சுயம் பேசும் குறுங்கதைகள்

ஒரு சின்ன சுயபுலம்பலுடன் ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன். சிறுகதை முகாமுடன் சில காலம் எஸ்.ராவை என் கிமு பக்கங்களினின்று ஒதுக்கி வைத்துவிட்டு வேறு ஏதேனும் எழுதலாம் என்றிருந்தேன். இந்நிலையில் என்னுடைய கிமு பக்கங்களின் பின்புறம் சென்று பார்த்தால் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல உணர்கிறேன். முகாம் சார்ந்து முதல் பதிவை இடும் போது நூறுக்கும் மேற்பட்டோர் வாசித்தனர். சிலர் இரண்டாவதற்கு சென்றனர். அதிலிருந்து சிலர் அடுத்ததற்கு அதிலிருந்து சிலர் அடுத்ததற்கு என்று ஆறாம் பதிவிற்கு இருபது புண்ணியவான்கள் வந்திருக்கின்றனர். எனக்கு இருக்கும் சந்தேகம் ஒன்று தான்
சிறுகதை முகாம் சார்ந்து எழுதியது நன்றாக இல்லையா ?
நான் எழுதியது பிடிக்கவில்லையா ?
பதிவினுள் இருக்கும் கருத்துகளுள் முரணா ?
நான் ஆசைப்படுவது தவறா ?

தாராளமாக பதிலை கொடுக்கலாம்.

***
சிறுகதை முகாமின் போது எஸ்.ராமகிருஷ்ணனிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்று இருபுத்தகம் வாங்கினேன். அதில் ஒன்றை சார்ந்தே இப்போது எழுத இருக்கிறேன். சில காலம் கடந்து தமிழில் நூல் வடிவில் வருவது போல உணர்கிறேன். அப்படியொரு நூல் தான் "நகுலன் வீட்டில் யாருமில்லை"


இதில் ஐம்பது குறுங்கதைகள் இருக்கின்றன. இதை fables and parables என்று பிரிக்கிறார். இரண்டையும் மேலோட்டமாக என்ன என்று பார்ப்போம்.

Fables - இது நம் ஊரில் இருக்கும் பஞ்சதந்திர கதைகளைப் போன்று. இக்கதைகாளில் மிருகங்கள், மரங்கள், உயிரற்ற விஷயங்கள் மனித உணர்வு பெற்று பேசுவது போல இருப்பது. இந்த கதைகளை சொல்லும் போதே உலகம் முழுக்க பிரசித்தியாக இருக்கும் ஈசாப் கதைகள் நினைவினுள் எழ வேண்டும்.

Parables - இது முன்னவற்றிலிருந்து மாறுபட்டது. எப்படியெனில் அறத்தை சொல்லும் கதைகள் என்று கொள்ளலாம். A moralized fable. இதற்கு கிறிஸ்து கதைகளை எடுத்துக்காட்டாய் கொள்ளலாம். இந்த இரண்டையும் அவர் இந்த தொகுப்பில் செய்திருக்கிறார். சில கதைகள் நீளமாக இருப்பினும் எக்கதையும் சலிப்பை தருவதில்லை. சிறுகதை தரக் கூடிய எல்லா உணர்வையும் இத்தொகுப்பும் தருகின்றன.

மாயா யதார்த்த இலக்கிய உலகம் உருவாவதற்கு இந்த எழுத்து முறையே முன்னோடியாக இருந்திருக்கக் கூடும் என்று சந்தேகம் எழுகிறது. மேலும் இவரின் கதைகள் யாவும் வாழ்வியல் அறத்திற்க்கு தேவையான எல்லா விஷயத்தையும் கேள்வியாக எழுப்பாமல் தெளிவாக வாதமாக முன்வைத்து செல்கிறார். ஆனால் அவை எல்லாம் புனைவின் ரூபத்தில் இருக்கின்றன.

மனிதனுக்கு முக்கியமான விஷயம் சுயமே என்று அநேக கதைகளில் சொல்லி செல்கிறார். நகுலன் வீட்டில் யாருமில்லை என்றொரு குறுங்கதை. சிறுகதை முகாமில் நகுலன் சார்ந்து என்ன சொல்லியிருந்தாரோ அவை சிறு மாற்றத்துடன் கதையிலும் இருந்தது. ஆனால் கதையின் கடைசியில் ஒரு வரி வருகிறது

"பாவம் பூனைகள். மனிதர்களோடு சேர்ந்து அதன் சுபாவம் மாறிப் போயிருக்கிறது. வீடு இல்லாத பூனைகளின் துக்கம் புரிந்து கொள்ள முடியாதது. உண்மையில் பூனையாக இருப்பது மகிழ்ச்சியானதில்லை"

இதுவும் மதுக்கோப்பைகள் என்னும் கதையும் ஒன்றோ எனத் தோன்றுகிறது. அதில் இரு மதுக்கோப்பைகள் எதற்காக மனிதர்கள் குடிக்கிறார்கள் என்று விவாதித்துக் கொண்டிருக்கின்றன. ஒன்று சந்தோஷத்தை பகிர என்று பேசுகிறது. மற்றொன்று தனிமையை போக்க என்று சொல்கிறது. கடைசியில் இரண்டும் சேர்ந்து சொல்கிறது 

"தனிமை மிக பயங்கரமானது"

நாம் செய்ய முடியா காரியங்களுக்கு ஏதேனும் சாக்குகளை சொல்லிக் கொண்டே இருக்கிறோம். சாக்குகளே நிரந்தரமானவை அன்று. எதையும் எதிர்க்க முடியாமல் நாம் நமக்குள்ளே கொள்ளும் கற்பிதங்கள். இருந்தாலும் நாம் நம் சுயத்தைஉணர்ந்து கொண்டே இருக்கிறோம். அதே நேரம் அடுத்தவர்களின் சுயம் எப்படி அவதிப்படுகிறது என்பதை நம்முடைய சுயத்துடன் ஒப்பிட்டு அறிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டே இருக்கிறோம். இதை அங்கு மட்டுமன்றி நிறைய கதைகளில் சொல்கிறார்.

இந்த சுயத்தை வைத்து ஆசிரியர் தர்க்கமும் செய்கிறார். "நேற்று சம்பத்தின் நாவலில் வரும் தினகரனை வழியில் பார்த்தேன்" என்னும் குறுங்கதையில் நாயகன் தன் சுயத்தின் மீது தானே சந்தேகம் கொள்கிறான். நாவல்கள் அதிகம் வாசிப்பவன். அப்படிப்பட்டவன் ஒருவனை சந்திக்கிறான். இருவரும் ஒரு நாவலை வாசித்து இருக்கின்றனர். அந்நாவலின் கதாபாத்திரங்களைக் கொண்டு ஒருவன் நாயகனை ஒப்பிடுகிறான். நாயகனுக்கு அவன் சுயத்தின் மேலேயே சந்தேகம் வருகிறது. அந்த ஒருவன் கேட்கிறான், சம்பத் என்னும் பெயரை உபயோகித்திருந்தமையால் "சம்பத் உங்களைப் பொறுத்தவரை ஒரு சொல் தான் இல்லையா" என்று. இப்போது தன் ரசனை சார்ந்தும் சந்தேகம் எழுகிறது. ரசனையும் சுயம் சார்ந்து தான் என்பதால் மீள முடியா குழப்ப குவியலுக்குள் இறங்கிவிடுகிறான் நாயகன். இதை மிக அழகாக குழப்பத்தை சிறிதும் தெளிவுபடுத்தாமல் எழுதியிருக்கிறார்.

சுயபுலம்பல் என்று அங்கும் ஒரு கதை. அது இருப்பை அர்த்தப்படுத்துகின்றது. எப்படியெனில் ஒரு சிகரெட்டும் தீக்குச்சியும் பேசுகின்றது. தீக்குச்சிக்கு தான் அழிவது ஒரு கலை என்று சொல்கிறது. சிகரெட்டோ பலரின் உணர்ச்சி குவியலுடன் தன் அர்த்தம் உணர்த்தபட்டு பாரத்துடன் இறக்கிறேன் என்கிறது. கடைசியில் இரண்டும் சொல்லும் விஷயமோ
"சாவில் தான் இருப்பு அர்த்தம் பெறுகிறது போலும்"

சொல்லிக் கொண்டிருந்தால் எல்லா கதைகளையும் நிச்சயம் சொல்ல வேண்டிவரும். ஆதலால் இதை குறும்பதிவாய் முடித்துக் கொள்ள விரும்புகிறேன். ஆரம்பத்தில் சொன்ன சுயபுலம்பலும் இத்தொகுப்பு அளித்த உணர்வுடன் எனக்குள் இணைகிறது. சுயத்தின் பல்வேறு உருவங்களை படிமங்களை தெளிவாக தர்க்கமாக குழப்பமாக எல்லா வகையிலுமாக இத்தொகுப்பு பேசுகின்றது.

தலைப்பு நகுலன் வீட்டில் யாருமில்லை என்பது மிக பொருத்தமான தலைப்பு. நகுலன் முழுக்க முழுக்க தனிமை விரும்பி. இந்நிலையில் அவர் இல்லாத வீட்டை நினைத்து பார்க்க முடியுமா ? எல்லா பொருள்களிலும் தன்னை பார்க்க விரும்பிய ஒரு மனிதன் இருந்த வீட்டை மட்டும் பார்ப்பது எவ்வளவு அலாதியான ஒன்று. அங்கும் அம்மனிதன் இருந்து கொண்டு தானிருக்கிறான். ஒருவேளை நகுலன் இறந்த பிறகு அவரைத் தவிர அவர் வீட்டில் யாரும் இல்லாமல் இருக்கலாம். இதைத் தான் அக்குறிப்பிட்ட குறுங்கதையை வாசிக்கும் போதும் உணர்ந்தேன்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக