மனதின் பைத்திய நிழல்

வாசிப்பில் செய்யும் பெரும் சூழ்ச்சி இந்த நான் என்னும் பதம். இப்போது வாசிப்பதை போலவே ஓராண்டு முன்பு எனக்கு கிடைத்த விடுமுறையில் தொடர்ந்து வாசித்தேன். அப்போது தான் இந்த நான் என்னும் விஷயத்தில் ஈர்க்கப்பட்டேன். குறிப்பாக க.நா.சுப்ரமண்யம். இந்த தன்மையை அந்நாட்களுக்கு பல நாள் பின்பு வாசிப்பில் அதிசயித்து போன எழுத்து நகுலனுடையது. கட்டற்ற எழுத்தின் பிரவாகம் நகுலனுடையது. அவரின் எழுத்து புரிதலுக்கு அப்பால் இருக்கிறது. உண்மைதான். ஆனால் வசீகரமாய் இருக்கிறது. அவரை அவரே உடைத்து போட்டு எழுதுகிறார். அவர் எழுதிய முதல் நாவலை இப்போது தான் வாசித்தேன். நகுலனின் முதல் நாவல் நிழல்கள்.இது மிகச்சிரிய நாவல். ஆனால் தத்துவார்த்த நாவல். நகுலனின் தன்மையை இந்நாவலின் முன்னுரையிலேயே உணர்ந்து கொள்ள முடியும். இந்நாவலுக்கு சுந்தர ராமசாமியிடம் முன்னுரை கேட்டிருக்கிறார் போலும். அதற்கு நகுலனின் முன்னுரையில் சொல்லும் வார்த்தைகளை பாருங்கள்

மிகக் குறைந்த பக்கங்களில் ஒரு நாவல்; அதற்கு ஒரு முன்னுரை; அந்த முன்னுரைக்கு ஒரு முன்னுரை – ஏன் இந்த சேஷ்டை ?

என்கிறார். எள்ளல் தன்மையை நன்கு உணர முடியும். இந்த எள்ளல் தன்மை ஒரு எக்ஸிஸ்டென்ஷியல் வாதியிடம் இருக்க வேண்டும் என்பது உண்மை. தனிமனிதத்துவாதி வாழ்க்கையையே எள்ளலாக பார்ப்பவன். எந்த நோக்குமற்ற நேரத்தில் எள்ளலை உணர முடியும். எந்த வேலையுமே இல்லாத நேரத்தில் தான் கடந்த காலத்தில் செய்த சிறுபிள்ளைதனத்தை நினைத்து சிரிப்போம். அர்த்தமற்ற தருணங்கள். வன்மங்களினிடையே கூட இந்த தன்மையை காண முடியும். ஒருவர் மீது அதிகாரம் கொண்டு அவரை அடிக்க கூடாது என்று எண்ணுகிறேன். ஒருகட்டத்தில் என்னையும் மீறி வெறி கொண்டு ஒருவரை அடித்துவிடுகிறேன். வெறி தனிவதற்குள்ளேயே என் ஆழ்மனம் இந்த செயலை விமர்சனம் செய்யும். உள்ளுக்குள்ளே நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டிருப்பேன். இந்த தன்மை எனக்குமட்டுமானதல்ல. உலகமயமானதும் கூட. இந்த எல்லாவித எள்ளலையும் தன்னுடைய நாவலில் வைத்திருக்கிறார் நகுலன்.

மௌனியின் மறக்க இயலா வரியான எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம் என்பது ஒரு தரிசனம். பதில் தேட நினையாத ஒரு கேள்வி. இந்த கேள்வியை அறிதலே ஒரு தரிசன நிலை. இதை அறியும் தருணத்தை கதையாக்க முனைந்திருக்கிறார். அந்த முயற்சி தான் நிழல்கள் நாவல்.

நினைவுப்பாதை நாவலைப் போல இதுவும் நாவல் சார்ந்த நாவலாக ஆரம்பிக்கிறது. நிழல்கள் என்னும் நாவலை எழுதுகிறான் நாயகன். இழந்த சுசீலாவை நினைத்து எழுதுகிறான். அவளை நினைத்தே எல்லாவற்றையும் பார்க்கிறான். எல்லாமே அதன் சாசுவதத்தை இழந்து வேறொன்றாய் தெரிகிறது. அதை நினைத்து ஆச்சர்யமுறுகிறான்.

இது முடிந்தவுடனே அந்த நூல் சார்ந்து விவாதங்கள் வருகிறது. அதில் அபிப்ராயம் சார்ந்து பேசுகிறார். அவர் சொல்வதாவது அவனளவில் சரியென்றால் சரி தான் என்கிறார். இதை இந்நாவலுக்குள்ளேயே சொல்கிறார். அதை சொல்வதற்கு நகுலனின் எழுத்து பாணியை சொல்ல வேண்டும். நகுலன் உருவாக்கும் கதையின் அமைப்பு முழு உருவத்தையும் காட்டிவிட்டு தான் செல்கிறது. ஒரு கதை உருவாகிறது. அந்த கதையை அவரே கட்டுடைக்கிறார். பின் அந்த கதை ஒன்றுமேயில்லை என்றையும் அவர் சொல்லி செல்கிறார். அதை சொல்லும் இடம் தான் நகுலன் எழுத்தின் உச்சம். An orgasmic feel. எதுவுமே உண்மை இல்லடா நான் என்பதே உண்மை என்பதில் நின்றுவிடுவார். இதை நிறுவுவதற்கு தான் அவர் செல்லும் பித்தனிலை பயணங்கள். அதற்குள்ளே தன்னாலான தத்துவங்களை சொல்லப் பார்க்கிறார்.

அப்படி ஒன்று தான் நிழல்கள். நாவலில் நாயகனுக்கு வரும் சந்தேகம் எல்லோரும் ஏதோ ஒன்றின் நிழலாக இருப்பார்களோ என்று. ஒரு நாவல் அந்த நாவல் சார்ந்த விமர்சனம் என்று செல்லும் போது நம்மையே அறியாமல் தடம் மாறி கதைகளுக்குள் இழுத்து செல்கிறார். நாயகனின் கதையை. இந்த எல்லா கதைகளுமே நோக்கற்ற ஒரு மனிதனின் பயணங்கள். அங்கு அவன் கொள்ளும் அவமானங்கள், யோசிக்காமல் செய்யும் திருட்டுகள், செயல்கள், மீண்டும் அங்கிருந்து புறந்தள்ளுதல் என்று நீளும் போது அவனுக்கு திருமணம் ஆகிறது.

சில விஷயங்கள் மரபு வழியாக வருமல்லவா அப்படி கலாச்சாரம் சார்ந்த விஷயங்களும் விழுமியங்களும் நம்மை பின் தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன. அதே விஷயங்கள் அவனுள்ளும் நிகழும் போது பின் தொடர்ந்தது தன்னுடைய நிழல் தான் என்பதை உணர்கிறான். அதுவே ஒரு தரிசனம். அத்தரிசனத்தை நாயகன் உணரும் போது நாவலின் மொழியே மாறுகிறது.

இவ்வளவு நேரம் பதிவில் நாயகன் நாயகன் என்று சொல்லியிருந்தேன். அங்கு தான் நகுலன் தன் சித்துவிளையாட்டையே நிகழ்த்துகிறார். சாரதி, நான், நவீனன் எல்லமே நாயகன் தான். எப்படி கதைசொல்லியை மாற்றுகிறார் என்னும் சூட்சுமத்தை யோசித்தால் கிஞ்சித்தும் அகப்படமாட்டேன் என்கிறது. நாவலுக்குள்ளேயே ஒரு நாவல் செய்ய வேண்டியது என்ன என்பதையும் சொல்கிறார். குறுநாவல் என்பதால் எல்லாவற்றையும் சொல்ல மனம் வரமாட்டேன் என்கிறது.

நாவலின் ஆரம்பத்தில் சுசீலா என்னும் பெயரை கண்டவுடன் சின்னதொரு சிரிப்பு வந்தது. நாவலில் சுசீலாவை யாரென நகுலனே சொல்கிறார்

“அடிக்கடி சுசீலா என்று ஒருத்தியைப் பற்றி எழுதுகிறாயே அது யார் ?”

“என் மனதின் பைத்திய நிழல்”

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக