நானும் ஒரு குற்றவாளி

ஹிந்து நாளிதழில் சாரு நிவேதிதா பாஸ்கர் ஷக்தி மற்றும் அராத்து ஆகிய எழுத்தாளர்கள் இணைய எழுத்தாளர்கள் சார்ந்து கருத்தை வெளியிட்டு விவாதத்தை தொடங்கியிருக்கிறார்கள். என் சார்பிற்கு பதில் சொல்ல ஆசைபட்டேன். பதில் சற்று பெரிதானதால் இணையத்தில் பகிர்கிறேன்.


என் பதில் :நித்யகன்னி என்றொரு நாவல். எழுதியவர் எம்.வி.வெங்கட்ராம். அவர் தன் நாவலின் முன்னுரையில் சொல்வது கு..ரா மற்றும் அப்போதிருந்த சமகாலத்திய எழுத்தாளர்களுடனான கலந்துரையாடலில் இவரை மகாபாரத கதையில் வரும் பெண்களைப் பற்றி எழுத சொன்னார்கள் என்று. ஒருவர் கதையை மற்றொருவர் இலக்கிய ரீதியாக அணுகி சிலாகித்து விமர்சித்து இருந்திருக்கிறார்கள். இதையே எஸ்.ராமகிருஷ்ணனும் தன்னுடைய வாசகபர்வம் நூலில் எழுதியிருப்பார். நிறைய எழுத்தாளர்களுடனான தொடர்பே அவரை செழுமைபடுத்தியது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். அவர் பயண விரும்பியும் கூட. எஸ்.ராவைப் பற்றிய இன்னுமொரு செய்தியை கடைசியில் சொல்கிறேன்.

இப்போது அந்த நிலை சாத்தியமா ? எழுத்தாளர்களுடன் நினைத்த போது நம்மால் பேச முடியுமா ? இலக்கியம் சார்ந்த சந்தேகங்களை கேட்க முடியுமா ? பொதுவாக எந்த ஒரு இலக்கியகர்த்தாக்களிடம் சென்றாலும் நாம் வினவும் முதற் கேள்வி இலக்கியம் என்றால் என்ன என்பது தான். இதற்கு நானும் விதிவிலக்கல்ல.

ஒவ்வொரு ஊர்களிலும் இலக்கிய கூட்டங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. அதில் எத்தனை எழுத்தாளர்கள் உருவாகுகிறார்கள் ? எத்தனை கவிஞர்கள் உருவாகுகிறார்கள் ? அப்படியே உருவானாலும் எத்தனை பேருக்கு தெரிய வருகிறார்கள் ? எல்லா கேள்விக்கும் நம்மிடையே இருக்கும் பதில்கள் மங்கலானது.

சமகாலத்தில் இலக்கியத்தில் நிகழ்ந்திருக்கும் பெரிய மாற்றம் தான் இந்த இணையஊடகம். இணையத்தினால் யார் வேண்டுமெனினும் எழுத்தை பயிற்சி செய்யலாம் என்னும் நிலையை அடைந்திருக்கிறார்கள். குறித்துக் கொள்ளுங்கள் "பயிற்சி செய்யலாம்". அப்பயிற்சியும் முயற்சியும் முழுமையானதா சமகால தமிழுக்கு உகந்ததா என தீர்வு செய்திடவும் அவர்களுள் இருக்கும் கருத்தோ எழுத்து ஆளுமையோ சிறந்ததாக இருப்பின் உதவிட குருவாக மூத்த எழுத்தாளர்கள் தேவைப்படுகிறார்கள். பேராசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். கலந்துரையாடல்கள் தேவைப்படுகின்றன.

எல்லோராலும் எல்லா இணையதளத்தையும் வாசித்துவிட முடியாது. சிலர் இணையத்தில் இருக்கும் இலக்கிய பத்திரிக்கையை வாசிக்க வேண்டும் என நினைப்பார்கள். சில நாட்களில் கைவிட்டு விடுவார்கள். இது தான் யதார்த்தம். இதை நான் குறை கூற மாட்டேன். காரணம் இங்கே இருப்பவர்கள் யாரும் முழு நேர வாசகர்கள் இல்லை.

சில நல்ல இணையதளங்கள் மக்களின் கண்களில் சிக்காமல் சென்றுவிடுகின்றன. நாம் எல்லோரும் சில இணையத்தையே வாசித்துக் கொண்டிருக்கிறோம். இடைச்செருகலாய் ஒரு அறிமுகம் செய்ய ஆசைப்படுகிறேன்.

என்னுடைய வகுப்பில் பயிலும் நண்பன் அருண்குமார். அவனுக்கு இயக்குனர் ஆக ஆசை. நூல்கள் சிலவற்றையே பயின்றுள்ளான். எதையேனும் ஃபேஸ்புக்கில் கிறுக்கு என சொல்லியிருந்தேன். தமிழும் கைப்பழக்கம் தானே(ஒவ்வாத அர்த்தம் கொள்ளக் கூடாது). அவனோ இணையத்தை அலைபேசியில் உபயோகிப்பவன். அலைபேசி மெதுவாக வேலை செய்யக் கூடியது. சமீபத்தில் தான் மென்பொருளின் மூலம் ஒரு பதிவை இட்டான். அப்பதிவை அளிக்கிறேன்.

//ஆஸ்கார் விருது வென்ற Animated shortfilm !!!
Father and daughter by michael dudok de wit (2000)
அன்பு,பாசம்,பிரிவு,தேடல்,மரணம்,ஒற்றுமை,... இவை அனைத்தும் ஒன்றாய் கிடைக்கும் இடம் இந்த 8 நிமிட குறும்படம்...
இந்த உணர்வுகள் எல்லாம் நமக்கு இசையால் ஊட்டபட்டால் அது நமக்கு அறுசுவை உணவாகத்தான் அமையும் ..
தந்தையை பிரிந்த ஒரு மகளின் தேடல் படம் முழுவதும் பின்தொடர்கிறது.முதல் தேடல் முதல், கடைசி தேடல் வரை ஏமாற்றத்தில் முடிகிறது.இந்த தேடல் அவளின் ஒவ்வொரு பருவத்திலும் நிகழ்கின்றன.
இறுதியாய் அவள் முதியவள் ஆனதும் மீண்டும் தன் தந்தையை தொலைத்த இடத்திற்கு செல்கிறாள்.அது ஒரு ஏரி. பனிபடர்ந்த நிலையில் உள்ளது.அவள் அதன் வழியே சென்று தன் தந்தை சென்ற படகை காண்கிறாள்.அப்பொழுது தான் தன் தந்தை இறந்ததை உறுதி செய்கிறாள்.
அவள் மௌனிக்கும் ஒரு வினாடியில் கதிரவன் எழுகிறான். அவளுக்கு மகிழ்ச்சி. அங்கு அவளின் தந்தை.ஓடி சென்று அவரை அணைக்கும் போது அவளின் ஒவ்வொரு பருவமாய் பின் சென்று ஒரு குழந்தையாய் அவரை அணைக்கிறாள்.படம் இவ்வாறு முடிவுறுகிறது.

ஆனால் உண்மையில் அவளும் இறந்துவிடுகிறாள் என்பது இயக்குனரால் கதைக்குள் ஒளித்துவைக்கப்பட்ட உண்மை. அங்கு கதிரவன் முளைத்ததும் பனி உருகிவிடும் ... அவள் இறந்து விடுவாள்... அவள் பிறவிப் பயனான தந்தையின் நினைவிடத்தில் இறந்து விடுவாள்... இங்கு தான் படத்தின் பெயர் மிளிர்கிறது 'Father and daughter'//

இதை பகிர்ந்தமையின் காரணம் ஒன்று தான். எழுத்தை அதிகம் வாசித்திராத ஒருவனால் இவ்வளவு சரளமாக எழுத முடியும் போது வாசித்து வழிநடத்த சான்றோர் இருந்தால் எப்படி இருக்கும் ? இது சர்ச்சைக் குரியதும் கூட. என்னைப் போன்ற ஆரம்பத்திற்கும் பின்னால் இருக்கும் எழுத நினைப்பவனுக்கு நிச்சயம் ஒரு குரு தேவை. குரு என்னும் இடத்திலோ இப்போது அநேக இடங்களில் அதிகாரம் குடி கொண்டுள்ளது. ஆக சாரு நிவேதிதா சொல்வது போல வாசிப்பையே குருவாக வரித்துக் கொள்வது சாலச் சிறந்தது.

எஸ்.ரா சாரு ஜெமோ தமிழவன் கு.பா.ரா தி.ஜா போன்றவர்களின் காலத்தை நினைக்கையில் பொறாமை ஏற்படுகிறது. இருந்தும் மறைமுகமாக வாசிப்பையே என் குருவாக்கிக் கொண்டிருக்கிறேன். அதுவே நிரந்தரமானது. பாகுபாடு காணாதது. மேலும் வாசித்தல் மட்டுமே இலக்கியத்தை தரவல்லது அல்ல. ஐம்புலனும்  இலக்கியத்துனுள் முக்கியத்துவம் பெறுகின்றது. அனைத்தையும் கூறாக்க இக்கலிகாலத்தில் நாமாக பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நூல்பல கற்பதும் சான்றோர் சொல் கேட்பதுமே ஞானத்தை தரவல்லது. நம்மை பகுத்தறியத் தூண்டுவது. தேடத் தூண்டும் புலன் கருவிகள். அப்போதே நம்முள் இருக்கும் இலக்கியம் வெளிவரும்.

சான்றோர் சொல் கேட்பதறிது என சொன்னதால் இந்த லிங்கை பகிர்கிறேன். பயன் பெற்றுக் கொள்ளுங்கள் - http://www.sramakrishnan.com/?p=3768

கடைசியாக இவ்விவாதத்தின் அடிநாதமாக இருக்கும் விஷயத்தின் படி நானும் ஒரு குற்றவாளியே. நாவலாசிரியன் ஆவது என் கனவாக இருப்பினும் நான் பெருமளவு பிழைகளை என் முதல் நாவலில் இழைத்துவிட்டேன். வாசிப்பினூடே பிராயச்சித்தம் தேடுகிறேன். நிச்சயம் மோட்சம் உண்டு என்று மட்டும் தெளிவாகிறது. இப்போது ஆண்டன் செகாவின் எழுத்துகளை ஆங்கிலத்தில் வாசித்துக் கொண்டிருக்கிறேன். எனை கேட்காமலேயே நான் கொள்ள வேண்டிய பயணத்தை இன்னமும் அதிகமாக்கிவிடுகிறார். அவ்வளாவு எளிமையன இலக்கியம். எளிமையான வார்த்தை அமைப்பு. ஆனால் ஒவ்வொரு சிறுகதையும் ஆழமான கரு கொண்டவை.

எழுத்து எப்போதும் எளிமையானது அல்ல.

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

S.டினேஷ்சாந்த் said...

அன்டன் செக்கோவ் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர்.சின்னச் சின்ன வார்த்தைகளில் உணர்வோட்டங்களையும் சொல்ல வந்த விடயங்களையும் தெளிவாகவும் சொல்லும் அவர் பாணி எனக்கு மிகவும் பிடிக்கும்.

Post a comment

கருத்திடுக