நிலவியல் நாவல்

நம் தனிப்பட்ட வாழ்க்கை வரலாறுகள் எப்போதும் நம்மைச் சுற்றியிருக்கும் நிலம் சார்ந்து அமைந்தே வருகிறது. அநேக நேரங்களில் நாம் செல்லும் ஊர்கள் நாம் வாழ்ந்த நிலம் போல இடம் போல இல்லையே எனத் தோன்றும். இந்த தோன்றலுக்கே காரணம் நம்முள் பதிந்து கிடக்கும் எண்ணற்ற ஊர் சார்ந்த எண்ணங்களின் சாரம் தான். இது நாமாக ஏற்றுக் கொண்டது அல்ல. ஊர் என்பது நமக்குள் உருவாகிப் போன ஒரு comfort zone.

மக்கள் எல்லோரும் இதைத் தான் எதிர்பார்க்கிறார்கள். இது தான் மக்களை சோம்பேறி ஆக்குவதற்கும் காரணம். நாம் நம் இடங்களை விட்டு மற்ற இடங்களுக்கு வேலை நிமித்தமாகவோ படிப்பின் நிமித்தமாகவோ செல்லும் போது தோள்களில் ஊரின் நினைவுகளை சுமந்து கொண்டே செல்கிறோம். இது இங்கு தேவையற்றது என்பதால் விட்டுவிடலாம்.

ஊர் எப்போதுமே அழகானது தான். ஊர் காடு நதி எல்லாம் நிலையானவை. எல்லாவற்றையும் கண்டு கொண்டே இருக்கிறது. மௌனமாக இருக்கிறது. எத்தனையோ குடும்பங்களின் வரலாறு அவற்றிற்கு தெரிந்திருந்தும் எதையும் அவை பெரிதுபடுத்துவதில்லை. செல்வந்தனாக இருப்பினும் ஏழையாக இருப்பினும் நிலைபொருளின்முன் சமமாகவே மாறிவிடுகின்றனர். அறம் அறப்பிழை என எதுவுமே அவற்றிற்கு தெரியாது. அப்படியொரு நிலப்பகுதியும் அங்கிருக்கும் ஒரு குடும்பத்தின் கதையையும் சமமான வர்ணனைகளுடனும் கதைக்களத்துடனும் எழுதியிருக்கிறார் வண்ணநிலவன். நாவலின் பெயர் 'கம்பா நதி"


நாவல் இருபெண்டாட்டிக் காரனின் கதையை பேசுகிறது. அதில் ஒருத்தி ஏற்கனவே மணமானவள். அவளை கூட்டிக் கொண்டு ஊரை விட்டு வந்துவிட்டான். சீட்டாட்டம் என குடும்பத்தை கவனிக்காமல் இருக்கிறான். அவனுக்கு இரண்டு குழந்தைகள். சிவகாமி மற்றும் பாப்பையா.

சிவகாமி மற்றும் பாப்பையாவின் அக்கா தம்பி உறவு மிக அழகாக யதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. தம்பிகளுக்கு எப்போதுமே அழகு அறிவு மற்றும் பெண்மை சார்ந்த விஷயங்கள் அக்காவிடமிருந்துதான் தொடங்கும். அக்காக்கள் மட்டுமே அவர்களின் முதல் அழகிகள். எந்த பெண்ணைப் பார்த்தாலும் அக்காவுடனேயே மனம் ஒப்பிடும். இந்த ஒப்பிடுதலும் நாவலில் வேறு ஒரு பகுதியில் மிக அழகாக வருகிறது.

இதற்கடுத்து எனக்கு பிடித்த பகுதியும் அது தான். பாப்பையாவிற்கும் கோமதிக்கும் இடையே இருக்கும் காதல். இந்த பகுதியில் வசனங்கள் எதுவும் இல்லை. ஆனால் மன ஓட்டமும் பௌதீக மாற்றங்களும் நாவலில் தெளிவாய் சொல்லப்பட்டிருக்கிறது. கோமதியுடன் செல்லும் போது பாப்பையாவின் மன ஓட்டமும் கோமதியின் மன ஓட்டமும் முற்றிலும் மாறுபட்டவை. கோமதியின் மன ஓட்டம் யதார்த்தமானதும் எல்லா பெண்களிடமும் இருக்கக் கூடியதும் கூட. மனம் சார்ந்த நல்லதொரு பதிவாகவே இப்பகுதிகள் தெரிகின்றன. இந்தப் பகுதிகள் எழுதப்பட்டிருக்கும் நடையும் அநாயசமாக உள்ளது. இருவரின் மன ஓட்டங்களும் எழுத்தில் ஒன்றோடொன்று பிணைந்து வந்திருக்கிறது.

மேலும் அப்பாவின் நிலை தெரிந்தவுடன் அப்பாவின் மீது அவர்கள் காட்டும் ஒரு அன்பின் வெளிப்பாடு அல்லது வெறுப்புடன் நிறைந்த அன்பு வாசிக்கவே அருமையாக இருந்தது. மிகை யதார்த்தம் என எதையும் சொல்லிவிட முடியாதபடி நாவல் அமைந்திருக்கிறது.

பாப்பையாவின் மனம் அதிர்ஷ்டங்களை நம்பி இருக்கிறது. இதை எல்லா இளைஞர்களிடமும் பெருவாரியாக காண முடியும். சின்ன சின்ன விஷயங்களில் தனது நம்பிக்கையை அடகு வைக்கும் இளைஞனாக வந்திருப்பது பாப்பையாவின் அங்கமாக உள்ளது.

ரெயினிஸ் ஐயர் தெருவைப் போலவே இங்கும் மழை சார்ந்த ஒரு வரியை எழுதியிருக்கிறார். அதோடு இந்நாவல் சார்ந்த என் குறும்பதிவை முடிக்கிறேன். மேலும் என்னுடைய பெருத்த ஏமாற்றம் வெறும் பதிவுகளாக மட்டும் இந்நாவல் முடிந்துவிட்டதே என்பது தான். 

"மழைக்குள் பேச எதுவுமே இல்லை. யாரும் மழை பெய்கிற போது பேசுகிறதே இல்லை. மழை பெய்கிற சத்தம் எல்லோரையும் பேச விடாமல் அடக்கிவிடுகிறது"

அழகியல் கொட்டிக் கிடக்கும் ஒரு நாவல் கம்பா நதி.

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

மழையை திட்டாதவர்கள் யாருமும் இல்லை...

Post a comment

கருத்திடுக