Memories of Underdevelopment - 1968

ஒவ்வொரு நாட்டிற்கும் பிரதானமானதும் பிரத்யேகமானதும் கலாச்சாரம் தான். அது அம்மக்களால் உருவாக்கப்படுகிறது. அச்சமூக கும்பலில் சிக்கியிருக்கும் ஒரு மனிதனுக்கு அந்த கலாச்சாரம் காலப்போக்கில் ஒரு பெருநோயாகி விடுகிறது. சின்ன உதாரணம் நம் நாட்டையே எடுத்துக் கொள்ளலாம்.

க்ளூமி சண்டே என்னும் ஒரு ஜெர்மானிய திரைப்படம். அந்தபடத்த்ல் ஒருத்தி இரண்டு பேரை காதலிக்கிறாள். இரண்டு பேருடன் உறவு கொள்கிறாள். இந்த எல்லா விஷயங்களும் காட்சியாக படத்தில் காண்பிக்கப்படுகிறது. அந்த இருவருக்கும் இதில் எந்த ஒரு மனஸ்தாபமும் இல்லை. படத்தில் இது காதலாக சித்தரிக்கப்படுகிறது. இந்த கதையை அல்லது கதையம்சத்தை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியுமா ? இந்த கேள்விக்கு நிச்சயம் நம் பதில் இல்லை என்பதாகத் தான் இருக்கும். காரணம் நாம் ராமாயணத்திலிருந்து சமகாலம் வரை கற்பொழுக்கம் என்னும் கற்பிதத்தினுள் சிக்குண்டு கிடக்கிறோம். பெண்ணொருத்தி நண்பனுடன் பைக்கில் சென்றாலே பாவச் செயல். கற்பொழுக்கம் சதவிகிதம் சதவிகிதமாக குறையப்படுகிறது என்று தான் அர்த்தம்.

இந்த நிலையில் நாம் கலாச்சாரம் என்பது ஒரு நோய் எனக் கொள்வது தவறில்லைதானே ? நமக்குள் ஒரு comfort zone ஐ வரைந்து கொண்டு அதைத் தண்டி சிந்திக்கவோ கொண்டாடவோ ரசிக்கவோ மறுக்கிறோம். இதன் சின்ன வெளிப்பாட்டை நம்மால் ஆடையிலேயே காண முடியும். மாற்றுவது என்பது மிகவும் கடினமான ஒன்று.

கலாச்சாரம் சார்ந்த சின்ன விஷயத்தை மாற்றக் கூட நாம் பல காலத்திற்கு காலத்தின் மூலம் பயணிக்க வேண்டிய நிர்பந்தத்துடன் இருக்கிறோம். இங்கே எல்லாம் அறம் சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் அடிப்படை வாதிகள். இந்த பெருநோயை மிக அழகாக ஒரு படம் பேசுகிறது. அந்தப்படம் தான் Memories of Underdevelopment. இது ஒரு க்யூப திரைப்படம். ஸ்பானிஷ் மொழி.


க்யூபா நாடு பல புரட்சிகளை கண்டுள்ளது. இப்படம் பட்டிஸ்டாவின் ஆட்சி நீக்கத்திலிருந்து அமேரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையில் நிகழ்ந்த கோல்ட் வார் வரையிலான க்யூப நாட்டுணர்வை பேசுகிறது. மேலும் இந்தப்படம் பேசும் எல்லா விஷயங்களும் அடிமைபட்டு விடுதலையடைந்த எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். இந்தியாவிற்கும் பொருந்தும்.

படத்தின் நாயகன் செர்ஜியோ. அவன் ஒரு எழுத்தாளன். எழுத்தாளன் கலாச்சாரத்தின் அடையாளம். ஒரு கலாச்சாரத்தினை நிறுவுபவனும் அதை மாற்றக் கூடியவனும் எழுத்தாளன் மட்டுமே. அது இப்படத்தில் வேறு விதமாக காண்பிக்கப்படுகிறது. இந்தப் படத்தில் அவன் போர்கீஸிய எழுத்து முறையை பின்பற்றுபவன் என சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

இது நாள் வரை போர்கீஸிய எழுத்துமுறையெனில் அது வார்த்தையின் பின் பல பின்புலங்களை வைத்து அமைவது என நினைத்திருந்தேன். ஆனால் இந்த பின்புலங்கள் ஒரு நிலவியலின் கலாச்சாரத்தையும் அரசியல் நிலையையும் கொண்டிருக்க வேண்டும் என்பதே போர்கீஸிய முறை. இது ஃப்ரேஞ்சு நாட்டிலிருந்து வந்த ஒரு முறையாம்.

நாயகனின் மனம் வெவ்வேறு விதமாக காண்பிக்கப்படுகிறது. முதலில் அவனின் கலாச்சார நிலைப்பாடு. அவன் க்யூபாவின் underdevelopment காலத்தை ஒவ்வொரு அணுவாக கவனித்து வருபவன். அப்போது அவன் மனம் கலாச்சாரத்தின் இருவேறு நிலைகளுக்குள் சிக்கிக் கொள்கின்றன. ஒன்று ஐரோப்பிய கலாச்சாரம் மற்றொன்று அமேரிக்க கலாச்சாரம். மக்கள் எல்லோரும் ஐரோப்பிய கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள். நாயகனோ அமேரிக்க கலாச்சாரத்தை பின்பற்றுகிறான். அதுவே உலகியலின் பொதுவான கலாச்சரம் என மனதளவில் ஸ்திரமாக இருக்கிறான். மற்றவர்களை மாற்ற நினைக்கிறான்.

அடுத்து நாயகனின் ஆணாதிக்க சுபாவம். இந்தப்பகுதி பாலியல் பகுதிகளையும் அலசுகின்றது. அவனுக்கு காமம் பொருளியல் ரீதியாக தேவைப்படுகிறது. அதற்கு அவன் அணுகும் பெண்கள் அவர்களுக்கும் அவனுக்கும் இடையே நிகழும் மனப்போர் அதன் பௌதீக வெளிப்பாடு எல்லாம் செர்ஜியோவின் குணத்தை கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு காண்பிக்கிறது. அவனுக்குள் இருப்பது ஆணாதிக்க குணம் மட்டுமல்ல, கலாச்சாரம் சார்ந்த ஆணாதிக்க மிருகம்.

அடுத்து க்யூபப் புரட்சி. இதுவும் நாயகனுக்கு பொருளியல் அளவில் மட்டுமே ஒழிய முழுமையாக இல்லை. எதிலுமே முழுமையடையாமல் தனக்குள் இருக்கும் ஸ்தூலங்களை பதிவு செய்து காலத்தினிடையில் தன் இருத்தலை உறுதி செய்து கொள்கிறான். பதிவு செய்த விஷயத்திலிருந்து தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்னும் எண்ணம் அவன் வசம் இல்லை. இந்த நிலையில் தன் குழப்பமான நிலைக்கு மாற்றாக அவன் தேர்ந்தெடுக்கும் விஷயம் என்ன என்பது படத்தின் அடிநாதமாக இருக்கிறது. 

படத்தின் முதல் காட்சியும் கடைசி காட்சியும் ஒன்றேதான். அது ஒரு கொண்டாட்டமான ஒரு குழு. நடனமாடுகிறார்கள். பாட்டு பாடுகிறார்கள். இசைக்கலைஞர்கள் இசை இழைத்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு துப்பாக்கிச் சூடு. ஒருவன் இறக்கிறான். அவனை சிலர் தூக்கி செல்கின்றனர். இது எதன் குறியீடு என்பதை படத்துடன் பாருங்கள். படம் தன் தாக்கத்தை நம்முள் நிச்சயம் விட்டு செல்லும்.

இதைத் தாண்டி நிறைய விஷயங்கள் படத்தில் இருக்கின்றன. படத்தை யூடியூபிலேயே காணலாம். அதன் லிங்க்


Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

// கலாச்சாரம் என்பது ஒரு நோய் // நல்லது...


வாழ்த்துக்கள்...(!)

Post a comment

கருத்திடுக