வார்த்தை வியாபாரி நீ

கவிதைகளின் மேல் எனக்கிருக்கும் மரியாதை எப்போதும் பிற படைப்புகளைக் காட்டிலும் சற்று உயர்ந்ததாகவே இருக்கும். அதை சற்று விரிவாக சொல்ல ஆசைப்படுகிறேன். எனக்கு பிடித்த களம் யாதெனில் நாவல் தான். இருந்தும் என்னை வியக்க வைப்பது கவிதைகள். நாவலில் ஐநூறு பக்கங்களில் ஒரு நாவலாசிரியன் கொடுக்க நினைப்பதை கவிஞன் சில வார்த்தைகளினூடாகவே சொல்லிவிட்டு சென்றுவிடுகிறான். இது கவிஞனுக்குள் இருக்கும் பொறுப்பையும் அதிகப்படுத்துகிறது. எல்லா கவிதைகளிலும் இந்த எதிர்பார்ப்புகள் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.

ஏதெனத் தெரியாமல் தவழ்ந்து கொண்டிருக்கும் வாசகனின் ரசனைக்கு தன்னை நிரூபிக்க தேவையில்லை என்பதும் கவிஞர்களுக்குள் இருக்கும் ஆரோக்கியமான எண்ணம். வாசக்கனுக்கு என ஒரு கவிதை இயற்றப்படுகிறது எனும் போது அவை சேந்தியில் இருக்க வேண்டிய படைப்பாகிவிடுகிறது. கவிதை எங்கிருந்தோ வார்த்தைகளின் வழியாக கொடுக்கப்படும் ஒரு பரிசு. அங்கு தேர்வாகப்படும் வார்த்தைகள் கனமானவை. அவை சுமந்து செல்லும் உணர்வுகளும் அர்த்தங்களும் வாசகனின் புரிதலுக்கு சவால் புரியக் கூடியன.

தன்னை இயற்றியவனுக்கே ஆச்சர்யங்களையும் குழப்பங்களையும் கொடுக்கக் கூடியது கவிதைகள் தான். அவற்றுள் காணப்படும் படிமங்கள் பல ஆண்டுகளுக்கு, சமகாலத்திற்கேற்ற வண்ணங்களை தங்களுக்குள்ளேயே தீட்டக் கூடியனஅப்படி சமகாலத்தில் சமகாலத்திற்கேற்றவாறு வெளிவந்திருக்கும் ஒரு கவிதை தொகுப்புசாத்தான்களின் அந்தப்புரம்”.


இந்தப் பெயரே தன்னுள் ஒரு துய்ப்பினை வைத்துக் கொண்டிருக்கிறது. எப்படியெனில் சாத்தான் என்னும் குறியீடு எப்பேர்பட்டவர்களுக்கும் எதிர்த் தன்மையின் குறியீடு என்பது தெரியும். அந்தப்புரம் ஆதிகாலத்திலிருந்து பல தன்மைகளின் வெளிப்பாடாக வந்திருக்கிறது. பல வெளிப்படுகள் எப்படியெனில் ஆள்பவனுக்கு துய்ப்பு வேடிக்கை காண்பவனுக்கு பெண்களை ஒருவன் அடிமை படுத்துகிறான் என்னும் கோட்பாடு.

இங்கோ துய்ப்பின் அந்தப்புரமாகத் தான் இருக்கிறது. முதலிலேயே ஒரு விஷயத்தை சொல்லிவிடுகிறேன். இந்த நூல் முழுமையாக எனக்கு பிடித்ததா என தெரியவில்லை. காரணம் நிறைய கவிதைகள் குறிப்பாக ஹைக்கூ என்னும் வடிவில் இருக்கும் கவிதைகள் எல்லாம் க்ளீஷேக்களாக உள்ளன. ஒரு கவிதைக்கு இருக்க வேண்டிய பொறுப்புணர்ச்சியை மேலே சொன்னேன் அல்லவா அவற்றை நினைவு கூருங்கள். கவிதை சிறு சொதப்பல் கொண்டாலே வாசகனின் பிடியிலிருந்து தன்னை விடுவித்து கொள்கின்றன. இத்தொகுப்போ நிறைய சமகாலத்திற்கேற்ற முக்கிய கவிதைகளை கொண்டிருக்கின்றன.

உடல் அரசியல் என்னும் தளம் எழும் போதே நாம் பெண்களின் உடல் மீது ஆணின் இச்சை கொள்ளும் வேட்கைகளும் அவற்றிலிருந்து தப்பிக்க நினைக்கும் பெண்களையுமே பெருவாரியாக காண்கிறோம். துன்பம் பக்கம் சாயும் உடலே இலக்கியங்களில் உடல் அரசியலாகின்றன. துய்ப்பின் பக்கம் பெண்களின் உடல் எப்போதும் எழுத்தில் சாய்வதேயில்லை. நறுமுகை தேவி இத்தொகுப்பில் சாய்க்க முயற்சித்திருக்கிறார். இந்த ஒரு தன்மைக்காவே இந்நூலை நிச்சயம் வரவேற்க வேண்டும். இது நவீன கோட்பாடு அல்ல. ஆனால் நவீனம் நோக்கி செல்ல வேண்டிய முக்கியத்துவத்தை இந்நூலில் உள்ள கவிதைகள் உணர்த்துகின்றன.

குறுகிய வடிவ கவிதைகளிலேயே பிடித்த கவிதையொன்றை பாருங்கள். அக்கவிதையின் தலைப்பு பெருவெடிப்பு

பெருவெடிப்பின் தாபத்துக்குள்
எதேச்சையாய் விழுந்திட்ட
பறவையின் எச்சத்தில்
முளைவிட்ட சிறுகொடியெனத்
தடுமாறிப் பரவுகிறது
மிதந்தலையும் பெருங்காமம்

விஷ ஜந்து என்னுமொரு கவிதை. கவிதை எப்படி பிற இலக்கிய அமைப்புகளை விட காத்திரமாய் அமைகிறது என்பதற்கான சிறந்த உதாரணம் இக்கவிதை. காஃப்கா எழுதிய metamorphosis என்னும் நாவலின் கருவையே இதுவும் கொண்டிருக்கிறது. ஆனாலும் சொல்வதோ வேறு! பாருங்கள்,

நான் ஒரு விஷஜந்துவாக
மாறி வருவதை
மிகத் தாமதமாகத் தான் உணர்ந்தேன்
ஒருநாளில் என் உடலின் பக்கவாட்டுகளில்
செதில்கள் முளைத்தன
மேலும் சில நாட்களில்
தாடையின் கீழ்ப்புறமாக
கூரிய முட்களும்
குதத்தின் மேற்புறமாய் கொடுக்குகளும்
கைகால்களில் அச்சமூட்டும் நகங்களுமாய்
கோர உருவமொன்றை பெற்றுக் கொண்டிருந்தேன்
பிறரறிய கண்ணாடியில் பார்ப்பதை தவிர்த்தேன்
ஆனாலும் இவை எல்லாவற்றையும் விட
அதீத விஷத்துடன் என் நாக்கு நீண்டு
மிக நீண்டு வளரத் துவங்கியிருந்தது

இது போன்று நிறைய கவிதைகளை நம்மால் தொகுப்பில் காண முடிகிறது. மூன்று கவிதைகள் எனக்கு இத்தொகுப்பின் உச்சம் என தோன்றியது. அவற்றில் ஒன்றை மட்டும் பகிர்கிறேன். மீதி இரண்டின் பெயரை சொல்கிறேன் தொகுப்பில் வாசியுங்கள். ஒன்றை மட்டும் பகிர்வதான காரணம் அவற்றுள் ஊடாடியிருக்கும் கரு நகுலனை எனக்கு நினைவூட்டின. வார்த்தைகள் தான் எவ்வளவு சுமை கொண்டவை. அப்படிப்பட்ட அவ்வார்த்தைகளை சுமப்பவன் வியாபாரியாக இருக்கிறான். நிபுணனாக இருப்பினும் காலம் அவனை வியாபாரியாக ஆக்கிவிடுகிறது. அக்கவிதையின் பெயர் கூட வார்த்தை வியாபாரி தான். இக்கவிதை பகடியின் பார்பட்டதும் கூட.

விசித்தி மூட்டையொன்றை
சுமந்த வண்ணம் வீதியெங்கும் அலைகிறாய்
அகப்பட்டவரிடமெல்லாம் பிரித்துக் காட்டியபடி
வசீகர எண்ணங்களை விற்றுக் கொண்டிருக்கும்
வார்த்தை வியாபாரி நீ
யாரும் உட்புகா உன் தனிமை தாழினை
உடைத்து நடுநிசியைப் பகிர்ந்தளிக்கிறாய்
எனக்கு மட்டுமாய்
பின்னிரவில் வானவில் ஒன்றை வரவழைத்து
மூட்டைக்குள் இருக்கும் மது தோய்ந்த
வார்த்தைகளை அக்னிமேல் வீசி
யாகம் வளர்க்கத் துவங்குகிறாய்
மென்மொழி சுடரொன்று பற்றி எரிகிறது
உன்மத்தம் கொண்டபடி
பதினான்காம் நூற்றாண்டின் இளவரசனென
முழந்தாளோடு முத்தமுமிட்டு
உன் காதலைப் பகன்ற பொழுதினில்
வானவில்லுக்குள் வளர்சிதை மாற்றம்
மூட்டையோடு பயணிப்பது
உனக்கென்னவோ
இலகுவானதும் பாதுகாப்பானதுமாக இருக்க
நானோ பறவை இறகை இழுத்துச்
செல்லும் எறும்பாய்
உன் ஒற்றை வார்த்தையை இழுத்தபடி
தடுமாறி அலைந்த வண்ணமிருக்கிறேன்
இப்பிரபஞ்ச வெளியெங்கும்

இதைத் தவிர என்னை ஈர்த்த இரண்டு கவிதைகளின் தலைப்புகெட்டவார்த்தை, உயிர்த்தெழுதல்.

கவிதை சார்ந்து எழுதுவதில் கூட ஒரு கடினம் இருக்கிறது. சிறுகதை நாவல் என எழுதும் தருணங்களில் அதிலிருந்து சில வரிகளை எடுத்தாண்டு நம் அனுபவங்களை பகிரலாம். இங்கோ அப்படி செய்ய முடியவில்லை. கவிதை ஒவ்வொரு வரியும் தனக்கே உரிய சுயத்தை சுமந்து கொண்டு வருகிறது. அதிலிருந்து அவற்றை பிரிப்பது கடினமாக இருக்கிறது.

பெண்களின் எழுத்து திறன்களுக்கு சமூகமும் குடும்பவியல் சூழலும் ஒரு தடையாய் இருக்கிறது என சிலர் சொல்லி கேள்விபட்டிருக்கிறேன். அதையும் தாண்டி எழுதுபவர்கள் எழுத வேண்டியதை மறந்து இந்த ஒடுக்குதலையே பிரதானமாக்கி எழுதுகின்றனர். அது உண்மையான படைப்பு அல்ல என்பது என் தாழ்மையான கருத்து. புலம்பல்களை குறைத்து சுயத்தை மட்டுமே முன்னிருத்தும் நறுமுகை தேவியின் படைப்பு வரவேற்க வேண்டிய ஒரு தொகுப்பு.

சொல்லாத ஒரு விஷயம் : நறுமுகை தேவியிடம் நேரில் பலமுறை பேசியிருக்கிறேன். அவரின் பேச்சில் தெரியும் நகைச்சுவை உணர்வு எனக்கு எப்போதும் பிடிக்கும். அதை கவிதைகளிலும் காண முடிகிறது. நகைச்சுவையாய் அல்ல மென் நகையாய் நினைத்து நினைத்து அசை போடும் அளவிற்கு கவிதையில் வெளிவந்திருக்கிறது.

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

பலரின் பல கவிதை வரிகள் பல மணி நேரம் சிந்திக்க வைப்பதும் உண்மை... பதிவில் உள்ள வரிகளும் அருமை... நறுமுகை தேவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

Post a comment

கருத்திடுக