வீடு வஞ்சம் விலகல்

கல்லூரியில் நிறைய மலையாள நண்பர்கள். அவர்கள் மலையாள இலக்கியத்தை கொஞ்சம் அறிந்தவர்களும் கூட. இதில் ஒரு தோழி என்னிடம் அங்கிருக்கும் எழுத்தாளர்களை புகழ்ந்து சொல்லியிருக்கிறாள். அதில் ஒருவர் தான் எம்.டி வாசுதேவன் நாயர். கேரளத்து பெயர்களே எனக்கு ஒரு வசீகரம் தான். அவர்கள் பேசும் தமிழை நான் கல்லூரியில் அதிகம் ரசித்துள்ளேன்.

இவரின் நூல் இன்னமும் அதிகமாக விற்றுக் கொண்டிருக்கிறது என்று நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். சமீபகாலமாக மொழிபெயர்ப்புகள் வாசிக்க வேண்டும் என்னும் ஆர்வம் எழும்பி வருவதால் அவருடைய நாலுகட்டு என்னும் நாவலை வாங்கி இன்று வாசிக்க ஆரம்பித்தேன். ஒரு சந்தேகமே முதலில் எழுந்தது. நான் வைக்கம் முகம்மது பஷீர் மற்றும் வாசுதேவன் நயகர் ஆகியோரின் தலா ஒரு நாவலே வாசித்திருக்கிறேன். இரண்டு பேரும் எப்படி இவ்வளவு எளிதாக அழகான மொழி கொண்டு இலக்கியத்தை மக்களுக்கு தருகிறார்கள் ? நாலுகட்டு முழுக்க முழுக்க யதார்த்தமான நாவல். அதை மொழிபெயர்த்திருக்கும் சி.ஏ பாலனின் மொழிபெயர்ப்பும் எளிமையாக அழகாக இருக்கிறது.

நாலுகட்டு எனில் என்ன ? அது ஒரு பாரம்பரிய முறை. வீட்டின் அமைப்பை அப்படி குறிப்பிடுகிறார்கள். இதை நம் பழைய சினிமாக்களில் நிறைய காண முடியும். அந்த வீடுகளில் சுற்றிலும் அறைகள் இருக்கும். அதற்கு மேலேயும் அறைகள் இருக்கும். வீட்டின் மையத்தில் காற்று வெளிச்சம் வரும் அளவிற்கு பெரியதொரு வெளி இருக்கும். இது கேரளத்தில் கலாச்சாரத்தின் அடையாளமாக திகழ்ந்திருக்கிறது என்பதை நாவலில் சொல்கிறார்.இது போன்றதொரு நாலுகட்டு வீட்டில் இருக்கும் பெரிதொரு குடும்பம். அதில் ஒரு பெண் தான் பாருக்குட்டி. அவருக்கு கோந்துண்ணியின் மீது காதல் வந்துவிடுகிறது. வீட்டில் கல்யாணம் நிச்சயிக்கும் போது கோதுண்ணி நாயருடன் சென்று விடுகிறாள். கோந்துண்ணி நாயரின் வீரம் நாவலில் சில பக்கங்கள் நீளுமளவிற்கு வசீகரமாய் சொல்லப்படுகிறது. அவளை வீட்டில் இறந்ததாக எண்ணி தலை முழுகிவிடுகிறார்கள். அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கவிருக்கிறது. கோந்துண்ணி நாயர் செய்த பல நல்வினைகளின் பயனாய் செய்தாலிக் குட்டி என்பவன் அவருக்கு மாமிசத்தில் விஷயம் வைத்து கொன்றுவிடுகிறான்.

பாருக்குட்டிக்கு பிறக்கும் குழந்தை தான் அப்புண்ணி. நாலுகட்டு வீட்டில் சேர்ந்து வாழும் குடும்பம், பாருகுட்டியை தவிர்த்து சேர்ந்து வாழும் குடும்பம் ஏதோ தீவினை வரப் போகிறதோ என்றெண்ணி சர்ப்பத் துள்ளல் நிகழ்த்த முடிவெடுக்கிறார்கள். அது ஒரு விழாப் போல. அதைப் பார்க்க ஆசைப்படுகிறான் அப்புண்ணி. நாலுகட்டு வீட்டில் வாழ வேண்டியவள் நம்பூத்ரியின் வீட்டில் ஏழை வேலைக்காரியைப் போல வாழ்கிறாள்.

அவளுக்கு அப்போது உதவி செய்யக் கூடியவராக இருக்கும் ஒரே நபர் சங்கரன். சங்கரனுக்கு அவள் நாலுகட்டின் வீட்டில் இருந்தது முதல் தெரியும். இவர்களை ஊரார் தவறாக பேசுவதை அப்புண்ணி அறிகிறான். அதே நேரம் அவனை நாலுகட்டு வீட்டில் அவமானப்படுத்தி வெளியனுப்புகிறார்கள். செய்தாலிக்குட்டியை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என்றிருந்த அவனுக்கு செய்தாலிக்குட்டியிடமிருந்தே நாவல் முழுக்க நிறைய உதவிகள் அரங்கேறுகின்றன. அம்மாவின் நடவடிக்கை பிடிக்காமல் வீட்டிலிருந்தே செல்கிறான். அப்புண்ணியின் பழி, நலுகட்டுவீடு, அவமானம் செய்த மனிதர்களின் முகம், அம்மா என்று எல்லாமும் சேர்ந்து அவன் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதை மிக அழகியல் நிறைந்த மொழியுடன் சொல்லியிருக்கிறார்.

இதுநாள் வரையில் இவ்வளவு பெரிதாக நாவலின் கதைச்சுருக்கத்தை நான் சொன்னதில்லை. அதற்கான காரணம் இந்நாவல் பெரும் கதையை கொண்டிருக்கிறது. சுழற்சி முறையில் எல்லா கதைகளும் ஒரு முடிவை நோக்கி செல்லுமாயின் இக்கதை அடுக்கடுக்கான சம்பவங்களால் கட்டமைக்கப்படுகிறது. எல்லா சம்பவங்களின் மையமாக அப்புண்ணியின் அகம் இருக்கிறது.

இக்கதை முழுக்கவே அப்புண்ணியின் பார்வையில் சொல்லப்படுவது இன்னமும் சுவாரஸ்யமாக இருக்கிறது. குடும்பம் என்பது ஒரு கூட்டமான அமைப்பு. அந்த அமைப்பிடம் நிரந்தரமான அல்லது அசையாத சொத்து ஒன்று இருந்தாலே அது என்றேனும் ஒரு நாள் பிரிக்கப்படும் என்பதை நயமாக நாவலில் சொல்லி செல்கிறார். அதை அவர்கள் செய்யும் அபத்த நாடகங்களாக உருவாக்குகிறார்.

நாவலில் இரண்டு உறவுகள் அவர்கள் கொள்ளும் இடைவெளியால் வாசிப்பின்பத்தை அளிக்கின்றன. ஒன்று அப்புண்ணி பாருகுட்டியின் உறவு. அம்மா மகன் என்பதை மென்மையாக சொல்கிறார். அவர்கள் கொள்ளும் சண்டைகள் பெரும் சண்டையாக மாறி மனக் கிலேசமாக உருவாகும் போதும் அம்மாவிற்கான மனம் எப்படி நடந்து கொள்ளும் என்பதையும் மகன் சிறுவனாக எப்படி நடந்து கொள்வான் என்பதையும் புன்சிரிப்பை வரவைக்கும் அளவு சொல்லியிருக்கிறார். அடுத்து அப்புண்ணி அம்மிணிக்குட்டி உறவு. அம்மிணிகுட்டி அப்புண்ணிக்கு ஒரு மாயை. சர்ப்ப துள்ளல் நிகழ்ச்சியில் கண்டவன். அவளையே கண்ணில் வரித்தான். நேரில் அதிகம் பேசினான். பயம் ஆசை இச்சை எல்லாம் கலந்து அவனுள் செய்யும் சேட்டைகளை அழகாக சொல்கிறார்.

கேரளத்தில் இருக்கும் மரபு சார்ந்த விஷயங்களை அங்கங்கே விவரிக்கிறார். விவரிப்பான நாவல் எவ்வித பிசிருமின்றி அங்கங்கே இப்படி புதிய விஷயங்களை சொல்லி செல்வதால் நாவலே கேரளத்தை புதுமையாக அறியாத இடமாக காண்பிக்கிறது.

இதைத் தவிர அப்புண்ணியின்  பள்ளியில் அவன் சம்பாதிக்கும் அவமானங்கள், தன்னுடைய தன்மானத்தை காக்க நினைத்து அவன் செய்யும் பிரயத்னங்கள், செய்தாலிகுட்டியைக் காணும் போது அவன் மனம் கொள்ளும் உணர்வுகளேல்லாம் வாசிக்கவே அவ்வளவு இன்பமாய் இருக்கிறது. அப்பக்கத்தில் தெரியும் வன்மங்களெல்லாம் அவன் வயதிற்குண்டானதாய் அடர்த்தியாய் இருக்கிறது.

மனிதன் பலவீனமானவன். பலமாக ஒருவன் தென்பட்டால் கூட ஏதோ ஒரு பலவீனத்தை மறைக்கவே என்பது போல் தான் நாவலில் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அமையப்பெற்றிருக்கின்றன. அளவில் பெரியதாய் இருப்பினும் ஒரு பக்கத்திலோ ஒரு வரியையோ கூட தேவையில்லை என்றோ சலிப்பு என்றோ எனக்கு சொல்லத் தெரியவில்லை. அவ்வளவு இனிமையான நாவல் நாலுகட்டு

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக