செகாவுடன் நடைமுறையில் பேசுகிறேன்

பள்ளிக்காலங்களில் துணைப்பாடங்கள் என்னும் பகுதி ஒன்று உண்டு. பள்ளிகளோ பொறியியலாளர்களின் உற்பத்திக் கூடமாக இயங்குவதால் இந்த துணைப்பாடங்கள் முழுதும் வாசிக்கப்படாமல் வெறுமனே கதையை சொல்லிப் போதலாக அமைந்துவிடுகிறது. இதனால் கதையை எல்லோரும் அறிந்து கொள்கிறார்கள், அதே எழுத்தாளர்கள் தங்கள் கதையில் வைத்திருக்கும் எழுத்தின் வீரியம் அழகியல் தன்மைகள் அது சார்ந்து வாசிக்கும் போது தனி மனிதனுக்கு எழும்ப்பபடும் உணர்வுகள் எல்லாம் மாயமாக மறைக்கப்படுகின்றன.

பொறியியல் படிப்பதால் இந்தப் புலம்பல்களை நானும் சில தருணங்களில் கொள்கிறேன். ஆங்கிலத்தில் வந்த துணைப்பாட கதைகள் எல்லாவற்றையுமே வெறுத்தேன். ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீஸர், மெர்சண்ட் ஆஃப் வெனீஸ் கதைகளும் வந்திருக்கின்றன. ஒரு வார்த்தையுமே அப்போது புரிந்ததில்லை. ஆனால் அறிய ஆசைபட்டேன். ஆசிரியரோ வாசித்து உரை புத்தகத்தை வாசிக்க சொல்லிவிடுவார். சேக்ஸ்பியரையே உள்ளூர் உரையாசிரியர்கள் வெற்றி காணும் தருணமது.

எனக்கு சிறு வயதிலிருந்து கதைகள் பிடிக்கும் என்பதால் புத்தகத்தை வாங்கும் போது தமிழ் மற்றும் ஆங்கில நூல்களை வாசித்து முடித்துவிடுவேன். சில கதைகள் எனக்கு பிடிக்காது அல்லது மிக நீளமாக போராக இருக்கும். அதை நான் எனக்குள் சிலாகித்தது இல்லை. ஜாலியாக குழந்தைகளுக்கொப்ப இருக்கும் கதைகளை மட்டுமே ரசிப்பேன். ஷெர்லாக் ஹோம்ஸை நானாக வாசித்த போது புரியவில்லை. அகராதி பயன்படுத்த சோம்பேறித்தனம் என்பது தனி விஷயம்! அதே கதையை ஆசிரியர் நடத்திய போது திகிலின் உச்சத்தில் இருந்தேன்.

நான் இங்கே ஆங்கிலத்தை மட்டுமே பேச விழைகிறேன். இப்போது ஆங்கில வழிக்கல்வியை பயின்று வந்த மாணவர்களால் கூட ஆங்கிலத்தை சரளமாக பேச முடிவதில்லை. அதற்கான மூலக்காரணம் இது போன்று ஆசிரியர்களே ரசிக்காமல் இருப்பது தான். நான் என் இணையத்தில் ஒரு நூலை வாசித்து அது சார்ந்து எழுதுகிறேன் எனில் எனக்குள் இருக்கும் ரசனை எழுத வைக்கிறது என்பதே பொருள். நான் எதையெல்லாம் எழுதுகிறேனோ அதை மட்டுமே வாசிக்கிறேன் என்பதல்ல அர்த்தம். ஆசியர்களுள் ரசனை இருந்தால் மட்டுமே ஆங்கிலம் மாணவர்களுள் எளிமையாக ரசனை மிகுந்த மொழியாக ஊடுருவும்.

இந்த நீண்ட நெடுங் பத்தி கூட நான் என் இணையத்தில் அறிமுகம் செய்ய இருக்கும் ஒரு நூலிற்கான முன்னோட்டம் தான். ஆங்கிலத்தில் நான் சில நூல்களை வாசித்து எழுதியிருக்கிறேன். அவற்றில் கிட்டதட்ட எல்லா நூல்களையும் அகராதியை நம்பியே வாசித்து வந்தேன். எனக்குள்ளே சந்தேகம் ஒன்று கூட எழுந்ததுண்டு. அஃதாவது அசோகமித்திரனை வாசிக்க அகராதி தேவையில்லை. சாமான்யமாக இலக்கியம் ஆர்வம் அற்ற மனிதன் வாசித்தால் கூட முழுக்கதையையும் புரிந்து கொள்ள முடியும். அது போல மேம்போக்கான ஆங்கிலத்தை அறிந்து கொண்டவனால் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இலக்கியமே இல்லையா என்பதே அது.

சமீப காலத்தில் நான் இணையத்திலேயே பிராய்ந்து பிராய்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். நூல்களை வாங்காமலேயே ஞானவான் ஆவதற்கு உகந்த ஒரு பொருள் கணினியும் அதன் இணையமும். இப்போது எனக்கு என் கணினி கூடுதல் பொக்கிஷமாய் இருக்கிறது. அந்த இணையத்தில் பிராயும் போது தான் இந்த லிங்க் எனக்கு கிடைத்தது. இது அடிலெய்டு பல்கலைகழகத்தில் இருக்கும் இணையதள மின் நூலகம். பயன் பெற்றுக் கொள்பவர்கள் பாக்கியவான்களே - http://ebooks.adelaide.edu.au/

இப்போது வேறு ஒரு விஷயத்தை சொல்கிறேன் என் நண்பர் சாம் நாதன் ஆண்டன் செகாவைப் பற்றி கூறினார். அவருடைய நாவல் ஒன்றை வாசித்து, தமிழில் வாசித்து அதன் மொழியும் கருவும் இருக்கும் விஷயத்தை அதிகமாக பகிர்ந்து கொண்டிருந்தார். அதைக் கேட்டாலே வாசிக்கத் தூண்டும் அளவு இருந்தது. இந்த நிலையில் தான் மேலே இடப்பட்ட லிங்கும் எனக்கு கிடைத்தது.

ஆண்டன் செகாவ் சிறுகதை இலக்கியத்தில் மலை போல எழுதி குவித்திருக்கிறார். நாவல் என்பது அவரின் எழுத்துகளில் குறைவே. யோசிக்கும் போது தான் தெரிந்தது பன்னிரெண்டாவது ஆங்கில துணைப்பாடத்தில் அவருடைய சிறுகதை ஒன்றும் வந்திருந்தது என்று. காலம் கடந்து புத்தகமும் என் வீட்டை கடந்து விட்டது!!

மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் ஆண்டன் செகாவின் பகுதியில் சிறுகதைகள் தனித்தனியாகவும் தொகுதிகளாகவும் இருக்கின்றன. நான் தொகுதி ஒன்றை கிண்டிலில் பதிவிறக்கம் செய்தேன். அந்த தொகுதி கான்ஸ்டன்ஸ் கார்னட் மொழிபெயர்த்த The Witch and the ther stories.நாவல் வாசிக்க தோதாக எனக்கு நேரம் கிடைப்பதில்லை என்பதால் தினம் சிறுகதைகளை வாசித்துக் கொண்டு வருகிறேன். அப்படி பல நாட்களாக வாசித்தது தான் இந்த தொகுப்பு. வாசிப்பில் கிடைத்த இன்பம் என்னை எங்கோ தூக்கிச் சென்றது. நான் பல கதைகளை தாண்டும் வரையில் அகராதியை அணுகவேயில்லை. அவ்வளவு எளிமையான வார்த்தைகள். அவர் ருஷ்ய இலக்கியவாதி. அந்த மொழியிலும் இவ்வளவு எளிமையாகவே இருந்ததா என்றே அறிய ஆசைப்படுகிறேன்.

அவர் எடுத்துக் கொள்ளும் கருவும் நீளமான புரட்சி ஏற்படுத்தக் கூடிய கருவாக இல்லை. மாறாக மனித வாழ்வில் ஊடாடியிருக்கும் நுண்ணுணர்வுகளை அவர் வெளிச்சம் போட்டு பெரிதாக்கி காட்டியிருக்கிறார். இத்தொகுப்பில் பதினைந்து கதைகள் இருக்கின்றன. பதினைந்தையும் ஒரொரு வரிகளில் சொல்லிவிடலாம். அதை நீட்டி முழக்கி கொடுத்திருந்தாலும் சுவாரஸ்யம் குன்றாமல் கொடுத்திருப்பதே செகாவின் உச்சம். (செகாவின் எழுத்தை வாசித்தே ஆக வேண்டும் என்று சாரு சொன்னதாகவும் நினைவு வந்து செல்கிறது!)

இந்தத் தொகுதியில் அதிகம் விவசாயிகள் தினக்கூலிகள் தபால்காரர்கள் வருகிறார்கள். பொருளாதார ரீதியில் நலிவடைந்திருக்கும் மனிதர்களினுள்ளே இருக்கும் கொண்டாட்டங்கள் மற்றும் அவர்களின் உள்ளார்ந்த வலிகளையே இவரின் எழுத்துகள் பெரிதாக்குகின்றது.

அன்றாடம் நாம் பார்க்கும் மனிதர்களைக் கண்டு, குறிப்பாக தினக்கூலி போன்றவர்களைக் கண்டு பச்சாதாபம் கொண்டதுண்டு. இதை சொல்லும் போது இன்று கல்லூரியில் நான் கண்ட ஒன்றும் நினைவிற்கு வருகிறது. ஒரு வயதானபாட்டி. மதியம் மணி இரண்டரையை தொட்டுக் கொண்டிருந்தது. வெயில் உச்சி மண்டை பிளக்கும் போது புற்களின் மீது அமர்ந்து காய்ந்து நெடிந்து வளர்ந்திருந்த புற்களை தேடிப்பிடித்து ஒவ்வொன்றாக பறித்துக் கொண்டிருந்தார். அவரின் களைப்பு அவரின் முகத்தில் வழிந்து கொண்டிருந்த வியர்வையை வைத்து கண்டு பிடித்துவிடலாம். அவரைப் பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை. காரணம் என்னை அவரின் இருத்தல் பஞ்சு போன்று மென்மை ஆக்கிவிடுகின்றது. அழுகை வருகின்றது.

செகாவின் கதையை அனுபவத்தால் சொல்ல வேண்டுமெனில் இன்னுமொரு எடுத்துக்காட்டை சொல்ல ஆசைப்படுகிறேன். நான் தங்கியிருக்கும் ஆண்கள் விடுதியில் சில காலம் முன்பு ஒரு கான்ட்ராக்டர் இருந்தார். அவருக்கு கீழ் குள்ளமான மனிதர் ஒருவர் வேலை பார்த்தார். அவர் தான் சாம்பார் ஊற்றுவார். அவரிடம் சாம்பார் வாங்க வரும் போது பேச்சினாலேயே வாங்குபவர்களின் முகத்தில் சிரிப்பை வரவழைத்துவிடுவார். அந்த சாப்பாடு சரியில்லை என்று போராடி மாற்றிவிட்டார்கள் விடுதியில் இருக்கும் மாணவர்கள். ஆண்கள் விடுதியிலிருந்து மட்டும் அவர்கள் வெளி சென்றார்கள். கல்லூரியில் இருக்கும் கேண்டீனில் அவர்கள் தான் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில் அந்த குள்ள மனிதர் சம்பளம் போதவில்லை என்று வேலையை விட்டு சென்றுவிட்டார்.

எங்கள் கல்லூரியிலிருந்து மூன்று கி.மீ தள்ளி கோவை-பாலக்காடு புறவழிச்சாலை. அங்கே ஒரு ஹோட்டல். அங்கு வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அவரையும் மதியமே கண்டேன். அவருடைய வேலை என்ன தெரியுமா ? கைவசம் ஹோட்டல் என்னும் போர்டு ஒன்றை பிடித்து கடந்து செல்லும் வண்டிகளின் கவனத்தை ஈர்க்க வேண்டும். மதிய நேரத்தில் எட்டிமடை வந்தால் அவரை நிச்சயம் காண முடியும்.

மேலே சொன்ன இரு கடும் உழைப்புகளையும் கண்டு பச்சாதாபம் கொண்டு சிறுகதையோ நாவலோ எழுதிவிடலாம். செகாவ் செய்யும் விஷயமோ புறச் செயல்களை உழைப்பு என்னும் பெயரில் சுரண்டப்படும் விஷயத்தை சிறியதாக்கி அவர்களுக்குள் இருக்கும் ஆசை கோபம் அந்த வேலை செய்வதற்கு அவர்களுக்குள் இருக்கும் காரணம் போன்றவற்றை பெரிதாக்குகிறார்.

செகாவின் கதைகள் வாசித்து யாதொரு மனிதர்களைக் கண்டாலும் அவர்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்று தோன்ற வைக்கிறது. மனிதர்களை வார்த்தைகளாலும் விவரிக்காமல் அவர்களுக்குள் நிகழும் வசனங்களாலும் பகுப்பாய்கிறார். 

witch என்னும் கதையில் மனைவியை சந்தேகம் கொள்கிறான் கணவன். பனிக்கொதுங்கும் மனிதர்களுடன் தன் மனையாளுக்கு தொடர்பு உள்ளதோ என்று ஐயமுறுகிறான். இது தான் கதை ஆனால் வாசியுங்கள் வேகமும் வசனமும் அவ்வளவு இனிமையாக இருக்கும்.

மேலும் இன்னுமொரு விஷயத்தை தன் கதைகளில் செகாவ் வைக்கிறார். அது ஒப்பீடு. சமூகத்தில் காலங்காலமாக இருவேறு நிலைகள் நிலைத்தே வருகின்றன. இதை  diabolical என்கின்றனர். இந்த வார்த்தையை நிர்மலிடம் தான் தெரிந்து கொண்டேன். இந்த தராதரம் மனிதனை சமூகத்தின் பார்வையில் பிரித்து வைக்கப் பயன்படுகிறதே ஒழிய மனத்தால் இருவரும் ஒரே ரக வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதை தன் கதைகளில் சொல்கிறார். அதற்கு சிறந்த உதாரணம் இத்தொகுப்பில் இருக்கும் The new villa என்னும் கதை.

வார்த்தைகளை மேற்கோள்காட்டி ஒவ்வொரு கதைகளையும் சொல்ல வேண்டுமெனின் அது மிக நீள்பதிவாக மாற வேண்டிவரும். இந்த தொகுதியை பொறுத்தமட்டில் நான் மேலே சொன்னதைப் போன்ற நிறைய கதைகளை வாசகனால் காண முடியும்.

ஆண்டன் செகாவ் எழுத முனைபவர்கள் எல்லோரும் வாசிக்க வேண்டிய ஒரு எழுத்துலகமே. அவர் காட்டும் எளிமை அதிர்ச்சியாக இருக்கிறது. இன்னமும் வாசிக்க ஆசைப்படுகிறேன். கடைசியாக இப்பதிவு ஆண்டன் செகாவாக மட்டும் இருக்க ஆசைபட்டேன். அப்படி இல்லை என்பதால் பொறுத்தருள்க.

பின் குறிப்பு : வரும் ஞாயிறு எஸ்.ராமகிருஷ்ணன் சென்னையில் நிகழ்த்தவிருக்கும் சிறுகதை முகாமிற்கு செல்ல இருக்கிறேன். அங்கு வருவதற்கு முன் வாசித்துவிட்டு வாருங்கள் விவாதிப்போம் என்று பன்னிரெண்டு கதைகளை கொடுத்திருக்கிறார். அது பின் வரும் லிங்கில் உள்ளது. பன்னிரெண்டும் வாசிக்க வேண்டியவை. முகாம் சென்று அது சார்ந்த, இக்கதைகள் சார்ந்த அறிந்த மற்றும் சுய கருத்தையும் நிச்சயம் பகிர்வேன்.

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

இணைப்பிற்கு நன்றி...

Post a comment

கருத்திடுக