காரணம் இல்லாத ஒரு கதை

வாழ்வில் நிகழும், நாம் செய்யும் எல்லா விஷயங்களுக்கும் நமக்கு காரணங்கள் கிடைத்துவிட மறுக்கின்றன.  நாமே சிக்கிக் கொள்ளும் அநேக அதிகாரப் பிடிகளினிடையே கூட நமக்கு காரணங்கள் கிடைக்க மறுக்கின்றன. மனித மனமோ இந்த காரணங்களைத் தேடியே அலைந்து கொண்டிருக்கிறது. நாம் எல்லாவற்றிற்கும் காரணம் தேடிக் கொண்டிருக்கிறோம். பிண்ணனிகளை அளந்து கொண்டிருக்கிறோம். சின்ன மென் உணர்வுகளுக்கு கூட நாம் நமக்குளே காரணங்கள் இருக்கின்றனவா என்று தேடுதல் வேட்டையில் இருக்கிறோம். இது தான் தனி மனிதனை கவலைக்குள் ஆட்படுத்துகின்றது.

அதுவரை கண்டிராத மனிதன் ஒருவன் நம்மைப் பார்த்து புன்னகை புரிந்தான் எனில் நாம் ஏன் நம்மைப் பார்த்து புன்னகை புரிந்தான் என்று நாட்கணக்கில் ஏங்கிக் கொண்டிருக்கிறோம். இதை ஐரோப்பிய நாடுகளில் நாகரீகத்தின் ஒரு பகுதி என்கிறார்கள். அவ்வளவு தூரம் கூட செல்லவேண்டியதில்லை. அண்டை மாநிலமான கேரளத்தில் கூட புன்முறுவலின் வசந்தத்தை நன்கு உணரலம். நாம் எல்லாவற்றையும் கண்டு பயம் கொள்கிறோம். பயம் நம்மை காரணம் நோக்கி நகர வைக்கிரது. உணர்வு சிதைபடுகிறது. இது ஒரு தனி மனிதன் வாழ வேண்டிய வாழ்க்கையா ?

இந்த கேள்விக்கான பதில் தான் எக்ஸிஸ்டென்ஷியலிஸம் என்னும் கொள்கை விழைய காரணமாக இருக்கும் என்று தோன்றுகிறது. நம் இருப்பை உணர்தலே அதி முக்கியமான விஷயம். அடுத்தவனுக்கு உதவுவதாக ஆசைபட்டால் கூட அப்படி நினைப்பவின் இருத்தலே அதை செய்ய இயலும். இதை உணர்தல் எவ்வளவு ஆபத்தான விஷயமாக இருந்திருக்கிறது பாருங்கள். இல்லையெனில் எதற்காக அதை கோட்பாடாக கொண்டு வந்திருக்க வேண்டும் ? இந்த கோட்பாட்டை பலர் ஆதரித்து அதை தத்தமது எழுத்துகளில் கொணர்ந்திருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் ஜெர்மானிய எழுத்தாளர் ஃப்ரான்ஸ் காஃப்கா.

இதுவரை நான் வாசித்ததில் இவரை ஆழமான தனிமனிதத்துவவாதி என்று சொல்ல ஆசைப்படுகிறேன். மெடமார்ஃபாஸிஸ் என்னும் நாவலை நான் வாசித்திருக்கிறேன். அதிலும் சரி இப்போது பேசவிருக்கும் நாவலிலும் சரி கேஃப்கேஸ்க் என்னும் கொள்கையையே அவர் முன்னிறுத்துகிறார் இக்கொள்கை அதிகாரத் திணிப்பை பேசும் ஒரு கோட்பாடு. கிறிஸ்தோபர் நோலன் இயற்றிய doodlebug திரைப்படம் காஃப்காவின் கொள்கையை அச்சுபிசகாமல் அப்படியே காட்டுகிறது.

இதை சொல்வதன் காரணம் ஒரு விஷயத்தை உணர நாம் இன்னுமொரு விஷயத்தை நிச்சயம் கையில் எடுத்தாக வேண்டும். அறிவியல் செய்யும் விஷயத்தை தான் கோட்பாடும் செய்கின்றது. தனி மனிதனின் இருப்பை ஊர்ஜிதம் செய்ய காஃப்கா கையில் எடுப்பது அதிகாரம். அதிகாரமானது ஒருவன் மேல் திணிக்கப்பட திணிக்கப்பட அவன் தன்னையே உணர ஆரம்பிக்கிறான். தன் கடந்த காலத்தை தானே தர்க்கம் செய்து எப்படி அடுத்தவர்கள் எளிதாக தன் மீது அதிகாரம் செலுத்துகிறார்கள் என்று அவனே யோசிக்கிறான். சுயம் என்னும் விஷயம் அவனுக்கு புலனாகிறது.

இதில் சமூக அக்கறையும் கலந்தே தான் இருக்கிறது. சராசரி மனிதன் மீது அதிகமாக அதிகாரம் செலுத்துவது சமூகமாகத் தான் இருக்கும். நாம் எப்போதும் அரசு என்னும் கட்டினுள் அடங்கியே இருக்கிறோம். நமது அடிப்படை தேவைகளை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் எனில் அதற்கு நூதனமாகவேணும் அரசு காரணமாக இருக்கிறது. இதை நூதன அதிகாரம் என்று சொல்லலாமா ? நாம் அனுபவிக்கும் சுகங்களினூடே அரசின் அதிகாரம் இயங்கிக் கொண்டிருக்கிறதெனில் நாம் சமூகத்தால் படும் துன்பத்தில் அரசின் அதிகாரம் எப்படி இருக்கும் ? இதை கற்பனையில் புனைவாக்கியிருக்கிறார் ஃப்ரான்ஸ் காஃப்கா. அந்த நாவலை ஆங்கிலத்தில் டேவின் வில்லீ என்பவர் மொழி பெயத்திருக்கிறார். நாவலின் பெயர் THE TRIAL.


மெடமார்ஃபாஸிஸ் நாவலும் தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் இடையே நிலவும் அரசியல் வேறுபாடுகளை பேசுகின்றது எனில் அது சர்ரியலிஸ ரூபத்தில் பேசுகிறது. மனிதன் தன்னை பூச்சியாக மாற்றிக் கொண்டு சமூக கட்டிலிருந்து விடுபட நினைக்கிறான். இந்நாவலிலோ அவர் வெளிப்படையாக சமூகத்தில் நிகழும் கதையாகவே எழுதியிருக்கிறார்.

ஜோஸப் கே என்பவன் தனது முப்பதாவது பிறந்தநாளின் போது படுக்கையிலிருந்து எழுகிறான். தான் கைது செய்யப்படுகிறோம் என்பதை அறிந்து கொள்கிறான். எதற்காக கைது செய்யப்படுகிறோம் ? தான் செய்த குற்றம் என்ன ? இதிலிருந்து விடுபடுவது எப்படி என்று எதுவுமே சொல்லப்படவில்லை. இதன் பின் தொடர்ந்து நீதிமன்றத்திற்கும் வக்கீல்களிடையும் செல்கிறான். ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. அவனுக்கு ஒவ்வொரு அனுபவத்தை தருகிறது. அவனுக்கான நீதி தரப்படுகிறதா என்பதே இந்நாவலின் முடிவு.

இந்நாவல் இருபதாம் நூற்றாண்டின் க்ளாஸிக்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அதற்கு மூலக் காரணம் இதனுள் படிமமாக இருக்கும் மறைக்கப்பட்ட கதையே. நாவலின் கடைசி வரை கதையின் நாயகனுக்கும் சரி வாசகனுக்கும் சரி ஏன் அவன் கைது செய்யப்படுகிறான் என்பது சொல்லப்படுவதில்லை. இந்த மர்மத்தை சரியாக தொடர்ந்து நம்மை வாசிக்க வைத்துக் கொண்டே செல்கிறார் காஃப்கா. இந்த விஷயத்தை போட்டு உடைத்துவிட்டேன் என எண்ண வேண்டாம். இந்நாவலில் மொழி விளையாட்டுகள் இல்லை என்று ஒருவர் சொன்னார். இந்நாவலில் இந்த மர்மத்தை கடைசி வரை பிசகாமல் வைத்திருப்பதே நாவலை நகர்த்துகிறது. சுவாரஸ்யமூட்டுகிறது. மொழி விளையாட்டாக இருக்கிறது.

இந்நாவல் நான் லீனியர் போன்றதொரு அமைப்பை ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் கொடுக்கிறது. மேலும் கதை மையப்படுத்துவது அந்நிலவியலில் இருக்கும் நீதியை மட்டும் தான். நீதி மனிதர்களால் எப்படியெல்லாம் விலையாடப்படுகிறது என்பதை தெளிவுற சொல்கிறார். கேப்ரியல் கார்ஸியா மார்க்வேஸின் The chronicle of death foretold பற்றி ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது இந்நாவலைப் பற்றி அவர் சொன்னார். இரண்டு நாவலும் வாசகர்கள் எதிர்நோக்கும் விஷயத்தை மையப்படுத்தாமல் எது அந்நாவலுக்கு தேவையோ அதை மட்டும் மையபடுத்துகிறது. 

இந்த நீதியும் தனிமனிதவாதத்துடன் நிறைய இடங்களில் கதையில் சேர்கின்றது. மனிதர்களின் குற்றங்களை தேடி சமூகம் செல்லத் தேவையில்லை. அந்த குற்றமே அம்மனிதனை வெளிக்கொண்டுவரும் போன்ற வாசகங்களும், ஒரு பகுதியில் நாயகன் ஒரு ஓவியனை சந்திக்கிறான். அவன் சொல்லும் விஷயம். நான் நீதிமன்றத்தைப் போல ஒரு ஓவியம் வரைந்து அங்கு உன்னை நியாயப்படுத்த சொன்னால் உனக்கு நீதி கிடைக்குமா என. இப்படி நிறைய இடங்களில் தனிமனிதத்துவத்தின் பல்வேறு முகங்களை காட்டி செல்கிறார் ஆசிரியர்.

இடையில் நாயகன் பாதிரியாரை சந்திக்கிறான். இந்த இடத்தில் நாவல் பன்முகத் தன்மையை அடைந்துவிடுகிறது. அவர் ஒரு கதையை சொல்கிறார். ஒரு கதவு அந்த கதவை பாதுகாக்கும் ஒரு வாயிற்காப்போன் சார்ந்த கதை. அந்த கதை சார்ந்து நாவலில் இருவரிடையே தர்க்கமும் நிகழ்கிறது. இங்கு பல்வேறு பதில்கள் கிடைக்கின்றன. எது உண்மையாக இருக்கக் கூடும் என்று நாம் யோசிக்கிறோம். தர்க்கம் வளர்ந்து கொண்டே செல்கிறது. ஒரு முடிவிற்கு மட்டுமே நம்மால் வர முடிகிறது. அக்கதை நீதியை மையப்படுத்துகிறது. நீதியை நிறுவனமாக்குகிறது என. ஒட்டு மொத்த நாவலும் தரும் மர்மத்தை இந்த ஒரு அத்தியாயத்தில் இட்டு நாவலையே திசை திருப்பி விடுகிறார்.

நாவலில் ஜோஸஃப் கேவின் கதாபாத்திரம் மிக அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அவனுக்குள் இருக்கும் பயம் பழகி பழகி சட்டம் சார்ந்து அவனுள் எழும் கோபமாக மாறுகின்றது. கேவின் மாற்றத்தை வாசிக்கும் போது எல்லோராலும் எளிதில் உள்வாங்கிக் கொள்ள முடியும்.

பிரம்மராஜன் தமிழில் காஃப்கா சார்ந்து எழுதியுள்ள பதிவை சமீபத்திலேயே வாசித்தேன். என்னை பிரமிப்பூட்டிய பதிவு. அதற்கான லிங்க் - http://meetchi.wordpress.com/2009/01/04/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-franz-kafka-introduced-by-brammarjan/

இதில் அவர் குறிப்பிட்டிருந்த விஷயம் காஃப்கா எழுதுவது அவருடைய அப்பாவிற்கு பிடிக்காது. அதனால் அவர் ஒருமுறை காஃப்காவை விலங்கின் பெயர் சொல்லி திட்டியிருக்கிறார் போல. அதனால் எழுதப்பட்ட நாவலே மெடமார்ஃபாஸிஸ் என. அப்படியெனில் ட்ரையல் நாவலின் பிண்ணனி என்னவாக இருக்கும் என்று தேடினேன். எனக்கு கிடைக்கவில்லை. அதனால் என் அனுபவத்தை மட்டுமே எழுதியிருக்கிறேன். ஆனால் அதை அறிய ஆசையாகவே இருக்கிறது. யாருக்கேனும் இணையத்தில் இருப்பது தெரிந்தால் பின்னூட்டமாக இடவும். அடியேன் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

இந்நாவல் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வந்திருக்கிறது. 
பெயர் : விசாரணை. 
வெளியீடு : க்ரியா 
மொழிபெயர்த்தவர் : ஏ.வி. தனுஷ்கோடி.

இந்நாவல் படமாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கிண்டில் வைத்திருப்பவர்கள் இந்த லிங்கை க்ளிக்கி வாசித்துக் கொள்ளலாம். அடிலெய்டு இணைய நூலகத்தின் இலவச மின் புத்தகங்கள் கிடைக்கும் இடம்.
நாவலுக்கான லிங்க் - http://ebooks.adelaide.edu.au/k/kafka/franz/trial/index.html

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

முதல் மூன்று பத்திகளே நாவலின் சிறப்பை அறிய முடிகிறது...

நாவலுக்கான லிங்க் - நன்றி...

Post a comment

கருத்திடுக