அபத்தத்தின் அழகிய ஓவியங்கள்

கீரனூர் ஜாகீர்ராஜாவின் நூல்களில் மூன்றை கடந்த சென்னை புத்தக திருவிழாவில் வாங்கினேன். அதில் ஒன்று தான் வாசிக்க வேண்டி இருந்தது. அந்த நூல் தான் மீன்காரத் தெரு. இதன் இரண்டாம் பாதியான மீன்குகைவாசிகளை முன்னமே வீம்பிற்கென வாசித்திருந்தேன். ஒவ்வொரு நாவலும் தனி உலகம் என்று நம்புபவன் நான். ஹாரிபாட்டர் வெண்முரசு போன்ற தொடர் நாவல்ளை விட்டுவிடுங்கள். இது போல் வரும் போது எனக்கு நாவலுடன் செல்லச் சண்டையிடுவது பிடித்தமான ஒன்று. வாசித்த பின்பே உணர்ந்தேன் அவர் இரண்டையும் இணைத்து ஒன்றாகவே எழுதியிருக்கலாம் என்று. இரண்டிற்குமான பிணைப்பை நாவலில் நிலவியலாலும் கதாபாத்திரங்களாலும் நன்கு உணர முடியும். பிரித்து தனித்தனியாக வெளியிட்டிருந்தாலும் இரண்டும் தனக்கே உண்டான சில அம்சங்களை கதையை கருவை கொண்டிருக்கின்றன.

இந்த நாவல் ஒரு முக்கிய விஷயத்தை பதிவு செய்கிறது என்றே சொல்ல விழைகிறேன். ஜாதி சார்ந்து சமீபத்தில் கூட ஒரு நண்பியுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்னதாவது சாதி இக்காலத்தில் இருக்கிறதா என்று. சாதி பள்ளிப்பருவத்திலேயே அறியப்படுகிறது. சமகாலத்தில் அது பிள்ளைகளுக்கு தெரியப்படுத்தாமல் இருந்தால் கூட பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அது தெரியப்பட்டே வருகிறது. கல்லூரிகளில் பிற சாதிகளை சார்ந்த முழு விபரங்களும் தெரியவும் செய்கின்றன. இதற்கு அரசாங்கம் வழிவகுக்கும் ஊக்கத் தொகை ஒரு விதத்தில் காரணம்.

பல்கலைகழக கலந்தாய்வில் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக சான்றிதழ்களில் சாதி மாறியவர்களையும் நான் நேரில் கண்டிருக்கிறேன். ஜாதி எல்லாமே ஒரு சொகுசான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள என்று ஒருக்கணம் தோன்றினாலும் ஏதோ கனன்று கொண்டிருப்பதன் விளைவே என்று சில நேரங்களில் எண்ண வைக்கிறது. இந்த நாவலில் சொல்லப்படும் பள்ளிக்காலங்களில் அறியப்படும் சாதியை நான் தனிப்பட்ட முறையிலேயே உணர்ந்திருக்கிறேன்.

என்னுடைய முதல் நாவலில் பிராமணர்களை எதிர்த்திருப்பதாக சிலர் கூறினர். என் மனதளவில் சொல்ல வேண்டுமெனில் எனக்குள்ளே இருக்கும் சுயசாதி வெறுப்பை என் எழுத்துகளில் காட்ட முனைகிறேன். இதை சொல்வதன் காரணம் பள்ளிகளில் நான் நன்றாக படிப்பவன். அப்படி படிக்கும் போது அநேகம் பேர் ஐயருல்ல அதான் நல்ல படிக்கிறான் என்றனர். படிப்பில் கொஞ்சம் சோடையானேன். அதுவும் என் வீம்பு தான். கல்லூரிகளில் நான் தமிழில் சரளமாக பேசுபவன் எழுதுபவன் என்று அறிந்து கொள்ளும் போது ஐயருங்களுக்கே இந்த ஆர்வம் அதிகமாக இருக்கும் என்றனர். என் அடையாளத்தை இதனாலேயே மறைக்க விரும்புகிறேன். கல்லூரிகளில் சேர்ந்தவுடன் பிற சாதிகளை பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது. பிணம் தூக்க வரும் போது கூட சாதி சண்டையும் தனி மனித துவேஷங்களும் கிளம்புவதை முதன் முதலாய் கேட்கும் போது சிரிப்பு ஏற்பட்டாலும் யோசிக்கையில் மனித மனங்களைக் கண்டு பரிதாபமாய் இருக்கிறது.

இந்த விஷயங்களை சிறுவயதில், பள்ளிப்பருவத்தில் கேட்கும் போது கேட்கப்படும் நபர் வளரும் தருணத்தில் இந்த சாதி ரீதியான பேதங்கள் எப்படி முளை விடுகிறது என்பதை மிக அழகாக எழுத்தில் சொல்கிறார் கீரனூர் ஜாகீர் ராஜா.

இவருடைய கதைப்பாணி எனக்கு எப்போதுமே புதிது தான். அதற்கான விசேஷ காரணம் இசுலாமிய மதங்களுக்குள் இருக்கும் சாதிகளை சொல்கிறார். அவர்களுக்குள் சாதிகள் இருக்குமா என்னும் சந்தேகம் எனக்கு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. பள்ளிப்பருவத்தில் தக்கனி என்னும் வகையினரின் பெயரை அறிந்திருக்கிறேனே ஒழிய முழுமையாக எதுவும் தெரியாது. தமிழில் இந்த சாதி ரீதியான விஷயங்கள் பல வால்யூம் நூல்களாக கொண்டு வரலாம். அப்படி இருக்கையில் இசுலாமிய சாதிகளிலும் இதுவெல்லாம் இருக்குமா என்பதை ஜாகீர்ராஜாவின் நாவல்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன. இதை எழுதும் போது என்ன உணர்வை நான் கொண்டிருக்கிறேனோ, அஃதாவது புதியதை அறியும் புத்துணர்ச்சி அதே உணர்வை இந்நாவலின் மையத்தில் வைத்திருக்கிறார்.மீன்காரத் தெருவில் வசிப்பவர்கள் கீழ்சாதியைப் போல. அவர்களுடைய அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கிறது, அவர்கள் மேலக்குடி காரர்களை எப்படி பார்க்கிறார்கள், இங்குள்ளவர்களை வைப்பாட்டியாக வைத்துக் கொள்வதை எப்படி பார்க்கிறார்கள், அந்த சூழலுக்கு பழக்கம் கொள்ளும் மனிதர்களின் குணம் என்று நாவல் முழுதாய் விரிகிறது. இதை மட்டும் சொல்லாமல் மேலக் குடிகாரர்களிடையே நிகழும் சாதி வேறுபாடுகளையும் கீழக்குடி காரர்கள் வியப்புடன் அறியும் வண்ணம் நாவலை அமைத்திருக்கிறார்.

வைப்பாட்டியாக செல்பவர்களின் மனமும் அவர்களின் ஆசையும் ஏக்கங்களும் எப்படி இருக்கின்றன என்பதை ஆமினா என்னும் கதாபாத்திரம் கொண்டு எழுதியிருக்கிறார். ஆமினா கொள்ளும் காதலும் அவள் காணும் புது உலகத்தையும் அங்கிருந்து யதார்த்தம் இருக்கும் தூரத்தையும் மிக அழகாக சொல்லுகிறார்.

அபத்தங்களும் அங்கே சகஜமாகின்றன. அந்த அபத்தங்களை எப்படியெல்லாம் அணுகுகிறார்கள் என்பதையே மீன்காரத் தெரு பேசுகிறது. எல்லாம் அந்த தெருவினுக்குளேயே நிகழ்கின்றன. தெருவுக்குள்ளிருந்து வெளி செல்பவர்களின் வாழ்க்கையும் தெருவினுள் புதிதாய் நுழைபவரின் வாழ்க்கையும் எப்படியெல்லாம் அனுமானிக்கப்படுகிறது என்று பேசுகிறது இந்நாவல்.

மீன்காரத்தெரு மீனின் வாடையுடன் அந்த மீன்கள் சுமந்து செல்லும் கதைகளுடன் இனிமையாய் இருக்கிறது.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக