தர்மம் ஒரு Paradox

கல்லூரியில் எனது தோழி ஒருத்திக்கு பௌத்த மதம் எனில் மிகவும் விருப்பம். ஜென் கதைகளை கேட்கவும் வாசிக்கவும் விருப்பம் உள்ளவள். நான் புத்தக பித்தன் ஆதலின் என்னிடம் எப்படியேனும் ஜென் கதைகளை அடங்கிய நூல் ஒன்றை கேட்டிருந்தாள். புத்தகச் சந்தையில் வாங்கி கொடுத்தேன். தினம் எனக்கு ஒரு கதை சொன்னாள். அதில் எனக்கு ஒரு கதை மிகவும் பிடித்து போனது.

ஒரு ஜென் துறவி. அவருக்கு ஒரு சிஷ்யன். துறவி தன் வாழ்நாள் முழுக்க அவனுக்கு பௌத்தத்தை போதித்திருக்கிறார். தான் இனிமே போதிக்க முடியாது என்னும் நிலையை தனக்குள் நினைத்தவுடன் சிஷ்யனிடம் வந்திருக்கிறார். நான் உனக்கு போதிக்க நினைத்ததெல்லாம் போதித்துவிட்டேன். இனிமேல் ஒன்றுமே இல்லை என நூல் ஒன்றை கொடுத்திருக்கிறார். நான் உனக்கு போதித்த விஷயங்களெல்லாம் இந்நூலில் உள்ளன. இதை நீ பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். உன் சிஷ்யர்களின் மூலம் காலத்திற்கும் இதை கடத்தி செல்ல வேண்டும் என சொல்லியிருக்கிறார். சிஷ்யனோ நீங்கள் தான் இந்நூலில் உள்ள யாவற்றையும் எனக்கு போதித்து விட்டீர்களே பிறகு ஏன் இந்த நூல் என விளித்திருக்கிறான். குருவோ இருந்தாலும் வைத்துக்கொள் என சொல்லியிருக்கிறார். இருவரின் பிடிவாதமும் நீண்டிருக்கிறது. தர்க்கப் போராக மாறியிருக்கிறது அப்போது சிஷ்யன் அந்நூலை அருகில் எரிந்து கொண்டிருந்த நெருப்பினிடையில் எறிந்து விட்டான். குருவிற்கு கோபம் வந்துவிட்டது. அப்போது

குரு - (வெஞ்சினத்துடன்) என்ன செய்கிறாய் நீ ? 
சிஷ்யன் - என்ன செய்கிறீர்கள் நீங்கள் ?

என்னே ஒரு கதை. அறம் அறப்பிழை ஆகும் தருணம். அறம் ஒரு நூலில் எழுதபட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதுவே காலம் போகப் போக கலாச்சாரத்தின் அடிநாதமாக ஆகிறது. இந்த அறம் எல்லோர் இடத்திலும் சமமாக செல்லுபடியாக வேண்டுமெனில் அது நிகழக் கூடிய ஒன்றா ? நிச்சயம் இல்லை. குசேலன் செய்ததும் தானம் தான் கர்ணன் செய்ததும் தானம். விகிதாச்சாரங்கள் வேறுபடுகின்றன. தர்மம் செய்ய முடியாதவர்களும் கோடானு கோடி பேர்கள் நம் இதிகாசங்களிலேயே இருக்கிறார்கள். ஆக அறம் என்பது நிலையானது அன்று.

மேலே சொன்ன கதையில் குருவிற்கு அறம் மனனமாய் தெரிந்திருந்தும் அவர் அறத்திற்கு எதிராய் மௌனத்தை குலைத்துக் கொண்டு சினம் கொள்கிறார். பௌத்தத்திற்கு எதிரான ஆசையை சிரமேற் கொள்கிறார். இதை அறப்பிழை எனக் கொள்ளலாமா ?

நூல் சொல்லும் அறம் சார்ந்து பார்த்தால் குரு செய்தது அறப்பிழை. அதே குரு சார்ந்து பார்த்தால் பௌத்தம் சொல்லும் அறம் காலத்திற்கும் ஒரு பதிவாய் இருக்க வேண்டும் என்னும் எண்ணத்தில் அந்த நூலை பாதுகாக்க நினைக்கிறார். இது அறம். தர்மம். இந்த இருவேறு நிலையால் தான் தர்மத்தை Paradox என்கிறேன். அது நிலையானதன்று.

இந்த தன்மையை கருவாக கொண்டு அருமையான நாவல் ஒன்று தமிழில் உள்ளது. அது எம்.வி.வெங்கட்ராம் எழுதிய "நித்யகன்னி"


நிதய்கன்னியின் கதை யாதெனில் விஸ்வாமித்திரரின் சிஷ்யன் காலவ முனிவர். அவருக்கு கல்விக்காலம் முடிந்தவுடன் குருதட்சணை கொடுக்க ஆசைப்படுகிறார். குருவோ எனக்கு எதுவும் வேண்டாம் என்கிறார். காலவ முனிவர் கட்டாயப்படுத்த எண்ணூறு அஸ்வங்களை(குதிரைகளை) கேட்கிறார் குரு. அதிலும் அஸ்வங்கள் வெண் நிறத்தில் ஒரு காது மட்டும் கறுப்பாய் இருப்பது போல் இருக்க வேண்டும் என்கிறார். காலவனோ சாதாரண அந்தணன். அப்போது பிரதிஷ்டா நகரத்தில் இருக்கும் யயாதி மன்னனிடம் செல்கிறார். யயாதியிடம் அஸ்வங்கள் இல்லை. ஆனால் ஏதேனும் கொடுக்க வேண்டும் என்னும் எண்ணத்தில் தன் மகளான மாதவியை அவருடன் அனுப்பி வைக்கிறார். மாதவி ஒரு நித்யகன்னி. மகவு ஈன்றவுடன் அவளின் இளமை மீண்டெழுந்துவிடும்.

அவளை ஹர்யசுவன், திவோதாசன், உசிநீரன் என்னும் மூன்று மன்னர்களுக்கு மணம் செய்துவைக்க வேண்டும். மூவருக்கும் ஒரு பிள்ளையை அவள் ஈன்று கொடுத்தால் ஒவ்வொருவரும் இருநூறு அஸ்வங்கள் கொடுப்பார்கள் என்று விஸ்வாமித்திரர் அவனிடம் சொல்கிறார். ஆனால் காலவனிடம் அவள் உஷை என்னும் பெயரில் தனியாக பேசுகிறாள். இருவரும் ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக விரும்புகின்றனர். ஆனால் அவளே மாதவி என அறிந்து கொள்கிறார். மனம் சிதிலமடைகிறது.

மூவரில் முதல் மன்னனான ஹர்சுவன் ஒரு காமுகன். இரண்டாவதான திவோதாசன் சந்தேகப்பிராணி. மூன்றாவதான உசிநீரன் ஒரு கலைஞன். மூவரிடமிருந்தும் அறுநூறு அஸ்வங்களைப் பெற்றுக் கொண்டு விஸ்வாமித்திரரிடம் செல்லும் போது அவரும் அவளை மீத அஸ்வங்களுக்காக மணந்து கொள்கிறார். இந்த இருவரின் காதல் என்ன ஆனது ? நித்யகன்னியின் மனம் ஒவ்வொருவரிடமும் எப்படி இருந்தது ? எல்லாம் முடிந்து யயாதியிடமே கொண்டு செல்லும் போது அப்பாவின் மனப்போக்கும் அதற்கொப்ப மகளான மாதவியின் மனப்போக்கும் எப்படி இருக்கிறது என்பதை அவ்வளவு அழகியலுடன் சொல்லியிருக்கிறார் எம்.வி.வெங்கட்ராம். நான் இதுவரை சொன்னது அனைத்தும் நாவலின் ஐந்து சதவிகிதம் தான். ஒன்று எப்படியும் உண்மை. அதாகியது இந்நாவல் எக்காலம் ஆயினும் புதுப்பொலிவுடனேயே இருக்கும்.

அதற்கான பிரதான காரணம் ஒவ்வொரு நாவலும் ஏதேனும் ஒரு கருவை கூண்டிலேற்றி அவற்றை அலசுகின்றது. இந்நாவலோ தர்மத்தையும் அறத்தையும் கூண்டிலேற்றுகிறது. ஆசிரியர் சொல்லும் ஒவ்வொரு கூற்றும் தர்மமே பிழையன்றோ என எண்ண வைக்கிறது.

தர்மத்தை மட்டும் சொல்லாமல் நித்யகன்னியாக வாழ்வது எவ்வளவு கொடியது என்பதை அவளின் மனப்போக்கிற்கிணங்க கூறியிருக்கிறார். உடலின் பரிமாற்றம் ஒரு போதும் காமமாகாது என்பதை வெகு அழகாக சொல்லியிருக்கிறார். காதலில் விரிதிருக்கும் possessiveness காமத்தில் சந்தேகப்பிராணியாகி விடுகின்றது. காதலே காமத்தில் ஏற்படும் அதே உணர்வினால் உடைந்துவிடுகிறது என்பதை நாவலில் மிக அழகாக சொல்லிச்செல்கிறார்.

நாவலில் மூவருள் உசிநீரனையே அதிக பக்கங்கள் எழுதியிருக்கிறார். அங்கு தான் ஒரு கலைஞனாய் ஞானப்பெருக்கு ஓடியிருக்கிறது என்பது என் அபிமானம். அதற்கான காரணம் கலைஞன் என்பவன் யார் என மிக அழகாகவும் தெளிவாகவும் சொல்கிறார்.

உசிநீரன் மாதவியை ஓவியமாக வரைந்து கொண்டிருக்கிறான். அவனால் வரையமுடியவில்லை. உன்னிடம் சோகம் இருக்கிறது அது என் ஓவியத்தை தடை செய்கிறது என்கிறார். அதற்கு என் புறத்தை வரைய அகம் தேவையில்லையே என்கிறாள். உசிநீரன் சொல்லும் பதிலோ
"பார்த்ததை பார்த்தபடி வரையும் சைத்திரிகன் அல்லன் நான். நான் ஒரு கலைஞன். அழகில் உள்ள எவ்விதமான நுட்பமான குறையும் என் கண்களுக்கு தவறாது. அந்தக்குறை அகத்திலிரிப்பினும் சரி புறத்திலிருப்பினும் சரி"
(இந்தப்பகுதியை வாசிக்கும் போது நேற்று வாசித்த காடு நாவலில் ஓவியம் ஒரு கலையே அல்ல என்று வரும் கூற்றும் என்னுள் வந்து வந்து போனது)

நாவல் முழுக்க தர்மத்தை செய்கைகளால் நித்ய்கன்னி ஆராய்ந்தாலும் உசிநீரன் வார்த்தைகளால் நிறைய ஆராய்கிறான். அவன் இன்னுமொரு இடத்தில் சொல்வதை பாருங்கள்
"அமானுஷ்யமான அல்லது அதிமானுஷ்யமான புத்தியும் சக்தியும் சிலருக்கு கிடைத்துவிடுகின்றன. ஆனால் அந்த புத்தியையும் சக்தியையும் மனித உலத்தின் நன்மைக்காக அவர்கள் பயன்படுத்துவதில்லை. அவர்கள் அவைகளை துர் உபயோகம் செய்துவிடுகிறார்கள். அதனால் மனித இனமே இடுக்கணில் சிக்கி விடுகிறது"

மேலும் நாவலுக்குள் பெண்ணியம் சார்ந்து பல விஷயங்கள் பேசப்படுகின்றன. பதிவிரதை என்னும் பதம் யாருக்கு பொருந்தும் ? ஒரு பதியை கொண்டவளுக்கா அல்லது அவளது கன்னித்தன்மைக்கா ? இந்த விஷயமமும் ஆராயப்படுகிறது. இந்த விஷயங்களே மனிதன் கட்டி வைத்த எல்லைக் கோடுகள் என்பதை ஆசிரியர் நிறுவுகிறார். ஒடுக்கப்படுதலையே தர்மம் என கட்டி வைத்திருக்கிறார்கள். அது தான் தர்மமா என கேட்டுக் கொண்டே நித்யகன்னி மனதிற்குகந்த காலவ முனிவருடன் ஒடுங்க வேண்டும் என ஆசைப்படுவது நாவலின் உச்சகட்ட Nuance.

உசிநீரன் சொல்லும் சில வார்த்தைகளுடன் பத்தியை முடிக்கிறேன். ஒவ்வொன்றும் பொன்மொழிகள் என்பதில் சிறு ஐயமும் இல்லை.

"வாழ்க்கையை ஒன்று ரசிக்க வேண்டும். முடியாவிட்டால் அதைத் துறந்து காட்டிற்கு ஓடிவிட வேண்டும். காட்டுக்கு ஓடியவர்கள் சமூக வாழ்க்கையில் குறுக்கிட விரும்புவது - விறகு வெட்டி பூச்செடியை  கோடரியால் தொடுவது போலத் தான்"

"எது யாருக்கு அறம் என்பதை அறுதியிடுவது யார் ? எப்படி ?"

"தபஸ்வியின் தர்மத்தை இல்லறத்தார் மீது திணிப்பதால் என்ன பிரயோசனம் ? சமூகத்துக்கு விதி வகுக்கும் சான்றோர்கள், சமூகம் என்பது சாதாரண மனிதர்களால் ஆனது என்பதை நினைவில் வைக்க வேண்டும். சமூகத்தின் சாதாரண மனிதர்கள் தங்களைப் போல் மிக உயர்ந்தவர்களென்றோ, அல்லது மிக நீசத்தனமானவர்கள் என்றோ எண்ணி அவர்கள் சமூக தர்மம் வகுத்தால் அது மனித இனத்தை பெரும் இன்னலுக்கு ஆளாக்கிவிடும்."

மாதவியின் மனம் நாவலின் கடைசியில் செல்லும் இடம் ஒரு விடுதலைக் கீற்றை ஆசுவாசத்தை அளிக்கிறது. அது பரிதாபமாக இருப்பினும் அதுவே அவளுடைய உலகம். அவளுடைய தர்மம். இதையும் உசிநீரன் ஓரிடத்தில் சொல்கிறான். அதுவே நித்யகன்னி. அதுவே நாவலின் கூற்றும் கூட.

"மனுதர்மமே முடிவான மனித தர்மம் அல்ல. தர்மம் காலத்திற்கும் சூழ்நிலைக்கும் தகுந்தபடி வளைந்து கொடுக்க வேண்டும். மனிதனுக்காக, மனிதன் உயர்வு பெறுவதற்காகத் தான் தர்மம். தர்மத்திற்காக மனிதன் அல்ல. . .  ஏன், மனுதேவர் பெண்ணைப்பற்றி என்ன சொல்கிறார் ? எந்த இடத்தில் ஸ்த்ரீகள் பூஜிக்கப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் மகிழ்ச்சி அடைகிறார்கள். எங்கு அவர்கள் பூஜிக்கப்படவில்லையோ அங்கு சகல காரியங்களும் பயனற்று போகின்றன."

இப்படி நாவலில் நமக்கு போதனைகளாக கிடைக்கும் விஷயங்கள் அநேகம். மேலும் நாவலில் அத்தியாயங்களுக்கு வசனங்களிலிருந்து சிறு வரியை மட்டும் எடுத்து தலைப்பாய் வைத்த விதம் மிகப் பொருத்தமாய் இருக்கிறது.

முன்பு சொன்னது போலவே இது போன்ற நாவல் இன்னமும் எத்தனை ஆண்டுகள் ஆயினும் எந்த எழுத்தாளர்கள் இடும் முதல் பத்து நாவல் பட்டியலில் நிச்சயம் இருக்கும். அப்படியில்லையெனில் அவர்கள் வாசிக்கவில்லை என்பதே அர்த்தம்!

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

பகிர்வின் முடிவு வரிகள் நூலில் சிறப்பிற்கு ஓர் சான்று... நன்றி...

Post a comment

கருத்திடுக