சித்தனின் நாவல்

யுவன் சந்திரசேகரை சேலத்தில் ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அப்போது அங்கு வந்திருந்தவர்கள் அவரின் எழுத்தை தீவிரமாக வாசித்திருந்தவர்கள். அவர்கள் எல்லோருமே அவருடைய எழுத்துகளை நான் லீனியர் விஷயங்களில் தீவிரமாக செயல்படுபவர் என்று சொல்லியிருந்தார்கள். உடனே அவருடைய நூல்களில் இரண்டை வாங்கினேன். ஒன்று நாவல் இன்னுமொன்று சிறுகதை தொகுதி(இன்னமும் வாசிக்கவில்லை).

வாங்கியதற்கு வந்திருந்தவர்கள் பேசியது மட்டும் காரணம் என்று சொல்லிவிட முடியாது. மெடா ஃபிக்‌ஷன் என்னும் இலக்கிய வகைகளை அறிவியல் அறிந்த ஒருவரால் அதிகமாக விளையாட முடியும். ஆம் அந்த வகை இலக்கியம் ஒரு விளையாட்டு தான். ஏன் எனில் கதை என்ற ஒன்றை தேடி அலையும் வாசகனை முன்னும் பின்னும் அலையவிட்டு கதையை கண்ணில் காட்டாமலேயே செல்லும் ஒரு மாய வித்தை. இதற்கும் அறிவியலுக்கும் என்ன சம்மந்தம் என்று நினைக்கலாம்.

அறிவியலில் இதுநாள் வரை கண்டுபிடிக்கப்பட்ட எல்லா விஷயங்களும் ஒரு மையப்புள்ளியை சென்றடைகிறது. பௌதீகத்தை எடுத்துக் கொள்வோம். அதில் விஞ்ஞானிகளை கேட்டால் சிலர் புவியீர்ப்பு விசையே எல்லா தேற்றங்களுக்கும் மையம் என்பார்கள். சிலர் ஒளியின் வேகமே மையம் என்பார்கள். சிலர் விசை. சிலர் காலம். சிலர் இடம். ஆக எதையோ நம்பி எல்லா தேற்றங்களும் அலைந்து கொண்டிருக்கின்றன. பௌதீகம் தன்னுள்ளே மாயத் தன்மையை கொண்டிருக்கிறது. உலகமே கொண்டாடும் கோட்பாடுகள் வேறொருவரால் தகர்க்கப்பட்டால் உலகம் தகர்த்தவரை கொண்டாட ஆரம்பிக்கிறது. கோட்பாடுகளை கேட்பவனுக்கும் நுகர்பவனுக்கும் எல்லாமே உண்மையாக இருக்கிறது. இது தான் மெடா ஃபிக்‌ஷன். வாசிக்கும் எல்லாமே கதையாக இருக்கும். எது கதையென்பதை எழுத்தாளன் மர்மமாக வைத்திருக்கிறான். இந்த தன்மையில் இயங்குபவர் என்று பலர் சொல்ல ஆசையில் வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். அவர் அன்று அறிவியல் சார்ந்து நிறைய பேசியதாலும் நூல் வாங்க ஆசை ஏற்பட்டது.

நாவல் முழுமையாக என்னை ஈர்க்கவில்லையெனினும் எழுதபட்ட விதம் மிக அருமையாக இருக்கிறது. வாசித்த நாவல் யுவன் சந்திரசேகரின் முதல் நாவலான குள்ளச் சித்தன் சரித்திரம்.தமிழவன் எழுதிய ஜி.கே எழுதிய மர்ம நாவல் என்னும் நாவலின் அதே கட்டமைப்பை தான் இந்நாவலும் கொண்டிருக்கிறது. அதில் அவர் செய்திருந்த பிழையை இதில் இவர் செய்யாமலிருப்பதே நாவலின் நல்விஷயங்களுள் ஒன்று. அதை பிறகு சொல்கிறேன். கதை சார்ந்து கொஞ்சம் பார்ப்போம்.

இந்தியாவில் மாயா யதார்த்தமாகவே புராணங்கள் நிரம்பி வழிகின்றன. இதனாலேயே நாம் சிறுவயதிலிருந்து மகாபாரதம் இராமாயணங்கள் சார்ந்து ஈர்க்கப்பட்டிருகிறோம். தமிழக வரலாறுகள் மாயத் தன்மைகள் குறைந்து வீரத் தன்மைகளால் நிறைந்து இருக்கிறது. அரசர்களின் வழியில் சொல்வதை விட தனியாக பார்த்தால் மாயத் தன்மைகளுக்காகவே நிறைய அம்சங்கள் தமிழகத்தில் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் சித்த மரபுகள்.

மருத்துவம் செய்வதே ஒரு மேஜிக் தான். இந்த மேஜிக்கை தமிழகத்தில் இயற்கையாகவே செய்தவர்கள் சித்தர்கள். உலகத்தில் alchemist என்று சொல்லப்பட்டு உலோகங்களை மாற்றியவர்கள் தமிழகத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். இப்போது சித்தர்களை காண்பதரிது என்றே சொல்வேன். அப்படியே கண்டாலும் உண்மையாகவே சித்தர்களா என்று சந்தேகமே முதலில் எழுகிறது. தமிழகத்தின் முக்கியமான சித்தர் ஆண்மை குறைவை மட்டுமே செய்வதால் சித்தர் வரும் காலத்தில் வாய்மொழி சொல்லாகவே அமையக் கூடும்.

நம் சமூகம் நிறைய மூடநம்பிக்கைகளால் சூழப்பட்டே வளர்ந்து வந்திருக்கிறது. வாக்கு, குறி, பூம் பூம் மாடு, குடுகுடுப்பைக் காரன் என்று இன்னமும் நம்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள். எல்லோர் வீடுகளிலும் வெளியில் செல்லும் போது யாரும் தன்னைப் பார்த்து எங்கு செல்கிறாய் என்றோ பூனை குறுக்க செல்லக் கூடாது என்றோ நினைப்பவர்கள் நிச்சயம் இருக்கிறார்கள். இதை நாம் இப்போது மூடநம்பிக்கை என்று சொல்லி புறந்தள்ளினாலும் இதன் பலாபலன்களை அனுபவித்தவர்களும் எல்லா வீட்டிலும் இருக்கத் தான் செய்கிறார்கள்.

என்னுடைய அப்பாவே ஜோஸியம் பார்க்கக் கூடியவர். அது எப்படி கணிக்கிறார் என்பதை சொன்னாலும் அது ஒரு கற்பிதமாக ஆகுமே தவிர உண்மையாகாது. ஆனால் அப்பாவிடம் கேட்க வருகிறவர்கள் எல்லோருமே நீங்க சொன்னதெல்லாமே பலிச்சிருக்கிறது சார் என்றே சொல்லுகிறார்கள். இப்போது விஷயத்திற்கு வருவோம். சித்தர்கள் ஜோசியம் குறி எல்லாமே ஆதியும் அந்தமும் இல்லாத உண்மையை நோக்கி செல்லும் மர்மம். இந்த மர்மத்தை எங்கிருந்தோ கொணருகிறார்கள்.

சூன்யத்திலிருந்து ஒன்று முளைக்கும் என்று வேதாகமத்தில் நோவா சொல்வதற்கும் இதற்கும் எனக்கு வித்தியாசம் தெரிவதில்லை.

நாவலில் கூட ஒரு இடத்தில் சொல்லுகிறார் சித்தர்கள் உண்மையின் வழியில் செல்பவர்கள் என்று. எல்லா சித்தர்களின் உள்ளேயும் இடம் காலம் போன்ற எல்லாமே வளையக் கூடியது. ஐன்ஸ்டைன் சொல்லுவது போல. இதுவும் நாவலில் வருகிறது, சுவாரஸ்யமாய். இந்த ஸ்தம்பித்த பொழுது உலகத்தை உய்த்துணரும் சக்தியை அல்லது பயணத்தை சித்தர்கள் அவர்களுக்குள் மேற்கொள்கிறார்கள். இந்த பொதுப்படைக் கொள்கையை மனத்தாறக் கொண்டு உருவாக்கப்படும் கதாபாத்திரம் தான் குள்ளச் சித்தன் என்னும் முத்துச்சாமி. இவரின் லீலா விநோதங்களை நாவல் விரிவாய் சொல்கிறது.

இப்போது கட்டமைப்பையும் நாவலின் வெற்றியையும் சொல்கிறேன். நாவலில் இரண்டு கதை. ஒரு கதை ஹாலாஸ்யம் என்னும் மனிதனைப் பற்றியது. இவர் குள்ளச் சித்தன் சரித்திரம் என்னும் நாவலை எழுத நினைக்கிறார். அதற்கு எப்படியெல்லாம் கச்சாப் பொருட்களை தயார் செய்கிறார் என்று நாவல் செல்கிறது. இரண்டாவது கதை பழனியப்பன் செகப்பி என்னும் தம்பதியரின் கதை. இக்கதை அவர்களுக்கு குழந்தையில்லாத கதையையும் அதற்காக அவர்கள் செய்யும் வேண்டுதல்களையும் பேசுகிறது.

கிறிஸ்தோபர் நோலன் இயற்றிய மெமெண்டோ படத்தைப் போலவே இந்நாவலின் முதல் கதை நான் லீனியர் வகையிலும் இரண்டாவது கதை லீனியராகவும் செல்கிறது. ஜி.கே நாவலை எங்கு மிஞ்சுகிறது எனில் அந்நாவலில் மையக்கதையாக வாசகன் மனதில் ஆசிரியர் ஓட்டவைக்கும் கதையை கட்டுடைக்கும் இடங்களை மிக மெலிதாக வைத்திருப்பார். டக்கென கடந்து போய்விடுவதால் அந்த அத்தியாயங்களை புறக்கணித்து வாசகன் சராசரி கதையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இந்நாவலில் கட்டமைத்தலும் கட்டுடைத்தலும் சமமான அளவில் மிக அழகாக இருக்கிறது.

பழனியப்பன் குள்ளச் சித்தன் சரித்திரம் நாவலை வாசிக்கும் போது நாவல் வீரியம் மிகுந்ததாகவே தெரிகிறது. நாவலுக்காக அந்த ஆசிரியர் செய்யும் பயணங்கள் முன்னுரை நாவல் என்று குழப்பும் பகுதிகளை விரிவாக செய்திருக்கிறார். அதே நேரம் குழப்பம் அதிகமாக தெரிவதில்லை. அத்தியாயங்கள் முன்னும் பின்னும் முரணாக இருப்பினும் எளிதில் அடையாளப் படுத்திக் கொள்ளக் கூடியதாய் இருக்கிறது.

முழுமையாக ஈர்க்காததன் காரணம் ஒட்டுமொத்த நாவலில் நான் லீனியர் தளத்தில் ஆட்டு வைக்கும் கதை ஹாலாஸ்யத்தின் கதை. அப்படியிருக்கும் பகுதி முடிவில்லாமல் முடிந்துவிடுவதே அதிருப்தியை கொடுக்கிறது. அதுவே கூட இந்நாவலின் தேவையாக இருக்கலாம். சராசரி வாசகனாக எனக்கு ஒரு அதிருப்தியையே அப்பகுதி கொடுக்கிறது.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக