கதை பேசுவோம் பற்றி பேசுவோம் (1)

எஸ்.ராமகிருஷ்ணனும் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனும் இணைந்து கதை பேசுவோம் என்று ஐந்து முகாம்களுக்கு திட்டமிட்டிருந்தனர். ஐந்திற்கும் செல்ல முடியுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் முதல் இரண்டிற்கு நிச்சயம் செல்ல வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். தனிப்பட்ட ஆசையும் கூட. எஸ்.ராமகிருஷ்ணனை புத்தக சந்தையில் காண வேண்டும் என்று ஆசை கொண்டேன். ஆனால் முடியவில்லை. நிமித்தம் வாசித்த போது அவருடன் பேச வேண்டும் என்று ஆசை கொண்டேன் அப்போதும் முடியவில்லை. மனதிலிருந்த வஞ்சத்தை தீர்க்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் இந்த பயணத்திற்கு எப்படியேனும் சென்று விட வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

எஸ்.ரா முகாம் வருபவர்களுக்கு பன்னிரெண்டு கதைகளை கொடுத்து வாசித்து வரச் சொன்னார். அந்தக் கதைகளாவன

காஞ்சனை - புதுமைப்பித்தன்
துக்க விசாரணை - ஜி. நாகராஜன்
பாம்பும் பிடாரனும் - வண்ண நிலவன்
காசி - பாதசாரி
மூங்கில் குருத்து - திலீப்குமார்
பழுப்புக் காலை - ஃப்ராங்க் பாவ்லாஃப் தமிழில்: ஆனந்த குமார்
லெனினை வாங்குதல் - மிரோஸ்லாவ் பென்கோ தமிழில்: சுகுமாரன்
யாருக்கும் வேண்டாத கண்: சிஹாபுதின் பொய்த்தும்கடவு. தமிழில்கே.வி.ஷைலஜா.
நதியின் மூன்றாவது கரை - ஜோவோ கிமேரஸ் ரோஸா.தமிழில்: ஆர்.சிவகுமார்
சீனப் பெருஞ்சுவர் - ஃப்ரான்ஸ் காஃப்கா தமிழில்: சுகுமாரன்
இருபதாவது பிறந்தநாளில் அவள் - ஹாருகி முரகாமி  - தமிழில் .ஆறுமுகம்
சின்ன விஷயங்கள் - ரேமண்ட் கார்வர் - தமிழில்: பிரகாஷ் சங்கரன்

எல்லா கதைகளும் முக்கியமானதும் எனக்கு பிடித்தமானதுமாக இருந்தது. ஆனால் ஏன் இக்கதைகளை மட்டும் அவர் தேர்ந்தெடுத்திருந்தார் என்பது எனக்குள்ளே இருக்கும் சந்தேகமாக இருந்தது.

காலை ஏழரை மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸிற்கு வரவேண்டும் என்று சொல்லியிருந்தனர். அங்கிருந்து அவர்களே பேருந்தில் அழைத்து செல்கிறர்கள் என்று. நான் முந்தைய நாள் தாம்பரத்தின் அருகில் காமராஜபுரத்தில் தங்கியிருந்ததால் காலை ஐந்து மணிக்கே கிளம்பி ஏழு மணி தொடும் தருணத்தில் வந்து சேர்ந்திருந்தேன். அறிந்திராத சிலர் என்னைப் போலவே ஆங்காங்கு முதுகை தொட்டுக் கொண்டிருக்கும் பைகளுடன் நின்று கொண்டிருந்தனர்.

குழந்தைத் தனமான ஆசையுடன் முதல் பேருந்தில் ஜன்னலோரம் சென்று அமர்ந்து கொண்டேன். இரண்டு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதைத் தவிர்த்து தனியாக தத்தமது வாகனங்களில் வருபவர்கள் வேறு. இரண்டு பேருந்துகளும் நிரம்பின.

காலையில் சீக்கிரமே கிளம்பியதால் சாப்பிடவேண்டும் என்று பலர் கூற காட்டாங்குளத்தூர் அருகில் ஒரு ஹோட்டலில் நிறுத்தினர். இதனால் தான் முகாமின் நேரம் சற்று தாமதமாகியது.

செங்கல்பட்டைக் கடந்து நெடுஞ்சாலையின் அருகில் ஒரு பேருந்து மட்டும் செல்லுமளவு இருந்த சாலையொன்றினுள் பேருந்து திரும்பியது. திரும்பிய சில நேரத்திலேயே தொலை தொடர்பு எல்லாம் அறுந்து போனது. முதன் முறையாக அதற்கு சந்தோஷம் கொண்டேன். சில தூரம் வரை மட்டுமே சாலைகள் இருந்தன. பின் ஜன்னலின் வழியே ஊடுருவும் முட் செடிகளின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது.

இருளர் மக்களின் மகளிர்நல அமைப்பின் இடமே அது. அவர்கள் அங்கே தங்குவதில்லையாம். அங்கிருந்து இன்னமும் சிறிது தூரம் உள் செல்ல வேண்டும் போல. அங்கே ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் இல்லாமல் கற்காளாலேயே கூரை போல போடப்பட்டிருந்த இடத்தில் நாற்காலிகளை இட்டிருந்தனர். முதல் பேருந்தில் வந்தமையால் நிறைய இடங்கள் காலியாகவே இருந்தன. முன்பே அமர்ந்து கொண்டேன்.


இரண்டாவது பேருந்து வந்த சில நேரத்திலேயே எஸ்.ராவும் வர பேச்சும் ஆரம்பித்தது.

அவருடைய காலத்தில் தேநீர்க்கடையில் அமர்ந்து கொண்டு ஒவ்வொரு எழுத்தாளர்களை பற்றி பேச ஆரம்பித்து அப்படியே உலக இலக்கியம் நோக்கி செல்வார்களாம். இப்போதோ வாசகர்களுக்கு பேச்சிற்கான, வாசிக்கும் இலக்கியம் சார்ந்து பேசுவதற்குகந்த இடம் இல்லை என்பதற்காகவே இந்த முகாமை ஆரம்பித்திருக்கிறாராம். இந்த காரணம் என்னவோ நூற்றுக்கு நூறு உண்மை தான். இதை சொல்லி முகாமின் பேச்சிற்குள் நுழைந்தார்.

காஞ்சனை - புதுமைபித்தன்

இது சிறுகதைகள் சார்ந்த ஒரு முகாம். அதில் குறிப்பாக ஏன் இக்கதையைப் பற்றி பேச ஆரம்பித்தார் என்பதற்கும் ஒரு சூட்சுமத்தை என்னால் இணைக்க முடிந்தது. அதை பதிவின் இறுதியில் சொல்கிறேன்.

முதலில் அவர் எழுப்பிய கேள்வி அமானுஷ்யம் என்றால் என்ன ? ஒரு செயல் முடிவுறாத் தன்மையை பெறும் பட்சத்தில் அது அமானுஷ்யமாகின்றது. எப்படி எனில் ஒரு தம்ளரில் நீரைப் பருகிறோம். குடித்து முடித்து கீழே வைக்கும் தம்ளரில் நீர் இல்லையெனில் சந்தோஷம். நீர் குறையாமல் அப்படியே இருந்தால் அமானுஷ்யம். மேலும் வலியின் உருவங்களை அமானுஷ்யங்கள் என்கிறார். நாம் கடந்து வந்த வாழ்க்கையில் நிறைய சந்தோஷங்களை அனுபவித்திருப்போம். ஆனால் ஒன்றுமே நம் நினைவிற்கு வந்து செல்லாது. அதே பத்து வயதில் சைக்கிளில் விழுந்து அடிபட்ட காயம் இப்போதும் நினைவிலிருக்கும். இதை மட்டும் ஏன் மனம் அசை போடுகிறது என்பது புதிரான கேள்வி என்கிறார்.

நம்மில் அதிகமானவர்கள் பேயைக் கண்டதில்லை. இருந்தும் பேயை ஒருமுறையேனும் பார்க்க மாட்டோமா என்று ஏங்குகிறோம். பேயை இன்மை என்று கொண்டால் அமானுஷ்யங்கள் என்பது இன்மையின் உருவங்கள் என்கிறார். அதற்கு அவர் சொன்ன உதாரணம் சுவாரஸ்யமானது.

நான் இங்கே உங்கள் முன் பேசிக் கொண்டிருக்கிறேன். யாரேனும் என் வீட்டை தட்டி மகனிடம் அப்பா எங்கே என்று கேட்டால் அப்பா இல்லை என்பான். அதே சொந்த ஊரில் இருக்கும் வீட்டை தட்டி என் அப்பாவிடம் மகன் எங்கே என்று கேட்டால் மகன் இல்லை என்பார். ஆக நான் ஒரு இடத்தில் இருக்கிறேன். ஆனால் பத்து இடங்களில் இல்லாமல் இருக்கிறேன். நான் இருப்பதை நீங்கள் காண்பது போல நான் இல்லாததையும் எல்லோரும் கண்டு கொண்டு தானிருக்கிறார்கள். இருப்பது கடினம். இன்மையோ சுலபமானது. இந்த ஒரு இடத்திலும் இல்லாமல் போனால் அது தான் மரணம். அந்த ஒரு இன்மையை மட்டும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

இந்த இன்மையை மட்டும் நாம் அமானுஷ்யமாக உருவகப்படுத்த முயல்கிறோம். இதன் இன்னுமொரு பகுதி பயம். பயத்தின் குறியீடு என்னவாக இருக்கும் என்று யாரேனும் சொல்ல முடியுமா ? படங்களிலும் எழுத்து கலைகளிலும் நடுக்கத்தை மட்டுமே பயத்தின் குறியீடாக சொல்லியிருக்கின்றனர். ஆனால் பயத்திற்கோ தனிப்பட்ட குறியீடுகள் இல்லை என்கிறார்.

எப்படியெனில் ஒரு ஜோக் சொல்லப்படுகிறது. எல்லோரும் சிரிக்கிறோம். ஒருவன் மட்டும் விடாமல் சிரித்துக் கொண்டே இருந்தால் பயம் கொள்கிறோம். வெடுக்கென ஒருவன் சிரிப்பை நிறுத்தினால் பயம் கொள்கிறோம். ஒருவன் மட்டும் சிரிப்பின் சத்தத்தை அதிகரித்துக் கொண்டே சென்றால் பயம் கொள்கிறோம். ஆக சிரிப்பு பயத்தின் குறியீடாகிவிடுகிறது. இது சிரிப்பிற்கு மட்டுமானதல்ல. எல்லா உணர்ச்சி வெளிப்பாடுகளுக்கும் பொதுவானது என்கிறார்.

மேலும் பயத்தை நிசப்தத்தை சந்திக்க இயலாத தன்மையாக குறிப்பிடுகிறார். இருவர் பேசிக் கொண்டிருக்கிறோம். அப்போது பேச்சு நிறுத்தப்படுகிறது எனில் அது அமைதி. அதே பேசும் போதும் பேசாத போதும் தனியொரு மனிதனாக எல்லோரும் உணரும் விஷயமே நிசப்தம். இது ரசனையாக இருப்பினும் இதை நிறைய பேரால் சந்திக்க முடியவில்லை. இப்போதும் நாம் இரவு பன்னிரெண்டு மணியைக் கண்டு அஞ்சிக் கொண்டு தானிருக்கிறோம். ஆக இது விதைக்கப்பட்ட உணர்வு என்கிறார்.

பயத்தை குறிப்பாக சொன்னதன் காரணம் புதுமைபித்தன் தன் காஞ்சனை கதையில் சிரிப்பை வைத்து சிரிப்பை வகைபடுத்தி பேய்த் தன்மையை தன் கதையினில் அதிகப்படுத்தியிருக்கிறார். அந்த சிரிப்பை எடுத்திருந்தால் கதையில் ஒன்றுமே இல்லை. இந்த transformation of feelings செய்பவனே கைதேர்ந்த எழுத்தாளன் ஆகிறான்.

அடுத்து பேய்கள். பேய்கள் அவர்களுக்கென ஒரு கோட்பாட்டை அல்லது க்ளீஷேக்களை வைத்திருக்கின்றனர். வரும் பேய்கள் யாவுமே பெண் பேய்கள். இதற்கு காரணமும் நம் கலாச்சாரம் என்கிறார். கட்டுபாடற்ற பெண்ணாகவே பேய்களை கற்பனை செய்யும் பொருட்டு நாம் நம் அறத்தை தக்க வைத்துக் கொள்ள முயல்கிறோம் என்கிறார். அவர்களினுள்ளும் வெள்ளை ஆடை, முடியாத கூந்தல் என்று க்ளீஷேக்கள் உள்ளன. இதற்கு சில காரணங்கள் நமது பண்பாட்டுத் தளத்தில் இருக்கலாம் என்று அவர் தன் அனுமானத்தை கூறினார். அவர் கூறியதாவது சமணர்களை எதிர்க்க வேண்டும் என்று இயற்றப்பட்ட பாடல்களில் பெண்கள் பேய்களாக வேண்டும் என்று வஞ்சியதாக இருக்கிறதாம். ஆதலால் கூட தமிழில் வரும் பேய்கள், இப்படி ஒரு நிரந்தரத் தன்மையை பெற்றிருக்கக் கூடும் என்று சொன்னார். மீண்டும் சொல்கிறேன் இது அவரின் அனுமானமே.

காஞ்சனை கதையை வாசிக்காதவர்களும் அங்கே வந்திருந்தனர். அவர்களுக்காக அந்தக் கதையை அவர் சொன்னார். அக்கதைக்கான லிங்க் - http://azhiyasudargal.blogspot.com/2010/10/blog-post_31.html

இதன் பின் அவர் இக்கதையை விமர்சனம் செய்ய ஆரம்பித்தார். விமர்சனம் எனில் இப்படித் தான் இருக்க வேண்டுமா என்னும் கேள்வியும் என்னுள் எழுந்தது.

கதைகள் மூன்று வகைப்பாடுகளை கொண்டிருக்கிறது.
Fabel - இதைப் பொதுவாக நீதிக்கதைகள் என்பர். ஒவ்வொரு ஊர்களிலும் அந்த ஊர்களுக்கொப்ப நிறைய நீதிக்கதைகள் உள்ளன
Tale - இவை வெறும் கதை. உண்மையும் கற்பனையும் கலந்து இருப்பதையே இப்படி சொல்வர். மேலும் இந்த கதைகள் விதியால் நிச்சயிக்கப்படுகிறது.
Short story - கதாபாத்திரம், கதை நிகழும் இடம் என்று எல்லாவற்றையும் கற்பனை கலந்தோ கலக்காமலோ சொல்வதை இப்படி சொல்வர்.

இம்மூன்றையும் காஞ்சனை கதை எடுத்தாள்கிறது என்கிறார். அக்கதையில் இரவு நேரத்தில் நாயகன் வெற்றிலைக்கு சுண்ணாம்பு தடவுவது போன்றதொரு காட்சி வருகிறது. ஆறுமணிக்கு மேல் வெற்றிலைக்கு சுண்ணாம்பு கேட்பது பேய்கள் தான் என்னும் வழக்கு மொழியாடல் உள்ளதுஇதனால் எனக்கு அங்கேயே சந்தேகம் வந்தது இது பேய்க்கதையோ என்றார். மேலும் வெற்றிலை பாலுணர்வின் அடையாளம் என்றும் சொன்னார். இதுவும் வழக்கு மொழி சொல்லாடல் தானாம்.

அதே போல கதையில் காஞ்சனையாக வருபவளின் சிரிப்புகள் பல்வேறு விதமாக கதையில் காட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு சிரிப்பை எலும்பில் பனிக்கட்டி ஊடுருவது போல இருக்கிறது என்று எழுதியிருக்கிறார் புதுமைபித்தன். எஸ்.ரா இந்த வரி எப்படி சாத்தியம் என்கிறார் ? இக்கேள்விக்கு காரணம் சராசரி இந்தியனால் பனிக்கட்டியின் உணர்வை எளிதில் அடைய முடியாது. அதற்குகந்த தட்பவெட்ப நிலை கொண்ட நாடல்ல இந்தியா. இந்த சந்தேகத்தில் அவர் புதுமை பித்தன் வாசித்த நூல்களையெல்லாம் தேடி வாசித்தாராம். அப்போது ஜாக் லேண்டன் என்பவர் தன்னுடைய கதையில் அதே வாக்கியத்தை பிரயோகித்திருக்கிறாராம்.

கதைக்குள் இருக்கும் உணர்வுகளை மெருகேற்றி சொல்வதற்கு இப்படி எடுத்தாள்வது தவறில்லை என்கிறார்.

மேலும் புதுமைபித்தன் இந்த கதையில் ஒரு வாக்கியத்தை எழுதியிருக்கிறார். அது தான் முகாமின் முழு ஸ்ருதியும் கூட. கதையில் வரும் நாயகன் ஒரு எழுத்தாளன். அவன் சொல்வதாவது

எழுத்து - அங்கீகரிக்கப்பட்ட பொய்.

(தொடரும்)

பின் குறிப்பு : பதிவிற்கு பின் முடிந்தால் மீண்டும் கதையை வாசியுங்கள்

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

ராம்ஜி_யாஹூ said...

transformation of feelings ஐ செய்பவனே கைதேர்ந்த எழுத்தாளன் ஆகிறான்.
இது எல்லோரும் அறிந்த ,இதுதானே எழுத்தின்,சினிமாவின், இயத்தின், இசையின், பக்தியின் சூட்சுமம்.
இந்த சூட்சுமம் நன்கு அறிந்தவர்கள் தி ஜா,பு பி , வண்ணதாசன், வண்ண நிலவன் ....

Post a comment

கருத்திடுக