நெடுங்கதை தொகுப்பு

யதார்த்தவாத கதைகளின் மீது எனக்கு எப்போதும் நாட்டம் ஏற்பட்டதில்லை. யதார்த்தவாதம் எனும் போது அக்கதை நிகழும் இடங்கள் சார்ந்த வர்ணனைகள் அவர்கள் செய்யும் செயல்களின் நுணுக்கங்கள் எல்லாம் விரிவாக புனைவில் ஆட்கொள்கிறது. இது எல்லா எழுத்தாளர்களுக்கும் கைவந்துவிடுவதும் அல்ல. மொழியும் இதனுடன் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த மையக் கதைகள் எளிதில் சலிப்பையும் கொடுக்கக் கூடும். சுருக்க சொன்னால் கடினமான ஒரு களம் இந்த யதார்த்தவாதம்.

இதே யதார்த்தவாதத்தை கையில் எடுத்துக் கொண்டு சிறப்பாக கதை சொல்லிப் போகிறார் இளஞ்சேரல். இந்த நூலை அவர் எனக்களித்து மாதக்கணக்கு ஆகிறது. இப்போதே வாசித்து முடித்தேன். சிறுகதை தொகுப்பு என்பது பெயரே ஒழிய உள்ளே இருப்பது எல்லாம் நெடுங்கதைகள். ஒவ்வொரு கதையும் இருபது பக்கங்களுக்கு மிகாமல் இருக்கின்றன. அந்த நூல் அவரின்தம்பான் தோது”.இலக்கியவாதியின் முக்கிய நோக்கு பெரும் காட்சியை காண்பிப்பது மட்டுமல்ல. அதனுள் கரைந்தோடும் நுண்ணிய விஷயங்களை உணர வைப்பது. இவர் எடுத்துக் கொள்வதே நுண்ணிய விஷயங்களை மட்டும் தான்.

சமகாலத்தில் அதிகாரத்தால், குடும்ப அந்தஸ்தால் ஒடுக்கப்பட்டு இருக்கும் மக்களின் மனதினுள் அடிப்படை தேவைகளாக இருக்கும் விஷயங்களை இந்த சிறுகதை தொகுப்பு மையப்படுத்துகிறது. இந்த அடிப்படை தேவைகள் காமமாக, சினிமா தியேட்டராக, குஸ்தி சண்டையாக, வீசும் மணமாக, பணமாக ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொன்றாக விரிவு கொள்கிறது.

இந்த அடிப்படை தேவைகள் மேல்தட்டு அதிகாரவர்க்கத்தின் அடிப்படை தேவைகளுடன் மோதுகின்றது. அதற்கான சிறந்த எடுத்துக்காட்டு கதை டியுப்லைட். தெருவில் வைக்கப்படும் ட்யூப்லைட் மக்களின் காம வாழ்க்கையை பாதிக்கின்றது. இந்த டியுப்லைட் வேண்டி சிறு சிறு போராட்டங்கள் நிகழ்கின்றன. அதை செய்பவர்கள் அக்கதையின் அதிகார வர்க்கம். அதை விரும்பாதவர்கள் அதை எளிதில் தங்களின் விதத்தில் புறக்கணிக்கிறார்கள். இதை அப்படியே விஸ்தாரமாக எழுதியுள்ளார்.

இதைப் போல தான் தணசீலி குணசீலி என்னும் கதை. ஒரு தியேட்டர் இருவரின் தோழியாகிவிட்டது. அது உணர்வு சார்ந்த கட்டிடமாக மாறிவிட்டது. சினிமா பொழுதுபோக்கு என்னும் நிலையை கடந்து அவர்களுள் இருக்கும் உணர்வுகளுள் ஒன்றாக ஆகிவிட்டவுடன் அவர்களை சுற்றியிருக்கும் விஷயங்கள் அவர்களின் அகவுலகை எப்படி பாத்க்கிறது என்று காட்டுகிறார்.

இவருடைய கதைகளில் எதையும் நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதில்லை. எல்லாவற்றையும் அவரே எழுத்தில் கொடுக்கிறார். இவர் செய்யும் பிழையும் அதில் ஒன்று தான். கதைகள் நன்றாக செல்லும் போது இடையில் இளஞ்சேரல் வந்து சில கருத்துகளை உதிர்த்து செல்கிறார். அவ்விடங்களில் எனக்குள் கதையின் தாக்கம் குறைந்துவிடுகிறது.

மண்ணின் மகன் கதை குஸ்தி சண்டையை மையப்படுத்துகிறது. அப்பா குஸ்தி வீரன். மகன் நோஞ்சானாய் இருக்கிறான். சில காரணங்களால் அப்பாவை எதிர்க்க ஆசை. நேரடியாக எதிர்க்காமல் குஸ்தியின் மூலம் அவரின் அதிகாரத்தை உடைக்கிறான். இதில் சண்டைகள் சார்ந்த விவரிப்பு விரிவாய் அழகாய் இருக்கிறது. இந்த எல்லா கதைகளுமே கோவையில் நிகழ்கிறது. கோவை மொழியின் வாசனையை எல்லா கதைகளிலும் மொழி வாயிலாக எல்லோராலும் உணர்ந்து கொள்ள முடியும்.

மாநில தவம் என்னும் அரசியல் கதை ஒன்று உள்ளது. இதில் அரசியலையே அதிகம் வைத்திருக்கிறார். தெலுங்கானா மற்றும் ஈழப் பிரச்சினையை மையமாக கொண்டு எழுதப்பட்ட கட்டுரை சார்ந்து விவாதங்கள் கதாபாத்திரங்கள் மூலம் கதையாய் தொடர்கின்றன.

ஒட்டு மொத்த தொகுப்பில் பிடித்த கதை இருட்டு ப்ரீமியர்லீக். க்ரிக்கெட் சூதாட்டம் சார்ந்து சுவாரஸ்யம் குன்றாமல் எப்படியெல்லாம் பந்தயம் வைக்கிறார்கள் என்று தெளிவாக சொல்லி செல்கிறார். பந்தயம் வைப்பதை சிலரிடம் நியாயப் படுத்தவும் செய்கிறார். சிலர் பந்தயம் கட்டுவது பேராசையினால் எனில் கதையின் நாயக கூட்டம் கட்டுவது தேவைகளுக்காக என்கிறார்.

மீன்வாகு கதை முக்கால்வாசி பிடித்தே இருந்தது. ஒரு மாயா யதார்த்த கதை எப்படி ஆரம்பிக்க வேண்டுமோ அப்படியே கதையை நகர்த்தியிருக்கிறார். ஒருவனது உடலினின்று வரும் வித்தியாசமான மணம் என்று ஒரு தன்மையை அமானுஷ்யமாக அவனுக்கே உரியதாய் காட்டி செல்கிறார். கதையோ வழியிலேயே தடம் மாறி சென்றுவிடுகிறது.

இந்த எல்லா கதைகளும் இருண்மையிலிருந்து ஒளி நோக்கி செல்லும் கதாபாத்திரங்களின் கதைகளை சொல்கிறது. எல்லாவற்றிலும் நன்மைக்கான ஒளி மிகக் குறைவாகவே சொல்லப்படுகிறது. படிமங்கள் அதிகமாக இல்லாததினால் வாசகன் சிந்திக்க வேண்டிய இடங்கள் எதுவும் இல்லாமல் போய்விடுகிறது. சிறுகதைகளின் பக்கங்களை நினைவூட்டுகிறது. கோவை மாவட்டத்தின் சில சில பகுதிகளை இவ்வளவு அழகாக சொல்லக் கூடியவர் படிமங்களை உள்வைத்து அளவு குறைத்து எழுத ஆரம்பித்தால் கதைகள் இன்னமும் அழகாக வரும். இது என் ஆதங்கம் மட்டுமே

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக