Drishyam - 2013

கல்லூரியில் தேர்வுகள் ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கின்றன. தொடர்ந்து ஒரு ஒரு நாள் இடைவெளி விட்டு மூன்று தேர்வுகள். அடுத்த தேர்விற்கு இடையில் நான்கு நாட்கள் விடுமுறை இருக்கிறதே என்று படம் பார்க்கலாம் என்று முடிவு எடுத்தேன்.

பலமுறை சொல்லியிருந்தாலும் இன்னுமொரு முறை சொல்லிவிடுகிறேன். என் கல்லூரியில் நிறைய மலையாளிகள். சமீப காலத்தில் எல்லோரும் ஏகமனதாய் பாராட்டிய ஒரே படம் த்ருஷ்யம். இந்தப்படத்தை எப்படியும் பார்க்க வேண்டும் என்று ஆசை கொண்டேன். இணையத்தில் இதன் அலை வேறு பெரிதாய் இருந்தது. இப்போதே காண முடிந்தது. இப்படத்தை தமிழில் கமலஹாசன் நடிப்பதாய் செய்தியும் வந்தது. அது சார்ந்து பின் சொல்கிறேன்.

மலையாள கலை இலக்கியத்தினுள் நீண்டதொரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது. வாசித்த இரண்டு நாவல்கள் பழகும் மனிதர்கள் பார்த்திருக்கும் மூன்றே திரைப்படங்கள் எல்லாமே அழகியலின் அம்சமாய் இருக்கிறது. தி.ஜானகிராமனை அழகியலின் உச்சம் என்று கொண்டாடினேன். நிலவியலின் கதை நிகழும் சம்பவத்தை அழகாய் காண்பிக்கும் அவரது மொழித்திறன் அநாயாசமானது. மலையாளம் இதை ஒத்தே இருக்கிறது. எல்லா விஷயங்களிலும் நுண்மைகளை பெரிதாக்கி காட்டுகின்றனர். அப்படியொரு படமாக தான் த்ருஷ்யத்தைக் காண்கிறேன்.

த்ருஷ்யம் படத்தின் இடையில் ஒரு வசனம் வருகிறது. அது தான் படத்தையே முழுதாக ஓட்டுகிறது. கலை செய்ய வேண்டிய விஷயமும் அது தான். என்ன எனில் காட்சியை பார்வையாளனிடம் வைக்கிறோம் எனில் அக்காட்சி செய்ய வேண்டிய முதல் வேலை பார்வையாளனை நம்ப வைப்பது. இதையே கதையாக்கியிருக்கிறார் இயக்குனர்.


படம் மிக நீளமானது. அதில் முதல் ஒரு மணி நேரம் தேவையா என்பதே என்னுள் தோன்றிய முதல் கேள்வி. இரண்டே முக்கால் மணி நேர படத்தில் முதல் ஒரு மணி நேரம் கதை இல்லாமலே செல்கிறது. ஒரு மணி நேரம் கடந்த உடன் ஒரு பத்து நிமிடம் படத்தின் முக்கிய காட்சி. உடனே இடைவேளை. இடைவேளைக்கு பின் செல்வது நம் நாட்டின் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் தான்.

நான்காம் வரை படித்த ஜார்ஜ் குட்டி. அவனுக்கு பத்தாம் வரை படித்த மனைவி. இரு குழந்தைகள். ஜார்ஜ் குட்டியின் பாத்திரம் படத்தினூடே பலவாறாக மாறுகிறது. இது அக்கதாபாத்திரத்தினை மட்டுமே மையப்படுத்தும் படமோ என்றும் அநேக நேரங்களில் தோன்றுகிறது. ஒரு நடுத்தர குடும்பஸ்தனின் குறியீடு இந்த ஜார்ஜ். அவனுடைய கஞ்சத்தனம், மனைவியின் மேல் இருக்கும் காதல், எல்லா நுண்ணுணர்வுகளும் மேலெழுந்தவாறு இருந்தும் பணியே முதன்மையானது என்று இருக்கும் நடுத்தர வர்க்கத் தன்மை, படிக்கவில்லையெனினும் ஏதேனும் ஒரு வகையில் தன்னை அறிவாளியாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்னும் எண்ணம், அனுபவமே அறிவாக இருக்கும் ஒரு குணம், சட்டத்தை எல்லா வகையிலும் பின்பற்ற வேண்டும் என்னும் கொள்கை என்று அசலான நடுத்தர குடும்பத்தை காட்சியாக்கியிருக்கிறார் இயக்குனர். இன்னமும் இவரைப் பற்றி முடியவில்லை. மீண்டும் இவரைப் பற்றி ஓரிரு பத்திகள் கடந்து வருகிறேன்.

நடுத்தர குடும்பத்து மனைவியின் எண்ணங்கள் எப்படி இருக்கும் ? இயல்பாகவே சமூகத்தின் மேல்தட்டு மனிதர்களிடம் தாங்களும் நிகரானவர் என்பதை தக்க வைத்துக் கொள்ள போராடும் ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்து மனைவியின் குணத்தை இக்கதாபாத்திரத்தில் காண முடிகிறது. குடும்பத் தலைவி என்னும் விதத்தில் சில முடிவுகளை எடுக்க நினைத்து அந்தஸ்தை நிலைக்க வைக்க போராடும் தன்மை என்று முதல் ஒரு மணி நேரம் குடும்பவியல் நாவலாக செல்கிறது.

இந்த ஒரு மணி நேரத்தில் அலுப்பூட்டக் கூடிய நிறைய விஷயங்களை இயக்குனர் செய்திருக்கிறார். உதாரணம் கேமிரா. ஒரு இடத்தை காண்பிக்கிறார். உதாரணம் படத்தில் விஸ்வரூபம் படத்தின் போஸ்டர் காண்பிக்கப்படுகிறது. அதிலிருந்து கேமிரா பின்னோக்கி நகர்ந்து காட்சி நிகழும் இடத்தில் சென்று நிற்கிறது. படத்தின் ஆரம்ப காட்சியை கேளுங்கள். பேருந்தில் நிலையாக கேமிரா நிற்கிறது. கண்டக்டர் டிக்கெட் கொடுத்துக் கொண்டே வருகிறார். முன் சீட்டில் அமர்ந்திருப்பவர் ஐந்து நிமிடங்களுக்கு பின் இறங்குகிறார். அவருடனேயே கேமிரா மேனும் இறங்கி செல்கிறார். இதே போல் முதல் ஒரு மணி நேரத்தில் ஏகப்பட்ட முறை வருகிறது. முதல் முறை பார்க்கும் போது இருக்கும் சுவாரஸ்யம் தொடர்ந்து காண்பிக்கும் போது அலுப்பாகிவிடுகிறது.

இதைத் தவிர முதல் ஒரு மணி நேரத்தில் வரும் வசனங்கள். ஒவ்வொரு உணர்வுகளுக்கும் விளக்கம் கொடுத்துக் கொண்டே செல்கிறார். அது மட்டுமின்றி முதல் ஒரு மணி நேரம் காட்சி ரீதியாக படம் மிக மிக மெதுவாக செல்கிறது. முழுக்க வசனங்களில் நகர்கிறது. மேலும் நடுத்தர வர்க்கம் தேவை எனக் கருதும் எல்லா ஆடம்பரங்களையும் முதல் ஒரு மணி நேரத்தில் சொற்பொழிவைப் போல வசனங்களாக மோகன்லால் பொழிகிறார்.

இதற்கு மேல் இரண்டாம் பகுதிக்கு வருவோம். மூத்த மகள் பல பள்ளி கல்லூரிகளிலிருந்து கலந்து கொள்ளும் மாநில கேம்ப் ஒன்றிற்கு செல்கிறாள். அங்கு ஐ.ஜியின் மகன் பெண்களிடம் முறைகேடாக நடந்து கொள்கிறான். அதை அங்கு இருக்கும் வாத்தியார்கள் கண்டிக்கிறார்கள். அப்போது ஜார்ஜின் மகள் குளிப்பதை வீடியோ செய்துவிடுகிறான். அதை வைத்து மிரட்டி காமுற நினைக்கிறான். அம்மா அதை பார்த்து அங்கே களேபரங்கள் நிகழ்கின்றன. விளைவு ஐ.ஜி மகன் இறக்கிறான். புதைத்துவிடுகிறார்கள்.

இந்த இரண்டாம்பாதி முழுக்க இரு குடும்பங்களின் அதிகார சண்டை. ஆம். ஐ.ஜி ஒரு பெண். அவள் தன் மகனுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்த்திருக்கிறாள். தன் மகனை எப்படியேனும் அடைய வேண்டும் என்று முடிவெடுக்கிறாள். சில தடயங்களின் மூலம் ஜார்ஜினை சீக்கிரமே அடைகிறார்கள். ஜார்ஜிற்கு தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். இந்த இரண்டிற்கும் இடையில் இருப்பது போலீஸ் என்னும் அதிகாரம் தான். இந்த அதிகாரமும் படிப்பறிவில்லாத அனுபவ அறிவே கொண்ட சாமான்யனும் தத்தமது குடும்பங்களுக்காக இண்டலெக்சுவலாக மோதுகிறார்கள். எடுக்கப்பட்ட விதம் சிந்திக்க வைக்கும் அளவு இருக்கிறது.

எல்லா காட்சிகளையும் நம்மால் யூகிக்க முடியும். இருந்தும் ஒரு திகிலை இயக்கத்தில் கொடுத்திருக்கிறார். முதல் பாதியில் தெரியும் சலிப்பு இரண்டாம் பாதியில் கிஞ்சித்தும் இல்லை. இரண்டாம் பாதி முடியும் போதே முதல் ஒரு மணி நேரத்தின் அருமை அழகாக புரியும். இருந்தாலும் கொஞ்சம் குறைத்திருந்திருக்கலாம் என்னும் ஏக்கம் இருக்கத் தான் செய்கிறது.

படத்தில் பிடித்த நடிகர்கள் எனில் மோகன்லாலும் ஐ.ஜி கீதா பிரபாகராக நடித்திருக்கும் ஆஷா சரத்தும் தான். மோகன்லால் முழுக்க ஒரு சினிமா பைத்தியம். முதல் பாதி முழுக்க அறிதலாகவும் இரண்டாம் பாதி முழுக்க அறிதலின் செயலாகவும் செய்திருப்பது பட கட்டமைப்பின் உச்சம். இரண்டாம் பாதியில் முழுக்க உணர்வுகளை கட்டுப்படுத்தி மோகன்லால் போடும் ப்ளான்கள் எல்லாமே திகிலூட்டும் அம்சத்தை கொஞ்சமும் பிசகாமல் கொடுக்கிறது திரைப்படம். ஆஷா சரத்தை பிடித்தமைக்கான காரணம் அம்மா போலீஸ் இரண்டும் இணைந்த வஞ்சத்தை ஒவ்வொரு காட்சியிலும் காட்டியிருப்பது ரசிக்கும் அளவு இருக்கிறது. மனித மனத்தில் இருக்கும் வஞ்சத்தின் ஆழம் எவ்வளவு என்பதை சஹாதேவன் என்னும் பாத்திரத்தில் காட்டியிருக்கிறார்.

இரண்டாம் பாதி முழுக்க பயத்தின் காட்சியமைப்புகள். பயமே நம் அகம் என்பதை நிறுவியிருக்கிறார். ஒரு முழுக்கதையை கண்ட ஆசுவாசத்தை நிச்சயம் இப்படம் கொடுக்கும். A damn good entertainer!!!

கமலஹாசன்

இதை கமலஹாசன் நடிக்கிறார் என்பதை கேட்டவுடன் முதலில் சந்தோஷமே கொண்டேன். மலையாளத்தில் வந்த ஒரு படம் இந்தியா முழுக்க பிரபாலமாகியிருக்கிறது எனில் கமலின் நடிப்பில் இன்னமும் நன்றாக இருக்கும் என்னும் குருட்டு நம்பிக்கை. இப்போது படம் முடிந்தவுடன் ஞானி ஓ பக்கங்களில் உன்னைப் போல் ஒருவன் படம் சார்ந்து எழுதியிருந்தது தான் நினைவிற்கு வருகிறது. நஸ்ருதீன் ஷா நடித்து கதையை மையப்படுத்திய படம் கமல் நடித்த ஒரே காரணத்தினால் கமல் கோட்பாட்டு மையப்படமாகிவிட்டது என சொல்லியிருந்தார். அதற்கு சரியான நடிகர் டெல்லி கணேஷ் என்றும் சொல்லியிருந்தார். நினைத்துப் பார்த்தால் அக்கதாபாத்திரத்திற்கு அதுவே எனக்கு சரியெனப் பட்டது. அதன்படியே இப்படம் கமலுக்கு ஏற்றது அல்ல என்றே தோன்றுகிறது.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக