ஒரு பகுதி பல விகுதி

கடந்த சில நாட்களாக நகுலனின் பித்தனாக இருக்கிறேன். கனவில் கூட வருகிறார். அங்கேயும் வார்த்தைகள். வார்த்தைகளைக் கொண்டாடி பயந்து புறத்தள்ளி புறந்தள்ளப்பட்ட ஒருவனால் அதன் துணை கொண்டே சஞ்சரிக்க முடியுமெனில் நகுலன் எழுத்துலகில் தான். வார்த்தை ஒரு இசை. நம்மைப் போன்றவர்களால் சம்பாஷிக்க மட்டுமே முடியும். நகுலனின் புனைவெழுத்தில் தேடல் கொண்டு வாசித்தால் எதுவுமே கிடைக்காது. பித்தத்தை தெளிவாக்க முயற்சிக்காமல் அதே பித்தத்தை கொண்டாடுகிறார்.

இந்த கொண்டாட்டத்தை ஒரு கலையின் மூலம் வெளிக்காட்ட நினைக்கிறார். அதற்கு அவர் எடுத்துக் கொள்ளும் களம் தான் நாவல். அதில் ஒன்று தான் அவருடைய ஆறாவது நாவல் நாய்கள்.


பொதுவாக அவருடைய நாவலில் நாயகன் எழுதிய நாவலின் அனுபவங்களை நாவலாக்குவார். இந்த நாவலில் மாறாக நாவல் எழுதுவதையே நாவலாக்குகிறார். ஒரு நாவல் எழுதுவது சாதாரண விஷயமல்ல. அதற்கான ஒரு நிலை இருக்க வேண்டும். எழுத நினைக்கும் கருவில் பித்தனாய் இருக்க வேண்டும். அந்த பித்தனிலையிலிருந்து வழுவக் கூடாது. அப்படி சென்ற பிறகும் எழுதலாம். என்ன நாவலில் உயிர் இருக்காது!

கிட்டதட்ட இது தான் நாய்கள் நாவலின் கதை. நாய் என்பதை அவர் உருவகப்படுத்துகிறார். எடுத்தவுடனேயே அதை செய்வதை விட சுய வாழ்க்கையின் பித்தனிலைகளை எடுத்து அதிலிருந்து நாய்களை உருவகம் செய்கிறார். அது தான் இந்த பகுதி விகுதி சமாச்சாரம். பகுதி விகுதிகளை நான் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்து வந்தேன். எல்லா வார்த்தைகளும் பகுதி விகுதிகளை கொண்டிருக்கிறது. விகுதி நம்மிடம் ஒரு அர்த்தத்தை சேர்க்கிறது, எதன் அர்த்தத்தை எனில் அந்த பகுதி சொல்ல வேண்டிய அர்த்தத்தை அல்லது கொண்டிருக்கும் அர்த்தத்தை. நகுலன்(நாயகனின் பெயர்களுள் ஒன்று) என்ன சொல்கிறார் எனில் நான் இந்த விகுதியை மட்டும் எடுத்துக் கொள்கிறேன் என்று.

உதாரணமாக ஒரு மனிதரைக் காண்கிறீர்கள். இது கூட நாவலில் வருகிறது. நாயகன் சுப்ரமணிய பாரதி என நினைத்து தேரையிடம் பேசிக் கொண்டிருக்கிறான். அவன் கேள்வி ஏன் பாரதியாக இருக்கக் கூடாது என்பது தான். பௌதிக உடல் என்பது ஒரு குறியீடு. அதற்கான பகுதி அவரவர்களிடம் உள்ளது. பார்க்கும் போது நம்மிடமிருந்து என்ன தோன்றுகிறது என்பது விகுதி. இரண்டும் கலக்கும் போது தான் எதிராளியின் சுயத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். பகுதியை விட்டுவிட்டால் ? அது நமக்கேயான அர்த்தமற்ற உலகம். (அர்த்தமில்லை என்பதும் ஒரு அர்த்தம் தான் - நகுலன்)

இப்படித்தான் அவர் நாய்களை பார்க்கிறார். அவரின் வரிகளை அப்படியே தருகிறேன்

அகஸ்மாத்தாக அந்த படிகள் ஒன்றில் ஒரு நாய் படுத்துக் கொண்டிருப்பதை பார்த்தேன் -  கறுப்பும் சாம்பலும் விரவிய நிரம் – நல்ல மிருது – சதையின் மினுமினுப்பு – பார்க்க மிருதுவாக அழகாக இருந்தது -  அதன் வயிறு மூச்சுவிடுவதால்  சிறிது சிறிதாக மேலும் கீழுமாக சலித்துக் கொண்டிருந்தது -  எனக்கு அது ஒரு நாயாகத் தோன்றவில்லை -  ஒரு வசீகரமான மானாகத் தான் தோன்றியது. அப்படியானால் மானும் நாயும் ஒன்றேதானா ? – எந்த ஒரு வஸ்துவும் நமக்கு விகுதியாகத் தான் தோன்றுகிறது. ஆனால் எந்த ஒன்றும் விகுதியென்றால் கூட அது விகுதியாக தனித்தியங்குவதில்லை – ஒவ்வொரு விகுதியும் பகுதியின் அம்சம் என்று மாத்திரம் -  அப்படியானால் பகுதி என்பது தான் என்ன ?

அந்த உண்மையை அவர் அடைய விரும்புகிறார். அவரை தன்னையே நாயாக பாவிக்க நினைக்கிறார். மனிதம் என்னும் விஷயம் அதற்கு தடையாய் இருக்கிறது. அதனால் தான் நாவல் முழுக்க நவீனனை ஏன் நாயென்று சொல்லக் கூடாது என்று கேட்கிறார். எல்லா நாவல்களிலும் வருவதை போல கதைசொல்லியை நான் நகுலன் நவீனன் யாராக வேண்டுமெனினும் எடுத்துக் கொள்ளலாம். அதிலும் ஒரு குறிப்பை அவர் விட்டு செல்கிறார். நவீனன் ஒரு எழுத்தாளன். நகுலன் ஒரு மனிதனின் புனைபெயர்.

சரி நாவலுக்கு வருவோம். ஒரு நாவலில் வார்த்தைகள் பத்திகள் அவை சரியாக பகுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றிருக்கிறது. நகுலனுக்கு அதில் தான் சந்தேகமே வருகிறது. நாய்களை பற்றி எழுத நினைக்கும் நாயகன் நண்பர்களை சந்தித்து சரக்கடித்து அவ்வப்போது இலக்கியம் தத்துவம் என்று பேசியதை நாவலாக எழுதுகிறான். எழுதி கொண்டிருக்கிறான். அதற்கு அவன் சொல்லும் காரணம் எழுதாத எல்லாவற்றையும் எழுத ஆசைப்படுகிறேன் என்கிறான். முடிவில்லாத ஒரு நாவல் என்கிறான்.

மேலே இருக்கும் பெரும்பத்தியில் இருக்கும் வாக்கிய அமைப்புகளை கவனியுங்கள். சிறுவயதில் ஆங்கில பாடத்தில் நாம் படித்திருக்கும் hints development என்னும் பதத்தை ஒற்றி இதன் அமைப்பு தெரியும். நகுலன் உருவாக்க முயல்வது ஒரு இடைவெளி. மௌனம். மனதினுள்ளே உருவாகும் பல அரவத்திலிருந்து விடுபெற அவர் செய்யும் பிதற்றல்கள். எல்லாவற்றையும் கொட்டிவிட்டால் ஒரு மௌனம் கிடைக்கும். அந்த மௌனத்தில் பகுதியை அறியலாமல்லவா ?

அதனால் அவன் எழுதும் நாவலில் நாயகன் ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறான் இது முழுக்க முழுக்க வாசகர்களுக்காக எழுதப்படும் நாவல். இதைத் தாண்டி எதையும் இந்நாவல் செய்யப் போவதில்லை. அதையும் சரியே வாசகனுக்காக தான் என்பது போல முடிக்கவும் செய்கிறார்.

இந்நாவல் நிறைய புரியா விஷயங்களை கொண்டிருக்கின்றன. அப்போது ஜான் துரைசாமி என்னும் பாத்திரம் மூலம் ஒரு விளக்கத்தை கொடுக்கிறார். சில விஷயங்கள் புரிந்தாலும் புரியாமல் இருப்பதே மேல் என்று தோன்றும் அவை தான் அநேக விஷயங்களுக்கும் தேவைப்படுகின்றன என்று சொல்கிறார். தத்துவம் தரிசனம் எல்லாம் ரகசியம். அந்த ரகசியத்தை நான் அலறல்களினூடே தேடுகிறேன் என்பதை நாவலில் செயலாய் செய்திருக்கிறான் நாயகன்.

நாவல் சார்ந்து நாவலின் ஆரம்ப பக்கங்களில் நாயகன் புரியும் தர்க்கங்கள் நாவலுக்கு வெளியேயும் சென்று வருகின்றன. கதை ஒரு பொம்மலாட்டம் இல்லை என்கிறார். எல்லா கதாபாத்திரங்களுமே அதற்கான உலகில் சஞ்சரிப்பவை. நம்மால் அதை கட்டுப்படுத்த முடியாது என்கிறார். அதே ஒரு இடத்தில் பேசும் போது பேச்சின் வாக்கில் இப்படி சொல்கிறார் பாருங்கள்

நாம் இருவரும் யார் ?

பேனா நுனியில் பிறந்து பேப்பர்மீது சலிக்கும் உருவங்கள்

அப்படியென்றால் ?

நாம் ஒருவருமே இல்லை. நமக்கு உருவமோ, உயிரோ, உணர்ச்சிகளோ, உடலோ ஒன்றும் கிடையாது

நாவல் சார்ந்த தர்க்கங்களை நாயகன் எழுப்பும் அதே தருணத்தில் நாவல் ஒரு அனுபவம் சார்ந்த விஷயம் என்பதை மறுப்பதில்லை. மீசையை முறுக்கினாலெல்லாம் நாவல் கைவந்துவிடாது என்று சொல்கிறார். தர்க்கங்களிடம் தானே தோற்றுதான் நாவலில் இருக்கும் அமைப்பில் நிறைய இடைவெளியை வைத்திருக்கிறாரோ என்று சந்தேகம் வருகிறது.

நகுலன் சார்ந்து எனக்கு ஒரு சந்தேகம் இருந்தே வந்தது. அவர் சுயம் சார்ந்து தனி மனிதனின் மனத்தில் அகழ்வாரய்ச்சி செய்கிறாரே சமகால அரசியல் பிரக்ஞைகள் உண்டா என. அவருக்கு உண்டு என்பதை நாவலில் காட்டியிருக்கிறார். அதுவும் எழுத்து மற்றும் சுயம் சார்ந்த பயமும் இணைந்து அவருக்கு வேறு விதமான வாழ்வை அளித்திருக்கிறது. வேறு விதமான அரசியல் நிலைப்பாட்டை அளித்திருக்கிறது.

வாக்கியம் பத்தி அமைப்பு எல்லாவற்றையும் உடைக்கிறார். அவை வார்த்தைகள் ஆகும் போது அதை கொண்டடுகிறார். உலாவுகிறார். நண்பா என்று தான் எப்போதும் நான் பிறரை விளிப்பது வழக்கம். சிலர் அதை தவறாக எண்ணிக் என்னிடம் சண்டைக்கு வந்திருக்கிறார்கள். அவ்வளவு பெரிய கெட்ட வார்த்தையா அது ? வயது சார்ந்ததா அது ? எது எப்படி வேண்டுமென்றாலும் இருந்துவிட்டு போகட்டும் அப்படி திட்டியவர்களை விட வயதான ஒருவன் என்னை நண்பா என்றழைக்கிறார். எனக்காக நாவல் எழுதியிருக்கிறார். எப்படி நான் அவரை வாசிக்காமல் இருப்பது.

நகுலனின் எழுத்துகள் அர்த்தமற்ற கதையம்சம் அற்ற கட்டுச் சுழல். சிக்கிக் கொள்ளவே ஆசைப்படுகிறேன். Seduction by words. நகுலன் எனக்கான விகுதி. பகுதி எதுவாக இருந்தால் தான் என்ன!

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக