The Straight Story - 1999

இன்று ஒரு இனிய நாளாகவே அமைந்திருக்கின்றது. மாலை கோணங்கள் (http://konangalfilmsociety.blogspot.in/ - திரையிடல் சம்மந்தமான தகவல்களை இதில் அறிந்து கொள்ளலாம்) தலைமையில் நடக்கும் சினிமா திரையிடலுக்கு செல்லலாம் என்றிருந்தேன். சீக்கிரமே சென்று நிஜந்தன் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் இளைஞர் பத்திரிக்கையாளராக பணி புரிந்திருக்கிறார். இப்போது சுட்டி விகடனில் தொடராக குழந்தை திரைப்படங்கள் சார்ந்து எழுதி வருகிறாராம். அவரைக் கண்டு பொறாமையே கொள்கிறேன். அவருடைய கடின உழைப்பை பார்க்கும் போது நான் இன்னமும் பல மாதங்கள் என் உடலை குறுக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அப்படி செய்தால் மட்டுமே என்னால் நான் அடைய விரும்புவதை அடைய இயலும். அதைப் பற்றி விரிவாக வேறு ஒரு தளத்தில் எழுதலாம் என்றிருக்கிறேன்.

கோவை பெர்க்ஸ் பள்ளியில் மாலை ஆறு மணியளவில் திரைப்படம் ஆரம்பித்தது. இந்த முறை அவர்கள் திரையிட்ட திரைப்படம் David Lynch இயக்கிய The Straight Story.


எழுத்துகளில் அதிகம் வாசித்தமை எல்லாம் மனதின் மாற்று வழியே. இந்த மாற்று வழியில் உன்னதம் அடைந்தவர்கள் அதன் முழு வழியை அல்லது முழு கலையை சொல்லியிருப்பார்கள். இந்த நிலைப்பாட்டை சினிமாவில் முதன் முறையாக இப்போது தான் கண்டேன்.

முதுமை ஒரு ஆற்றமுடியாத நோய். இந்த நோய் நினைவுகளால் கூட வரலாம். சமூகத்தில் இருவகையானவர்கள் முதுமையை எட்டியவர்களாக இருக்கிறார்கள். ஒருவகை மனிதர்கள் வயதால் தோற்றத்தால் முதுமையாக இருப்பவர்கள். இன்னொருவர்கள் இளமையிலேயே தங்களுக்கு இருக்கும் உலகத்தில் முதியவர்களாக இருப்பவர்கள். இவர்கள் இருவரையும் தாண்டி ஒரு செயற்கைத் தனம் மிகுந்த கூட்டம் ஒன்று இருக்கின்றது. அவர்கள் செய்பவைகள் அனைத்தும் பிறரிடம் காட்ட நினைக்கும் பிம்பங்கள். அல்லது தங்களுக்குள் சவாலென வைத்திருகும் சில தடைகளை மனதளவில் எகிறி குதித்தல். இந்த வகை மனிதர்களை நான் energetic என்றே சொல்ல நினைக்கிறேன்.

இப்படிபட்ட ஒரு மனிதனின் கதையை சொல்வது தான் The Straight Story இன் கதை. கதையின் நாயகன் அல்வின் ஸ்ட்ரெய்ட். அவனுக்கு வயோதிகம் உடல் அசைவுகளை கட்டுபடுத்துகின்றது. அப்போது அவனுக்கு மருத்துவர் இரண்டு கைத்தடியை உபயோகபடுத்துங்கள் என்று சொல்கிறார். கைத்தடியே அவருக்கு மனதளவில் எதிரியாய் இருக்கின்றது. அப்போது அவருடைய சகோதரன் லைல் ஸ்ட்ரெய்டிற்கு ஸ்ட்ரோக் வந்துவிடுகிறது. பத்து வருடங்கள் பேசாமல் இருந்த சகோதரர்கள். அவரைக் காண செல்ல வேண்டும். வண்டி ஓட்டுதலுக்கான லைசன்ஸ் கிடையாது. தானே செல்ல வேண்டும் என புல் வெட்டும் வண்டியில் ஒரு கண்டெயினர் போன்ற ஒன்றை இணைத்து அவர் செய்யும் நீளமான பயணமே படத்தை இனிமையாக கொண்டு செல்கிறது.

இந்த படத்தில் நிறைய விஷயங்களை என்னால் கொண்டாட முடிந்தது. அவற்றில் குறிப்பான ஒன்று இசை. இப்படத்தில் இசை தனக்கென பிரத்யேகமான சில அம்சங்களை கொண்டிருக்கின்றது. இப்படம் நிறைய தேவையற்ற காட்சிகளை கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் அவையெல்லாம் இசைக்காக அமைக்கப்பட்ட காட்சிகள். அநேக இடங்களில் காட்சிகள் முடிந்து விடுகின்றன ஆனாலும் அவை அனைத்தினையும் இன்னமும் கொஞ்ச நேரம் இழுப்பது போல் ஏதேனும் ஒரு பொருளை நோக்கி காண்பித்து செல்கிறார். அப்போது ஒலிக்கப்படும் இசை ஒளியில் காட்டும் மௌனத்தை மிக அழகாக நிரப்புகின்றது.

அல்வின் மருத்துவரிடம் அமர்ந்திருக்கும் போது அங்கே கைத்தடி காண்பிக்கப்படுகிறது. அப்போது அவரின் மனதில் இதை வாழ்க்கையில் உபயோகபடுத்தினால் முதுமை தெரிந்துவிடும் என்பது போல முகத் தோற்றத்தை காண்பிக்கிறார். ஒரு ஸ்ட்ரிங்கை சொடுக்கி விட்டால் அங்கே ஒரு ஓசை எழும்பும். ரீங்காரமிடும். இந்த இசையை அவரின் முக உணர்ச்சிகளுடன் இணைத்து காண்பித்த போது திரையுடன் கிறங்கியே சென்றேன்.

அதே போன்று அவர் செய்யும் பயணங்களுக்கு மட்டும் தனியாக ஒரு இசையை வைத்திருப்பது அதகளம். அந்த இசை ஒவ்வொரு இடத்தில் வரும் போதும் பயணத்தின் அனுபவத்தை கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

பயண ரீதியான திரைப்படங்களில் வேறு ஒரு வகையை பார்த்த அனுபவமும் கிடைத்தது. the motorcycle diaries படமே பயண ரீதியான படங்களில் உன்னதமானது என பார்த்ததிலிருந்து கொண்டாடிக் கொண்டுருந்தேன். இந்தப் படமோ அதை விட முழுமையாக மாறுபடுகின்றது. அதற்கான காரணம் படத்தில் laurens என்னும் இடத்திலிருந்து mount zion என்னும் இடம் வரைக்கும் செல்லும் இடங்களை காண்பித்துக் கொண்டு தான் செல்கிறார். மனதிலோ எதுவுமே நிற்கவில்லை. இது பிடித்தும் இருக்கிறது. இடத்தை காண்பித்து அதற்கான அனுபவத்தை இசையில் இழையாக்கிவிட்டு இடத்திற்கான காட்சி அழகியலை முக்கியமற்றதாக்கிவிட்டு அடுத்த நிலைக்கு செல்கிறார். எல்லா இடங்களிலும் நாயகனின் நடிப்பிலும் இயக்குனர் வைக்க நினைக்கும் குறியீடுகளில் அதிக கவனம் செலுத்துகிறார்.

படம் முழுக்க குறியீடுகள் நிறைந்து இருக்கிறது. என்னை மிகவும் கவர்ந்த ஒன்றை சொல்கிறேன். வழியில் ஒரு பெண்ணைப் பார்க்கிறான். அவள் வீட்டை விட்டு ஐந்து மாதங்களாக வெளியில் சுற்றிக் கொண்டிருப்பவள். அவளிடம் சொல்லும் ஒரு சின்ன கதை
"என் மகன்களிடம் ஒரு குச்சியை கொடுத்தேன். அவர்கள் உடைத்துவிட்டனர். குச்சிகளை அடுக்கி கொத்தாக கொடுத்தேன். அவர்களால் உடைக்க முடியவில்லை. காரணம் அவை தான் குடும்பம்."
இது பேசிக் கொண்டிருக்கும் போது குச்சிகளை எரிய வைத்து குளிர் காய்கின்றனர். அந்த இரவு தூங்கிவிட்டு அடுத்த நாள் எழுந்து அந்த இடத்தை அவர் பார்க்கிறார். அங்கே இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று கொத்தாக இருக்கும் குச்சிகள். அதற்கு பின் சில குச்சிகள் எரிந்து புகை கொண்டிருக்கின்றன. இரு வேறு வயதினருக்கு உரிய மன உணர்வுகளை ஒரே ஷாட்டில் குறியீடுகளாக வைத்திருப்பது காட்சியில் அவ்வளவு உன்னதத்தை கொடுத்தது. இது போன்று நிறைய குறியீடுகள் படத்தில் நிறைந்து இருக்கின்றது.

திரைப்படத்தில் இருக்கும் அல்வின் ஈகோ நிறைந்த மனிதன். அவன் மனதில் ஒரு கோட்பாடு நிறைந்தே இருக்கிறது. இளமையில் முதுமையை நினைப்பதும் முதுமையில் இளமையின் நினைவும் எப்போதும் கொடுமை என. இந்த இரு உணர்வையும் முக பாவனையில் மிக அழகாக காண்பித்து எளிதில் நம்மை திரையினுள் உள்ளிழுக்கிறார். அவருக்குள் இருக்கும் ஈகோவை தாண்ட நினைத்து அவர் செய்யும் பயணம் வெறும் பயணமாக அல்லாமல் தனக்கு தானே நிகழ்த்திக் கொள்ளும் தர்க்க குதர்க்க ரீதியான உணர்வு சார் உரையாடலாக இருப்பதால் படமே இசை போல நாவலின் வாசிப்பை போல நம்மை உருக வைக்கிறது.

அதிலும் வயோதிகத்தில் அவர் செல்லும் பயணத்திற்கு சொல்லும் விஷயம் பயணம் என்னால் மட்டுமே ஆரம்பிக்க வேண்டும். நிகழ்த்தப்பட வேண்டும். பிறர் ஓட்டி அதில் பயணம் செய்ய கூடாது. இந்த வரிகள் படத்தில் வந்த உடன் சில நேரம் காட்சி சென்று கொண்டிருந்தாலும் இதே வரிகளை அசை போட்டுக் கொண்டிருந்தேன்.

இதைத் தாண்டி எனக்கு சொல்லத் தெரியவில்லை. அதே நேரத்தில் கிறக்கமும் குறையவில்லை. இப்படம் பார்த்தால் எல்லோரும் செய்யும் ஒரு செயலைத் தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன் - வானத்தை வெறித்துக் கொண்டிருக்கிறேன். எனக்குள்ளேயே ஒரு இசை இழைந்து கொண்டிருக்கிறது. எந்த இசை எனத் தெரியவில்லை. அறியவும் விரும்பவில்லை. படத்தில் தெரிந்த மௌனத்தை என்னுள்ளேயே வியாபிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்....


Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல விமர்சனம் ரசனையுடன்....

வாழ்த்துக்கள்...

Post a comment

கருத்திடுக