கடமை பொறுப்பு குஜிலிகும்பா

இரண்டு நாட்கள் கல்லூரி வேலையாக சென்னை சென்றிருந்தேன். நான் தங்கியிருந்த இடம் கிழக்கு தாம்பரம் அருகில் இருக்கும் மப்பேடு என்னும் இடம். இந்த இடம் அதிகம் விற்பனையாகாமல் இருந்து வந்திருக்கிறது. அதற்கான காரணம் அருகே இந்திய விமானப்படையின் கேம்ப் ஒன்று உள்ளது. அவர்கள் கேட்கும் போது அங்கு தங்கியிருப்பவர்கள் தங்கள் நிலத்தையோ மனையையோ திருப்பி தர வேண்டும் என்னும் சட்டம் இருந்ததாம். தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார்களாம். மேலும் முன்பு வி.ஐ.பிக்கள் வரும் பொழுது அதனை சுற்றியிருக்கும் எல்லா இடங்களிலும் ஜேமர்களை வைத்து தொலை தொடர்பை துண்டித்து விடுவார்களாம். இந்த நிலை இப்போது இல்லை. இதனால் வளர்ச்சிகளும் மக்கள் தங்கும் இடமாகவும் மப்பேடு மாறியிருக்கிறது.

நான் கல்லூரி வேலைக்காக செல்ல வேண்டிய இடம் மவுண்ட் ரோட்டில் இருந்தது. அங்கு இருந்த இரண்டு நாட்களும் நான் நன்கு கவனித்தது பேருந்தின் நடத்துனர்களைத் தான். அவர்களால் அவர்களுக்குள் இருக்கும் அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. சென்னை பிற நகரத்து மனிதர்களால் நிறைந்து வழிகின்றது. அவர்கள் தங்கள் வேலைகளுக்கு செல்லும் நேரங்களிலெல்லாம் பேருந்துகள் நிரம்பியே செல்கிறது. இதனாலேயே அங்கிருக்கும் பல கல்லூரிகளுக்கு நேரத்தை மாற்றி வைத்திருக்கிறார்களாம். ஒவ்வொரு கல்லூரியிலும் பேருந்துகளின் எண்ணிக்கையே ஐம்பதை தாண்டி செல்கிறது. இதன் விளைவே இந்த நல்ல விஷயம்.தாம்பரத்திலிருந்து வெகு நேரம் ஆகும் என்பதால் சீக்கிரமே கிளம்பிவிட்டேன். அப்போது தொங்கும் அளவு கூட்டமில்லை. எனக்கு எங்கு சரியாக இறங்க வேண்டும் என தெரியவில்லை. நடத்துனரிடம் கேட்டால் சொல்லுவார் என்னும் நம்பிக்கையில் கேட்டேன் அவரும் சரியாக வழி சொன்னார். இதை குறிப்பிடுவதன் கராணம் மாலையில் தாம்பரத்திலிருந்து மப்பேடு செல்லும் போது நடத்துனரால் சொல்ல முடியவில்லை. என்னாலும் எதற்கு அடுத்த நிறுத்தமாக இருக்கும் என கணிக்க முடியவில்லை. இதற்கான காரணம் முன்பே சொன்னது போல கூட்டமும் பணம் மீதான கவனிப்பும் ஏற்படுத்தும் அழுத்தம்.

ஞாயிற்றுக்கிழமை சென்னை எல்லோருக்கும் வழி வகுக்கிறது. பேருந்துகள் கூட்டமாக இல்லை. சாலையில் அவ்வளவு நெரிசல்கள் இல்லை. முந்தைய நாள் சென்றது போலவே சீக்கிரம் கிளம்பினேன். 

ஒட்டுனருக்கு பின்னால் அறுபது வயது மதிக்கதக்க வயோதிகர் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தார். அவருக்கு முன்னால் கம்பிகள் இருந்தன. தாம்பரம் சானிட்டோரியம் வரும் போது ஓட்டுனர் திரும்பி தாங்கள் வயதாக இருக்கிறீர்கள் நான் பிரேக் போடும் போது கம்பியில் முட்டிக் கொண்டு விடாதீர்கள் எதையாவது பிடித்துக் கொள்ளுங்கள் என்று சென்னைக்கென இருக்கும் பிரத்யேக விதத்தில் சொல்லிவிட்டார்.

செய்தித் தாளை மூடி வைத்துவிட்டு அவரும் சென்னைக்கென இருக்கும் பிரத்யேக மொழி நடையில் நான் பேருந்திலேயே சென்றதில்லையா செய்தித்தாள் வாசிக்கக் கூடாது புத்தகம் வாசிக்கக் கூடாது முன்சீட்டுல உட்காரக்கூடாது ரூல்ஸ் போடுற காச் மூச்சென்று கத்த ஆரம்பித்துவிட்டார். ஒட்டுனருக்கென என்ன கவலை இருந்ததோ தெரியவில்லை பேருந்தை நிறுத்திவிட்டார்.

சில சீட்டுகளை கடந்து வந்து எல்லா பெண்களையும் அழைக்க ஆரம்பித்துவிட்டார். மனிதநேயத்தின் வெளிப்பாடாக நான் சொன்னேன் இதில் என்ன தவறு இருக்கிறது என கத்த ஆரம்பித்துவிட்டார். ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு செல்பவர்கள், சிறப்பு பரீட்சைகளுக்கு செல்பவர்கள் என எல்லோரும் ஒட்டுனரிடம் பெரிது படுத்த வேண்டாம் என செல்ல சொன்னார்கள். ஒருமனதாக அவரும் வண்டியை எடுத்தார்.

இடையில் அந்த பெரியவர் கையில் வைத்திருந்த செய்தித்தாளில் ஏதோ எண்களை எழுதியிருக்கிறார். பேருந்தின் எண்ணைத் தான் எழுதியிருக்கிறார் என கற்பிதம் செய்துகொண்டு மீண்டும் பேருந்தை நிறுத்தி போலீஸை அழைத்து வந்துவிட்டார். அரை மணி நேரம் மக்களின் நேரத்தை அனுமதியின்றி திருடியிருக்கிறார். போலீஸும் எதுவும் செய்யாமல் செல்ல மட்டுமே சொன்னார்கள்.

இது கூட எனக்கு வருந்தத்தக்கதாக இல்லை. அதற்கு பின் இறங்கும் ஒவ்வொருவரும், பெண்கள் உட்பட ஓட்டுனரையும் அமைதியின் சிகரமாக மௌன விரதத்தை மேற்கொண்டிருந்த நடத்துனரையும் மானாவாரியாக வைது கொண்டே இறங்கினர்.

இதை நான் பார்வையாளனாய் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு சென்னை மற்றும் பெங்களூருகளில் இருக்கும் நடத்துனர்களின் மீது ஒரு பயம். சில்லரை இல்லையெனில் அசிங்கமாக திட்டிவிடுவார்களோ என்று. அவர்களின் வேலையே public dealing சம்மந்தப்பட்டது. இந்நிலையில் அவர்களால் மட்டும் எப்படி மக்களை எளிதில் திட்ட முடிகிறது எனத் தெரியவில்லை. எனக்கு முன்னமர்ந்தவர் கிழவரை விட அதிகமாக திட்டு வாங்கினார் என்பது குறிப்பிடதக்கது. அவரும் வயதில் மூத்தவர்.

பெங்களூருவின் பேருந்துகள் சார்ந்து அங்கு சென்ற போது ஐ.டியில் வேலைப் பார்க்கும் நண்பர் சொன்னது அதிர்ச்சியாய் இருந்தது. பேருந்துகளில் ஒரு ரூபாய் மீதி தர வேண்டிய டிக்கெட்டுகளிலெல்லாம் முக்கால்வாசி நேரங்களில் தருவதேயில்லையாம். ஒரு ரூபாய்க்கு மட்டும் இது பொருந்தாது. மேலும் அங்கு ITBL என்னும் இடத்தில் தான் ஐ.டி நிறுவனங்கள் நிறைந்து இருக்கின்றன. அங்கு செல்லும் பேருந்துகளில் முக்கால்வாசி குளிரூட்டபட்ட சொகுசு பேருந்துகள் தானாம்! அவரவர்களுக்கு பணக்காரர்களாக ஆசை பல இருப்பின் அவருக்கு பேருந்து செலவிற்காகவேனும் பணக்காரர் ஆக வேண்டும் என சொல்லிக் கொண்டிருந்தார்.

இந்த பேருந்து விஷயம் முடிந்து திட்டுகளை இருகாதுகளிலும் வாங்கிக் கொண்டு பயணிக்கும் போது முந்தைய நாள் கண்ட ஒரு ஓட்டுனரின் நினைவே என்னுள் எழுந்தது. அவர் பைக் ஒட்டுனர். கிழக்கு தாம்பரம் பேருந்து நிலையத்தில் மப்பேடு செல்லும் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னருகில் ஒரு குழு நின்று கொண்டிருந்தது. அதில் ஆறேழு ஆண்களும் மூன்று பெண்களும்.

அதிலும் கிளை உண்டானது. ஒருவன் apache பைகில் அமர்ந்திருக்கிறான். இரண்டு பெண்கள் அருகில் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். உடன் ஒருவன். சுற்றியிருப்பவர்கள் பற்றிய ஒரு கவலையுமின்றி மகிழ்ச்சியின் மிகுதியில் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் பேசிய பேச்சின் சாரம் கடைசியில் நிகழ்ந்த செயலில் தெரிந்தது. அது இரண்டு பெண்களும் அவனுடன் பைக்கில் செல்வது. இருவரும் இறுதியாக முடிவை எடுத்து ஏறி அமர்ந்தனர். அவனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. எதிரே போலீசார் ஜீப்பில் நின்று கொண்டிருக்கின்றனர். இரு பெண்களும் தங்கள்  transparent துப்பட்டாக்களால் மூக்கு வரை மூடிக் கொண்டனர். சீக்கிரம் போ சீக்கிரம் போ என கத்தினர். சில வண்டிகள் சென்றவுடன் அவனும் வேகமேற்ற பின்னமர்ந்த இருவரும் வேகத்தின் பயத்தில் அவன் தோளைப் பற்ற இருவரின் முகத்திலும் அநாயாசமான சந்தோஷம். அவன் ஹெல்மட் அணிந்திருந்ததால் அவனுடைய சந்தோஷத்தை கண்டறிய முடியவில்லை.

மப்பேடு பேருந்து வந்தது.
மவுண்ட் ரோடும் வந்தது.
கட்டுரை முடிந்தது.

பின் குறிப்பு : அன்று இரவு சென்னையிலிருந்து கோயம்புத்தூர் கிளம்பினேன். பெருங்குளத்தூரிலிருந்து செல்லலாம் என காத்திருந்தேன். எந்த பேருந்திலும் இடமே இல்லை. அப்போது ஒரு S.E.T.C பேருந்தில் ஒட்டுனர் சீட்டிற்கு பின்னால் இருக்கும் பலகை போன்ற சீட்டில் மட்டுமே இடம் கிடைத்ததால் அவருடன் பேசிக் கொண்டே வந்தேன். அனுபவமே அட்டகாசமாய் அமைந்தது. அதை ஏதேனும் புனைவில் எழுதலாம் என்றிருக்கிறேன்!!!

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

நகரத்தில் சொல்லவா வேண்டும்... அவரவருக்கு என்ன "டென்சனோ"... அதிலும் ஒட்டுனருக்கு அதிகமே...

Post a comment

கருத்திடுக