Stoker - 2013

அன்பு ஒரு மனிதனை எவ்வித காரியத்தையும் செய்ய வைக்கும். அதனால் தானோ என்னவோ அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்று சொல்லியிருக்கிறார் போல. இந்த அன்பு ஏன் வீரியமாக மாறுகின்றது ? இந்த கேள்வி காலங்காலமாக மர்மமாகவே இருந்து வருகிறது. முகம் தெரியாத இருவரை இணைக்கும் அன்பானது மெல்லிய இசை போலத் தானே இருக்க வேண்டும். ஆனால் இங்கு அது அநேக நேரங்களில் தீவிரத்தன்மையுடன் மனிதனின் அகத்தில் இருக்கும் நன்மைகளை, மென்மைகளை நீக்கி வன்மத்தை புதைக்கிறது. அன்பிற்காக அதை தடை செய்பவர்களை எதிர்க்கவும் துணிந்து இருக்கிறார்கள் அன்புடையோர். இந்த துணிவையும் கொடுப்பது அன்பு தான்.

இப்படி அன்பை பற்றி பிழிவதன் காரணம் இந்த அன்பின் பன்முகத்தை காட்சியில் வித்தியாசமாக காட்டியிருக்கும் படம் தான் Stoker. முந்தைய பத்தியிலேயே சொல்லியிருந்தேன் அன்பும் இசையும் இயைந்த ஒன்று என. இரண்டையும் பிரிப்பது கடினமானது. மனதினுள் எல்லோருள்ளும் ஒரு இசை அன்பு இருக்கும் இடங்களில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதே போல இந்த படத்திலிருந்து இசையை எடுத்துவிட்டால் இப்படம் தன் ஆன்மாவை நிச்சயம் இழந்துவிடும்.


நுண்ணிய சப்தங்களையும், ஊடோடிய பார்வையையும் இயற்கையாகவே பெற்ற ஒரு பெண் இந்தியா. அவளுடைய ப்ரியமான தந்தை ரிச்சர்ட் கார் விபத்தில் இறந்து போகிறார். அவளுடைய வாழ்க்கையே சோகமாக மாறிவிடுகிறது. அவளை தீண்டுவது அவளுக்கு பிடிக்காத ஒன்று. அவளைத் தாண்டி தன்னை சுற்றியிருக்கும் ஒரு விஷயத்தை பார்க்கிறாள். அவளுடைய அம்மா சோகமே இல்லாமல் இருக்கிறாள். அதே நேரம் ரிச்சர்டின் தம்பி என்று அதுநாள் வரை அவள் அறிந்திராத ஒரு நபர், பெயர் சார்லி அவ்வீட்டினுள் தங்க ஆரம்பிக்கிறான். இந்தியாவின் அம்மாவுடன் நெருக்கம் கொள்ள துவங்குகிறான். இதை பார்க்கும் போது அவளுக்கு அவள் வீடே சந்தேகத்திற்குரியதாகிறது. இதனிடையில் அவளுடைய அப்பா எப்போதும் அவளுக்கு பிறந்தநாள் பரிசாக ஒரு ஷூ தருவதுண்டு. இந்த கதை ஆரம்பிப்பதும் அவளுடைய பதினெட்டாவது பிறந்தநாளில் தான். அன்றைய பிறந்தநாளின் போது அவளுக்கு கொடுக்கப்பட்ட பெட்டியில் ஒரு சாவியே இருக்கிறது. இதனூடே அவளுக்கு வீட்டில் நிகழும் அபத்த விஷயங்களை சரிசெய்ய உதவுவதாக பட்ட சில மனிதர்கள் மர்மமான முறையில் மறைந்து போகிறார்கள். பிணமாகிறார்கள். பார்வையாளர்களுக்கு ஒரு கொலை மட்டும் காட்டப்படுகிறது. செய்பவர் சார்லி. இவ்வனைத்து விஷயங்களினிடையே சிக்கியிருக்கும் எல்லா முடிச்சுகளையும் அவிழ்ப்பதை நோக்கி கதை நகர்கிறது. நான் சொன்னது அனைத்தும் படத்தின் ஐந்திற்கு குறைவான சதவிகிதமே.

இந்தப்படத்தின் கதையை முழுவதும் முடித்த பின் யோசித்தால் இது போன்றதொரு கதையை நிச்சயம் நாம் கடந்து வந்திருக்கிறோமே என்று தான் தோன்றும். இருந்தும் இது ஒரு கலைப்படைப்பாகி நிற்கிறது. அதற்குகந்தாற் போல நிறைய அம்சங்கள் இப்படத்தில் கிடைக்கின்றன. சில சில சிறுகதைகளும் படத்தினுள் கிடைக்கிறது.

இந்தியா அப்பா இறந்த சோகத்தில் வீட்டில் அமர்ந்திருக்கிறாள். அம்மா சார்லியுடன் சென்று ஐஸ் க்ரீம் சாப்பிடலாம் என்று அழைக்கிறாள். அவளோ சம்மந்தமில்லாமல் ஒவ்வொரு நாட்டிலும் கணவன் இறந்தால் சோகத்தின் குறியீடாய் என்ன என்ன செய்வார்கள் என்று சொல்கிறாள். இந்த ஒரு காட்சி சோகம் என்னும் விஷயத்தை மட்டுமே மையபடுத்துகிறது. சோகம் என்பதற்கு தோதாய் காரணமேதும் எடுத்துக் கொள்ளாமல் சோகத்தையே மையப்படுத்தும் விஷயம் அருமையாக படத்தில் தெரிகிறது.

மேலும் இப்படம் இது பேய்ப்படமாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது. இது எந்த ரீதியான படமாக இருக்கக் கூடும் என்பது நான் சொல்லாமல் விட்ட சஸ்பென்ஸினுள் ஒளிந்து கொண்டிருக்கலாம். இந்த விஷயத்தை திறம்பட செய்வது படத்தின் கேமிரா. இது அநேக காட்சிகளில் the tale of two sisters படத்தின் கேமிராவையே நினைவூட்டியது.

இதைத் தவிர இரண்டு விஷயங்களையே பதிவு செய்ய ஆசைப்படுகிறேன். ஒன்று இந்தியா மற்றும் இசை. இரண்டும் இரண்டறக் கலந்ததாக இருக்கிறது. இந்தியாவை மையப்படுத்துவதே முழுப்படமுமாக இருக்கிறது. இந்தியாவினுள் இருப்பது வெளிக்காட்ட இயலாத அப்பாவை இழந்த தனிமை. இது வெறும் தனிமையாக மட்டும் இல்லாமல் அவள் வயதுடன், அறிய நினைக்கும் பெயர் தெரியா உணர்வுகளுடன் இணைகிறது. காமம் சார்ந்த காட்சிகளில் இந்தியாவாக நடித்திருக்கும் நடிகர் மியா வாஸிகௌஸ்காவின் நடிப்பு உச்சம். இலக்கியம் வாசிப்பது போல நரம்புகளை தீண்டி செல்கிறது. குறிப்பாக இரண்டு காட்சிகள்.

அவளுக்கு தீண்டுதலே பிடிக்காது. இந்நிலையில் முத்தம் கொடுக்க ஆசை வருகிறது. அதைத் தாண்டி அவளுக்கு எதுவும் தெரியவில்லை. கொடுக்க ஆசைப்பட்ட அவனுக்கோ அவளை சுகிக்க வேண்டும் என்று ஆசை வருகிறது. அவள் அவனின் நாக்கை கடித்துவிட்டு ஓட முயற்சிக்கிறாள். அவன் கற்பழிக்க யத்தனிக்கும் போது சார்லி வந்து அவனை அவள் முன்னேயே கொன்றுவிடுகிறான். தான் பாவம் செய்துவிட்டோம் என்று ஷவரின் அடியில் நின்று கொண்டு அழுகிறாள். விரல்கள் கரமைதுனம் செய்து கொண்டிருக்கின்றன. அவளின் வாயினின்று வரும் சப்தம் சோகமா இச்சையா என்றே பிரித்தரிய முடியாத காட்சியமைப்பு. அவளின் நினைவுகளையும் இடையிடையே காண்பிக்கிறார் இயக்குனர். அது அவளை கற்பழிக்க முயன்றவனின் மரணம். மரணத்தையும் காமத்தையும் இணைக்கும் அந்த காட்சி படத்தின் உச்சபட்ச காட்சியமைப்பு. அதுவும் நினைவில் அவனின் உயிர் பிரியும் தருணத்தில் அவள் உச்சத்தை அடைகிறாள். என்னை எங்கோ இழுத்து சென்று ஏதோ செய்தது அந்த காட்சி. இந்த ஒரு காட்சிக்காக கூட மட்டுமே இப்படத்தை காணலாம்.

இப்போது இசையை சொன்னால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவள் நுண்ணிய சப்தங்களை கேட்பவள் என்று சொல்லியிருந்தேன் அல்லவா ஆதலால் இசை எங்கெங்கு தேவையோ அங்கங்கு மட்டுமே வருகின்றது. மீதி இடங்களிலெல்லாம் நுண்ணிய சப்தங்களையே பெரிதாக்கி கொடுத்துள்ளார் இயக்குனர். இதுகூட படத்தில் பேய்த் தன்மை அமைவதற்கு காரணமாக இருக்கிறது.

பியானோ இந்த படத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அப்பா இறந்த சோகத்தை சோகமான கீதம் இசைத்து போக்க நினைக்கிறாள். சார்லிக்கு இந்தியாவின் அம்மா இசை கற்று கொடுக்கிறாள். ஒருமுறை இந்தியா இசைத்துக் கொண்டிருக்கும் போது சார்லியும் இணைந்து வாசிக்கிறான். அந்த இசையும் என்னை பித்தனாக்கியது. இந்தியாவிற்கு காமம் எனில் என்ன என்று தெரியவில்லை. ஆனால் உணர்கிறாள். இந்த உணர்தல் பல்வேறு விதமாக வருகிறது. பியானோ அதை வெளிக்கொண்டு வருகிறது. அந்த இசையை பின்வரும் லிங்கில் கேட்கலாம் - http://www.youtube.com/watch?v=tuuxnziJJS4. பல்வேறு விஷயங்கள் இந்தியாவினுள் இருக்கும் காம உணர்வை adventurous அனுபவமாக மாற்றுகிறது. அதில் கொஞ்சம் மர்மமும் கலந்து இருக்கிறது.

சார்லியாக நடித்திருப்பவரின் நடிப்பும் அபாரம். நடிப்பு என்பதைக் காட்டிலும் அவருடைய பாத்திர அமைப்பு. அன்பிற்காக அவர் செய்யும் விஷயங்கள், அன்பை அடையும் விதம் எல்லாம் புதிதாக தெரியும் அளவு இயக்குனர் காட்சிபடுத்தியிருக்கிறார்.

இதுவரை நான் சொன்னது எல்லாம் படத்தின் குறும்பகுதி மட்டுமே. மீதி பகுதியை நான் சொல்லவேயில்லை. சொல்லப்போவதுமில்லை. அது தான் படத்தின் பிரதான கதை. அதை சொன்னால் பார்ப்பதில் அர்த்தமின்றிபோகும் என்பதால் இத்துடன் பதிவை முடித்துக் கொள்கிறேன்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக