தொலைக்க நினைக்கும் பிரம்மச்சரியம்

எனக்கு பன்னிரெண்டாவதில் வேதியியல் பாடம் எடுத்த ஆசிரியர் வேதநாயகம்(பெயர் கற்பனையே). அவருக்கு மாணவர்களுடன் நெருக்கம் அதிகம். பன்னிரெண்டாவது எடுக்கும் போதே அவருக்கு வயது முப்பதை நெருங்கி இருந்தது. எப்ப சார் கல்யாணம் எப்ப சார் கல்யாணம் என்று தொணதொணக்காத மாணவர்களே கிடையாது. அவருடைய பிறந்தநாளிற்கு அவருக்கே தெரியாமல் அவரின் வீட்டிற்கு சென்று கொண்டாடினோம். அவருடைய அம்மா மாணவர்களாகிய எங்களிடம் உங்க சாருக்கு நீங்களாவது பொண்ண பாருங்களேன்டா என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்கு ரொம்ப கூச்சமாகிவிட்டது. அதன்பின் அப்பாவிற்கு விபத்து அம்மாவிற்கு உடல்நலமற்று போதல் என்று தொடர்ச்சியாக அசுப சம்பவங்கள் நிகழ்ந்தன. இதுமட்டுமில்லாமல் அவர் மணப்பொருத்தம் வரும் பெண்கள் இது படித்திருக்க வேண்டும் அந்த வேலையில் இருக்க வேண்டும் என்று நிபந்தனையும் வைத்திருந்தார். எந்த பெண்ணுமே அமையவில்லை. எந்த நிபந்தனையும் வேண்டாம் என்னும் நிலையில் இன்னமும் பெண்ணிற்காக காத்து இருக்கிறார்.

இது எங்களுக்கு பெரிய விஷயமாகவே தெரியவில்லை. வயதினை ஒத்த விஷயமாதலின் எங்களுக்கு அப்படி இருந்தது. ஆனால் இது போன்ற பிரம்மச்சரியர்களின் அன்றாடம் எப்படி இருக்கும் ? உளவியலில் சோகம் இருக்குமா ? சராசரி மனிதர்களுக்கும் திருமண ஆசையோடு இருக்கும் மனிதர்களின் வாழ்க்கைக்கும் எவ்வளவு வித்தியாசம் என்று நிறைய கேள்விகள் என்னுள் எழும்பியதுண்டு. இது எல்லாவற்றையும் முழுதும் சொல்லாமல், இது போன்ற பிரம்மச்சாரிகளின் பகுதிகளை ஒருவனுள் புகுத்தி நாவலாக்கியிருக்கிறார் பெருமாள் முருகன். அவருடைய எழுத்தில் நான் வாசிக்கும் இரண்டாம் நாவல் இது. நாவலின் பெயர் கங்கணம்.மீண்டும் சொல்கிறேன் இது ஒட்டு மொத்த பிரம்மச்சாரிகளின் குறியீடு அன்று. அதற்கு மாறாக அவர்களினின்று சில உணர்வுகளை, அன்றாடங்களை, குறிப்பாக பொதுப்படையாக இருப்பனவற்றை எடுத்து தன் பாத்திரத்திற்கு கொடுத்து நாவலை முடித்துள்ளார். இந்நாவல் சாதி சார்ந்தும் மண் சார்ந்தும் மனிதர்களின் அகங்களில் மென் உணர்வுகளாய் படிந்திருக்கும் வன்மங்கள் சார்ந்தும் நிறைய பேசுகின்றது.

இந்நாவலின் பெரும் ஆச்சர்யம் என்ன எனில் நாவல் முழுக்க ஒரு த்ரில்லை வைத்திருப்பது தான். மாரிமுத்து என்னும் கவுண்டனுக்கு திருமணமே அமையவில்லை. அவனுக்கு பெண் சுகத்தை காண வேண்டும். அதற்கேனும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றிருக்கிறான். எல்லா பெண்களும் பல காரணங்களால் அம்மாவால், சொந்தங்களால், சுற்றியிருப்பவர்களின் வெற்று ஆடம்பரங்களால், ஊரின் வம்பு பேச்சால் நின்றுபோய்விடுகிறது. இந்த நிலையில் அப்பா பெயர் தெரியாத ஒரு பெண்ணைப் பார்த்து மணம் முடிக்க நினைக்கிறான். அந்த பெண்ணும் சம்மதித்து விடுகிறாள். இந்த திருமணம் நிகழ்கிறதா என்பதை நோக்கி த்ரில்லாக செல்கிறது இந்நாவல்.

இதனிடையில் அவனின் குடும்பம் சார்ந்த கதையும் பெருங்கதையாய் ஊடாடுகிறது. பிரிந்த குடும்பம். பிரிந்த குடும்பத்துடன் அண்ணன் தம்பி உறவாடும் நாயகன். இருக்கும் ஒரு காட்டை பங்கு போடும் போது ஏற்படும் பிரச்சினைகள். மாமியார் பாட்டி ஊரான் என எல்லோரிடமும் இழுத்துக் கொள்ளும் வம்புகள் என்று நாவலின் கிளைக்கதையாய் இராமல் பெருங்கதையாய் சுவாரஸ்யமாய் செல்கிறது.

இந்நாவலினுள் புழங்கும் மொழி வெகு இயல்பானதாக இருக்கிறது. தனி மனிதனின் ஒடுக்கபட்ட ஆசைகளினின்று ஆரம்பித்து குடும்பத்தினுள் செல்கிறது நாவலின் கட்டமைப்பு. குடும்பத்தின் பிளவுகள், நிலவியலின் வர்ணனைகள் கதைகள் என்று சென்று அது நாயகனுடன் ஒவ்வொரு விதத்திலும் ஒன்று சேர்கிறது.

மாரிமுத்துவினுள் ஒடுக்கப்பட்டு இருப்பது காமமும் தான். அதிலிருந்து வெளிவரவே அவன் ஆசை கொள்கிறான். தமிழ் கலாச்சார கோட்பாடுகள் அவனுள் நிரம்பி வழிகிறது. அந்த காமத்தை தணிக்க திருமணத்தை ஒரு காரணமாக வைக்கிறான். நாவலிலேயே ஒரு விஷயம் வருகிறது. அவன் அநேக இடங்களில் தீண்டலுக்காக இதழ் முத்தத்திற்காக ஏங்குவது. இந்த தன்மைகள் நாயகனை ரசிக்க வைக்கிறது. நாவலின் கடைசி நூறு பக்கங்கள் தனக்கு எப்படியேனும் திருமணம் நடந்தேறி விட வேண்டும் என அவன் செய்யும் செயல்கள் எல்லாம் குறும்புத்தனத்துடன் ரசிக்குமாறு இருக்கிறது. வாசித்து முடித்து யோசிக்கும் போதே தெரிகிறது அது அவனுள் நிகழும் உளவியல் வதை. இந்த வன்மத்தை மென்மையாக பதிவு செய்திருப்பது நாவலின் தனிப்பட்ட அம்சங்களுள் ஒன்று.

இந்த விஷயத்தை மட்டும் அவர் மென்மையாக பதிவு செய்யவில்லை. கர்வத்தையும் அப்படியே பதிவு செய்திருக்கிறார். நாவல் முழுக்க ஒரே த்வனியில் பயணிக்கிறது. நாவலில் எத்தனை கதாபாத்திரங்கள் வந்தாலும் எல்லோரும் தத்தமது கர்வத்தை ஏதேனும் ஒரு வகையில் சொல்லியே செல்கின்றனார். இந்த கர்வம் ஒரு கட்டத்தில் அரசியலாகிறது. வரப்போகிற மருமகளுக்காக வாங்கும் டி.வியை தான் பார்க்க மாட்டேன் என அம்மா சொல்வதும், துணியெடுக்க பெண் வீட்டிலிருந்து நிறைய பேர் வந்திருந்தால் தன் கௌரவ குறைச்சல் என்று நினைப்பதும் போல நாவலில் நிறைய புழங்குகின்றது.

நாவலில் வரும் கிழவியின் கர்வம் ஆச்சர்யத்திற்குரியது. அவளுக்கு வயதாகிவிட்டது. கண் பார்வை குறைந்து கொண்டு வருகிறது. அவளால் வேலை செய்யாமல் இருக்க முடியவில்லை. பேரனோ வேலை செய்ய வேண்டாம் என சொல்கிறான். கேட்கும் நிலையில் அவள் இல்லை. அவன் சொல்வதை, குறிப்பாக ஊரார் சொல்வதாக அவன் சொல்வதை நம்ப மறுக்கிறாள். அதை அவளே உணரும் தருணத்தில் அவளின் கர்வம் அழிகிறது. அவளுக்குள் கட்டி வைக்கப்பட்டிருந்த அவளின் பிம்பம் உடைந்து சுக்கு நூறாகிறது. இது எல்லா கதாபாத்திரங்களுக்கும் நாவலுள் நிகழ்கிறது. நம் கர்வத்தை நாமே அறியும் தருணத்தில் அகச் சுழலில் சிக்கிக் கொள்கிறோம். நாவலின் கடைசியில் சில கதாபாத்திரங்களிடம் அடக்கி வைக்கப்பட்ட கர்வம் மேலெம்புகின்றது.

அதிகாரம் ஒரு சங்கிலித் தொடர். நீ கீழிருப்பவன் மேல் அதிகாரம் செய்யாமலிருந்தாலும் மேலிருப்பவன் உன் மீது அதிகாரம் செய்து கொண்டே தான் இருப்பான். இத்தொடருக்கேற்ப நாவலில் கர்வத்தின் உருவம் பேய்த்தனமாய் நிரம்பி வழிகின்றது. இந்த எல்லா விஷயங்களிலிருந்தும் ஒரு கதாபாத்திரம் மட்டும் விதிவிலக்காய் அமைகிறது. அது ராமனின் கதாபாத்திரம். மேலே சொன்ன எந்த விஷயத்திலும் அக்கதாபாத்திரம் மட்டும் சிக்குவதில்லை. மாரிமுத்துவிற்கு ஒரு அதிர்ஷ்ட தேவதையைப் போல இருப்பவன் ராமன். அப்படியே நாவலின் கட்டமைப்பிலும் அக்கதாபாத்திரம் உயிர்ப் பெற்றிருக்கிறது. இந்த கதாபாத்திரமே ஆசிரியர் சொல்ல நினைக்கும் விஷயத்தை ஊர்ஜிதம் செய்கிறது. தாயிடமிருந்தே காமம் மகனுக்கு அறியப்படுகிறது என்பதை சொல்லும் விதம் அட்டகாசம்.

பொதுவாக நாவலில் ஒரு துன்பத்தை அவலத்தை அதிகமாக காட்டி செல்வர். அந்த சூழலில் நம்பிக்கை கீற்றானது எப்போதாவது வந்து செல்லும், ஒரு வால் நட்சத்திரம் போல. இந்நாவலில் அவலத்தை எவ்வளவு ஆழமாக காண்பித்திருக்கிறாரோ அதே அளவு நம்பிக்கைக் கீற்றையும் காட்டியிருக்கிறார். நாயகன் ஊராரின் சொல்லினால் படும் துன்பத்தைக் காட்டிலும் அவனின் நம்பீக்கை கீற்றுகள் வசீகரமாய் நுண்ணியமாய் அமையப் பெற்றிருக்கின்றது.

நாவலில் சில கதாபாத்திரங்கள் கதைக்கு தீமை விளைவிக்குமோ என நினைக்கும் அளவிற்கு எழுதப்பட்டிருக்கிறது. நிறைய கதாபத்திரங்கள் நாவலினுள் புழங்கினாலும் எல்லா கதாபாத்திரங்களும் முக்கியமே என எண்ணும் அளவு எழுத்து தீவிரம் கொண்டுள்ளது.

கதைசொல்லியாக கதையை நகரும் இடங்களைக் காட்டிலும் கொங்கு நாட்டு மொழியில் இருக்கும் பகுதிகள் வசீகரமாய் இருக்கிறது. நிறைய பக்கங்களுக்கு கொங்கு நாட்டின் மொழியில் வசனமாய் செல்லும் போது இடையில் கதைசொல்லி வருவது அத்தருணங்களில் ஏமாற்றமாக கூட தோன்றுகிறது.

எல்லா நாவல்களும் எழுத்தாளன் அனுபவத்தால் கண்ட, வாசகர்கள் கண்ட அல்லது கண்டிராத மனிதர்களின் பன்முக முகங்களை எடுத்துரைக்கின்றன. இந்நாவலோ சற்று வேறுபட்ட, எல்லோரும் ஏதேனும் ஒரு தருணத்தில் கடந்து செல்லக் கூடிய ஒரு காலநிலையின் உளவியலை அழகாக எடுத்துச் சொல்கிறது.

நாவலின் முன்னுரையில் இந்நாவலுக்கு சில குறைபாடுகளாய் காசிமாரியப்பன் காமத்தை மட்டுமே திருமணத்திற்கு மையப்படுத்தும் விஷயத்தை சொல்லியிருக்கிறார். இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம் முன்பே சொன்னது போல இந்நாவல் எல்லா பிரம்மச்சாரிகளுக்குமான குறியீடு அல்ல. குறிப்பிட்ட கட்டுக் கோப்பான, ஜாதி மையம் கொண்ட சூழலில் அகப்பட்டுக் கொண்ட எளிய பிரம்மச்சாரியின் கதையே கங்கணம்.

பின் குறிப்பு : இப்பதிவு கிமு பக்கங்களில் வெளிவரும் முந்நூறாவது பதிவு.

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

சிவானந்தம் நீலகண்டன் said...

குறிஞ்சிநெட்டில் என் புத்தக அறிமுகக் கட்டுரை. பெருமாள்முருகனின் கங்கணம் நாவல்.

/மறந்து போவது வயதாவதன் சாதாரண அறிகுறியாக இருப்பினும் அதன் உச்சத்தில் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றும் கலந்துவிடுகின்றன. நிறைவேறாத ஆசைகளைச் சுமந்துகொண்டிருக்கும் ஆழ்மனது, மூளை பலவீனப்படும் இந்த இறுதிக்காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு மேலே வந்து தன் ஆட்டத்தை ஆரம்பிக்கிறது. உச்சமான போதையின் பிடியிலும் இது நிகழ்வதைக் காணலாம்/

http://kurinjinet.blogspot.sg/2015/05/10.html?m=1

Post a comment

கருத்திடுக