சூழ்ச்சிமிகு பெரும்பொழுது

மகாபாரதத்தையும் ஶ்ரீமத் பாகவதத்தையும் எழுதியவர் வியாசர். அவரின் மகன் சுகர். சுகருக்கு லௌகீகத்தில் நாட்டமே இல்லை. ஒரு நாள் ஆசிரமத்திலிருந்து எழுந்து வெளியில் நடக்க ஆரம்பித்துவிட்டாராம். தன் மகன் எங்கு செல்கிறான் என்பதை பார்க்க வியாசரும் பின்னாலேயே சென்றிருக்கிறார். அது விடிகாலைப் பொழுது. சுகரோ ஆடையின்றி நிர்வாணமாக சென்று கொண்டிருக்கிறார். வியாசர் ஆடையுடன் துரத்திக் கொண்டு வருகிறார். அப்போது குளத்தில் பெண்களும் நிர்வாணமாக குளித்துக் கொண்டிருந்தார்களாம். சுகரோ எந்த ஒரு நோக்கமும் இன்றி நடந்திருக்கிறார். பெண்கள் சுகரைக் கண்டவுடன் வெட்கம் கொள்ளவில்லை நிர்வாணத்தை மறைக்க முயற்சிக்கவும் இல்லை. அவர்கள் பொருட்டு குளித்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள். சுகர் அவர் செல்ல வேண்டிய வழி சென்று கொண்டே இருந்தாராம். பின்னால் வியாசரைக் கண்டதும் எல்லோரும் ஓடிச் சென்று துணிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு மறைத்தும் மறைந்தும் கொண்டார்களாம்.

***

இயற்கையை மனிதனாக பிறந்த எல்லோருமே நேசிக்கிறார்கள். ஆனால் அதை சார்ந்த தேடல் அற்றவர்களாய் இருக்கிறார்கள். ஒரு சொலவடை கூட உண்டு மழை விரும்பிகள் யாரும் சிரபுஞ்சி செல்வதில்லை என. இந்த கொண்டாட்டமெல்லாம் எல்லோரிடமும் நாம் காணும் அன்றாடங்களினூடே இருக்கிறது. மழை புயல் மணல் நிரம்பிய காற்று, பேய்க்காற்று போன்று அவ்வப்போது தோன்றும் இயற்கையின் மாயா விநோதங்களை நான் குறிப்பிடவில்லை. இயற்கையே கிளர்ச்சி நிரம்பிய ஒரு கூடம். ஒவ்வொரு முறை ஒவ்வொரு விநோதத்தை கொடுக்கின்றது.

கொஞ்சம் யோசித்து பாருங்கள் நாம் அநேக மனிதர்களுடன் தினம் பேசுகிறோம். புதிய புதிய மனிதர்களை தினம் கண்டு கொள்கிறோம். சிலருடன் முரண் கொள்கிறோம். சிலருடன் அதிகமாக நட்பு பாராட்டுகிறோம். பிடிக்காமல் போகும் சிலரை அடுத்த நாளிலிருந்து வெறுக்க ஆரம்பிக்கிறோம். பார்க்காமல் விடுகிறோம். நம் நினைவோடையிலிருந்தே சிலர் மறைந்தும் போகிறார்கள். ஏன்றேனும் உங்கள் வீட்டின் முன்னிருக்கும் மரம் உங்களுக்கு சலித்திருக்கிறதா ? நினைவோடையிலிருந்து நீங்கள் கண்ட பூனை நாய் மாடு ஆகியவை மறைந்து போகிறதா ? எதுவுமே இல்லை. இயற்கை தன்னை எல்லோரிடமும் வசீகரமாய் புகுத்திக் கொள்கிறது.

இந்த இயற்கையின்  வசீகரத்துடன் அனுபவிக்கும் மனிதனின் வன்மம் கலந்து கொள்கிறது. மழை பெய்தால் கூட அமில மழையாக இருக்குமோ என்று சந்தேகம் கொள்கிறோம். அதே போல் தான் நாம் அன்றாடம் காணும் சலிப்புறாத இரண்டு பெரிய பொழுதுகள் பகல் மற்றும் இரவு. பகலில் எவ்வளவு வன்மங்கள் கலந்திருந்தாலும் அது பகல் என்னும் தன்மையாலேயே இயற்கையுடன் இணைப்பிராமல் போய்விடுகிறது. அதே இரவு. அமானுஷ்யமானது. குற்றங்களுக்கானது. வன்மங்களால் செய்யப்பட்ட மனிதனின் அகங்களுக்கானது. அந்த இரவு வகைப்படுத்தும் மனங்களை நாவலாக்கியிருக்கிறார் ஜெயமோகன். நாவலின் பெயரே இரவு.இந்த நாவல் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. அதற்கு முக்கிய விஷயம் நாவல் கதையினுள் என்ன செய்கிறதோ அதையே வாசகர்களிடமும் செய்கிறது. இது ஒரு ஃபேண்டஸி நாவல். ஃபேண்டஸி என்னும் தன்மையே நாம் அன்றாடம் வாழும் ஒரு வாழ்க்கையிலிருந்து பிரிந்து ஒரு புதுவகையான வாழ்க்கையை வாழ்க்கை முறையை செய்வது தான். எல்லோரும் இதை ரசிப்பதன் காரணம் நாம் வாழ முடியாத ஒரு நிலையை நமக்கு காட்டுவது. அந்த நிலைகளை நம்மால் கலை என்னும் புனைவின் மூலம் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.

இந்நாவல் கொடுக்கும் ஃபேண்டஸி முழுவதும் நம்பக் கூடியதாய் இருக்கிறது. வேறு ஒரு உலகத்தை கொடுப்பதற்கு மாறாக இருக்கும் உலகம் மனிதனின் மனதில் செய்யும் விளையாட்டுகளை ஃபேண்டஸி கலந்து கொடுக்கிறார். நாம் பகலையே விழிப்பு நிலையாய் கொண்டுள்ளோம். நாம் அறிந்த பொழுதாய் வெளிச்சத்தையே கொண்டிருக்கிறோம். நம் மனம் உழைப்பில் உழலக் கூடியதாய் பகலே இருக்கிறது. அப்படியெனில் இரவு எப்படி இருக்கும் ? இரவில் மனிதனின் மனம் எப்படி இருக்கும் ? இதை விலாவாரியாக தர்க்கம் செய்கிறது இந்நாவல்.

நாவலின் கதைப்படி சரவணன் என்னும் ஆடிட்டர் கேரளம் வருகிறார் வேலை நிமித்தமாக. அப்போது அவரின் வீட்டிற்கு அருகில் இருக்கும் வீட்டில் இரவு நேரங்களில் வெளிச்சம் இசை என்று அவர் கண்களுக்கு படுகிறது. உள்ளே இருப்பதோ வயதான தம்பதிகள். அவர்களுடன் சென்று பேச பார்க்கிறான். அவர்களின் வாழ்க்கை முறை வித்தியாசமானது. அவர்கள் பகல் முழுக்க உறங்கி இரவு நேரங்களில் விழித்து இருப்பவர்கள். அவர்கள் ஒரு இயக்கமாக இருக்கிறார்கள். அதில் நிறைய பேர். ஏன் என்பதற்கும் அவர்களிடம் காரணம் இருக்கிறது. பகல் வாழ்க்கையை நாம் வாழும் போது பேச்சு துணைக்கு உலகமே இருக்கிறது. இரவு வாழ்க்கை முறையை கை கொண்டவர்களுக்கு ? அதனால் இயக்கத்திலிருப்பவர்கள் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள். பகலில் வாழ்வதைப் போலவே இரவில் அவர்களின் வாழ்க்கை நிகழ்கிறது.

நாயகன் அந்த இயக்கத்தினால் பலரை சந்திக்கிறான். எல்லோரும் இந்த இயக்கத்தில் சேர்வதற்கு ஒரு கதையை வைத்திருக்கிறார்கள். எல்லாம் உண்மையை தேடிய பயணமாக இருக்கிறது. கலைஞர்களிடம் சென்று கேட்டாலே எல்லோரும் இரவையே தேர்ந்தெடுப்பார்கள். காரணம் இரவு அலாதியானது. அமைதியானது. இதைத் தாண்டி மனம் அப்பழுக்கற்றதாய் இருக்கும் தருணம் என்கிறார்கள். இரவு பொய்யை விரும்புவதில்லை. உண்மையை மட்டுமே வெளிக் கொண்டு வருகிறது. நாவலில் கூட ஒரு வாக்கியம் வருகிறது

//சொற்கள் இல்லாமையின் இருளில் முட்டாள் இருக்கிறான் என்றால் அறிவாளிகள் சொற்களின் இருளில் இருக்கிறார்கள்//

மனிதர்கள் பொழுதுக்கேற்றவாறு மாறுவதில்லை. பொழுதுகளே தங்களுக்கொப்ப மனிதர்களை மாற்றிக் கொள்கிறது என்பதை தர்க்கத்தின் மூலம் விரிவாக்குகிறார். இரவுக்கேற்றவாறு நியதியை நாவலில் எழுத்தின் மூலம் மாற்றுகிறார். கண்கள் இரவிலேயே காணும் சக்தியை கூர்மையாய் கொண்டிருக்கும். பகலில் நாம் வெளிச்சத்தை காண்கிறோம். ஆனால் கண்களுக்குள் இருளடைந்து கிடக்கிறது. இருளில் தான் கண்களுக்குள் வெளிச்சம் வருகிறது என்கிறார்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வளவு விஷயங்களை குறிப்பாக இரவு மனிதனுள் செய்யும் விளையாட்டுகள் சார்ந்து சொல்லிச் செல்கிறார் ஜெயமோகன். நாவலில் முக்கியமான ஒரு கதாபாத்திரம் வருகிறது. அவள் தான் நீலிமா. இரவு எனும் போதே அதில் ஒரு போதையும் காமமும் கலந்தே இருக்கிறது. இந்த காமம் என்னும் தன்மத்தை நீலிமாவுடன் இணைத்து அதையும் ஜெயமோகன் தர்க்கம் செய்கிறார்.

நீலிமா என்னும் கதாபாத்திரம் பெண்கள் என்னும் ஒரு பாலினத்தையே தர்க்கம் செய்கிறது. ஒரு ஆண் பெண்ணிடம் தன்னை ஒப்படைக்க எப்போதும் ஒரு சந்தேகத்தின் முன் நிர்வாணமாய் நிற்கிறான். அது என்ன சந்தேகம் என்று அவனுக்கும் தெரிவதில்லை. இந்த சந்தேகத்தையே அவன் வாழ்வில் கேள்வியாக கொள்கிறான். வாழ்க்கை அவனைத் தாண்டி சென்று விடுகிறது. நீலிமா யட்சி என்னும் பெண் குறியீட்டின் கதையை நிறைய சொல்கிறாள். அவளிடம் பொய் இல்லை. மனதிலும் எதையும் மறைத்து வைக்கவில்லை. உண்மையை கண்டு நாயகன் பயப்படுகிறான். இதிலிருந்து எப்படி வெளிவருகிறான் என்பதை நோக்கி சுவாரஸ்யமாக நாவல் செல்கிறது.

இடையில் பாதிரியார் சாமியார்கள் என்று சிலர் வருகிறார்கள். அவர்கள் இரவை ஆன்மீகத்துடன் இணைத்து இருண்மை கொடுக்கும் அழகை விரிவாக்குகிறார்கள். இந்த ஆன்மீகம் அதிகம் நிர்வாணத்தை பேசுகின்றது. நாயகன் முதன் முதலாய் நிர்வாணத்தை உணர்கிறான். அப்போது அவன் மனம் கொள்ளும் சந்தோஷம் அளக்கமுடியாததாய் இருக்கிறது. நாவலில் வரும் ஆன்மீகம் முழுக்க பெண் மைய கடவுள் தன்மையை கொண்டாடுகிறது. சாக்தம் என்னும் முறையை இரவுடன் இணைத்து விவரிக்கிறது.

நாவலில் நாயகனின் சித்தரிப்பும் அருமையாக ரசிக்கும் வண்ணம் இருக்கிறது. நாவல் முழுக்க சந்தேகத்துடனேயே இருக்கிறான். புதிய வாழ்வியல் முறையை கண்டு அஞ்சுகிறான், நீலிமாவை சந்தேகமாய் பார்க்கிறான், எல்லாவற்றையும் அனுபவிக்காமல் தர்க்கம் செய்கிறான், கேள்வி கேட்கிறான், மீண்டும் பழைய வாழ்க்கைக்கு செல்ல முடியுமா என்று குழப்பத்தில் வீழ்கிறான். இது எல்லாவற்றிற்கும் நாவலின் கடைசியில் ஒரு பதில் கிடைக்கிறது.

நான் இரவை அதிகமாய் நேசிப்பவன். எல்லோரும் உறங்கிய பின் சுருங்கிப் போன வெளிச்சத்தில் தனிமை உணர்ந்து கொண்டே வாசித்தலும் பயணங்ளும் எழுதுவதும் நிகழ்ந்திருக்கின்றன. இந்த மனநிலையில் ஜெயமோகனின் இரவு எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. நாயகனைப் போலவே தர்க்கங்களால் வாசகனையும் hypnotise செய்கிறார். முன்பே சொன்னது போல அவர் இரவு சார்ந்து சொல்லும் விஷயங்கள் எழுத்தின் சுழலில் சிக்கி நம்மை பலவீனம் செய்கிறது. 

மொத்தத்தில் அழகியல் நிறைந்த உலகமாய்  இருக்கிறது ஜெயமோகனின் இரவு.

பின் குறிப்பு :  இந்நாவலில் அடக்க முடியாமல் சிரித்தது தி.ஜானகிராமன் பற்றி ஜெயமோகன் சொல்லியிருப்பது தான். ஒருவரிதான் எனினும் அவ்வளவு நகைச்சுவையான வாக்கியம். அவரது படைப்பினால் அப்படி சொன்னாரா அல்லது எதை வைத்து சொல்லியிருக்கிறார் என்பது தெரியவில்லை. மேலும் அதை இப்பதிவில் சொல்லமாட்டேன்!!!!

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

விமர்சனமும் ரசனை...

ரகசியம் என்னவென்று பிறகு அறிந்து கொள்கிறேன்...

Post a comment

கருத்திடுக