சாத்தானின் உருவம்

நான் கொஞ்சம் இந்தி அறிந்தவன். அது கூட பாட பேதம் மூலமாகவே ஒழிய பழக்கத்தினாலோ பேச்சுமுறைகளாலோ அல்ல. இதனால் எனக்கு அம்மொழியில் சரளம் இல்லை. ஆனால் அந்த மொழி சார்ந்து பயின்று கொண்டிருக்கும் போது நிறைய பக்தி சார்ந்தே கற்றேன். கபீர்தாசர், துளசிதாச்ர் இப்படி நிறைய. இவர்களின் கவிதைகளுக்குள் அக்காலத்திய ஒரு போட்டி இருந்து கொண்டே வந்திருக்கின்றது. அப்போட்டி யாதெனில் கடவுளுக்கு உருவம் தேவையா தேவையில்லையா ? கடவுளை குறியீட்டினுள் அடைக்க வேண்டுமா வேண்டாமா என்பதே அது. கபீர்தாசரின் எல்லா பாடல்களிலும் உருவமில்லாமலேயே வழிபடுவார். உருவம் வேண்டாம் என்னும் ஒரு கருத்து திணிப்பும் அவரின் கவிதைகளில் இருக்கும். இவர்களின் பாடல்களை தோஹே என்பார்கள்.

இஸ்லாமிய மதத்திலும் இந்த கருத்து மோதல்கள் இருந்து கொண்டே வருகிறது. கருத்து மோதல் என்பதை விட கருத்து சார்ந்து இருக்கும் பிரிவுபட்ட அமைப்புகள் என சொல்லலாம். என் நண்பனிடமே சில இஸ்லாமிய பண்டிகை விடுமுறைகளின் போது என்ன விசேஷம் என கேட்பேன். அவனோ இது எங்களுக்கான பண்டிகை அல்ல என ஒதுக்கிவிடுவான். உருவம் இல்லாமல் ஒளியாய் இருப்பவனே அவர்களின் எல்லாம் வல்லவனாக இருக்கிறான் என தமிழ் பாடத்தில் படித்த ஞாபகமும் வருகிறது.

இந்த பிளவுகள் கூட நூதன முறையில் உருவாக்கப்படும் ஒரு அரசியல் செயல் என்பது மறுக்க முடியாத உண்மை. உருவம் கொடுத்தோமென்றால் நாம் பரம்பொருள் என நம்புபவனை ஒரு குறியீட்டினுள் அடைக்கிறோம். அடைக்க நேரிடுகிறது. இது அம்மதத்திற்கு எதிரானது. எல்லா இடங்களிலும் நிறைந்து இருப்பவன் என்பதை பூரணமாக அம்மதம் கொண்டிருக்கிறது. இந்த உருவத்தை மையமாக வைத்தே ஒரு நாவல் அமைந்திருக்கிறது. அது கீரனூர் ஜாகிர்ராஜா எழுதிய "கருத்த லெப்பை"


கருத்த லெப்பை என்பது நாயகனின் பெயர் தான். அவனின் அன்றாட வாழ்க்கையிலிருந்து சில பகுதிகளை மட்டும் பிய்த்து நாவலாக கொடுத்திருக்கிறார். நாவல் சின்ன அளவில் இருந்தாலும் ஒரு இடத்தில் கூட சலிப்பை கொடுக்கவில்லை. முன்னுரையில் இதை நீடித்து எழுதியிருக்க வேண்டும் என ஆசிரியர் சொல்லியிருக்கிறார். அப்படி எழுதியிருந்தாலும் இப்படி வந்திருக்குமா என்பது சந்தேகத்திற்குரிய விஷயம் தான்.

இஸ்லாமிய மதக் கோட்பாடு முழுமையாக தெரியாது, வேலையில்லை, அம்மாவுடன் முறுக்கு பிழிவதை வேடிக்கை பார்ப்பதும் ஊர் சுற்றுவதும், மிட்டய்க்காரனை பார்ப்பதும், பாவாபைப் பார்ப்பதும், இரண்டு அம்மாக்களை சந்தித்து பேசுவதும் அக்காவின் வாழ்க்கையை நினைத்து புல்ம்புவதும் என அவனின் வாழ்க்கை இலக்கற்று செல்கிறது.

இருந்தும் அவனுக்குள் ஒரு தேடல் இருக்கிறது. ஒவ்வொரு பாத்திரத்திடம் ஒவ்வொன்றை காண்கிறான். மிட்டாய்க்காரன் பள்ளிக்குழந்தைகளுக்கு மிட்டாய்களை வகை வகையாய் செய்து கொடுப்பவன். அவனை கலைஞனாக ஓவியனாக மதிக்கிறான். அவனிடம் சென்று எனக்கு சைத்தானின் உருவத்தை பொம்மையாய் செய்து தர இயலுமா என கேட்கிறான். அப்போது அவன் கொள்ளும் பயமும் அதன் பின் வேறொன்றை கேட்க அதன் விளைவு கோரமாய் நாவலில் விரிகிறது. மதம் நிறைந்த மனதிற்குள் விதைக்கப்படும் ஒரு சிறு விஷயம் இந்த உருவ ஆசை. அதனால் அவன் கொள்ளும் மனப்போராட்டம் நாவலில் அப்பாத்திரம் சார்ந்து வாசிப்பவர்களுக்கு பரிதாபம் ஏற்படும் வண்ணம் அமைந்திருக்கிறது. மிட்டய்க்காரனின் பெயர் அமீது.

இரண்டு அம்மாவில் ஒரு அம்மாவின் பெயர் ராதிம்மா. அவளிடம் சென்று நாயகத்தை கனவில் காண்பது எப்படி என கேட்கிறான். அவள் சில சூராக்களை சொல்லி அவள் கண்ட நபியை வர்ணிக்கிறாள். அவனோ அதை மனத்தின் கண் வைத்துக் கொண்டு வரைந்து அமீதுவிடம் செல்கிறான்.

நாவலிலேயே பிடித்த பகுதிகள் பாவா மற்றும் கருத்த லெப்பையின் பகுதிகள் தான். பாவா ஒரு சூஃபி ஞானியைப் போன்று. ஞானிகளுக்கு மதம் என்பது தேவையே இல்லை. ஞானம் என்பது வரையரைக்கு உட்பட்டது அல்ல. மதங்கள் என்னும் பிரிவினைகள் அவற்றிற்கு தேவையும் இல்லை. எல்லா மதங்களும் பாடபேதமாக அவர்களுக்கு அமையலாம். அப்படி இந்நூலில் வரும் பாவா இந்திரன் சார்ந்த கதையையும் சொல்லி ஈர்க்கிறார். அதில் கஞ்சாவைப் பற்றி இப்படி சொல்கிறார்

"இது தேவர்களுக்கு நித்திய மூலிகை. கஞ்சா போதையில் கற்பனைகளுக்கு சிறகு முளைத்தது. கடவுள்களுக்கும் தேவர்களுக்கும் பிண்ணனியில் நம்பமுடியாத சூழ்நிலை உண்டானதற்கு இதன் போதையில் படைக்கப்பட்டது தான் காரணம்"

இது மட்டுமின்றி பள்ளிவாசலின் நிர்வாகம் சார்ந்து இரு அமைப்புகளுக்கிடையே நிகழும் அரசியலையும் இந்நாவல் பேசுகிறது. அந்த அரசியலை ஆட்டுவிக்கும் மனிதர்களின் மனம் அவர்களிடையே சிக்கிக் கொள்ளும் மக்களின் மனம் என எல்லாவற்றையும் குறையில்லாமல் பேசுகிறது.

நாவலில் இஸ்லாமிய சொற்றொடர்கள் நிறைய வருகிறது. அவற்றில் சில வட்டார வழக்காகவும் இருக்கிறது. இருந்தும் நாவலுக்குள்ளேயே எல்லாவற்றிற்குமான விளக்கம் உள்ளது என்பதால் நாவல் தன் மொழியில் எந்த ஒரு கடினத்தையும் கொடுப்பதில்லை.

நாவல் குறியீட்டை வைத்து முன்நகர்ந்தாலும் முடிக்கப்பட்ட விதம் குறியீட்டிலிருந்து யதார்த்தத்திற்கு வந்தது போல மதக் கோட்பாட்டுடனேயே முடிவடைகிறது.

அவரின் எழுத்துருவில் வாசிக்கும் முதல் நாவல். நல்ல நடை. எங்குமே என்னை சோர்வடைய வைக்கவில்லை. சீக்கிரமே அவரின் பிறநாவல்களையும் வாசிப்பேன்.

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

நாயகனின் பெயர் உட்பட நூலும் வித்தியாசமாகத் தான் இருக்கும் போல... சுருக்கமான விமர்சனத்திற்கு நன்றி...

Post a comment

கருத்திடுக