ஒரு குமாஸ்தாவின் கள்ளம்

பாசாங்கற்ற எழுத்தை எழுதுபவர் வண்ணநிலவன். அவரின் இரண்டு நாவல்களை வாசித்திருக்கிறேன். இரண்டிலுமே அவர் சொல்ல விழைந்த கதையை அதன் மூலம் உணர்ச்சிகளின் பெருக்கை மனிதர்களின் மனதில் பொதிந்து இருக்கும் பலவீனங்களை பயத்தை சொல்லிச் செல்கிறார். அதை கடந்த வர்ணனைகளை அவரே புறக்கணித்தும் விடுகிறார். சில இடங்களில் சம்மந்தமற்ற கதாபாத்திரங்கள் ஊடுபாவும். நாவலின் ஏதேனும் ஒரு தடத்தில் மையக் கதையுள் அவையும் ஒன்று சேரும்.

வண்ணநிலவன் நிலவியல் பகுதிகளையோ கதாபாத்திரங்களையோ படைக்க ஒரு போதும் விரும்புவதில்லை என்பதை புனைவை வாசிக்கும் போதே உணரலாம். கதாபாத்திரங்கள் அவரின் வேறு நாவல் கதாபாத்திரத்தின் தொடர்ச்சியோ என உணரலாம். ஒரு கோட்பாட்டை மனித மனங்களுள் விளையாடும் உணர்வு சருக்கல்களை முடிவு செய்து அதற்கொப்ப கதாபாத்திரங்களை மாற்றுகிறார். வளைய வைக்கிறார். மொழியை இழைத்து எளிமையாக கதை சொல்கிறார். அப்போது அக்கதாபாத்திரங்கள் நிலவும் நிலவியலும் அழகாய் மாறுகின்றது. எடுத்தாளுவதற்கொப்ப அவரின் நாவல்களில் வரிகள் இருக்காது. மொழி விளையாட்டு இருக்காது. ஆனால் மானுடத்தின் இருண்மைகள் நிறைந்து இருக்கும். இருண்மையிலிருந்து வெளி வருவதற்கான அறம் நிறைந்து இருக்கும்.

அவரின் இரண்டு நாவல்களை வாசித்து பிரமித்து போன எனக்கு அவருடைய இன்னுமொரு நாவல் ஆச்சர்யத்தை கொடுத்தது. ஆதவன் சொன்ன விஷயத்தை அவரை விட மென்மையாக இயல்பாக சொல்லி சென்றிருக்கிறார் வண்ணநிலவன். அந்நாவல் அவருடைய "காலம்".இப்பதிவை வாசித்துக் கொண்டிருக்கும் வாசகர்கள் மாணவர்களாக இருக்கலாம் வேலைக்கு செல்பவர்களாக இருக்கலாம் கணவன்/மனைவியாக இருக்கலாம். யாராக இருந்தாலும் விரும்பாத ஒரு வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு கணமேனும் நாம் வாழும் கணத்தை மனதார வெறுக்கிறோம். சற்று யோசித்து பாருங்கள் விரும்பி எடுத்த படிப்பு முடிகிறது. அதற்குகந்த வேலைக்கே செல்கிறோம். ஆனாலும் நமக்கு ஏதேனும் ஒரு தருணத்தில் வெறுப்பு வந்து விடுகிறது. இந்த வெறுப்பிற்கு என்ன காரணமாக இருக்கும் ?

நாம் செய்யும் வேலைகள் அனைத்தும் விருப்பமானதாவகவே இருப்பினும் சில திடீர் சுமைகள் அதன் மேல் குடி கொள்ள ஆரம்பிக்கின்றன. இஷ்டப்பட்டு செய்யும் வேலைகள் அனைத்தும் குடும்பத்தின் இன்ன இன்ன செலவுகளுக்கு தான் என அறியும் போது நம் இஷ்டங்களின் மீது சந்தேகம் வருகிறது. செய்யும் வேலைகள் மீது வெறுப்பு குடி கொள்கிறது. இது எல்லாம் நிகழும் தருணங்களில் திருமணம் என்னும் அங்கீகரிக்கப்பட்ட சடங்கும் நிகழ்கிறது. இங்கு அவன் அதுநாள் வரை வாழ்ந்த வாழ்க்கை அவனாலேயே அலசப்படுகிறது.

திருமணம் முன்பின் அறியாத ஒரு பெண்ணுடன் நிகழப் போகிறது எனும் போது ஒரு மனிதன் முதலில் கொள்வது அச்சம். இந்த அச்சம் அன்று ரை அவன் பல்வேறு பெயர்களில் பழகிய பெண்கள் அவனது நினைவுகளில் நொடிப்பொழுதில் வந்து செல்கிறார்கள். பழகிய நாட்கள் எல்லாம் காதலா என்னும் சந்தேகம் அப்போதே அவனுள் முளைக்கிறது. இந்த சிக்கலில் இருந்து மீண்டால் தான் அவனால் லௌகீக வாழ்க்கைக்குள் நுழைய முடியும். இதை எப்படி சமாளிக்கிறான் என்னும் விஷயத்தையே மையக்கருவாக கொண்டு  நாவல் செய்திருக்கிறார் வண்ணநிலவன்.

இந்நாவலில் இவர் எடுத்துக் கொண்டுள்ள களம் கோர்ட். நீதிமன்றத்தை ஒரு குமாஸ்தாவின் பார்வையில் வைத்து நகர்த்தியிருக்கிறார். அவர் காணும் நீதிமன்றங்கள், அங்கு நிலவும் நட்புக்கள், காரசாரமான பேச்சுகள், அங்கிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்குள் கனன்று கொண்டிருக்கும் தர்மங்கள், அவர்களுடைய வாழ்க்கை முறை என குமாஸ்தாவின் பார்வையிலேயே சொல்லி செல்கிறார். இந்த குமாஸ்தாக்களில் ஒருவன் தான் நாவலின் நாயகன் நெல்லையப்பன். அவனை நம்பி தான் அவனுடைய சகோதரியின் குடும்பமும் அவனுடைய குடும்பமும் இருக்கிறது. இந்த நிலையில் அவனுக்கு வேலை பிடிக்கவில்லை. அடிக்கடி சினிமா பார்க்க வேண்டும் என்று ஆசை. அவனுக்கு வீட்டிலும் மணம் பார்க்கிறார்கள். அவனுடைய உடன் வேலை பார்க்கும் குமாஸ்தா ஒருவரும் அவனின் உழைப்பைப் பார்த்து தன் மகளுக்கு மணம் முடிக்க வேண்டும் என்று ஆசை கொள்கிறார். அவனுக்கு எதிர் வீட்டிலிருக்கும் காந்திமதி எனும் பெண் தான் பிடித்தவள். அக்கா என்றே அழைப்பான். அவளுக்கு சங்கரன் என்பவனுடன் திருமணம் முடிவு செய்கிறார்கள். இது இவனை பாதிக்கிறது. இந்த எல்லா சுமைகளினின்று கதையில் எப்படி நாயகன் வெளிவருகிறான் என்பதே நாவலின் முடிவு.

நாவலில் வரும் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் தேவையில்லை என்று சொல்ல முடியவில்லை. குழப்பத்தில் இருக்கும் போது நாம் அதி பலவீனமாகிப் போகிறோம். அப்போது யார் அருகிலிருந்தாலும் அவர்கள் மூலம் நம் குழப்பத்தை நிவர்த்தி செய்து கொள்ள முடியுமா என்று முயற்சி செய்கிறோம். இதற்கொப்ப நாவலில் வரும் பாத்திரமே பாலமுருகன்.

அவரின் பிற நாவல்களைப் போல இந்த நாவல் எங்குமே கதை நிகழும் களத்தை முக்கியபடுத்துவதில்லை. உணர்வுகளை மட்டுமே பெரிதாக காட்டுகிறார். சந்தேகம், வாழ்வில் திருமணம் என்னும் விஷயத்தில் நிரைந்து வழியும் வணிகத் தன்மை, அந்த வணிகத் தன்மை எப்படி குடும்ப அரசியலாகிறது என்று எல்லாவற்றையும் எளிமைபடுத்திவிடுகிறார். இலக்கியம் சார்ந்தும் சில விஷயங்கள் சொல்லப்படுகின்றன. அடிக்கடி சொல்கிறார் ஓரு கதையை ஏன் விமர்சனம் வேண்டும் என. ஏன் இக்கேள்வியை அடிக்கடி எழுப்புகிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை!

இதற்கு முன்னர் ரெயினிஸ் ஐயர் தெரு மற்றும் கம்பா நதி நாவலையே வாசித்திருக்கிறேன். அவ்விரண்டை விட இந்த நாவல் சுவாரஸ்யமாய் அழகியல் நிரைந்து ஆழமான ஒரு விஷயத்தை பேசுகிறது. சில இடங்களில் நாடகத் தன்மை பெற்றிருந்தாலும் முழு நாவல் ஒரு திருப்தியையே தருகிறது. கடந்து போன காலத்தை பிடிக்க முயன்று ஒவ்வொரு முறையும் தோற்றுப் போய் அந்த காலாத்துடனேயே பயணிக்கும் ஒரு சராசரி மனிதனின் கதையே வண்ணநிலவனின்காலம்” .

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக