ஒரு நூற்றாண்டின் இரகசியம்

சிறுகதையாகவோ குறுநாவலாகவோ எழுத வேண்டிய சில விஷயங்களை நான் கட்டுரையாக எழுத இருக்கிறேன். அதற்கான காரணம் என் நண்பன் தினேஷ்குமார். அவன் சொன்ன நிஜமான விஷயமே எழுத இருப்பது. அவனின் அனுமதி பெற்று தான் இதை என் இணையத்தில் எழுதுகிறேன். இப்பதிவை மேலோட்டமாக கடந்து செல்லாமல் முழுக்க வாசியுங்கள். அறிந்திராத ஒரு விஷயம் எனக்கு பட்டது. உங்களுக்கும் படலாம். சுவாரஸ்யமான கதையொன்றும் கிடைக்கலாம்.

1880-1890 க்கும் இடையில் பாரத பீடபூமியின் ஏதோ ஒரு மூலையில் அந்த குழந்தை ஜனித்திருக்கிறது.

வட இந்தியாவில் குழந்தை பேறு இல்லாத ஒரு தம்பதியினர் தாங்கள் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கலாம் என முடிவு செய்திருக்கின்றனர். அப்போது மேல் வரியில் சொல்லிய குழந்தை அவர்களிடம் சிக்கியிருக்கிறது. வளர்க்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்களின் பேர் தெரியவில்லை.

அந்நேரத்தில் இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர்களில் ஒரு கூட்டம் கொள்ளையடிப்பவர்களாக இருந்திருக்கின்றனர். அவர்கள் ஒரு முறையை வைத்து அதன் படி தான் கொள்ளையடித்து வந்திருக்கின்றனர். அந்த முறை யாதெனில் ஒரு ஊருக்குள் கும்பலாக சென்று அவர்களுடன் வாழ்வது போல வாழ்ந்து பின் கொள்ளையடிப்பது. அப்படியிருக்கும் ஒரு கூட்டத்தின் தலைவன் பெயர் டௌக்ளஸ்.

அவன் தன் மனைவிக்கு காசநோய் வந்திருக்கிறது என மருத்துவரிடம் அழைத்து சென்றிருக்கிறான். மருத்துவர் இவர்கள் கொள்ளையடிப்பவர்கள் என அறிந்து கொண்டு மருத்துவம் செய்யாமல் அனுப்பிவிட்டனர். சினம் கொண்ட டௌக்ளஸ் அந்த ஊரை திட்டம் போட்டு கொள்ளைடித்தது மட்டுமல்லாமல் எல்லோரையும் கொன்றுவிட்டான். இருவர் மிஞ்சுகிறார்கள். யாரெனில் மேலே சொல்லியிருந்த சிறுமியும் யாரென அறியாத ஒரு கிழவனும். அச்சிறுமியை டௌக்ளஸ் குடும்பத்தினர் எடுத்துக் கொள்கிறார்கள். வளர்க்க ஆரம்பிக்கிறார்கள். எம்மா டௌக்ளஸ் என பெயர் சூட்டுகிறார்கள்.

அறம் சார்ந்து வாழலாம் என வாழவும் தொடங்குகிறார்கள். மகளை பெரிய படிப்பு படிக்க வைக்க வேண்டும் என இங்கிலாந்து அனுப்புகிறார்கள். மூன்றே மாதத்தில் படிப்பை வெறுத்து அவள் இந்தியா திரும்பிவிடுகிறாள்.

அந்த கொள்ளைக் கூட்டத்தின் மேலேயே அவளுக்கு ஆர்வம் அதிகமாய் இருக்கிறது. அங்கே ஆண்பெண் பேதங்கள் இல்லை. அதை தன் வளர்ப்பு தந்தையிடமே சொல்லிவிடுகிறாள். அவருக்கும் இவளுக்கும் பல காலம் சொற்போர் நிகழ்ந்திருக்கிறது. ஒரு நாள் தந்தையை கொன்றுவிட்டு தனியே சென்றுவிடுகிறாள்.

தந்தையிடம் இருந்த கூட்டத்தை தன் வசம் திருப்பிக் கொள்கிறாள். புதியதாய் ஒரு கோட்பாட்டை நிறுவுகிறாள். ஊருடன் கூடி பின் கொள்ளையடிப்பதற்கு பதில் திடிரென ஒரு ஊருக்குள் நுழைந்து கொள்ளையடிக்கலாம் என. எல்லோரும் ஒத்துக் கொள்கிறார்கள். வட நாட்டிலிருந்து அப்படியே ஒவ்வொரு ஊராக கொள்ளையடித்துக் கொண்டு தென் இந்தியாவிற்கு வருகிறார்கள்.

அப்போது தென் இந்தியாவில் நிறைய சுரங்கப்பாதைகள் இருந்திருக்கின்றன. அதையே அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். மேட்டூர் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் கொள்ளையை நிகழ்த்தியிருக்கிறார்கள். கொள்ளையடித்ததன் ஒரு பகுதி இவளின் கைகளில் இருந்திருக்கிறது. இவளை விட வேகமாக கூட்டாளிகள் சுரங்கத்தினுள் சென்று தப்பித்து விடுகிறார்கள். இவள் ஊரினுள் மாட்டிக் கொள்கிறாள். கூட்டாளிகளால் சுரங்கத்தின் மறுபக்கம் மூடப்பட்டது. என்ன செய்ய எனத் தெரியாமல் சுரங்கத்தினுள் பையை போட்டு மூடிவிட்டு குதிரையில் செல்ல ஆரம்பிக்கிறாள்.

சில தூரம் சென்றவுடன் குதிரையை தள்ளிவிட்டுவிட்டு தான் இந்த ஊரோடு வாழ்ந்துவிடலாம் என முடிவெடுக்கிறாள். எப்படி தள்ளிவிடுவது என தெரியாமல் குதிரையுடன் அவளும் விழுந்து விடுகிறாள். மயக்கமுற்று இருக்கும் அவளை ஊரார் காப்பாற்றுகிறார்கள். அநாதை என்னும் பட்டத்துடனும் வீரம்மாள் என்னும் பெயருடனும் ஊருக்குள் வருகிறாள். சேர்ந்து கொள்கிறாள்.

இக்கதையை எனக்கு சொன்ன தினேஷின் கொள்ளுத் தாத்தாவும்(அப்பா வழி தாத்தாவின் அப்பா) வெள்ளைக்காரரும் இணைந்து ஒரு அலுமினிய கம்பேனியை ஆரம்பித்திருக்கின்றனர். அங்கே வீரம்மாள் வேலைக்கு சேர்கிறாள். வெள்ளைக்காரன் கம்பேனியை தினேஷ் தாத்தாவிடமே கொடுத்துவிட்டு சென்று விட்டான்.

அக்கம்பேனியில் வேலையில் இருந்த ராபர்ட் என்னும் வெள்ளைக்காரன் வீரம்மாளிடம் காதல் சொல்லியிருக்கிறான். பாலியன் அத்துமீறல்களில் இறங்கியிருக்கிறான். வீரம்மாள் எல்லாவற்றிலிருந்தும் எப்படியோ தப்பித்து இருக்கிறாள்.

அதே கம்பேனியில் வேலைபார்த்த மணியக்கார ஐயர் என்பவருடன் வீரம்மாள் காதல் வயப்பட்டிருக்கிறாள். அவரின் தேகமும் தேஜசும் ஈர்த்திருக்கும் போல. இருவரும் மணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு பன்னிரெண்டு குழந்தைகள் பிறந்தன. அவற்றில் மூன்று இரட்டைக் குழந்தைகள்.

அந்த குழந்தைகளுக்கு எல்லாம் மணம் ஆகி இரண்டு மூன்று என குழந்தைகள் பிறந்துவிட்டன. மணியக்கார ஐயர் தன் எண்பத்தி ஐந்தாவது அகவில் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்துவிட்டார். கடைசி காலத்திலாவது தன்னைப் பற்றிய உண்மையை வீரம்மாள் சொல்ல வேண்டும் என ஆசை கொண்டு சொல்லியிருக்கிறாள். கேட்டு சில நாட்கள் கழித்து அவருடைய பிராணன் பிரிந்துவிட்டது.

அப்பா இறந்த சோகத்தை தாள முடியாமல் மூன்று குழந்தைகளும் இறந்துவிட்டன. வீரம்மாளின் வயது நூறைக் கடந்தது.


வயோதிகம் ஏற ஏற குழந்தைத்தனம் வரும் என்பார்கள். அதற்கொப்ப வீரம்மாளிடமும் வரத் துவங்கியது. அவளுடைய 112-113 ஆவது வயதில் பற்கள் அனைத்தும் கொட்டிவிட்டன. இருந்தும் அவளுடைய பற்கள் மீண்டும் முளைத்தெழ ஆரம்பித்துவிட்டன.

எல்லாவற்றிற்கும் மேலாக அவளின் 117.5-118.5 ஆவது வயதில் மீண்டும் வீரம்மாள் பருவமெய்திவிட்டாள். இதை என்னால் நம்ப முடியவில்லை. அப்போது தினேஷ் சொன்னது, அவள் பருவமெய்திய போது அந்த சடங்கை ஊரே கொண்டாடியதாம். அவளுக்கு அப்போது மீனலோச்சினி என இன்னுமொரு பெயரை வேறு இட்டிருக்கிறார்கள். சாட்சி அவ்வூர் மற்றும் தினேஷின் மொத்த சொந்தக்காரர்களும்.

தமிழர்களின் பண்டைய முறைப்படி வயதிற்கு வந்த பெண்ணை மணம் செய்து வைப்பது தான் மரபு. இந்த வயதில் ஒரு ஆடவனுக்கு மணம் செய்வது உசிதமல்ல என்பதால் இறப்பதற்கு முன் வாழை மரத்துடன் மணம் செய்துவைக்கலாம் என்றிருந்திருக்கிறார்கள்.

122ஆவது வயதில் உடல்நலக்குறைவால் படுக்கையில் வீழ்ந்துவிட்டாள் மீனலோச்சினி. அப்போது தனது எண்பத்தி ஐந்து வயது மூத்த மகளை அழைத்து தன் சுயபுராணத்தை சொல்லியிருக்கிறாள். மேலும் பதுக்கி வைத்திருந்த கொள்ளையடித்த விஷயத்தையும் சொல்லியிருக்கிறாள். ஆனால் அரசாங்கம் அவள் சொன்னதிலிருந்து நாற்பது வருடங்களுக்கு முன்பே அந்த சுரங்கங்களை மூடி எல்லாவற்றையும் எடுத்துவிட்டனராம்.

123 வயதை அடைய ஒருவாரம் இருக்கும் சமயத்தில் மணமே செய்யாமல் இறந்து போய்விட்டார் எம்மா டௌக்ளஸ் என்கிற வீரம்மாள் என்கிற மீனலோச்சினி. மூத்தமகள் மூலமாகத் தான் எல்லாம் எல்லோருக்கும் பரவியது.

இந்தக் கதை என்னுள் ஏதோ செய்தது. பாதி கதை கேட்கும் போதே வீரம்மாளை சந்திக்க முடியாதா என நினைத்தேன். நண்பன் நான் எழுதியிருப்பது போல் ஆதி முதல் அந்தம் வரை நேரிடையாக சொல்லவில்லை. மாற்றி மாற்றி அவ்வப்போது சொன்னான். இங்கே கோர்வையாக்கி அளித்திருக்கிறேன்.

காப்ரியல் கார்சியா மார்க்வேஸின் நாவல் தலைப்பான ஒரு நூற்றாண்டின் தனிமையே நினைவிற்கு வருகிறது. இது ஒரு நூற்றாண்டின் இரகசியம். அவள் கொள்ளையடித்தது நகை பணம் முதலிய பொருட்கள் மட்டுமல்ல வயதை வயோதிகத்தை வாலிபத்தை இயற்கையை... ஆனால் எப்படி செய்தாள் என்னும் இரகசியம் மட்டும் அவளுடனேயே பேணிக் காக்கப்படுகிறது. அறியப்படாமலிருப்பதே ஆனந்தமாய் இருக்கிறது.

மீண்டும் தினேஷ் குமாருக்கு மனம் கனிந்த நன்றிகள்.

மீனலோச்சினி என்ன ஒரு அழகான தமிழ் பெயர்.....

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

112-113, 117.5-118.5 - நடைபெற்ற (கதையோ...?) விசயங்கள் எல்லாம் வியப்பு... ஆனால் சுவாரஸ்யத்திற்கு குறைவில்லை... நன்றி...

திரு. தினேஷ் குமார் அவர்களுக்கு பாராட்டுக்கள்...

Post a comment

கருத்திடுக