ஒரு கற்பனை கிராமம்

ஆண் பெண் உறவுகளை பற்றி நம் இலக்கியங்களில் நிறைய பதிவுகள் காணக்கிடைக்கின்றன. அவை பெண்களின் எழுத்துகளில் இருக்கின்றனவா என்னும் சந்தேகம் எனக்குள் இருந்தது. அதை கிருத்திகாவின் வாஸவேச்வரம் நாவல் மனநிம்மதியுடன் பூர்த்தி செய்தது.

பைபிளில் கனியை உண்டவுடன் ஆண் கடந்த காலத்தை சுமந்து சோகமாகவே இருப்பான் என்பது போல வாசகம் ஒன்று வருகிறது. இதை வேறு விதமாக நாவலில் கிருத்திகா எழுதியுள்ளார். புனைவாக்கியிருக்கிறார். நாவலுக்கு முன்னுரையிலேயே பெருந்தேவி சொல்கிறார் இந்நாவலை வாசிக்கும் போது எழுதபட்ட காலத்தை மனதில் வைத்துவாசியுங்கள் என்று. அந்த வாசகம் என்னமோ நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மை தன். இந்நாவல் முழுக்க கோட்பாடுகளால் நிறைந்து இருக்கிறது.

எல்லா ஆண்களுக்குள் இந்த புறவயத் தோற்ற ஆண்மையானது பெண் மெச்ச வேண்டும் என்னும் எண்ணத்திலேயே இருக்கிறது. இது தோற்றத்திற்கு மட்டுமல்ல மூளை சம்மந்தமானதும் கூட. ஆண்கள் சின்னதொரு வேலை செய்தாலும் அவர்களை பெண்கள் கொண்டாட வேண்டும் என்னும் எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். அப்படி கொண்டாடவில்லை எனில் மனதிற்குள் வருத்தம் இருக்கும். கடந்த காலத்தில் வருத்தம் என்னும் பதத்துடன் அது நிற்கவில்லை. மாறாக தர்க்கப் போராக மாறியிருக்கிறது. இதை என்னுடைய வீட்டிலேயே கண்டிருக்கிறேன். அப்பா வேலை முடித்து வந்து அலுவல்கள் சார்ந்து நிறைய பேசுவார். அவரின் தர்மத்தை நிலைநிறுத்த நிறைய சொல்லுவார். அம்மா எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு விடுவதால் அமைதியாகிவிடுவார். நான் ஊரார் தர்மத்தை பேசுபவன் அதலின் என்னுடன் வாக்குவாதம் நடைபெறும். அவரை நான் ஏற்றுக் கொண்டாக வேண்டும். அல்லது நான் விவரம் பத்தாதவன்!

இக்காலத்தில் இந்த பிரச்சினையை காண முடியாது. கல்லூரிகளில் சரிசமமாக பேசி பெண் என்பவளுக்கும் இந்த எல்லா உணர்வுகளும் இருக்கின்றன என்பதை நடைமுறையில் அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு கருத்தை திணிக்க முயற்சிக்கும் போதே அக்கருத்தை கேலி பேசியோ அல்லது புறந்தள்ளியோ போகும் உரிமையை பெண்கள் கொண்டாடுகிறார்கள். இந்த உரிமை சற்று அச்சுறுத்தினாலும் இதிலிருக்கும் நியாயம் நமக்கு காலப்போக்கில் உணர்த்தப்படுகிறது. என்னுடைய அம்மா காலத்திலெல்லாம் இந்த நிலை அல்ல. ஆண் சொல்வது எல்லாமே அறம். பெண் ஆணின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவிக்காதவள். பாலியலிலும் இந்த அடிமைத்துவம் இருந்து வந்திருக்கிறது. நம் திருமண முறையையே அப்படி தான் பார்க்கிறேன். பார்த்து மனம் ஒப்பியவுடன் மணம் என்பது. இது இப்பதிவுக்கு ஒவ்வாதது என்பதால் விட்டுவிடுவோம்.

இந்த நிலையில் பெண்களின் எண்ணமானது ஒரு இடத்தில் எல்லா காலங்களிலும் ஒன்றாக இருக்கிறது. அது ஆண் தன்னை பார்க்க வேண்டும். வர்ணிக்க வெண்டும். காதல் வலையில் விழ வேண்டும் என்று. தங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் வரமான அழகை ஆராதிக்க வேண்டும் என்று ஆசை கொள்கிறார்கள். அவர்களின் பலவீனம் அதை ஆண்களைப் போல திணிக்க தெரியாதது. ஆண்கள் தங்களிள் திறமைகளை பெண்கள் ரசிக்க வேண்டும் என்று திணிக்கும் விஷயம் பெண்களிடம் இல்லாமல் போனது. காரணம் ஆண் பெண்ணின் அழகை கண்டு முதலில் பயமே கொள்கிறான். தன்னை இந்த அழகு ஆள அரம்பித்துவிடுமோ என்று அஞ்சுகிறான்.

அதிகாரம் செய்ய ஆசைப்படுவது எல்லா ஆணினுள் இருக்கும் குணம். பெண்களுக்கு கட்டுப்பட்டாக வேண்டும் என்னும் எண்ணமே இல்லை. அது ஒரு சாய்ஸ். வேறு வழியின்றி ஒரு காலத்தில் எடுக்கப்பட்டது. இப்போதும் அப்படி சில இடங்களில் இருக்கிறது. இதை 1930களில் நடப்பதாக எழுதியிருக்கிறார் கிருத்திகா. கதைசொல்லல் திறமையிலும் கதையிலும் என்னை பிரமிக்கவே வைத்திருக்கிறார்.வாஸவேச்வரம் ஒரு கற்பனை கிராமம். அங்கு இருக்கும் குடும்பங்களில் சிலவற்றை பெருவாரியாக மையப்படுத்துகிறார். சந்திரசேகரய்யர் - ரோகிணி, பிச்சாண்டி, சுப்பையா குடும்பம் ஆகிய மூன்றையே நாவலில் மையபடுத்துகிறார். ரோகிணி பட்டணத்து பெண் விருப்பமில்லாமல் சந்திரசேகரய்யரை மணம் புரிந்து கிராமத்தில் தங்குகிறாள். கணவர் தன்னை வர்ணிக்க வேண்டுமே என்று மேல் சொன்ன எல்லா ஆசைகளையும் கொண்டிருக்கிறாள். நிறைவேறுவதில்லை. கணவன் முழுக்க அதிகாரத் திணிப்பு. ஒருகட்டத்தில் மனதளவில் வெறுக்கவும் செய்கிறாள்.

பிச்சாண்டி. கிராமத்தில் தவறான மருத்துவத்தை செய்யும் சுந்தாவை எதிர்க்க அங்கு தேர்தலில் நிற்கிறான். சுந்தாவின் அக்கிரமங்களை மக்களிடம் சொல்கிறான். அவன் சார்பாக சந்திரசேகரய்யரை நிற்க வைக்கிறான். சுந்தா. பிரச்சாரம் செய்கிறான். ரோகிணி மேலும் சிறு மையல் இருக்கிறது பிச்சாண்டிக்கு. அதை அவளிடமே பூடகமாக சொல்கிறான். பிச்சாண்டியின் மூலம் அக்காலத்திய கம்யூனிஸ கொள்கை ஆசையை மிக அழகாக கிருத்திகா சொல்லி செல்கிறார். நாவல் மூன்று பகுதியாக இருக்கிறது. அதில் நடுப்பாகம் முழுக்கவே அரசியல் கதை தான். இந்த பகுதியில் பிச்சாண்டி சந்திரசேகரய்யரின் நிலங்களை நாசம் செய்கிறான். நிறைய தீங்கு செய்கிறான். ஒரு இடத்தில் பிச்சாண்டி தலை குனியும் அளவு சம்பவம் நிகழ்கிறது.

சுப்பையா கதை என்ன எனில். அவனுக்கு மனைவியை இஷ்டப்படி கலவி கொள்ள வேண்டும். இஷ்டமில்லாமல் மெஷினைப் போல இயங்குகிறாள். சண்டை நிகழ்கின்றன. அப்போது சுப்பையா ரோகிணி மாதிரி மனைவி இருக்க வேண்டும் என்கிறான். மனைவி சந்திரசேகரய்யரை சொல்கிறாள். அவனுக்கு கோபம் வருகிறது. அதற்கு பல கடந்த கால கோபங்கள் இருக்கின்றன. பித்தாகிறான். மனதிற்குள்ளேயே புழுங்குகிறான்.

நாவலின் கடைசிபாகம் முழுக்க ஒரு கேள்வி தான். சந்திரசேகரய்யரை கொலை செய்தது யார் ?

கலவி சார்ந்து நாவலில் நிறைய விஷயங்கள் வருகின்றன. அதில் ஒன்று புலனாகிறது. நம் சமகால சமுதாயம் எல்லாம் சினிமாக்களில் காட்டப்படும் அங்கங்களை வைத்தே கிளர்ச்சியடைகிறார்கள் என்னும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நாவலில் அம்மக்களுக்கு சிறந்த பொழுது போக்காய் இருப்பது கதாகாலேக்‌ஷபம் தான். அதில் பெண்கள் சார்ந்து சொல்லப்படும் வர்ணனைகள் கலவி சார்ந்த தன்மைகள் அந்த கிராமத்தையே கிளர்ந்தெழ செய்கிறது. அதை விரிவாக வர்ணிக்கிறார். கிருத்திகா நேரில் சென்று பார்த்த கிராமங்களை வைத்து தான் இந்த கிராமத்தை கற்பனையில் உருவாக்கியதாக வருகிறது. ஆக இந்த தன்மை நம் கலாச்சாரத்தில் அழியாமல் இருப்பது எப்படி என்பது என்னை சுவாரஸ்யத்தில் ஆழ்த்துகிறது. இதில் காட்டப்படும் கலவிகளெல்லாம் ஆண்களின் அல்பத்தனத்தை காட்டிச் செல்கிறது. அதோடு பெண்களுக்குள் ஒடுங்கியே இருக்கும் வேட்கையையும் பட்டவர்த்தனமாக்குகிறது. கலவி என்று சொன்னாலும் கூட அதை எழுதியிருக்கும் விதம் ரொம்பவே வித்தியாசமானதாக, கலவியே தெரியாத அளவு அழகாக இருக்கும்.

கதை சொல்லல் முறையை பற்றி சொல்லியே ஆக வேண்டும். கதையின் ஆரம்பத்தை பாருங்கள். கதாகாலேக்‌ஷபத்தை சொல்லுகிறார். அதை கவனிப்பவர்களின் செயல்களுக்கு செல்கிறது கதையோட்டம். அப்படியே அவர்களின் பார்வை எதை காண்கிறதோ அத்துடன் கதை இணைகிறது. பின் காலேக்‌ஷபமும் அங்கு நிகழும் செயலும் ஒப்புமை பார்க்கப்படுகிறது. இந்த விஷயங்கள் மட்டுமில்லாமல் நாவலின் முதல் பகுதியில் ஆசிரியர் ஒட்டு மொத்த கிராமத்தையே வலம் வருவது வாசிக்கவே அவ்வளவு இன்பமாய் இருக்கிறது. சொல்லும் விஷயங்களிலெல்லாம் அங்கங்கு நகைச்சுவையை வைப்பது வாசிக்கும் போது அலாதியாக இருக்கிறது.

வாஸவேச்வரம் கற்பனை கிராமம் என்று சொன்னது தான் ஆச்சர்யமாய் இருக்கிறது!

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மையாகவே தோன்றுகிறது...

ஆனால் ( பெண் கல்வி ) முன்னேற்றம் அடைந்து வருகிறது... இன்னும் மாற வேண்டும்...

Post a comment

கருத்திடுக