ஒரு மன்னிப்பும் சிறிய வேண்டுகோளும்

அன்புள்ள றியாஸ் குரானாவிற்கு,

வணக்கம். சமீபத்திலேயே ஒரு விஷயத்தைக் கண்டேன். நான் பத்து மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவருடன் சென்று அசோகமித்திரனை சந்தித்து அது சார்ந்த என் அனுபவத்தை பதிவாய் இணையத்தில் பதிவு செய்தேன். அதை தாங்கள் ஷேர் செய்திருந்தீர்கள். விஷயம் யாதெனில் அதில் பதிப்பாளர்கள் பணம் தரவில்லை என்று எழுதியது நான் செய்த பிழையினுள் பெரும் பிழை. எழுபத்தி ஆறு ரூபாய்க்கு செக் என்று சொல்லியிருந்தேன். அது உண்மை தான். எப்படியெனில் பதிப்பாளர்கள் அவ்வப்போது கொடுக்கும் ராயல்டி. அஃதாவது சம்பளத்தைப் போல் ஒரு தேதியை வைத்து அத்தினம் கொடுக்கிறார்கள். வருடாந்திர கணக்கை முடிக்கும் போதும் மீதம் தர வேண்டிய பணத்தை எழுத்தாளருக்கு கொடுக்கிறார்கள். அதில் ஒன்றே இந்த எழுபத்தி ஆறு. இதையே நான் பிழையுடன் பதிவு செயந்திருந்தேன். 

I have been misinterpreted by myself. அசோகமித்திரனே நான் செய்த பிழைக்காக என்னிடம் கோபம் கொண்டார். மிகுந்த மன வருத்தம் கொண்டேன். மின்னஞ்சலில் ஒரு தந்தையைப் போல பிழையை உணர்த்தினார். பின் யோசித்து பிழை உணர்ந்து அவரிடம் மன்னிப்பு கோரினேன். இதை சரிசெய்யும் போதும் என் சுயநலத்தால் மேல்தட்டு வார்த்தைகளையே முன்குறிப்பாய் இட்டிருந்தேன். இப்போது எல்லாம் எனக்கே இழிவாய் படுகிறது.

இது எல்லாவற்றையும் தங்களிடம் சொல்லும் காரணம் கூகிளில் அசோகமித்திரனும் ராயல்டியும் என்று இட்டால் தாங்கள் ஷேர் செய்திருந்த என்னுடைய பதிவே முதலாய் வருகிறது. இது என்னால் அசோகமித்திரனுக்கும் பதிப்பகங்களுக்கும் ஏற்பட்ட இழுக்காய் கருதுகிறேன். வருத்தம் கொள்கிறேன். எல்லோரிடமும் இக்கடிதத்தின் வாயிலாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

என் நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டமையால் சில பதிப்பகங்களுக்கு சார்பாக சொல்கிறேன் என்று தாங்கள் நினைக்க வேண்டாம். கண்ணாடி நன்மையை மட்டுமே காட்டுவதில்லை. அது போலவே என் பதிவுகள் என்னுள் இருக்கும் இழிவை இது போன்ற தருணத்தில் வெளிச்சமிட்டு காட்டுகின்றன.

வாசிப்பில் நான் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. இந்த உணர்வை சுமந்து கொண்டு என்னால் நிச்சயம் செல்ல முடியாது. ஆதலால் என் பிழையை உணர்ந்து, எனக்குள் இருக்கும் குற்றவுணர்ச்சியை போக்க தங்களின் பக்கத்திலிருந்து அப்பதிவை நீக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் பதிவிற்கான லிங் - https://www.facebook.com/riyas.qurana/posts/680505655312857

நன்றி.

அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக