காதலை புலனாய்வு செய்த கலைஞன்

சமீபத்தில் ஒரு நிகழ்விற்கு சென்றிருந்தேன். அங்கு பிரபஞ்சன் சொன்ன ஒரு வார்த்தையே எனக்கு நினைவில் எழுகிறது. ஒரு கலைஞன் நூறு சிறுகதைகளை எழுதுகிறான் எனில் அதில் பத்திருபதே சிறந்ததாக இருக்கிறது. அந்த பத்திருபதை சிறந்ததாக இயற்றுவதற்கே அக்கலைஞன் நூறு கதைகளை எழுத வேண்டியிருக்கிறது என்கிறார். இதைத் தான் கு.ப.ராஜகோபாலனின் சிறுகதைத் தொகுப்பிலும் உணர முடிகிறது.


இந்நூலின் ஆரம்பத்தில் அழகுத்தொண்டு என்னும் நீண்ட கட்டுரை வருகிறது. அது முழுக்க இத்தொகுப்பின் பிண்ணனியில் இருக்கும் தேவைகளையும் பெருமாள் முருகன் செய்த வேலைகளையும் மிக அழகாக சொல்கிறது. இது தமிழுக்கு தேவையா ? இப்போது வரும் நூல்களை கவனித்து பார்த்தால் கடந்த கால, மறைந்த எழுத்தாளர்களின் நூல்கள் இனி முழுத் தொகுப்பாகவே வரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவையனைத்தும் ஆவணங்களாக மாறி வருகிறதோ என்னும் ஐயம் ஏற்படுகிறது. சிறந்த உதாரணம் ப.சிங்காரம், கோபிகிருஷ்ணன், மௌனி போன்றோரின் படைப்புகள்.

ஒரு மொழியின் இலக்கியத்திற்கு தனிமனிதன் செய்யக் கூடிய பெரும் கொடை புனைவிலக்கியம் தான்.  அதை ஆவணப்படுத்துவதே இத்தொகுப்பின் பிரதான வேலை. ஏற்கனவே இதை அடையாளம் பதிப்பகம் செய்திருக்கிறது. ஆனால் அதன் தொகுப்பாசிரியரை பெருமாள் முருகன் சாடுகிறார். ஏற்கனவே வந்த கு.ப.ராவின் தொகுப்பைக் காட்டிலும் மீண்டுமொரு தொகுப்பின் தேவை என்ன என்பதை உணர்ந்து கொள்ளும் அளவு அடையாளம் பதிப்பகம் வெளியிட்ட தொகுப்பிலுள்ள பின்னடைவை சொல்லியிருக்கிறார். இது ஒரு பதிப்பக உரை என்னும் அளவிலேயே வருகிறது.

இதனைத் தொடர்ந்து வாள்வீச்சின் ஈர்ப்பு என்னும் நீண்ட கட்டுரை வருகிறது. இந்த கட்டுரை ஆய்வுரை என்று சொல்கிறார். கு.ப.ராவின் எல்லா கதைகளையும் அதன் நுட்பங்களையும் மிக அழகாக எடுத்துரைக்கிறார். முன்னதாக வந்த கட்டுரையில் அவர் சொல்லியிருக்கும் விஷயம் ஒன்று இதை வாசிக்கும் போது நினைவிற்கு வந்தது. தொகுப்பு என்பதே அடுத்தடுத்த பதிப்பில் செழுமை படுத்த வேண்டியது என்று. இந்த வரியை முன்வைத்து ஒரு விஷயத்தை சொல்ல ஆசைப்படுகிறேன். இந்த ஆய்வுரையை தயை கூர்ந்து பின்னுரையாக இட்டால் இன்னமும் நூலின் வடிவம் அழகாக இருக்கும். இந்த கட்டுரை கு.ப.ராவின் எழுத்துகளை மிக அழகாக திறனாய்வு செய்கிறது. ஆனால் எல்லாவற்றையும் முதலிலேயே செய்வதால் வாசிக்கும் முன்னரே ருசியை ஒருவர் சொல்லிவிட்டதாக படுகிறது. பின்னுரையாக இட்டால் நூல் வாசிப்பில் ஒரு முழுமையைப் பெற முடியும்.

இதைத் தவிர இந்நூலில் இருக்கக் கூடிய சிறப்புகள் கு.ப.ரா பிராமண வார்த்தைப் பிரயோகங்களையும் சில அக்கால வழக்கத்தில் இருக்கும் சொற்களையும் எழுதியிருக்கிறார். அதற்கான அர்த்தங்களை பின்னால் கொடுத்திருக்கிறார். இதைத் தவிர ஒவ்வொரு கதையும் எந்த எந்த இதழில் வெளிவந்தது என்னும் விஷயத்தையும் தெளிவாக குறிப்பிடுகிறார். கு.ப.ரா தான் எழுதியிருப்பாரோ என்னும் சந்தேகம் கொண்ட இரு கதைகளைக் கூட பின்னிணைப்பாக கொடுத்திருக்கிறார். இனி கு.ப.ராவின் எழுத்தைப் பற்றி பார்ப்போம்.

இத்தொகுப்பின் முதல் கதை விசாலாட்சி. இந்தக் கதையே என்னை ஈர்த்துவிட்டது. சராசரியான மாமியார் மருமகள் பிரச்சினைக்கிடையில் இருக்கும் கணவனின் நிலையை புதிர்த் தன்மையுடன் சொல்லியிருக்கிறார். இது முழுக்க வசனமாக மட்டுமே இருக்கிறது. வசனத்தினூடே கதையை முழுமையாக சொல்லும் அவரது திறமையைக் கண்டு பிரமிக்காமல் இருக்க முடியவில்லை. நம்மை கதையின் கடைசியை நோக்கி இழுத்து செல்கிறார்.

கு.ப.ரா வின் கதைகளின் மையக்கரு என்னது ? இக்கேள்விக்கு இரண்டு விதமாக பதில் சொல்ல நினைக்கிறேன். ஒன்று காதல். மற்றொன்று வரலாறு. வரலாற்றுக் கதாபாத்திரங்களைக் கொண்டு அவர் கதைகளை புனைகிறார். இந்தக் கதைகள் எனக்கு பிடிக்கவில்லை. அதற்கு காரணம் வரலாற்றுக் கதைகள் அனைத்துமே நீதிக் கதைகள் போல இருக்கின்றன. கதையின் முடிவில் ஒரு நீதியை சொல்லியே முடிக்கிறார். அக்காலத்தில் அப்படி இருந்திருக்கக் கூடுமோ என்னும் எண்ணம் இருந்தது. அவரது பிற கதைகளில் இருக்கும் சுவாரஸ்யமும் கதை மட்டுமே செல்லும் போக்கும் அவரது எந்த ஒரு வரலாற்று மாந்தர்களைக் கொண்ட கதைகளிலும் காண முடியவில்லை. மேலும் வரலாற்றுக் கதைகளின் அளவு மிக சுருங்கியதாக இருக்கிறது. நிறைய கதைகள் முழுப்பிண்ணனியுடன் சொல்லியிருந்தால் அது நாவலாகவே வரக் கூடும். அவ்வளவு சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

எந்த கதையை எடுத்துக் கொண்டாலும் அவர் ஒரே பாணியைக் கையாள்கிறார். முதலில் அவர் சொல்ல நினைத்த கதையின் முடிவை விரிவாக்குகிறார். பின் அந்த முடிவு நிகழ்வதற்கு காரணமாக இருக்கும் முன்கதையை விரிவாக்குகிறார். அப்படி செய்யும் பொழுது கூட கதையை கச்சிதமாக முடிக்கிறார். எல்லா கதைகளுமே கடைசி வரியில் அதிக வசீகரத்தை கொண்டிருக்கிறது. மொத்த கதையையுமே வசீகரமாக்குகிறது. சொல்லும் கதைகளில் கூட நம் உணர்ச்சிகளை வெகு தூரத்தினிடையே இருக்கும் இடைவெளியில் தூக்கியெறிந்து விளையாடுகிறார்.

எழுத்தாளனாய் நிறைய பாத்திரங்களை கதைமாந்தர்களுக்கு இடுகிறார். அதே சமயம் கதையும் கதைசொல்லியும் இணைபிரியா உணர்விணைப்பு கொண்டவர்கள் என்பதை சில கதைகளில் சொல்லுகிறார். ஒரு கதையில் சராசரியாக கதை எப்படி முடிய வேண்டும் ? ஏன் கதையை நுகர்பவர்கள் சந்தோஷமான முடிவை எதிர்பார்க்கிறார்கள் ? என்பதை தர்க்கம் செய்கிறார். ஒரு பாத்திரம் வாழ்க்கையில் தான் கஷ்டப்படுகிறோம் கதைகளிலும் ஏன் அப்படி இருக்க வேண்டும் என்கிறது. வேறொரு பாத்திரமோ வாழ்க்கையை கதை பிரதிபலிக்க வேண்டும் என்கிறது. இதைக் காட்டிலும் அவர் கதைசொல்லியை எப்படி உயர்த்தி வைக்கிறார் என்பதை வேறொரு கதையில் காண முடிகிறது. எழுத்தாளன் சொல்லும் கதை இயக்குனருக்கு பிடிக்கவில்லை. மாற்ற நினைக்கிறார். எழுத்தாளன் மறுக்கிறான். அப்போது வசனம்

“இதுதான் எழுத்தாளனின் கர்வம் என்பது!”
“அதுதான்டா அவனுக்கு மிஞ்சியிருக்கும் ஆறுதல். அதைக்கூட அவன் விற்றுவிட முடியாது”

காதல் தான் கு.ப.ராவின் பிரதான தளம். நிறைய வரலாற்றுக்கதைகளையும் கூட காதலுடன் இணைத்து எழுதியிருக்கிறார். அதில் சில கதைகளில் வரலாற்று சம்பவங்களுக்கு அன்பு எப்படி முட்டுக் கட்டையாக இருக்கிறது என்பதையும் வரலாறு உருவாவதற்கான சம்பவங்களின் பின்னால் இருக்கும் அன்பின் உருவத்தையும் கொணர முயற்சித்திருக்கிறார்.

அதே வரலாறு அல்லாத அக்காலத்திய சமகாலம் பேசும் கதைகளில் ஒரு துய்ப்பு இருக்கிறது. காதல் காமம் அன்பு மூன்றும் வேறு வேறு என்பதை தெளிவாக எடுத்துச் சொல்கிறார். சில கட்டங்களில் எல்லாம் ஒன்றாக இருக்கக் கூடுமோ என்று அவரே அந்த இடத்தில் தோற்று நிற்கிறார். ஒரு குடும்பத்தில் நிகழும் சண்டைகளில், பிரிந்து போன மனங்களினுள்ளே இருக்கும் காதல், காமத்தை பொருளாகவும் அதே இடத்தில் காமத்தை விரும்பும் உயிரையும் ஒன்றாக இணைக்க நினைக்கிறார். கணவனில்லாத போது வீட்டிற்குள் ஆடவனை அழைக்கும் பெண்ணிற்கும் அந்த அனுமதியை மனதளவில் எப்படி அர்த்தப்படுத்துவது என்று தெரியாமல் முழிக்கும் ஆணிற்கும், அது தெரிந்த பின் கணவன் கொள்ளக் கூடிய உணர்வுகளுக்கும் மிக அழகாக உருவம் கொடுக்கிறார் கு.ப.ரா. ஆண்மையமாக மட்டும் இல்லாமல் ஆண் மைய கதைகளை சொல்லும் அதே கருவை பெண்மையமாக முந்தைய சாயல் தெரியாமலேயே சில படைப்புகளை கொடுத்திருக்கிறார். சாதி தாண்டிய காதலையும் அவர் சொல்ல யத்தனித்திருக்கிறார். அதன் மொழியில் என்னால் செயற்கைத் தன்மையையே உணர முடிந்தது.

காமத்தை பூடகமாக எழுதுகிறார். இந்த விஷயத்தில் எனக்கு சந்தோஷமே அதிகமாக இருக்கிறது. காமமே புதிர்தன்மையுடையது என்பதை காமம் பேசும் எல்லா இலக்கியங்களிலும் காண முடியும். இதை இவர் பிரயோகிக்கும் வார்த்தைகள் நம்மை நிறைய யோசிக்க வைக்கிறது. ஒரு கதையை “என் வாயை புதைத்துவிட்டாள்” என்று எழுதி முடிக்கிறார். எவ்வளவு வசீகரம் பாருங்கள்.

காதல் நிலை என்னும் கதை. இந்தக் கதையில் காதலை ஒருவன் தர்க்கமாக்குகிறான். எதிரில் இருக்கும் அவளோ காதலை உணர்ச்சியாக்குகிறாள். இவர்களின் பேச்சிற்கு ஒரு இலக்கியம் காரணமாக இருக்கிறது. காதலை உணர்வே இல்லாமல் பேச்சுப் பொருளாகவே மிக அழகாக எழுதியிருப்பார். கு.ப.ராவின் எழுத்தில் இருக்கும் ஏக்கம் என்ன எனில் கதைகளின் முடிவை வெகு சீக்கிரம் கொடுத்துவிடுகிறார். கதை முழுக்க நம்மை இழுத்துக் கொண்டு செல்லும் நோக்கு நடுவிலேயே அறுபட்டது போல கதைகளின் முடிவு அமைந்துவிடுகிறது. இதை கடைசி வரியே சமாதானம் செய்கிறது.

காதலை நிறைய இடங்களில் வேசித் தொழிலுடன் இணைக்கிறார். காதல் அங்கே செல்லுபடியாகாது என்பதை இணைக்கப்படும் எல்லா கதைகளிலும் பிரதானமாக வைக்கிறார் அதையும் தர்க்கம் செய்கிறார். வேசித் தனம் செய்பவர்களுக்கு காதல் கடந்த கால கச்சாப்பொருள் என்பதை சொல்கிறார். சில இடங்களில் வேசைத் தனத்தை காதல் என தவறாக புரிந்து கொண்டுவிட்டார்கள் என்று கதைப்போக்கில் அதிர்ச்சியும் கொடுக்கிறார்.

காதலை இப்படி சொல்கிறாரே தர்க்கம் செய்கிறாரே காதல் எனில் இவருக்குள் இருக்கும் எண்ணம் தான் என்ன என்று தோன்ற வைக்கும் அளவு காதல் கதைகள் நிரம்பி வருகின்றன. அப்போது “உண்மைக் கதை” என்னும் கதை வருகிறது. கிழவனுக்கு இளமையான மனைவி. மிக சுவாரஸ்யமான கதையும் கூட. அதில் கு.ப.ராவின் பதிலைப் பாருங்கள்

ஆணும் பெண்ணும் ஒருவர் மற்றொருவரிடம் ஈடுபடுவதற்கு காரணம் அந்த நினைப்பே இல்லாமல் இருப்பது தான்” என்கிறார்.

மீறல்களை அழகாக கையாள்கிறார். நாம் க்ளாஸிக் எழுத்தாளர்கள் என சொல்லும் எல்லோரின் நாவல் கதைகளின் கருவையும் இவர் சிறுகதைகளுக்குள் திணிக்கிறார். கலாச்சார மீறல்களை மிக எளிதில் கையாள்கிறார். ஒரு கதையில் அடுத்தவீட்டுப் பெண் பையனுடன் பேசுகிறாள். அவன் தன் வீட்டிற்கு அழைக்கிறான். இடையில் ஒரு சுவர் இருக்கிறது. அதை கு.ப.ரா சொல்லும் விதத்தை பாருங்கள்

சுவர் இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா ? இதைத் தாண்ட முடியாதா உங்களால் ?”
“தாண்ட முடியாமல் என்ன . . .

இப்படி நிறைய உணர்வுகளை காதலுடன் இணைத்தும் சில கதைகளில் இணைக்காமலும் உணர்வுகளின் பன்முகத் தன்மைகளை எடுத்துச் சொல்கிறார். இருந்தாலும் ஒரு உணர்வு முழுத் தொகுப்பை வாசிக்கும் போது மேலோங்குகிறது. கு.ப.ரா வின் 91 கதைகளில் முக்கால்வாசி கதைகள் ஆரம்பகால கதைகளைப் போலவே தான் இருக்கின்றன. அதற்கு காரணம் அவர் கதையை முடிக்கும் விதம் தான். சில கதைகளில் மட்டுமே என்னால் முழுமையை உணர்ந்து கொள்ள முடிகிறது.

இதுமட்டுமின்றி பின்னிணைப்பாக கதைகள் வந்த காலகட்டத்தையும் வெளியான பத்திரிக்கைகளையும் தெளிவாக கூறியிருக்கிறார். அதில் சின்னதாய் ஒரு சந்தேகம் வந்தது. 91 கதைகளில் (மொத்த கதைகள் 93. அதில் இரண்டு அவர்தான் எழுதினாரா என்று முழுமையாக தெரியவில்லை) 87 கதைகள் பத்திரிக்கைகளில் வெளியாகி இருக்கின்றன. வெளியிடாமல் தொகுப்பில் இடம்பெற்ற கதைகள் என்று நான்கு இருக்கின்றன. சமகாலத்திய இலக்கிய தன்மையை வைத்து பார்க்கும் போது இன்னமும் சில கதைகள் வெளியிடப்படாமல் இருந்திருக்கக் கூடுமோ என்னும் ஐயம் எழும்புகிறது.

கு.ப.ரா எழுத்து சார்ந்து கொண்டிருக்கும் எண்ணங்களும் என்னை ஆச்சர்யபடுத்துகிறது. கதையமைப்பில் நிறைய வித்தியாசங்களை கொடுக்க முனைந்திருக்கிறார். அதற்கு இத்தொகுப்பில் அவர் அக்காலத்தில் தன் நூலிற்காக எழுதப்பட்ட முன்னுரையை இணைத்திருக்கிறார் பதிப்பாசிரியர். அதுவே சான்று. அதில் அவர் சொல்வதாவது

சிறுகதையின் உருவமும் போக்கும் தற்காலத் தன்மைக்கு உகந்தனவாக இருக்கின்றன. அதுதான் காரணம் இந்த செல்வாக்கிற்கு. அதனால்தான் இப்பொழுது நாடகங்களைக் காட்டிலும் ஒற்றையங்க நாடகங்கள் அதிகமாக தோன்றுகின்றன. நீண்ட காவியங்களுக்கு பதிலாக சிறுசிறு பாடல்கள் பெருகுகின்றன. சுருக்கமும் சூக்ஷ்மமும் தான் தற்காலத்தின் தேவைகள். மின்சார யுகமல்லவா ? சீக்கிரமாக முடிய வேண்டும். தற்கால மனிதனுக்கு நீண்டு எதையும் அனுபவிக்க நேரமில்லை. பொறுமையுமில்லை – கு.ப.ரா (1944)

இதைத் தவிர நூலின் பின்னிணைப்பில் இருக்கும் அகராதியில் இன்னமும் சில பிராமண வார்த்தைப் பிரயோகங்களின் அர்த்தங்களை கூறினால் வாசகர்களுக்கு கூடுதல் உதவியாக இருக்கும். வாசிக்கும் போக்கில் குறிக்க மறந்துவிட்டேன்!

பெருமாள் முருகனின் இந்த சேவைக்கு நிச்சயம் பாராட்டுகளை சொல்லியே ஆக வேண்டும். கு.ப.ராவின் சிறுகதை தொகுப்பு என்று சொல்வதை விட கு.ப.ரா வின் ஆவணம் என்பதே வாசகனாய் எனக்கு படுகிறது. அப்படி நினைக்க வைத்தமைக்கு தொகுப்பாசிரியரே காரணம்.

எனக்குப்பிடித்த அவரது சில சிறுகதைளை பகிர்ந்து பத்தியை முடிக்கிறேன். இன்னமும் நிறைய கதைகள் இருந்தாலும் என் நினைவிலிருந்து இதை மட்டும் கொடுக்கிறேன் - நூர் உன்னிஸா, குந்துமணி, சிறு கதை, என்ன தைரியம் ?, ஸ்டூடியோ கதை, கதைக்காரன் கர்வம், ராஜேந்திரன் கனவு, பெண்மனம், காதல் நிலை, என்ன அத்தாட்சி ?, துரோகமா ?, தித்திப்பு, சந்திப்பு, உண்மைக் கதை, யார்மேல் பிசகு ?, மோகினி மாயை, குழந்தைகள் கொலு, இந்த தலைமுறை, தவறுகளோ தன்மைகளோ

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக