வனநீலியின் வதனவேட்கை

Stockholm syndrome என்னும் ஒரு உளவியல் ரீதியான பிரச்சினை இருக்கிறது. அது சொல்வதாவது யாரேனும் ஒரு அந்நியர் நம்மை கடத்தி பணயக் கைதியாக வைத்திருக்கிறார்கள் எனில் அவர்கள் மீது நமக்கு ஒரு அன்பு ஏற்படும் என்பதே அந்த மனநோய். இதை வேறு விதமாக அணுக நினைக்கிறேன். நிலவியல் சார்ந்தும் இது நிகழலாம். நாம் பணி ரீதியாக குறிப்பிட்ட காலகட்டத்திற்கு நாமறியா இடத்தில் இருக்க வேண்டி வரும் எனினும் அந்த இடத்தை நமதாக்கிக் கொள்கிறோம். மனம் தனதாக்கிக் கொள்கிறது. இது எதனால் நிகழ்கிறது எனில் அந்த நிலம் சார்ந்து நாம் அறிந்து கொள்ளும் விஷயங்களே. நல்ல நண்பரொருவர் நமக்கு அடுக்கடுக்காக கதை சொல்கிறார்கள் எனில் கதையினால் நாம் ஈர்க்கப்பட்டு அங்கேயே நிலை கொள்கிறோம். இது கூட அந்த கதை நமக்குள் சென்று ஏதேனும் விஷயங்களை செய்தாலொழிய எதுவும் நிகழப்போவதில்லை. இதுவும் ஒரு வகை காதல் தான். இந்தக் காதல் ஒவ்வொருவருக்குள்ளேயேயும் வெளியில் சொல்லமுடியாதபடி படிமங்களாய் படிந்தே இருக்கிறது. அப்படியொரு படிமத்தை நாவலாக்கியிருக்கிறார் ஜெயமோகன். வாசித்த நாவலோ "காடு".


சிறுவயதிலிருந்து நான் வனத்தை கண்டதில்லை. சமீபத்தில் நான் திருவையாறு செல்ல நேர்ந்தது. வெகு நாட்களாக அங்கு செல்ல வேண்டும் என பிரயாசை கொண்டிருந்தேன். தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் இடமெங்கும் வயல்வெளிகள். பார்க்கவே எனக்கு ஆனந்தமாய் இருந்தது. அதற்கான முக்கிய காரணம் நான் காணாத ஒன்று. சிறுவயதில் அவ்வப்போது கண்டதுண்டு. சினிமாக்களில் காண்பிப்பது போல நீண்டநெடும் இடங்களை வளைத்து போட்டு இருக்கும் இயற்கை சாம்ராஜ்யங்களை நான் கண்டதில்லை. எங்கு வயல்வெளிகளை கண்டாலும் என்னையறியாமல் கால் நின்றுவிடும். அதை ரசனை என சொல்லி அடக்கி விட முடியாது. சொல்ல முடியாத அனுபவமே அது.

இது எனக்கு மட்டுமே தோன்றும் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் மனிதனுக்கு கால வெள்ளத்தில் ஏதேனும் ஒரு தருணத்தில் அவனறியாமல் நிகழ்க் கூடிய ஒன்று என்பதை காடு நாவல் தெளிவாக பேசுகிறது.

கிரிதரன் என்னும் நாயகன் காட்டினுள் வேலைக்காக செல்கிறான். அவன் நகர பிரக்ஞை கொண்டவன். அவனின் பார்வையில் காடு விரிவதும், காட்டினுள் இருப்பவர்கள் சொல்லும் கதைகளும் அது அவனுள் ஏற்படுத்தும் தாக்கமும் அங்கு அவன் காணும் மலையன் இனத்து பெண்ணும் காதலும் காட்டினுள் நிகழும் அரசியல் பிரச்சினைகள் என நாவல் கதையன்றி கதையாய் செல்கிறது. அங்கு சொல்லப்படும் கதை வனநீலி என்பவளைப் பற்றி. அக்கதையை பின்வரும் லிங்கில் அறிந்து கொள்ளலாம் - http://raja-rajendran.blogspot.in/2013/07/blog-post.html

காட்டைப் பற்றி சொல்லும் பகுதிகள் வாழ்வில் ஒருமுறையேனும் காட்டை கண்டிறவேண்டும் என தூண்டுகிறது. அதற்கான காரணம் நாவலில் ஒரு வரியில் சொல்கிறார் காடெனில் மரங்கள் மட்டுமல்ல என. இந்நாவலை வாசிக்கும் போது மனிதனின் ஆசை நுழையாத, இயற்கையின் படைப்புக்கொப்ப இருந்து வரும் பசுமை நிறைந்த இடமே காடு என அறியமுடிகிறது. இதை நாவல் முழுக்க எனக்குள் உணர்ந்து கொண்டிருந்தேன்.

கூர்க் மலைக்கு கல்லூரியில் சென்ற போது மூங்கில் காடு என்னும் இடத்திற்கு அழைத்து சென்றனர். அது சுற்றுலா இடம். வணிக ரீதியான இடமும் கூட. அந்த இடத்தினுள் செல்லும் போது கூட என்னால் ஒருவித அறிந்திராத மௌனத்தை உணர முடிந்தது. காடும் மௌனமும் பிரித்தறிய முடியாதது. அதை நாவலில் கையாண்டிருக்கும் விதம் நான் கண்டதை விட யதார்த்தமாக மௌனம் எப்படி இருக்கக் கூடும் என்பதை மிக அழகாக விவரிக்கிறது. 

மனிதன் பகுத்தறியக் கூடிய ஒரு மிருகமே. அம்மிருகத்திற்கு நாம் இட்ட பெயர் ஒன்றே நம்மை மேல்தட்டு நிலையில் சித்தரிக்க வைக்கிறது. ஆனால் அவர்களும் சிறியதாகிவிடும் இடம் காடு ஒன்றே. காட்டினுள் ராஜாவென நாம் அறிந்திருக்கும் சிங்கம் ராஜாவே அல்ல என சொல்கிறார். சிங்கத்தை நாம் ராஜாவாக்கியது ஒரு கற்பித வன்முறை. உண்மையில் ராஜா யானை தான் என்கிறார். இதை இங்கு குறிப்பிட்டதன் காரணம் நாம் சிறு வயதிலிருந்து சிங்கமே ராஜா என அறிந்து வந்திருக்கிறோம். ஜெயமோகனோ இந்நாவலில் புதியதொரு காட்டை நமக்களிக்கிறார். இப்போதிருக்கும் நகரமயமாக்கலில் எல்லோருக்குமே காடு அறிந்திராத அற்புதம் நிறைந்த ஒன்றாகத் தான் இருக்கும். அப்போது காட்டின் ராஜா யானையெனில் அதை உள்வாங்க நமக்கு நேரம் பிடிக்கும். அதற்கொப்ப நாவலில் ஒரு மிகப்பெரிய படிமமாய் யானை அமைந்திருக்கிறது. கீறக்காதனே(நாவலில் வரும் யானையின் பெயர்) காட்டின் தலைவனாய் எனக்கு தெரிந்து கொண்டிருந்தான்.

பெயர் எனும் போது தான் காட்டை நாம் நிர்மூலமாக்கும் செயல் மரங்களை வெட்டுவதில் தொடங்கவில்லை எனத் தோன்றுகிறது. நாவலிலும் அப்படியே வருகிறது. காட்டு திசைகளற்றது. உருளையைப் போல. எங்கும் எப்படியும் செல்ல வழிவகுக்கும் ஒரு பகுதி இந்த காடுகள். அந்த காடுகளினுள் நாம் சாலை அமைப்பது மூலமும், காட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பெயர் வைப்பது மூலமும் நாம் காட்டை, அதன் தன்மையை அழித்துவிடுகிறோம். குறியீட்டினுள் ஒரு உலகத்தை அடைத்துவிடுகிறோம். இருந்தும் ஒரு இனத்தின் தேவை மற்றொரு இனத்தை அழித்தே வளர்கிறது.

நாவலில் இரண்டு நீலிகள் வருகிறார்கள்.ஒன்று வேலை செய்யும் இடத்தில் சொல்லப்படும் கதையின் வனநீலி. மற்றொன்று நாயகன் மையல் கொள்ளும் மலையன் இனத்து நீலி. ஆனால் இரண்டையுமே நாயகன் அறிந்திருந்தமையால் அவன் கொள்ளும் கலவை உணர்ச்சிகள்(Mixed feeling) வாசிக்கவே அருமையாய் இருக்கிறது. காடு பயமுறுத்தவும் செய்யும் மையல் கொள்ளவும் செய்யும். அப்படி நீலியும் வனநீலியும் அவனுள்ளும் அவர்களின் கதையை எழுத்தின் மூலம் நம்முள்ளும் ஜெயமோகன் ஆரோகணம் செய்கிறார். நாவல் முடிந்தும் நீலி நம்முடனேயே தான் இருக்கிறாள்.

ஜெயமோகன் நாவலின் இடையிடையில் சொல்லும் தத்துவங்கள் ஒவ்வொன்றும் அதகளமாய் இருக்கிறது. அவை காடு சார்ந்து இருப்பினும் ஒரு புதியதொரு உலகத்திற்கு இட்டு செல்கிறது. கதை மிக மிக மெல்லிய சரடு தான் ஆனால் இடையிடையில் வரும் விஷயங்கள் எங்கோ அழைத்து சென்று நானறியா என்னுள் இருக்கும் காட்டினுள் என்னை இறக்கி வைக்கிறது. குறிப்பாக நாயகன் காட்டினுள் தொலைந்து போகும் போதெல்லாம் எழுத்து நம்மையும் பீதி கொள்ள வைக்கிறது.

நாவலினிடையில் ஜெயமோகன் அறிவு மற்றும் அனுபவம் இரண்டிற்குமான பெரியதொரு வித்தியாசத்தை மிக எளிமையாக சொல்கிறார். அனுபவமே வாழ்க்கைக்கு தேவையாக இருக்கிறது. அறிவு ஒரு கற்பிதம். நாம் எதில் படிப்பினை கொண்டிருக்கிறோமோ அதற்கொப்ப நம் அறிவு அனுபவத்தை ஆராயும். இதை அவர் சொல்வதாவது
"ஒரு சாதாரண தெருநாய் திரும்பி நின்று முறைத்தால் அறிவும் தர்க்கமும் உடனே அறுந்து மறைந்துவிடுகின்றன. என்னென்ன செய்தோம் என பிறகு நினைக்கும் போது ஆச்சர்யம், வெட்கம், பிரமிப்பு."
இதன் நீட்சியாய் அவர் சொல்வது இந்த அனுபவம் உருவமற்றது. அதில் சொக்கி திளைப்பவனே கவிஞன் ஆகிறான் என.

கடவுள் பற்றிய தர்க்கமொன்றும் நாவலுள் வருகிறது. சாத்தானை நியாயப்படுத்தும் தர்க்கமாக படுகிறது. மேலும் ஜெயமோகன் சொல்லும் விஷயங்கள் எல்லோரும் அறிந்ததே. ஆனாலும் அவர் கொள்ளும் மொழியில் நமக்கு எல்லாம் புதியதாய் தெரிகிறது. சாத்தானின்றி கடவுளுக்கு வேலையில்லை என்பதை மிக அழகாக சொல்கிறார். குரிசு என்னும் பாத்திரம் இப்படி பேசுகின்றது,
"... நான் இப்பம் எல்லா இடத்திலயும் சொல்லுயது இதுதான். சாத்தான வெறுக்காதிய. சாத்தான் கிறிஸ்துவக்க தூதனாக்கும். நாமெல்லாம் பாவத்தில பிறந்த பிள்ளிய. நாம சாத்தான கண்ட பிறவுதான் யேசுவை காண முடியும். சாத்தானுக்க வசனத்த கேளுங்க. யேசுவே! ஆண்டவரே! அல்லேலூயா!!! "

கடவுள் சார்ந்து வேறு வித வரிகளும் நாவலில் இடம்பெறுகின்றன. அவை
"எந்த சாமியா இருந்தா என்னடே ? மனுஷனுக்கு அறிவையும் விவரத்தையும் குடுத்தா அது சாமி. இங்க இருக்க கருங்கல்லில அதொண்ணும் இல்ல. இருந்திருக்கும். அது பண்டு. இப்பம் பஞ்சமா பாவிய வந்து கும்பிட்டு கும்பிட்டு கல்லா மாத்தி போட்டான். கருங்கல்லாட்டு. பின்ன ஒண்ணு உண்டு. அவனுக்க சாமியும் கல்லா மண்ணா மாறும். சாமிய கல்லாக்கித் தான் மனுஷன் முன்னேற முடியும்"

காட்டிற்கு நாவலில் பல்வேறு இடங்களில் கதாபாத்திரங்கள் மூலமாகவும் கதைசொல்லி மூலமாகவும் விளக்கங்கள் அளிக்கப்படுகிறது. இருந்தும் எனக்கு பிடித்தது பின்வருவது தான். காரணம் என்னுடைய வீட்டின் பின்னால் இரண்டு தென்னைகள் இருக்கின்றன. அவற்றை சமீப காலமாக ரசித்தே வருகிறேன். எனக்கு அவை தான் காடுகள். இயற்கை எல்லாம். நான் ரசித்த ஒரு விஷயத்தை அனுபவத்தை எழுத்தில் இப்படி சொல்கிறார்
"ராத்ரியில காடு ஒரு பெரிய கொண்டாட்டமா மாறிடும். உண்மையில ராத்ரிதான் காடு முழிச்சுக்குது. மனுஷங்க போத்திகிட்டு தூங்கறாங்க. தேவதைகளும் பிசாசுகளும் எல்லாமே ராத்ரிதானே கிளம்புது ? காடு மனுஷங்க வாழ்ற இடமில்லை. மனுஷனை வச்சி விளையாடற மகா சக்திகள் வாழற இடம்."

நாவலில் ஒருவன் குடிபோதையில் அயனிமரம் அயனி மரம் என சொல்லிக் கொண்டே இருப்பான். அந்த பகுதியை வாசிக்கும் போது வெண்முரசின் ஒரு அத்தியாயம் காரணமறியாமல் என்னை தடை செய்து கொண்டே இருந்தது. அந்த அத்தியாயம் - http://venmurasu.in/2014/02/10/

கூடுதலாக எதையேனும் சேர்க்கும் போது நாம் அனுபவிப்பதெல்லாம் பிம்பங்களைத் தான் என்கிறார். காடு மரங்களுக்கோ விலங்குகளுக்கோ பறவைகளுக்கோ சொந்தமானவை என்பதல்ல. அவை பார்க்கும் பார்வைகளுக்கு சொந்தமானது. பார்வையே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. இந்நாவலில் கூட காடு இயற்கையாக பிம்பமின்றி விரிகிறது. எழுத்தும் காடும் எப்படி இணைகிறது மனித உணர்வுகள் காட்டினுள் என்ன ஆகின்றன என எல்லாம் நம்மையும் உலுக்கியே செல்கிறது. கடைசியாக நாவலுக்குள்ளிருந்து நிதர்சனமான வரி ஒன்றை சொல்கிறேன். அது ஒன்றே நாவலை சொல்லும்.

"நாடு கண்டவன் நாட்ட விட்டாலும் காடு கண்டவன் காட்ட விட முடியாது. அதாக்கம் காட்டுக்க மந்திரம். இப்பம் என்னைப் பாருங்க. என்னை ஒரு ஆனை சவட்டிக் கொன்னா அதுதான் மோட்சம்"

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக