THE UNBEARABLE LIGHTNESS OF BEING.

பி.கு 1 : என் உச்சரிப்பில் பிழையிருப்பின் பொருத்தருள்க. வாசிக்கும் போது நான் எப்படி பெயர்களை உச்சரித்தேனோ அதையே தமிழில் எழுதியிருக்கிறேன். 

பி.கு 2 : செகஸ்லோவாக்கியாவின் அரசியல் சார்ந்த விஷயங்களை வீக்கிபீடியாவிலிருந்தே அறிந்து கொண்டேன். அப்போது தான் இணையம் இல்லாத காலத்தில் இது போன்ற நாவலை வாசித்து, அக்கால செக் மற்றும் வேற்று நாட்டு அரசியலை அறிய நினைத்தவர்கள் என்ன செய்திருப்பார்கள் என்று எண்ணினேன். அறிந்திராத பதில் ஆச்சர்யமாய் தான் இருக்கிறது.

பி.கு 3 : மிலன் குந்தேராவின் சிறுகதை - http://ulagailakkiyam.blogspot.in/2011/05/1.html (யாரும் சிரிக்க மாட்டார்கள்).

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக