இதில் அர்த்தமிருக்கிறதா ?

லா.ச.ராவை வாசித்து எத்தனை நாட்களாகிவிட்டன ? 

நூல்களை வாங்கி வைத்ததோடு இருந்தேன். இன்னமும் அவரின் நூல் ஒன்று வாசிக்கப்படாமல் என் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கிறது. அதை அப்படியே இருக்க விடமாட்டேன். இருந்தும் இப்போது உறங்குகிறதே என்னும் ஆதங்கம் தான் குமுறிக் கொண்டிருக்கிறது.

இப்போது வாரம் முழுக்க கல்லூரி வேலைகள் இருப்பதால் தினம் ஒரு கட்டுரை ஒரு சிறுகதை என்னும் அளவிலேயே வாசித்து வருகிறேன். வார இறுதி நாளில் மட்டும் நாவல். சென்ற வாரம் மாதொருபாகன் வாசித்தேன். இன்று லா.ச.ரா வின் புத்ர நாவலை எடுத்தேன்.


நூலை வாங்கிய போதே வாசிக்க நினைத்தேன். ஆனால் இதனுள் இருந்த எட்டு பக்கங்கள் அச்சாகாமல் இருந்தன. இந்நிலையில் இதை மாற்றி பல காலம் தூங்க விட்டு இப்போது தான் வாசிக்கிறேன்.

லா.ச.ரா வாசிக்க வேண்டிய ஒரு எழுத்தாளர் தான். அகம் பேசும் விஷயங்களை அகம் மட்டுமே காணும் சித்திரங்களை மீமாயத் தோற்றங்களை சொற்களை வைத்து மட்டுமே விளையாடுபவர் லா.ச.ரா மட்டுமே. அவரின் எந்த புனைவை எடுத்தாலும் கதை கடுகளவு. ஆனால் எழுப்பும் கேள்விகள் சமுத்திரத்தை விட பெரிதானவை. 

இந்நாவலில் அவரின் பிற நாவல்களை விட சின்னதொரு மாற்றத்தை காண முடிகிறது. எல்லா நாவல்களிலும் ஆரம்பத்தில் தெளிவான கதையோட்டத்தை ஆரம்பித்து பின் எழுத்தின் புதிருக்குள் சிக்கி எழுத்தையே புதிராக்கி தந்து சென்று விடுவார். அவரிடமிருந்து மீள்வது நாவலின் கடைசியில் கடினமாக போய்விடும். இந்நாவலில் மாற்றம் என சொல்லியிருந்தேன். ஏதெனில் நாவலின் ஆரம்பத்தில் பித்தனிலை வகையான எழுத்துகளுக்கு சென்று விடுகிறார். கலக்கி விட்ட நீரின் சுழி போல ஆரம்பத்தில் சுழல் கொண்டு பின் நிதானமாகிறது.

இந்நாவலின் தலைப்பே என்னை அதிகமாக ஈர்த்தது. எதையோ சொல்ல நினைத்து சொல்லாமல் அறுபட்டு தொக்கி நிற்கும் ஸ்ருதியில் ஒரு தலைப்பு. என் துரதிருஷ்டம் இத்தனை காலம் கழித்து வாசிக்க வேண்டியதாய் இருக்கிறது.

இந்நாவல் ஒரு குடும்பத்தில் சுழல் கொண்ட மன அரசியலை பேசுகின்றது. நான் குறத்தி முடுக்கு நாவலை வாசித்து அக்காலத்தில் இப்படி ஒரு நாவல் வந்தது பெரும் சாதனையாக இருந்திருக்கக் கூடும் என வியந்தேன். இந்நாவலிலும் குடும்பவியல் சூழல், குறிப்பாக அக்காலத்திய சூழலை மிக அழகாக காட்டியிருக்கிறார்.

ஒரு திருமணம் சார்ந்து இருக்கும் அரசியலையும், அதன் பின் ஆண் எளிதாக சினத்தின் பக்கம் தன் மனதை சாய்த்துக் கொள்வதையும் அழகியலுடன் எழுதியிருக்கிறார். இந்நாவலின் பிரதானமே சினம் தான். மனம் செய்யும் ஆட்சி. இந்நாவலில் வரும் பாத்திரங்களின் மனம் சினத்தால் ஆளப்படுகிறது.

நாவலின் கதையே மேல் இருப்பது தான். நாவலில் மிக சிறப்பாக இருப்பது மொழி தான். கதை சொல்லியாக ஆரம்பிக்காமல் வார்த்தைகளால் ஆரம்பிக்கிறார். சில வார்த்தைகளை எழுதுகிறார். சில சம்பவங்களை அடுக்குகிறார். மீண்டும் சில வார்த்தைகள் மீண்டும் சில சம்பவங்கள். இடையில் சரடாய் நாவலின் மையக்கதை வந்து செல்கிறது. உரைநடையாக செல்லும் இடத்தினிடையில் கவிதைகளைப் போல எழுதி செல்கிறார். ஒன்றை அளிக்கிறேன்,

கேள்வி கேள்வியையே பெருக்கும்.
கேள்வியால் பயனென் ?
கேள்விகள் எண்ணில : பதில் ஒன்றே.
கேள்வியையும் பதிலையும் விழுங்கிய
ஒரே பதில்;
அதுவும் கேள்வியும் பதிலுடன்
மூழ்கிப் போன மோன இருளில்
உருவெடுக்கும் ஒளியை ஏன் கலைக்கிறாள் ?
ஏன் கலைக்கிறாள் ?

நாவல் புத்ர என்னும் வார்த்தையினுள்ளேயே அடங்கியிருக்கிறது. இந்த வார்த்தையை நடைமுறையில் இருவித பிரயோகங்களில் கேட்டிருக்கிறேன். ஒன்று புத்ர பாக்கியம். மற்றது புத்ர சோகம். இந்த இரண்டிலிருந்து தான் நாவல் தொடங்குகிறது. புத்ர என்பது குழந்தை என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் யார் அந்த குழந்தை என்னும் கேள்விக்கு இந்நாவல் அளிக்கும் பதில் அநாயாசமானது.

புத்ர என்பது மனித வாழ்வின் ஒரு நிலை. அதை எல்லோரும் அடைகிறார்கள். அடைபவரால் அதை புரிந்தோ உணர்ந்தோ கொள்ள முடியாது. கணவனுக்கு மனைவி ஏதோ ஒரு நேரத்தில் புத்ர. மனைவிக்கு கணவன் ஏதோ ஒரு கணத்தில் புத்ர. வாழ்வில் கையறு நிலை ஏற்பட்டு அப்போது மீண்டும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை ஏதேனும் ஒரு உயிர் ஊட்டுமாயின் அது புத்ர என்று நாவல் ஒவ்வொரு பக்கங்களிலும் பேசுகின்றது.

கணவனும் மனைவியும் பேசும் போது தர்க்கத்தை விளையாட்டாக செய்ய வேண்டி கணவன் இதில் அர்த்தமிருக்கிறதா அதில் அர்த்தமிருக்கிறதா என கேட்டுக் கொண்டே செல்கிறான். ஒரு சொல் அவனின் குணத்தை உணர்வை மாற்றி விடுகிறது. சொல்லே எல்லா இடத்திலும் அதிகாரம் செய்கின்றது. அதற்கு கேட்கப்படும் கேள்வியாகத் தான் இதைக் காண்கிறேன். ஒவ்வொரு சொல்லுக்கும் இக்கேள்வி பொருந்தும்.

இதை சொல்லும் போது அல்கெமி ஆஃப் டிசையர் நாவலில் வரும் மகாபாரத மேற்கோளே நினைவிற்கு வருகிறது. அபிமன்யு இறந்து போகிறான். அப்போது அர்ஜுனன் தான் அவனைக் காண வேண்டும் என கிருஷ்ணனிடம் கேட்கிறான். கிருஷ்ணனோ சரி என மேலோகத்திற்கு கூட்டிச் செல்கிறார். அங்கே அபிமன்யுவின் முன் அர்ஜுனன் அழுது கொண்டே இருக்கிறான். அபிமன்யு யார் நீங்கள் ஏன் அழுகிறீர்கள் என கேட்கிறான். அதிர்ச்சியடைந்த அர்ஜுனன் நான் உன் தந்தை என்கிறான். அதற்கு அவன் சொல்லும் பதில் இந்த ஜென்மத்தில் மட்டுமே நீ என் தந்தையாக இருந்தாய். அதற்கு முன் பல ஜென்மங்களில் நானே உன் தந்தையாக இருந்தேன் என. இது தான் இந்த நாவலுமோ என ஒரு சபலம் மனதை அரித்துக் கொண்டிருக்கிறது.

நாவலில் லா.ச.ரா வின் விளையாட்டை சிறிது பகிரலாம் என்றிருக்கிறேன். பதிமூன்றாம் அத்தியாயத்தில் ஒரு கவிதை இருக்கிறது. அதற்காகவேனும் இந்நாவலை வாசியுங்கள். அதை இங்கு பகிர மாட்டேன். 

மறக்க முயல்வதே மறதிக்கு மாற்று போலும்!!!

இந்த நிமிஷம் இந்த நிமிஷமோ என்று எந்த நிமிஷம் எந்த நிமிஷமோ ? எந்த நிமிஷமும் அந்த நிமிஷம், அந்தவரை என் சொந்தவரை, வரை வரையாய் வரையழிந்து நிமிஷம் நித்தியமானது விந்தையா ? வித்தையா ?

இன்று என்ன ?
அது புரிந்துவிட்டால் பிறகு 'இன்று' ஏது ?

சீதை குளித்த நெருப்பு.
நெருப்பின் புனிதம் சீதைக்கா
சீதையின் புனிதம் நெருப்புக்கா ?

எங்குமே தருணம் தங்க முடியாது, தங்க இடம் தேடி தருணம் தவிக்கும் வியப்பே தான் அதன் தவமோ ?

நாவலில் காமம் சார்ந்து ஒரு பத்தி. அங்கு எழுத்து ஆடும் விளையாட்டு ருத்ர தாண்டவம் என்று தான் சொல்ல வேண்டும். பத்து வரிகளுக்கும் மேல் நிறுத்தாமல் சென்று கொண்டிருக்கின்றன. எல்லாம் எழுத்தின் சுழிவுகளே. அதிலிருந்து ஒரு மூன்று வரியை மட்டும் தருகிறேன் பாருங்கள்,

...இருகூறு இருகூறு தான் என்று உணர்ந்த பிளவின் ஏக்கம் நெஞ்சைப் பிளந்து கொண்டு எங்களிருவரிடமிருந்து ஒரே சமயத்தில் கிளம்பிய கேவலில், இன்று, நாளை, இரவு, பகல் என வேளையைக் கீறும் நினைவு தன் குமிழி வெடித்து என்னுள் புகுந்த உயிர் வெள்ளத்தில் நான் மூழ்கிப் போய்,....

அவர் தன் வசம் இழந்து எழுதிய வரிகள் இவை என நினைக்கிறேன். இது போல் நாவலில் நிறைய விரவிக் கிடக்கின்றன. இத்தனை சொன்னாலும் கடைசியாய் ஒரு வார்த்தை அபிதா கொடுத்த நிறைவை அனுபவத்தை இந்நாவல் கொடுக்கவில்லை என்னும் விதத்தில் சிறு ஏமாற்றம் தான் என் வசம் மிஞ்சுகிறது.

பின் குறிப்பு : 
அவரின் நாவல்கள் சார்ந்த என் கட்டுரைகள் (க்ளிக்கி வாசிக்கலாம்)

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக