தனித்திருப்பவனின் குறிப்புகள்

சுந்தர ராமசாமியின் எழுத்துகளை அணுக எனக்கு பயமாகவே இருந்தது. அதற்கு முக்கிய காரணம் அவருடைய பள்ளம் என்னும் சிறுகதை தொகுப்பு. அதிலிருக்கும் ஒரு கதையுமே எனக்கு பிடிக்கவில்லை. என்னை ஈர்க்கவுமில்லை. ஆனால் பள்ளம் தொகுப்பை வாங்குவதற்கு முன்பே நான் ஜே.ஜே சில குறிப்புகள் வாங்கி வைத்திருந்தேன். எப்படியேனும் வாசிக்க வேண்டுமென சில மாதங்கள் நான் செல்லுமிடமெல்லாம் என்னுடனேயே வந்து கொண்டிருந்தது அந்நாவல். இன்றே அதை வாசிக்க நேர்ந்தது.

மேலும் சாரு நிவேதிதா இதை போலி நாவல் என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அது வரம்பு மீறிய பிரதிகள் என்னும் அவருடைய கட்டுரை தொகுப்பில் உள்ளது. அதை நான் வெகு முன்னரே வாசித்திருந்தமையாலும் ஒரு சந்தேகம் என்னுள் இருந்தே வந்தது.

இந்த நாவல் எனக்கு பிடித்தே இருக்கிறது. நான் அடிப்படையில் வித்தியாசமான கதை சொல்லல் உருவத்தை, கட்டமைப்புகளை விரும்புபவன். அதன் அடிப்படையில் இந்நாவலின் கட்டமைப்பு முழுவதுமே வித்தியாசமானது. மேலும் இம்மாதிரியான நாவல்கள் குறைந்த அளவிலேயே இருக்கின்றன. எனக்கு தெரிந்து அசோகமித்திரனின் ஒற்றன்.

இந்நாவல் பிற நாவல்களை போல ஒரு விஷயத்தை எடுத்து அதை சுற்றி கதாபாத்திரங்களை உருவாக்கி கடைசியை நோக்கி கதையை நகர்த்தாமல் எல்லாவற்றையும் உள்வாங்கும் திறன் கொண்ட எழுத்தாளனைப் பற்றி பேசுகிறது. வேறு சில எழுத்தாளர்களிடமும் எழுத்தாளர்கள் பற்றிய விஷயங்கள் நாவலில் வருகின்றன. ஆனால் அதையே நாவலாக எழுதியதில் எனில் மேலே சொன்ன நாவலையும் ஜே.ஜே சில குறிப்புகளையும் தான் சொல்வேன்.அடிப்படையில் இந்நாவல் மூன்றாக பிரிந்துள்ளது. முதல் பகுதி ஒரு ரசிகனின் பகுதி. ஜே.ஜே என்பவன் ஒரு எழுத்தாளன். குறிப்பாக மலையாள மொழியின் எழுத்தாளன். அவனுக்கு தீவிர ரசிகன் ஒருவன் தமிழகத்தில் இருக்கிறான். அவன் பெயர் பாலு. அவனும் பின்னால் எழுத்தாளன் ஆனவன். பாலுவிற்கு ஜே.ஜேவை சந்திக்க வேண்டும் என்று ஆசை. இவன் ஜே.ஜே வை நோக்கி மேற்கொள்ளும் பயணம் மற்றும் இவனுக்குள் இருக்கும் ஜே.ஜே எப்படி இருக்கிறான் என்பதை விரிவாக பேசிச் செல்கிறார். இதில் சில பகுதிகள் தீவிர இலக்கிய உபாசகர்களுக்கு, ஒரு எழுத்தாளரின் தீவிர ரசிகர்களாக இருப்பவர்களுக்கு அந்த பகுதிகள் நிச்சயம் நெஞ்சை வருடும். அது ஜே.ஜே இந்த ரசிகனின் கண்ணெதிரில் மொட்டை மாடியில் வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறார். ரசிகனுக்கு பேச வேண்டும் என்று ஆசை. ஆனால் முடியவில்லை. அவன் தான் பேசுவது காற்றுவாக்கில் ஜே.ஜே காதில் நிச்சயம் விழும் என்று பேச ஆரம்பிக்கிறான். ஒவ்வொரு வார்த்தையும் மானசீகமாக இருக்கிறது. இது போல ரசிகனின் நிறைய ஏக்கங்கள் சொல்லப்படுகின்றன.

இரண்டாம் பகுதி ஜே.ஜேவின் சமகால எழுத்தாளர்களின் மத்தியில் நிலவும் அரசியல் சார்ந்தது. ஜே.ஜேயின் கோட்பாடுகளை விமர்சிக்கிறார்கள். மார்க்ஸீயம் சோஷலிஸம் போன்ற கோட்பாடுகளில் பங்கு கொள்ளாமல் தான் மட்டுமே முக்கியம் என்று இருக்கிறான் ஜே.ஜே. தோன்றும் கருத்துகளை அப்படியே எடுத்துரைக்கிறான். மனைவி கூட அவனிடம் சண்டையிடுகிறாள். இந்த ஒருவனை அவனுடைய எழுத்தாள சமூகம் எப்படி மதிப்பிடுகிறது என்று சொல்லப்படுகிறது.

இந்த இரண்டு பகுதிகளும் இரண்டற கலந்து பாகம் ஒன்றாகிறது. வித்தியாசமாக ஏதேனும் செய்தாலொழிய நம்மால் அடுத்தவர்கள் நினைவில் நிலைத்திருக்க முடியாது என்று நாவலில் சொல்லப்படுகிறது. அது ஜே.ஜே விற்கே பொருந்தும். இதுமட்டுமின்றி எழுத்தாளர்களின் மத்தியில் நிகழும் அபத்தங்களை சொல்லி செல்கிறார். ஒருத்திக்கு ஜே.ஜே யாரென்றே தெரியவில்லை. ஆனால் அவன் இறந்ததற்கு ஒப்பாரி வைக்கிறாள். அதுவும் மைக்கில். இதை சொல்லும் இடமெல்லாம் நகைச்சுவையாக இருந்தாலும் ஜே.ஜே பிரிந்து சென்றதை பொருட்படுத்தாமல் அங்கே ஒரு கூட்டம் நிகழும். அதை பாலு உள்வாங்கும் விதம் வாசிக்கும் போது நெருடலை உண்டு செய்யும் அளவு இருக்கிறது.

மூன்றாவது பகுதி தான் நாவலின் இரண்டாம் பாகம். இந்த பகுதி தான் எனக்கு பிடித்த பகுதியும் கூட. இதில் ஜே.ஜே சார்ந்த வர்ணனைகள் இல்லை. மாறாக அவனுடைய குறிப்புகளிலிருந்து சில குறிப்புகள் மட்டும் எடுத்து கொடுக்கப்பட்டுள்ளது. முதல் பாதி முழுக்க எனக்கு சற்று அலுப்பு தட்டியது. காரணம் எல்லாம் ஜே.ஜேயின் நாமாவளியாக இருந்தது. அதே இரண்டாம் பாதி ஜே.ஜேவின் செயல்கள் நிகழ்வதாகவே தெரிந்தது. ஜே.ஜேவின் ஒவ்வொரு குறிப்புகளும் ஜே.ஜே அவனுக்குள் உணர்ந்து கொண்டிருக்கும் தனிமையை அவ்வளவு அழகியலுடன் வெளிப்படுத்துகிறது.

ஒவ்வொரு எழுத்தாளரின் புனைவிலக்கியங்களை தொடர்ந்து வாசிக்கும் போது இது மட்டும் தான் அந்த எழுத்தாளர் இயங்கும் இடம் என்று நாம் முடிவு செய்தால் அது முட்டாள்தனம். எழுத்தாளன் எல்லாவற்றையும் அணுகுகிறான் அனுபவிக்கிறான் பார்வையாளனாய் பார்க்கிறான் ஆனால் எழுத வேண்டும் என்று வரும் போது தனக்கு எது comfort zone என்று படுகிறதோ அதை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். நான் சொல்வதை ஜே.ஜேவின் குறிப்புகளில் மிக அழகாக காண முடியும்.

ஜே.ஜே ஒரு கால்பந்தாட்ட வீரனும் கூட. அவனுக்கு வெற்றியோ தோல்வியோ உணர்வுகளை தீர்மானிக்கும் விஷயங்களாக இருக்க விரும்பவில்லை. மாறாக விளையாடுவதே தனக்கு களிப்பூட்டக் கூடியது என்கிறான். அதிலும் ஒருமுறை தோற்றதற்கு ஃபாதர் திட்டுகிறார். குறிப்புகளில் இப்படி எழுதுகிறான்

//ஒரு போட்டியில் தோற்றுவிட்டால் ஃபாதர் ஜேக்கப் கண்டபடி திட்டுகிறார். நான் சரியாக ஆடவில்லை என்கிறார். நேற்று அவர் சொன்னதில் உண்மை உண்டு. தோற்க நேற்று உள்ளூர ஆசைபட்டேன். இவர்கள் கொண்டாடும் வெற்றி மீது வெறுப்படைகிறான்.//

ஜே.ஜே சொந்த வாழ்க்கை குறிப்புகளை மட்டும் எழுதவில்லை. அவன் இயங்கும் எழுத்துகளில் இலக்கிய விசாரணைகளையும் செய்கிறான். மாக்சிம் கார்க்கியின்அமேரிக்காவிலேஎன்னும் கதையை வாசிக்கும் போது அவன் தன் குறிப்பில் எழுதுகிறான்

//பலர் இங்கு மொழிபெயர்ப்பது வேறொரு பாஷையும் தெரியும் என்று பயமுறுத்த//

கார்க்கியை சொல்லும் போது தான் தாஸ்தாயெவ்ஸ்கி சார்ந்து நாவலில் வரும் குறிப்பு நினைவிற்கு வருகிறது. தாஸ்தாயெவ்ஸ்கியை நான் வாசித்திருக்கிறேன் என்பதாலும் அவரின் எழுத்துகள் மனதுக்கு நெருக்கமாக உணர்வதாலும் அவ்விடங்கள் என்னை உலுக்கியே சென்றது

//துன்பத்தின் விந்தினை குழந்தையாக மாற்றினான் தாஸ்தாவ்ஸ்கி. அவனுக்கு கிடைத்தவை குரூரம், கொடிய தண்டனைகள், வறுமை, புறக்கணிப்பு, துன்பங்கள். அவன் உலகத்திற்கு தந்தது கலையின் சிகரம். துன்பம் பரவசமாக மாறி, சந்திக்கும் இதயங்கள் அனைத்தையும் பரவசத்தில் ஆழ்த்துகிறது. சகல துன்பங்களையும் தன்னுடையதாக பார்ப்பது; தன்னுடைய துன்பங்களை தன்னுடைய அல்லாற் பார்ப்பது. இவ்வளவுதான் விஷயம்.//

இலக்கியவாதி என்பவன் கலாச்சாரத்தின் ஒரு குறியீடு என்பது எல்லா நாடுகளிலும் முக்கியமான ஒன்று. அதன் படியே ஜே.ஜேவும் இருக்கிறான். தன் வீட்டை எடுத்தே கலாச்சாரத்தை எடைபோடுகிறான். நாம் தந்தை மைய சமுதாயத்தில் வாழ்கிறோம் என்று தர்க்கம் செய்கிறான். இது மட்டுமல்லாமல் நிறைய விஷயங்களை தர்க்கம் செய்கிறான். ஆனால் ஜே.ஜேவும் அத்தர்க்கங்களில் விழுந்து விடுகிறான் என்பது தான் விதியின் கைவசமாக இருக்கிறது.

எப்படியெனில் அவன் கோட்பாடுகளின் சிக்கலில் தன்னையே பரிகொடுத்துவிட்டு அதை அவனே கண்டு களிக்கிறான். மனிதன் ஏன் சோகமாக இருக்கிறான் என்பதற்கு அவன் செய்யும் தர்க்கம் சிறந்த எடுத்துக்காட்டு.

//சந்தோஷம் கவியும் போது அவன் அதிருப்திக்கு ஆளாகி, வந்துசேராத சந்தோஷத்தை கனவு காண ஆரம்பிக்கிறான். வந்து சேர்ந்தவை எல்லாம், வந்து சேர்ந்துவிட்டவை என்பதாலேயே அவனுக்கு அற்பமானவை.//

கோட்பாடுகளுக்குள் சிக்குண்ட மனநிலையில் இருக்கும் ஒரு எழுத்தாளனைத் தான் ஜே.ஜே சில குறிப்புகள் அலசுகின்றது. பின்னிருக்கும் உரையில் சுகுமாரன் இது மலையாள எழுத்துலகத்தையும் தமிழ் எழுத்துலகத்தையும் தனித்தனியே பிரித்து காட்டுகிறது என்கிறார். ஒற்றன் காட்டுவது போல இந்நாவலில் இருக்கும் எழுத்தாளன் வாழ்வு சார்ந்த விவரிப்பில் துய்ப்பு இல்லை. அதை தவிர இந்நாவலில் இருக்கும் எல்லா அம்சங்களும் பிடித்திருக்கின்றன.

சாரு தன் விமர்சனத்தில் எக்ஸிஸ்டென்ஷியலிஸத்தை எழுதுகிறேன் என்று அக்கோட்பாட்டை எழுதாமல் இருக்கிறார் என்று விரிவாக சொல்லியிருந்தார். அஃதாவது தனிமனிதத்துவாதி என்று அவர் சித்தரிக்கும் ஜே.ஜே எல்லாமே சரி ஆனால் அவன் அப்படி இருப்பதற்கான முறையான காரணங்கள் நாவலில் சொல்லப்படவில்லை என. எனக்கு வாசிக்கும் போது அப்படி தோன்றவில்லை. மேலே சொன்னது போலவே ஒரு கோட்பாட்டை உள்வாங்கி வாழ முனைந்து அதில் தினம் தினம் தோற்கும் எழுத்தாளனை அவனின் அகம், அவனின் தீவிர ரசிகன், சமகாலத்திய எழுத்தாளர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதையே நாவல் மையப்படுத்துகிறது.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக