Noah - 2014

யுகாதி அன்று இப்படத்திற்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். என் கல்லூரியில் தெலுங்கிற்கு மரியாதை இல்லை போலும். ஆதலால் இன்றே இப்படத்திற்கு செல்ல முடிந்தது. வெறுமனே சென்று இப்படத்தை அமர்ந்து பார்த்து ரசித்து வர மனம் ஒப்பவில்லை. ஆதலின் தோழியிடம் பைபிளை வாங்கினேன். பைபிளின் ஆரம்பத்திலிருந்து நோவா இறக்கும் வரை வாசித்தேன். நோவா சார்ந்த பகுதிகள் மிக சிறிய அளவிலேயே இருந்தது. சுவாரஸ்யத்திற்கு பஞ்சமேயில்லை. இதை படமாக எடுக்க வேண்டுமெனில் கிராஃபிக்ஸில் மட்டுமே பெரிய விஷயங்களை செய்ய முடியும் என்று எண்ணியிருந்தேன். படம் பார்க்கும் போது இந்த எண்ணத்திற்கே பெரும் அடி விழுந்தது.

திரைப்படம் பார்த்து முடித்து மீண்டும் அதை வாசித்தேன். திரைப்படத்திற்கு உகந்த அளவு எடுத்துள்ளார்கள் என்றே பட்டது. நான் வாசித்த பைபிளில் இல்லாத சில விஷயங்களும் படத்தில் வந்தன. படத்தை பார்க்க விரும்புவோர் பார்ப்பதற்கு முன்னரோ பின்னரோ இந்த லிங்கை க்ளிக்கி செய்து ஆதியாகமத்தை வாசித்துக் கொள்ளலாம் - http://bibleuncle.files.wordpress.com/2012/12/tamil_bible_01__genesis2.pdf

படத்தின் இயக்குனர் டேரன் அரனோஃப்ஸ்கி. இவரின் சில படங்களை என் இணையத்திலேயே காண முடியும். அவையாவன 
இந்த நான்கு படங்களிலும் இயக்குனருக்கு உண்டான ஏதேனும் ஒரு விஷயத்தை ஆழமாக வைத்து நம்மை வியக்க வைத்திருப்பார். குறிப்பாக அவரின் இயக்கம் சார்ந்து நானறிந்த இரண்டு விஷயங்களை சொல்ல ஆசைப்படுகிறேன். ஒன்று கதாபாத்திரங்களின் அகத்திற்கும் புறத்திற்கும் வித்தியாசமில்லாமல் யாவற்றையும் காட்சிபடுத்துதல். மற்றொன்று புகைப்படமாகவும் அல்லாமல் வீடியோவாகவும் இல்லாமல் இருப்பது போல காட்சியை உருவாக்குதல். இதை ஹிப்ஹாப் மாண்டேஜ் என்று அவர் சொல்கிறார். இதை ரெக்விம் ஃபார் எ ட்ரீம் என்னும் படத்தில் தெளிவாக காண முடியும்.

இந்த இரண்டாம் விஷயமான தொழிநுட்ப பகுதி கூட அவரின் ஒன்றிரண்டு படங்களில் தான் காண முடியும். முதலில் சொன்ன அக ரீதியான காட்சிகள் அவரின் எல்லா படங்களின் ஆதார ஸ்ருதியாக இருக்கும். நோலனுக்கு பிறகு எனக்கு பிடித்த இயக்குனர் அரனாஃப்ஸ்கி தான். அதற்கான காரணம் அவருடைய காட்சிப்படுத்தும் திறன். இவரின் படங்கள் மெதுவாகவே நகரும். ஆனால் முழுப்படத்தின் வேகத்திற்கு, குறிப்பாக உணர்ச்சிகளின் வேகத்திற்கு ஒரு கிராஃப் வரைந்தால் அது மேல் நோக்கியே செல்லும். அது அவரின் பாணியாகிவிட்டது. இந்த விஷயத்தினை நம்ப முடியவில்லையெனில் மேலே சொன்ன நான்கு படங்கள் அல்லது நோவா படத்தையே பாருங்கள். படத்தின் ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பிக்கும் கருவானது காட்சிகள் நகர நகர இண்டென்ஸாக செல்ல ஆரம்பிக்கும்.

இதை சொன்னதன் காரணம் நோவா திரைப்படம் ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும் ஒரு மத ரீதியான நூலின் பகுதி அல்லது கிளைக்கதை. அந்த கதையில் இந்த திறனையெல்லாம் வைக்க முடியுமா ? அரனோஃப்ஸ்கி தன் பாணியிலேயே நோவா கதையையும் எடுத்திருக்கிறாரா என்றால் என் பதில் ஆம் தான். படத்தின் கதையானது திரைக்கதையில் வெகு ஆழமாக சித்தரிக்கப்பட்டுள்ளதால் இந்த நுட்பங்கள் அதன் முன் பெரிதாக தெரியப்படாமல் போய்விடுகின்றன. 


இந்த படத்தை நான் கோவையிலுள்ள மால் ஒன்றிலேயே கண்டேன். ஏன் இதன் அளவு திரையின் அளவை விட சிறிதாக காண்பிக்கப்பட்டது என்று தெரியவில்லை. அது என் முதல் வருத்தம். இன்னுமொன்று இந்தப்படம் 3டி. இது தேவையே இல்லாத ஒன்று. 3டி இல்லாமல் இதே காட்சிகள் அமையப்பெற்றிருந்தால் பிரம்மாண்டத்தை நன்கு உணர்ந்திருக்கலாம். 3டி என்பதால் எண்ணமெல்லாம் அதன் அனுபவத்தை நோக்கியே அமைந்து ஏமாற்றத்தை உணர்ந்து கொண்டன. இப்போது படத்திற்குள் செல்வோம்.

படத்தின் ஆரம்பத்திலேயே வரிகளில் கடந்தகாலம் சொல்லப்படுகிறது. ஆதாமும் ஏவாளும் முதலில் தோன்றினார்கள். சர்ப்பம் ஒன்றினால் சபிக்கப்பட்ட கனியை தின்றனர். அவர்களுக்கு மூன்று மகன்கள் பிறந்தனர். கெய்ன், ஏபெல், சேத். சேத்தின் வழியில் வந்தவன் நோவா. கெயினிற்கும் ஏபெலிற்கும் இடையில் பொறாமை உருவாக கெய்ன் ஏபெலைக் கொள்கிறான். கடவுளை எதிர்த்து உலகை அரசாள நினைக்கிறான். நோவாவின் தந்தையை அவன் முன்பே கொள்கிறான். நோவா அங்கிருந்து ஓடுகிறான். காட்சிகள் மறைந்து அவன் பெரியவனாகி மூன்று குழந்தைகளுக்கு தந்தையாகி இருப்பதாக காண்பிக்கப்படுகிறது.

வேதாகமத்தின்(பைபிள்) படி உலகம் முழுக்க பாவத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. அதை அறிந்த கர்த்தர் அவர் சொல்லை பின்பற்ற ஆள் வேண்டி காத்து இருக்கிறார். நோவா அவரின் சொல்லை அப்படியே கேட்பவன். அவனின் கனவில் தோன்றி ஒரு ஆர்க்கை (படகு போன்ற ஒன்று) உருவாக்க சொல்லி அதனில் எல்லா உயிரினங்களினின்று ஜோடி ஒன்றை சேகரித்து வைக்க சொல்கிறார். அவனின் குடும்பத்தையும் காப்பாற்றுகிறார். உலகம் நீரால் அழிகிறது. இவர்களால் உலகம் புதிய உருவம் பெறுகிறது. நோவா தன் 950 ஆம் வயதில் இறந்து போகிறான். கப்பலுக்கு பிறகும் நான் சொல்லியிருக்கும் சிறுகுறிப்பினுள்ளும் சில குறுங்கதைகள் வேதாகமத்தில் உள்ளன.

இந்த கதையை கொஞ்சம் புனைவு கலந்து அப்புனைவை அதிலேயே அழித்து உண்மையான கதையிடம் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர். மேலும் தமிழ்நாட்டில் தியேட்டர்காரர்களின் இச்சைக்கிணங்க ஆங்கிலப்படங்களில் இடைவேளை விடுகிறார்கள். இப்படத்தில் மிகச் சரியாக படத்தை வெட்டி இடைவேளை விட்டிருக்கின்றனர்.

முதல் பாதி முழுக்க சண்டை ஆர்க் செய்வது என்று செல்கிறது. இரண்டாவது பாதி முழுக்க நோவா என்னும் தனி மனிதனின் மன உருவமே திரையில் வருகிறது. தேவாகமத்தை வாசிக்கும் போதே எனக்குள் சிறு பயம் ஒன்று இருந்தது. அஃதாவது கடவுள் அவனிடம் ஆர்க் செய்யச் சொல்வதாக, வசனங்களாக வருகிறது. அப்படியே திரையிலும் வந்தால் பழையகால தமிழ்ப்படம் போல ஆகிவிடுமே என்று பயந்து கொண்டிருந்தேன். படத்தில் கடவுள் அவனிடம் சொல்லும் விஷயத்தை காட்டியிருக்கும் விதம் அற்புதம்.

வேதாகமத்தில் இருக்கும் கதைக்குள் நாம் உள்நுழைந்து பார்வையாளனாக பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு காட்சியமைப்பு இப்படத்தில் உள்ளது. எனக்கு இப்படத்தின் முதல் பாகத்தில் ஈர்ப்பு ஏற்படவில்லை. சில காட்சிகளைத் தவிர. முதல் பாதி ஆர்க் செய்ய முடிவு செய்வது அதற்காக உண்டாகும் அதிசயங்கள் என்று காட்சிகள் நகர்கின்றன. இரண்டாம் பாதி தான் படத்தின் உச்சம்.

ஏனெனில் மேலே வேதாகம கதையை சொல்லும் போது கடவுளின் வார்த்தைகளை அப்படியே கேட்பவன் நோவா என்று சொல்லியிருந்தேன். இந்த கொள்கைவாதிக்கும் அவனை சுற்றி இருக்கும் லௌகீக வாதிகளுக்கும் இடையில் நிகழும் உணர்வு ரீதியான முரண்பாட்டுப் போரை காட்சியாக்கியிருக்கிறார் இயக்குனர். இது சிலருக்கு நிச்சயம் தொய்வினை அளிக்கலாம். ஆனால் இதுவே அரனோஃப்ஸ்கியின் ஸ்டைல்.

மனைவி தன் குழந்தைகளுக்கு மகன்கள் உண்டாக வேண்டும் என்று ஆசை கொள்கிறாள், நோவாவோ தன் கடன் இறைவனுக்கு பணி செய்து கிடைப்பதே என்று இருக்கிறான். மகன்களையும் பலி கொடுக்க தயாராக இருக்கிறான். இந்த நிலையில் அந்த குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகளையும் அவனின் கடமை உணர்வையும் எதிர் எதிர் திசையில் அழகுற காட்சியாக்கியிருக்கிறார்.

ரஸேல் க்ரௌவின் நடிப்பு அபாரம். நோவா ஆர்க் செய்வதைக் கண்ட பின் அவனை எதிர்த்து கெய்ன் அங்கு வருகிறான். அப்போதிலிருந்து அவனுக்கு எதிரிகள் அதிகமாகின்றனர். இரண்டாம் பாதியில் சொந்தங்கள் எல்லாம் எதிரியாகிவிடுகின்றனர். ஏன் என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த விஷயங்களை நான் பைபிளில் வாசிக்கவில்லை. திரைக்கதையின் சிறப்பம்சங்கள் என்று கொள்ளலாம். அந்த இடங்களிலெல்லாம் கூட தன் கடமை சார்ந்தே இயங்க வேண்டும் என்பது போல இருக்கும் ரஸேல் க்ரௌவின் நடிப்பு மெய் சிலிர்க்க வைக்கிறது. இன்னமும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில் பன்முக இடங்களிலும் ஒரே வித நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார் ரஸேல் க்ரௌவ். அதுவே இத்திரைக்கதையின் தேவையாகவும் இருக்கிறது.

ஆதியாகமத்தின் ஆரம்பத்திலிருந்து நோவா மரிப்பது வரை அப்படியே படத்தினுள் செய்திருக்கிறார் என்று சொல்லியிருந்தேன். அதில் ஆதாம் ஏவாளின் கதையையும் அதற்கு முன் உலகம் தோன்றிய கதையையும் அவருடைய ஹிப் ஹாப் மாண்டேஜ் ஸ்டைலில் கொடுத்திருக்கிறார். அதை பார்க்கும் போதே என்னுள் அவ்வளவு பரவசம் தவழ்ந்தோடியது.

ஒரு படம் எனப் பார்த்தால் இப்படம் நிறைய பேருக்கு பிடிக்காமலேயே போகும். அவர்களின் முதல் வார்த்தை படத்தில் கதை இல்லை என்பதே. ஆனால் இது உலகில் நிகழ்ந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள பெரும் மாற்றங்களின் சிறுபகுதி என்று பார்த்தால் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்கலாம். 

படத்தின் இசை நரம்புகளுக்குள் சென்று அதிர்வுகளை ஏற்படுத்தி செல்கிறது. படத்தின் நடு நடுவே வந்து செல்லும் வயலினின் இழைகள் என்னையே மறக்கச் செய்தன. இந்த படத்தின் எல்லா காட்சிகளையும் எல்லோராலும் ஊகித்துவிட முடியும். அவர்கள் மூலக்கதையை வாசித்தவர்களாக இருந்தாலும் சரி வாசிக்காதவராக இருந்தாலும் சரி. ஆனாலும் அக்காட்சிகளில் விறுவிறுப்பை தருகிறார். எதனால் எனில் இசை மற்றும் ரஸேல் க்ரௌவின் நடிப்பு.

ரஸேல் க்ரௌவ் மட்டுமின்றி எம்மா வாட்சன், ஜெனிஃபர் கோனலி, வில்லனாக வரும் ரே வின்ஸ்டனின் நடிப்பு அவருக்கு ஈடு கொடுக்கும் அளவு வந்திருக்கிறது. கேமிரா அநேக காட்சிகளில் பின்னோக்கி செல்கிறது. அந்த இடங்களிலெல்லாம் 3டி திறன் உயிர்ப்புடன் இருப்பதாக உணர்ந்தேன். படத்தில் வரும் ஆர்க் மிக அழகாக வந்திருக்கிறது. 

படம் கொடுத்த சந்தோஷத்தை பதிவாய் பகிர்ந்தாலும் அரனோஃப்ஸ்கியின் இந்த படம் எனக்குள் திருப்தியை ஏற்படுத்தவில்லை. காரணமும் தெரியவில்லை. எல்லாம் பிடித்திருக்கிறது இருந்தும் ஒருவித ஏமாற்றத்தையே உணர்கிறேன்.

I AM SORRY DARREN ARONOFSKY!!!!

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக