கதை பேசுவோம் பற்றி பேசுவோம் (3)

காசி - பாதசாரி

இந்தக் கதையையும் வாசித்து வரச் சொன்னார். கதைக்கான லிங்க் - http://azhiyasudargal.blogspot.in/2009/11/blog-post_23.html

பாதசாரி அதிகம் அறியப்படாத எழுத்தாளர். அவர் நிறைய எழுதியதில்லை. குறைந்த அளவிலான சிறுகதைகளையே எழுதியிருக்கிறார். அதில் முக்கியமானது இந்த காசி கதை என்றார். இக்கதையை அவர் வாசித்த போது தத்தமது எல்லா நண்பர்களிடமும் இக்கதையை கொடுத்து வாசிக்க சொன்னாராம். எப்படி தன்னுடைய வாழ்க்கையை ஒருவர் திருடி எழுத முடியும் என்று கேட்டிருக்கிறார். இக்கதையை வாசிக்க கொடுத்த எல்லா நண்பர்களும் இதே வரியை சொல்லியிருக்கிறார்களாம் எப்படி தன்னுடைய வாழ்க்கையை ஒரு எழுத்தாளனால் எழுத முடிந்தது என.

அக்காலகட்டத்தில் இது விந்தையல்ல. இப்போது தொகுப்புகள் வருவது போல வேலையில்லா கொடுமைகள் சார்ந்து தமிழ் இலக்கியத்தில் பதியபட்ட கதைகளை தொகுத்தால் அது தான் இருப்பதிலேயே பெரிய தொகுப்பாய் வரும் என்கிறார். அப்போது எல்லோரும் அதை சார்ந்தே எழுதியிருக்கின்றனர். இப்போது அதைப் போல எழுத வேண்டுமெனில் வேலை பிடிக்காதவர்களின் கதையை தான் எழுத வேண்டும் என்றார். ஐயாயிரம் சம்பளம் வாங்குபவனும் ஐந்து லட்சம் சம்பளம் வாங்குபவனும் இதே வார்த்தையை தான் சொல்கிறான் வேலை பிடிக்கவில்லை என்று. அதே நபர்களிடம் பிடித்தமான வேலையை சொல்ல சொன்னால் யோசிக்கிறார்கள். இது இக்காலத்திய நிலை.

மேலும் ஆரம்பத்தில் அமானுஷ்யத்தை வலியின் உருவம் என்று சொல்லியிருந்தேன். இதையே தான் காசி கதையும் வேறு விதமாக சொல்கின்றது. எல்லா இடங்களிலும் தோற்றுக் கொண்டே இருக்கிறேன். ஒரு பெண்ணைக் கூட என்னால் கவர முடியவில்லை, எதற்குமே தகுதியானவனல்ல நான் என்று தனக்குள் கொள்ளும் ஒரு எண்ணம். ஆங்கிலத்தில் inferiority complex என்பர்.

இந்த தருணத்தில் ஒரு மனிதன் நிலையில்லா தன்மையை அடைகிறான். வீடு பிடிப்பதில்லை. உலகம் பிடித்திருக்கிறது. சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் ரசிக்கத் துவங்குகிறான். இந்த இடத்தில் ஒரு கதையை சொன்னார். அவர்பெயர் தினேஷ் குமார் என்று நினைக்கிறேன். (குறிப்பில் சரியாக எழுதவில்லை). இவர் காசே இல்லாமல் உலகம் முழுக்க பயணம் செய்திருக்கிறார். எல்லா பயணங்களையும் முடித்து வீடு திரும்புகிறார். அப்போது வீட்டிற்கு செல்கிறோமே என்று குழந்தைத் தனமாக சந்தோஷம் கொண்டிருக்கிறார். ரயில் நிலையத்தில் கணவனை வரவேற்க குழந்தைகளுடன் மனைவி காத்து நிற்கிறாள். இறங்கி மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு செல்கிறான். அப்போது அவனுடைய மனைவி அவனிடம் ஒன்று கேட்கிறாள்.

இடைச்செருகலாய் ஒரு விஷயம். இந்த பயணத்தின் அனுபவத்தை ஒரு நூலாகவும் எழுதியிருக்கிறார். அதன் கடைசி அத்தியாயமே சொல்லிக் கொண்டிருப்பது. மனைவி கேட்பதாவது நானும் குழந்தையும் தனியாக சென்று வாழ இருக்கிறோம் என்று. நாயகனுக்கு தூக்கி வாரிப் போட்டுவிட்டது. மாமனாரும் இதையே சொல்கிறார். தனக்கு ஒரு நாள் அவகாசம் வேண்டும் எனும் போது அதற்கு காலம் இல்லை என்று முடிவு எடுத்தாகிவிட்டது. இருவரும் பிரிந்தே வாழ்ந்து வருகிறார்களாம். அந்த மனைவி சொன்ன ஒரு விஷயம் தான் முக்கியமானது. உங்களுக்கு உலகமே வீடு. எனக்கோ வீடே உலகம்.

இதை அந்த நாயகன் எடுத்துக் கொண்ட விதம் உலகத்தையே சுற்றி அறிய முனைந்த எனக்கு இந்த வீட்டை அறிய முடியவில்லை என்பது தான். இது தான் காசி போன்ற கதைகளின் அடிநாதமும் ஆகும். வீடு என்னும் கூட்டை விட்டு பறந்து அகல விரிந்திருக்கும் உலகத்திற்கு செல்ல வேண்டும் என்று இளமையின் துடிப்பு. ஆனாலும் வீடென்று ஒன்று வேண்டும் என்னும் சின்ன ஆசை. இதற்கிடையில் தனி மனிதன் கொள்ளும் பித்தனிலை தான் காசி சொல்லும் கதை என்கிறார்.

கதையிலிருந்து இரண்டு விஷயங்களை சொன்னார். ஒன்று நாயகன் தன் நண்பனிடம் சொல்கிறான். நீ பேசாமல் பெண்ணாகிவிடேன் என்று. நண்பனாகவும் வேண்டும் எனக்குகந்த பெண்ணாகவும் வேண்டும் என்று. இதையும் ஆண்கடவுளர்கள் உருவானதையும் கதை மூலம் இணைக்கிறார். பெண் கடவுள்களில் இருக்கும் கருணை ஆண் கடவுளின் திரு உருவங்களில் கிடைப்பதில்லை என்கிறார். ஆண்கடவுள்கள் compensation ஆக கூட இருக்கக் கூடும் என்றார்.

அடுத்து கதையில் ஒரு நாவல். அது confessions of zeno என்னும் இத்தாலியயநாவல். இதன் நாயகனும் தன்னைப் போலவே இருக்கிறான் என்று சந்தோஷம் கொள்கிறான். தான் மட்டுமே தனித்துவமாக இருப்பதை எந்த ஒரு மனிதனும் விரும்புவதில்லை. தன்னைப் போலவே ஒருவன் நிச்சயம் வேண்டும். ஆனால் அருகில் இருக்கக் கூடாது. இந்த மனநிலை தான் காசி. காசி போன்றவர்கள் என்கிறார். இன்னமும் சமூகத்தில் இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள் என்றார்.

மூங்கில் குருத்து - திலீப் குமார்

இவருடைய ஒரு கதையையும் வாசித்து வர சொல்லியிருந்தார். கதைக்கான லிங் - http://azhiyasudargal.blogspot.in/2011/11/blog-post_15.html

எழுத நினைப்பவர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய ஒரு எழுத்தாளர் திலீப் குமார் இவரும் பாதசாரியைப் போல அதிகம் அறியப்படாதவர். ஆனால் முன்னவரைக் காட்டிலும் சற்று அதிகமாக எழுதியிருக்கிறார். இருந்தும் பிரபலமாகாதவர். அதை நினைத்து அவர் வருத்தப்பட்டதேயில்லை.

ஏன் இவர் வாசிக்கப்பட வேண்டியவர் என்பது முக்கியமான விஷயம். கதை எழுத நினைப்பவர்கள் நாயகர்களை அறிமுகப்படுத்தும் இடங்களில் வாசித்த எழுத்தாளர்களின் க்ளீஷேக்களையே வைக்கின்றனர். இது பிழையில்லை. காரணம் வாசிப்பதன் பாதிப்பு. திலீப் குமார் நாயகர்களை அறிமுகம் செய்யும் விதம் அலாதியானது. மேலும் புதுமைபித்தனிடம் சொன்னது போன்று உணர்வுகளின் வேதியியல் மாற்றங்களை சரிவர செய்பவர் திலீப் குமார். அறிமுகம் மட்டுமல்லாமல் கதையை நகர்த்தும் விதமே தனித்துவம் வாய்ந்தது.

சிரிக்காமல் திலீப் குமாரை வாசிக்கவே முடியாது என்றார். வலிமிகு தருணங்களை சிரிப்பாக மாற்றி கொடுக்கக் கூடியவர் திலீப் குமார். அதற்கு மேலே இருக்கும் கதையே சிறந்த உதாரணம். அதிலிருந்து சில வரிகளை மேற்கோள் காட்டினார். அதிலிருந்து சில,

//எதிர்க் கொட்டகையில் திலகங்களில் ஒருவர் நடித்த புதிய திரைப்படம். இரண்டரை மணிக் காட்சிக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் மாலைக் காட்சிக்கு இப்போதே நிற்க ஆரம்பித்திருந்தார்கள்.

இரட்டை வேடக் கதாநாயகர்களில் முதலாமவன் தாடியும், கந்தல் துணியுமாக வெறிக்க, இரண்டாமவன் ஆக்ரோஷமாகச் சிங்கத்தோடு சண்டை போட்டுக்கொண்டிருந்தான். அருகில் கதாநாயகி சம்பந்தமே இல்லாதவள்போல் பெரிய ஒற்றை மார்பைப் பக்கவாட்டில் காட்டியபடி இளித்துக்கொண்டிருந்தாள். அந்தப் புகழ்பெற்ற கதாநாயகியின் மூக்கு, அவள் நிஜ மூக்கை விட லேசாக மழுங்கியிருந்தது என்றாலும் போஸ்டர் வரைந்தவன் - தமிழ்க் கதாநாயகிகளுக்கு முலையையும், தொடையையும் தவிர வேறு எதுவும் எடுப்பாக இருக்கக் கூடாது என்று அறிந்த - புத்திசாலி, மூக்கில் கோட்டை விட்டதை முலையில் சரிக்கட்டி இருந்தான்.//

// ரோமம் இல்லாத மார்புக்கு கீழே, மேல்வயிற்றில் ரகசியமாய்த் துவங்கி, அமைதியாய் முன் எழுந்து அவசரமில்லாமல் அரைவட்டம் போட்டு, பின்வெடுக்கென்று இறங்கிச் சரிந்து மறைந்தது அது. ராஜ வம்சத்து அழகிகளின் அழகான மார்பகங்கள், மதுக்கிண்ண வார்ப்புகளுக்கு மாதிரிகளாய்த் திகழ்ந்த மேற்கத்திய கதைகள் நம்மில் பலருக்குத் தெரியும். ஆனால் வடிவ நேர்த்தி பற்றி அதிகம் கவலைப்படாத இந்தியக் குயவர்களுக்கோ, கால்பந்து தயாரிப்பாளர்களுக்கோ இது தெரிந்திருக்க நியாயமில்லை. இதன் விளைவாகவே ரொம்பவும் துரதிர்ஷ்டவசமாக திரு ராவின் தொந்தி பார்ப்பாரற்றுக் குலுங்கிக் கொண்டிருந்தது.//

இக்கதையில் அதிகமாக வரும் விஷயங்கள் அவமானம் தான். பணத்திற்காக ஒரு மனிதன் காணும் அவமானம். அவமானம் மனிதனின் சுயத்தை தெளிவாக அவனுக்கே காட்டுகின்றது. அதற்குடைய ஒரு கருவி என்கிறார்.

மனிதன் அவமானங்களுக்கு பழகிவிடுகிறான். முதல் முறை அவமானப்படும் போது தலைகுனியும் அவன் ஆறாம் ஏழாம் முறை அவமானப்படும் போது அவர் தான சார் சொல்றாரு என்று அதை சமாதானமாக்கிக் கொள்கிறான். அவமானங்கள் இயல்பாகும் போது நமக்கு வயதாகியது நமக்கே தெரிய வருகிறது.

இதைப் போலவே சம்பவத்தின் பிரதான உணர்வை மாற்றி சொல்லக் கூடிய ஒரு எழுத்தாளர் மலையாலத்தில் உள்ளதாக சொன்னார். அவர் பெயர் வைக்கம் முகமது பஷீர். அவர் எழுதிய பிறந்த நாள் சார்ந்த கதையின் கருவும் சோகமானது. பிறந்தநாளின் போது நாயகன் கையில் காசில்லை. உண்ண உணவில்லை. அருகிலிருக்கும் அறையிலிருந்து உணவை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக உண்கிறான். பயம் வருகிறது மாட்டிக் கொள்வோமோ என. கொஞ்சமாக சாப்பிட்டு மூடி வைத்து விடுகிறான். மாலையில் அந்த அறையின் நண்பர்கள் வருகிறார்கள். அவர்கள் நாயகனிடம் என்ன சாப்டீங்களா என்று கேட்கிறார்கள். இவரோ நல்ல சாப்பாடு என்று சொல்கிறார். ஐயோ உங்களுக்காக தான் வாங்கி வைத்திருந்தோமே என்று கவலை கொள்கிறார்கள். அந்த நிலையை சமாதானம் செய்யும் வகையில் பாயாசம் மட்டும் குடிக்கல அதனால அத குடிக்கிறேன் என்பது போல கதை முடிவு கொள்ளுமாம்.

எள்ளல் மிகு சோகங்களை எழுத்தில் கொணர்வது முக்கியமான அம்சமாகிறது என்று சொன்னார். அது படைப்பை தனித்துவமாகவும் காட்டக் கூடியது. அப்போது கோபிகிருஷ்ணனின் கதைகள் நினைவிற்கு வந்தன. கேட்ட போது அவர் சொன்ன பதில் கோபிகிருஷ்ணன் அபத்தங்களை பகடியாக்குபவர். எள்ளல் தன்மையுடன் கோர்ப்பவர். அடுத்த வீட்டில் இருக்கும் பெண் தன் கணவனின் ஜெட்டி காணவில்லையே என்று அங்கிருக்கும் எல்லா மனிதர்களின் மீதும் சந்தேகம் கொள்கிறாள். நாயகனும் அவள் சொல்லும் அதே ஜெட்டியை அணிந்திருக்கிறான். அப்போது அவனின் மன ஓட்டங்கள் எப்படி என்பதை சொல்வது கோபிகிருஷ்ணனின் கதைகள் என்று முடித்தார்.

எள்ளலில் தான் எத்தனை வகைகள் என்றே ஆச்சர்யம் கொண்டேன்.

பாம்பும் பிடாரனும் - வண்ணநிலவன்

வண்ணநிலவனின் இக்கதை அவர் எழுதியதிலேயே வித்தியாசமானது என்றார். எப்போதும் கட்டுப்படும் பாம்பானது சூரியனை கண்டு கிளர்ச்சியுற்று மகுடிக்கு அடங்காமல் செல்கிறது. தன்னையும் பாம்பையும் பிடாரன் ஒப்பிட்டு பார்க்கிறான். அனுபவிக்க ஆசைப்படுகிறான். இந்த தரிசன நிலை எங்கு முடியும் என்பதை கதை அழகாக பேசுகிறது. இக்கதையையும் அவர் வாசித்து வரச் சொல்லியிருந்தார். இக்கதை சார்ந்து அவர் அதிகம் பேச வில்லை. அவர் சொன்னது மகத்தானதை மனிதனோ ஒரு உயிரோ அணுகும் தருணத்தில் அவர்களின் அன்றாடம் அவர்களை விட்டு அவர்களறியாமலேயே நீங்கிவிடுகின்றது.

அந்த கதைக்கான லிங்க் - http://azhiyasudargal.blogspot.in/2011/08/blog-post.html

பேச ஆரம்பித்ததிலிருந்து அவர் வாசித்து வர சொல்லியிருந்த தமிழ்க்கதைகளை ஒவ்வொன்றாக பேசி வந்தார். புதுமைபித்தனையும் காசியையும் முடித்தவுடன் தேநீர் நேரம் ஒதுக்கப்பட்டது. அப்போது துளசி தேநீர் கொடுத்தார்கள். எனக்கு துளசி சுவையே தெரியவில்லை. இனிப்பே உணர்ந்தேன். ஒருவர் சொல்லியே அறிந்து கொண்டேன் அதில் வெல்லம் போட்டிருக்கிறார்கள் என்று. சுவையான தேநீர்.


மீதி இரண்டு தமிழ்க்கதைகளை சொன்னவுடன் உணவு நேரமும் வந்தது. எஸ்.ரா இட்டிருந்த வரையறைப்படி அவர் சொல்லியிருந்த எல்லா கதைகளையும் காலையிலேயே முடித்துவிட்டு மதியம் வந்திருந்தவர்களின் பிடித்தமான சிறுகதைகளை உரையாடலாம் என்பதே. ஆனால் காலை ஆரம்பித்த நேரம் தாமதமானதால் வாசகர்களின் சந்தேகங்கள் மட்டுமே கேட்கப்பட்டு தீர்வும் செய்யப்பட்டது. அவ்வப்போது சில சிறுகதைகளும் அறிமுகமாயின.

(தொடரும். ..)

முந்தைய பதிவுகளை வாசிக்க பின்வரும் லிங்குகளை க்ளிக்கவும்

கதை பேசுவோம் பற்றி பேசுவோம் (2)

http://www.athishaonline.com/2014/03/blog-post_26.html?utm_source=unknwn&utm_medium=twitter  - அதிஷா என்பவர் கதை பேசுவோம் சார்ந்து எழுதிய பதிவு. அந்த இடத்தைப் பற்றிய விரிவான பதிவாக இருக்கிறது. நிச்சயம் வாசியுங்கள்

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக