விலக முடியாத மனிதர்கள்

தவிர்க்க முடியாத காரணத்தால் மீண்டும் எஸ்.ராமகிருஷ்ணன் என் பக்கங்களுள் நுழைகிறார்.

Nostalgic என்னும் உணர்வு இல்லாதவர்களை நான் கண்டதேயில்லை. மணம் ஆன பின் அப்பா சென்ற இடமே தனக்கான போக்கிடம் என்று வந்த அந்த காலத்திய மனோபாவங்கள் நிறைந்த என் அம்மாவின் உள்ளும் அவருடைய சொந்த ஊர் ஞாபகங்கள் பயின்ற பள்ளிகள் அப்போது சொல்லப்பட்ட அமானுஷ்ய கதைகள் என்று இன்னமும் தேங்கியே இருக்கின்றன. என் அம்மாவை அமைதி ஆட்கொள்ளும் இடமொன்றிற்கு அழைத்து சென்றாலும் இந்த உணர்வை அம்மாவிடமிருந்து பிரிக்க முடியாது. இது என் அம்மாவிற்கு மட்டும் பொருத்தமல்ல.

மேலும் எழுத்தாளர்களுக்கும் பயணம் மேற்கொள்ளும் இச்சை கொண்டவர்களுக்கும் இந்த உணர்வு மேலோங்கியே இருக்கும். இரண்டு பேருக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர். அப்படி இருப்பவர்களுக்கு அவர்களின் சொந்த ஊர் சார்ந்த ஞாபகம் உள்ளூர கனன்று கொண்டே தான் இருக்கும். என் கேள்வி இந்த உணர்வு தனி மனிதன் சார்ந்தது என்று ஒதுக்கிவிட முடியுமா ?

இந்த கேள்வி என்னுள் எழும்போது சம்மந்தமே இல்லாமல் வெப்ப இயக்கவியல் நினைவிற்கு வந்தது. ஒரு பொருளில் பௌதீக மாற்றங்கள் நிகழ்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதற்கு அதை சுற்றியுள்ள வெளியும் காரணம் என்கின்றது. சுற்றியுள்ள வெளியும் பொருளின் ஆற்றலை மாற்றுகின்றது என்கிறது. அப்படியெனில் தனி மனிதனுள் இருக்கும் இந்த மென் உணர்வை அந்த ஊரே தூண்டுகின்றது என்று வைத்துக் கொள்ளலாமா ?

சமீபத்தில் கூட என் நண்பர் அருண் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவருடைய ஊர் தூத்துக்குடியில் இருக்கும் ஏரல். சொந்தம் சம்மந்தமாக பயணம் மேற்கொண்டு சென்னை வந்திருக்கிறார். சென்னை பிடிக்கவில்லை. எனக்கு இது ஒத்துக் கொள்ளாது என்று சொன்னார். அவருடைய ஊர் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. அங்குள்ள தெருக்களின் வழியே கசிந்து கொண்டிருக்கும் மௌனம் அலாதியானது. தெருக்களின் இருபக்கமும் அங்கே கடைகள். அந்த தெருவின் மையத்தில் இருநிமிடம் நிற்க வேண்டும் என்றே அங்கு சென்ற போது தோன்றியது. ஆனால் அது என் பூர்வீகம் அல்ல. யாரோ ஒருவருடையது. என் நண்பருடைய பூர்வீகம் என்னை ஈர்க்கிறது. ஒருவேளை இந்த உணர்வு கூட வழிவழியாக கடத்தப்படும் ஒரு விஷயமாக இருக்கலாம் அல்லவா ?

எப்படியெனில் ஒரு உதாரணம் சொல்கிறேன். என் அம்மாவின் சொந்த ஊர் திருநெல்வேலி. அப்பாவை மணந்து கொண்டு சேலத்திற்கு வந்தாயிற்று. சேலம் வந்த போது திருநெல்வேலியின் ஞாபகங்கள் அதிகமாக இருந்திருக்கிறது. நான் திருநெல்வேலி சார்ந்து அம்மாவுடன் பேசும் போதும் அதை என்னால் உணர்ந்து கொள்ள முடியும். இருபது வருடத்திற்கும் மேலாக சேலத்தில் இருந்துவிட்டார். இந்நிலையில் சேலம் அல்லாது வேறு இடங்களில், அதாவது சொந்தக் காரர்களின் வீடுகளில் தங்க நேரிடும் போது அம்மாவிற்கு comfort zone ஆக இருப்பது சேலம் தான். இந்நிலையில் nostalgia என்னும் பதம் சேலத்திற்கு பொருந்துமா திருநெல்வேலிக்கு பொருந்துமா ?

தனி மனிதனுக்குள் இருக்கும் சுயம் சார்ந்த உணர்வு ஊரினாலேயே முடிவிற்கு வரப்படுகிறது என்று சொல்லலாம் தானே. இப்போது அடுத்த கேள்வி. ஊர் சார்ந்தே இவ்வுணர்வு நிறுவப்படுகிறது எனில் எல்லோருக்கும் ஒரே உணர்வு இருக்க வேண்டியது அவசியம் அல்லவா ? ஆனால் மாறுபடுகின்றது. இந்த இடத்தில் தான் ஒவ்வொரு மனிதனின் தனி அனுபவமும் அவன் காணும் ஊருடன் ஒன்றுகிறது. அது மேலே சொன்ன மென் உணர்வாக மாறுதல் அடைகிறது.

அவனின் தாத்தா பாட்டிகளிடமிருந்து நிலவியல் சார்ந்த கதைகள், அவன் காணும் கதைகள், தெரிந்த இடம் சார்ந்து நண்பர்கள் சொல்லும் அறிந்திராத கதைகள் என்று அவனுடைய ஊர் அவனுக்குள்ளேயே எதிர்கால படிமமாகிறது. இந்த படிமம் காலத்தால் அசை போடப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு நிலவியலின், அங்கிருக்கும் மக்கள் சார்ந்த உணர்வுகளின் பதிவாக இருக்கும் நாவலொன்றை வாசித்தேன். அது எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய "நெடுங்குருதி"


சிறுகதை முகாம் சென்றிருந்த போது கள்வர்களைப் பற்றி எஸ்.ரா பேசிக் கொண்டிருந்தார். அவை நாவலில் இடம்பெறும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆட்டு நாக்கை அறுத்து எடுத்துக் கொண்டு ஓடும் திருடர்களின் ஐதீகம், தாலி திருடும் திருடன் என்று எல்லாமே நாவலில் இடம்பெறுகின்றன.

இப்போது நாவலுக்குள் செல்வோம். நாகு என்னும் கதாபாத்திரத்தை வைத்து நாவல் ஆரம்பிக்கப்படுகின்றது. நாகு சிறுவனாக இருக்கிறான். நாகு வேம்பலையில் இருக்கிறான். இந்த இரு குறிப்புகள் தான் நாவலை ஆரம்பிக்கின்றது. இது போல் வருபவர்கள் செல்பவர்கள் தொழில் புரிபவர்கள் என்று நாவலில் நிறைய கதாபாத்திரங்கள் வருகின்றன. ஆனால் யாவும் ஒரு ஊரை சுமந்து கொண்டு வருகின்றது.

எல்லா கதாபாத்திர மனிதர்களும் வேம்பலையை சுற்றியே வருகின்றனர். ஏதோ ஒரு விதத்தில் வேம்பலையை காக்கின்றனர். வேம்பலைக்கென தனியாக ஒரு வரலாறு வருகிறது. அந்த வரலாற்றில் ஆரம்பித்து நாவல் முடியும் வரை குருதி நவீன வரலாற்றை எழுதி செல்கிறது.

வேம்பலை ஒடுக்குதலுக்கும் அதிகாரத்திற்கும் அடங்க அடிமைபட்டு இருக்கும் நிலவியலாக நாவலில் சித்தரிக்கப்படுகிறது. கடந்தகாலத்தில் இருந்த கள்வர்கள், அவர்களை நாவலில் வேம்பர்கள் என்று குறிப்பிடுகிறார். அவர்கள் ஒரு வெள்ளைக்கார துரையை கொள்ளையடிக்க முயற்சிக்கும் போது அவர் பழிவாங்க வந்து அங்கிருக்கும் எல்லோரையும் நிர்மூலமாக்குகிறார். இதன் விவரணை நாவலில் மிக அழகாய் வந்திருக்கிறது. நாவலில் நிறைய உயிர்கள் மாய்ந்து போகின்றன. மாய்ந்து போகும் இடங்களெல்லாம் நினைத்தாலும் மறக்க முடியாத வண்ணம் எழுதப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த வேம்பர்களை அழிக்கும் படலம். அழிக்கப்பட்டவர்களோ அந்த இனத்தின் ஒரு பகுதி மட்டுமே. மீத மக்கள் வந்தவுடன் இவர்களின் பிணங்களைக் கண்டு தங்கள் திருட்டு தொழிலை விட்டெறிய முடிவு செய்கின்றனர்.

இங்கு தான் நாவலின் பெருங்களம் வாசகர்களுக்கு விரிகின்றது. வேம்பலையும் களவும் இரண்டறக் கலந்தது என்பது நாவல் முழுக்க விரிந்திருக்கும் விஷயம். அந்த களவு அங்கிருக்கும் மக்களுடன் தொடர்புடையது என்பதல்ல. அந்த நிலவியலுடன் தொடர்புடையதாகவே சித்தரிக்க்ப்படுகிறது. அங்கு வருபவர்களுள் அமானுஷ்யங்களை அந்த மண் விதைக்கின்றது. அந்த அமானுஷ்யங்களில் ஒன்று இந்த களவு.

நாவலில் நிறைய பேய்கள் வருகின்றன. இதுவும் அந்த ஊருடன் அடங்கிய ஐதீகமாக இருக்கிறது. இந்த விஷயம் நாவலின் ஆரம்பத்திலிருந்து வருகின்றது. பேய்கள் வரும் பக்கங்களிலெல்லாம் பேய்களின் அமானுஷ்ய விவரணைகளை செய்யாமல் வீரியம் மிகு செயல்களை விவரித்து செல்கிறார். சில இடங்களில்  மெய்சிலிரிக்கும் அளவு நாவலில் வந்திருக்கின்றது. சில இடங்களில் நாவலில் வரும் மக்கள் பேய்களை சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர்.

ஒரு இடத்தில் மட்டும் பேய்களை உன்மத்தமாக காட்டியிருக்கிறார். இரண்டு பரதேசிகள் ஊருக்கு வருகிறார்கள். அங்கு எல்லோரும் தத்தமது வேலைகளை செய்கின்றனர். யாரும் அவர்களுக்கு உணவளிக்க முன்வரவில்லை. கண்டு கொள்ள கூட இல்லை. இந்நிலையில் அங்கு இருக்கும் விநோதமான நிலவியலைக் கண்டு அதிர்ச்சியுற்று அங்கிருந்து விலகி செல்கின்றனர். அப்போது ஒருவர் சொல்கிறார் அங்கு எல்லோரும் இறந்து பேய்களாக ஊரிலேயே இருக்கிறார்கள் என்று. இது போன்ற விஷயங்களை தான் நெடுங்குருதி மையப்படுத்துகின்றது.

இதனிடையில் அதிகார வர்க்கம் அவர்கள் மேல் திணிக்கும் அதிகாரம் வன் கொடுமையை காட்டிலும் மோசமானதாக இருக்கிறது. தனி மனித சுதந்திரத்தில் அவர்கள் செய்யும் ஆட்சியை வேம்பர்களின் பக்கத்தினின்று இந்நாவல் பேசுகின்றது.

சிலர் வேம்பலையை விட்டு விலக நினைக்கிறார்கள். ஆனால் செல்ல முடியவில்லை. சிலர் வேம்பலைக்கு செல்ல நினைக்கிறார்கள். அதில் சிலர் செல்கிறார்கள் சிலர் செல்ல முடியாமல் இருக்கிறார்கள். இந்த பன்முகத் தன்மைக்கான காரணம் ஊரே ஒழிய தனி மனிதர்கள் அல்ல என்று நாவலில் சொல்லப்படுகிறது.

நாவலின் கட்டமைப்பு என்னை வியப்பில் ஆழ்த்திய விஷயங்களுள் ஒன்று. நாகு என்னும் பாத்திரத்தில் நாவல் ஆரம்பிக்கின்றது. அடுத்த அத்தியாயம் வேம்பலையின் கடந்த காலத்தையோ அல்லது வேறு மக்களின் வரலாற்றையோ சொல்லி மீண்டும் நாகுவிற்கு வருகிறது. ஒரு கதாபாத்திரத்தின் கதை alternate அத்தியாயங்களில் தொடர்ச்சியை கொள்கிறது. அதே அந்த அத்தியாயத்திலுள்ள சில கதாபாத்திரம் வேறு கதாபத்திரங்களுடன் உணர்ச்சி ரீதியாக இணக்கம் ஆகும் போது இரண்டாம் கதாபாத்திரம் அத்தியாயத்தில் ஆளுமை செலுத்துகின்றது. அந்த தொடர்ச்சியான கதையே நீட்சியை இழந்து அவ்வப்போது வரும் கதையாகிவிடுகிறது. நாவலில் நிறைய கிளைக்கதைகள் இருக்கின்றன. ஆனால் அவை முந்தைய அல்லது பிந்தைய அத்தியாயங்களை பலவீனமாக்கி முன்னேறி செல்கின்றன.

நாவலில் நான்கு காலத்தை காட்டி அப்போது இருக்கும் உணர்வுகளை சொல்லி செல்கிறார். எங்கோ வாசித்த ஞாபகம் ஒன்று வந்தது. எழுத்தாளன் பெரியதொரு நிலவியலையோ களத்தையோ காட்டுகிறான் எனில் அது அவனின் பிரதான நோக்கமாக இருக்காது. அதனுள் இருக்கும் நுண்மைகளை பதிவு செய்யும் போதே அவனின் நோக்கம் வெற்றியடைகிறது. அந்த படைப்பு இலக்கியமாகிறது என. இதையே இந்த காலம் சார்ந்து நாவலில் உணர்ந்து கொண்டிருந்தேன். காலத்தின் மூலம் எஸ்.ரா நாவலில் பதிவு செய்திருப்பது வேம்பலையின் ஊரல்ல. அங்கிருக்கும் மனிதர்களுள் இருக்கும் பலத்தையும் பலவீனத்தையும். இரண்டு காலத்திற்கு இடையே சில வருடங்கள் அடைக்கப்பட்டு இருக்கின்றன. அது சுவாரஸ்யமானதாகவே இருக்கிறது.

இந்நாவலில் எனக்கு பிடித்த கதாபாத்திரம் ரத்னாவதி தான். அவள் வேசியைப் போல சித்தரிக்கப்பட்டிருந்தாலும் அவளுக்குள் இருக்கும் காதலே எழுத்தில் முன்னால் வந்து தெரிகிறது. முன்னதில் இருக்கும் மொழி நடையும் நம்மை பிரமிக்க வைக்கிறது. இந்த கதாபாத்திரம் முடிந்திருக்கும் வகையில் தான் எனக்கு அதிகமாக பிடித்திருக்கிறது. வேம்பலை குருதியில் தோய்ந்த கதை கொண்ட ஊர் என்று சொல்லியிருந்தேன்.  நாகுவிடம் கதை ஆரம்பிக்கிறது. நாகுவிற்கு ஒரு மனைவி ஒரு துணைவி. இந்த இருவருடன் நாவல் முடிகிறது. அது முடிக்கப்பட்ட விதம் இன்னமும் இந்த வரலாறு முடிக்கப்படவில்லை என்பதை சொல்லியே செல்கிறது.

இந்நாவலைப் பற்றி சிறிதளவு சொல்லியிருந்தாலும் நான் தோற்றே இருக்கிறேன். நானூறு சொச்ச பக்கங்களை கொண்டிருக்கும் நாவல் தன்னுள்ளேயே கதையையும் சொல்லி செல்கிறது. அந்த சில வரிகளை மட்டும் சொல்லி செல்லலாம் என்னும் ஆசையில் இருக்கிறேன். அவையாவன

"வேம்பலையை விட்டு அவர்கள் வெளியேற நினைத்தாலும் ஊர் ஒரு சுழியைப் போல அவர்களை தன் வசம் இழுத்துக் கொண்டேயிருந்தது."

"மனிதர்களைப் போலவே வேம்பலைக்கும் ஒரு நாக்கு இருக்கின்றது போலும். அது தனக்கு விருப்பமானவர்களை ஊரை விட்டு எவ்வளவு தூரம் விலகிப் போனாலும் தேவைப்படும் நாளில் தன் நாவால் ஊரை நோக்கி இழுத்துக் கொள்வதும், ஊரிலிருப்பவர்களை தனது விருப்பம் கலைந்து போகும் போது வெளியேற்றி அனுப்பவும் தயங்கவேயில்லை"

"உலகம் மிக மர்மமானது. எண்ணிக்கையற்ற தெரியாதவைகளால் நிறைந்தது. நீனும் நானும் அருகாமையில் இருக்கும் இந்த நிமிஷம் என்றாவது ஒரு நாள் வியப்பாக உனக்கு தோன்றும். அப்போதுதான் இந்த நிமிஷத்த்தை நீ புரிந்து கொண்டிருக்கிறாய் என்று அர்த்தம்"

இந்த வரி நாவலில் இருவர் பேசிக் கொண்டிருந்தாலும் இதனுள் இருக்கும் அர்த்தமானது பல கதாபாத்திரங்கள் வேம்பலை சார்ந்து வைத்துக் கொண்டிருக்கும் உணர்ச்சிப்பெருக்குகளின் சாரமாக இருக்கின்றது. மேலும் நாவலில் ஒரு இடத்தில் பியானோ சார்ந்து ஒரு விஷயம் வருகிறது. அது நாவலில் ஒரே ஒரு வரியாக வந்து மறைந்துவிடுகிறது. இருந்தும் அது தரும் சுகம் கோடையில் கிடைக்கும் குளிர் காற்று போல இருக்கிறது. அந்த வரி

"சங்கீதம் பாடுபவர்களுக்காக இத்தாலியிலிருந்து கொண்டுவரப்பட்ட பியானோ ஒன்று சபையிலிருந்தது. பிரசங்கம் இல்லாத நாட்களின் மாலையில் பியானோவின் அருகாமையில் நின்று தொட்டுப் பார்ப்பான். ஏதோ மொழியில் எழுதப்பட்டிருந்த வரிகள். பியானோ வாசிப்பவரின் முக்காலி"

அறுபட்டு நிற்கும் இந்த வரியின் பொருளின் மீத உணர்வை இன்னமும் என் மனம் தேடிக் கொண்டிருக்கிறது. இதை மட்டுமல்லாமல் முடிவுறாத நாவலையும் வேம்பலையினின்று விலக முடியாத மனிதர்களையும் ரசித்தும் தேடியும் என்னுள்ளேயே அலைந்து கொண்டிருக்கிறேன். நாவலின் பின்னட்டையில் கூட ஒரு வரி வருகிறது

"வேம்பலையின் மீது படர்ந்திருப்பது யாராலும் தீர்க்க முடியாத சாபத்தின் துர்கனவு"

நாவலில் அக்கனவு ரசிக்கும் வண்ணம் அமையப்பெற்றிருக்கிறது. வாசிப்பில் நானும் அதே கனவை காண்கிறேன்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக