பெருமாள்முருகன் அவுட்!!!

முன் குறிப்பு :  இப்பதிவு பெருமள் முருகனை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அல்ல. சமீபத்தில் தி ஹிந்துவில் அவர் எழுதிய கைக்கிரிக்கெட்டைப் பற்றிய பதிவை வாசித்தேன். நான் அவ்விளையாட்டில் முன்னாள் சாம்பியன்(!). அந்த ரீதியில் அவர் சொல்லாத சில விஷயங்களை பகிரலாம் என்றிருக்கிறேன்.


 இப்போது என் பதிவு. அக்கட்டுரையில் அவர் குறிப்பிட்டிருக்கும் ஒரு விஷயம்

//நாமக்கல் மாவட்டத் தனியார் பள்ளி மாணவர்களிடையேதான் இந்த விளையாட்டு அவ்வளவு பிரபலம். //

கட்டுரை அருமை. சொல்லப்படாத விஷயமொன்றை அழகுற சொல்லியிருக்கிறார். ஆனால் சிறு பிழை. இந்த விளையாட்டு எல்லா பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பில் ஆரம்பிக்கப்படுகிறது. அவர்கள் பள்ளிப்பேருந்துகளிலும் ஆட்டோகளிலும் விளையாடுவதைக் கண்டு அவர்களை விட வயதில் சிறுவர்கள் விளையாட ஆரம்பிக்கிறார்கள்.

அரசு பள்ளிகளில் இருக்கும் மாணவர்கள் முக்கால்வாசிப்பேர் மரங்களில் ஏறுவது மைதானங்களில் ஆடுவது என்றிருக்கையில் மெட்ரிகுலேஷன் மாணவர்கள் இந்த கைக்கிரிக்கெட்டை அவர்களைக் காட்டிலும் அதிகம் விளையாடுகிறார்கள். அங்கேயும் இவ்விளையாட்டு வர்க்க முரண்பாடுகளை கொண்டிருக்கிறது.

மேலும் இது எல்லா ஊர்களிலும் விளையாடப்படுகிறது. ஆறு இலக்கங்கள் வரை வைத்து விளையாடினால் அது ஒரு நாள் போட்டி. ஆறிற்கு மேல் சென்று பத்து வரை வைத்து விளையாடினால் அது டெஸ்ட் போட்டி என்று எழுதப்படாத நியதியும் உண்டு. மேலும் ஐந்து இலக்கங்கள் வரை எல்லா இடங்களிலும் ஒன்று தான். அதற்கு மேல் ஊரைப்பொருத்து மாறுபடுகின்றது. சின்ன உதாரணம் எட்டு. இது மைதானத்தில் விளையாடும் க்ரிக்கெட்டில் வராது. என் ஊரான சேலத்தில் சுண்டு விரலையும் மோதிர விரலையும் மடக்கி மீத விரலை செங்குத்தாக, சுடுவது போல் நீட்டுவது. அதே திருவாரூரில் நடுவிரலை நீட்டினால் எட்டாம் எண்ணை குறிக்கின்றது.


மேலும் இதில் சில நுட்பங்கள் இருக்கின்றன. ஆறுக்கு ஆட்காட்டி விரல் என சரியாக சொல்லியிருக்கிறார். ஆனால் அதையே சாய்வாக போட்டால் ஒரு ரன். இது தெரியாமல் debut பேட்ஸ்மேன்கள் தோற்றுப்போவதுண்டு.

இது கல்லூரிகளிலும் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது. ஆனால் கல்லூரிகளில் மாணவர்களின் அபத்தங்களை இது காட்டுகின்றது. எப்படியெனில் பொறியியல் கல்லூரிகளில் கால்குலேட்டர்களையே அதிகம் உபயோகபடுத்துவதால் எளிதில் எடுக்கும் ரன்களை கணக்கு வைக்க முடியாமல் போய்விடுகின்றது. இதனால் தானோ என்னவோ வேலை வாய்ப்புகளுக்காக ஒவ்வொரு கல்லூரிகளிலும் கால்குலேட்டர்கள் இல்லாமல் கணக்கு போடுவது எப்படி என சொல்லிக் கொடுக்கிறார்கள்.

பள்ளி மாணவனே கைவிரல்களின் வேகத்திற்கு இணங்க ரன்களை கணக்கு செய்யக் கூடிய திறன் கொண்டவன். எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரே எண்ணை இடுபவர்கள் என்பதால் தோற்றுப்போகிறார்கள் என சொல்லியிருந்தார். மிகச் சரியான விஷயம். தோற்காமல் பேட்டிங் செய்பவனும், அவனே தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்துபவனாக இருப்பின் அவனுக்கு இருக்கும் கவனம் விஞ்ஞானியை விட நிச்சயம் அதிகமாக இருக்கும். அது கல்லூரிகளில் நிதர்சனமாய் மழுங்கடிக்கப்படும்! சேலத்தில் மாலை பள்ளி முடிந்து திரும்பி செல்லும் கூட்டம் நிரம்பிய மாணவர்கள் எல்லோரின் விரல்களும் விளையாடுவதை நன்றாக பார்க்கலாம்.

மைதானங்களில் நிகழும் விளையாட்டுகளைப் போலவே இதிலும் அரசியல்கள், சூழ்ச்சிகள் தந்திரங்கள் உண்டு. இருவரும் ஒரு விரல்களை நீட்ட வேண்டும். இல்லையெனில் அங்கே சண்டைகள் நிகழும். 

பள்ளிக்காலங்களில் மாணவர்களிடையே இருக்கும் போதையினுள் இதுவும் ஒன்று!

பின் குறிப்பு :  கேரளாவிலும் இந்த விளையாட்டு உள்ளது.

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

இருக்கும் போதைகள் போதாதென்று இது வேறு... ம்...

Post a comment

கருத்திடுக