Ship of Theseus - 2012

கடந்த ஞாயிற்றுக்கிழமை கோணங்கள் சார்பில் கோவையில் நிகழ்ந்த திரையிடலில் இப்படம் திரையிடப்பட்டது. சென்ற பதிவில் சொல்லியிருந்தது போலவே என் உடல் நிலை இங்கும் சரியில்லை. அரைகுரையாக புரிதல் கொண்டேன். அதை எழுதலாம் என்றிருக்கிறேன்.

தத்துவங்கள் சார்ந்த நூல்களை எடுத்துக் கொண்டாலே நாம் புறக்கணிப்பை முதன்மையாய் கொள்வோம். அதற்கான காரணம் தத்துவங்கள் எப்போதும் paradox தன்மையை கொண்டிருக்கின்றன. அவை நமக்கு நன்மையையே கொடுத்தாலும் ஒரு போதும் நேரடியாக கொடுப்பதில்லை. சிறந்த உதாரணம் ஜென் கதைகள். ஒருக்கணம் நம் மனம் புரிதல் கொண்டுவிட்டால் வாழ்வியல் முறையே மாறக் கூடும் . அது தான் தத்துவங்களின் பலம்.

இந்நிலையில் தத்துவத்தை படமாக எடுத்தால் அதை பார்க்க முடியுமா ? இது சந்தேகத்திற்கு உரிய கேள்வி தான். இருந்தும் அதில் வெற்றி கண்டுள்ளது ஒரு இந்தியப்படம். அது தான் Ship of Theseus. படத்தின் ஆரம்பத்திலேயே வார்த்தைகளில் கிரேக்கத்தின் தத்துவம் சொல்லப்படுகிறது

"தெஸ்யூஸ் கப்பலில் செல்கிறான். அந்த கப்பலில் இருக்கும் எல்லா பாகங்களையும் மரத்தால் மாற்றுகிறான். மாற்றியபின் அவனுக்கு ஒரு கேள்வி எழுகிறது. இதுவும் அதுவும் ஒன்றா ? மூலம் தான் இதா என ?"

இது சார்ந்து என் நண்பனிடம் பேசும் போது அவன் சொன்ன விஷயம் இது அர்த்தமற்ற கேள்வி என்று. காரணம் நாம் காண்போன் என்னும் இடத்தில் உள்ளோம். அந்த தளத்தில் இருந்து அணுகும் போது இரண்டுமே ஒரே செயலைத் தான் செய்கின்றன என்றான். நான் என் தளத்திலிருந்து ஒரு பதில் கொடுத்தேன். நான் நானூறு பக்கங்களுக்கு ஒரு நாவல் எழுதுகிறேன் என வைத்துக் கொள்வோம். எழுதி திருத்தி க்ளாஸிக்காக்கி உன்னிடம் கொடுத்துவிடுகிறேன். நீயே உன் பெயரை போட்டு வெளியிட்டுக் கொள் என்றும் சொல்லிவிடுகிறேன். அதன் படி நீயும் வெளியிட்டுவிட்டாய். அதன் பின்  ஏன் எனக்கு அந்த படைப்பு அந்நியமாகிறது ? நான் எழுதாத ஒரு படைப்பு போல தோன்றுகிறதே ஏன் என கேட்டேன். இந்த வார்த்தைகளை அல்லது உதாரணம் எனக்கே எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் இது தான் அந்த தத்துவமும் கூட. எல்லாம் சுயம் சார்ந்தது.

மரபு சார்ந்து சொல்லும் பழமொழியே இப்பிறவியில் நல்லது செய்தால் அடுத்த பிறவியில் மேன்மையாய் பிறப்பாய் என. கிட்டத்தட்ட இதன் ஒரு கிளையாகவே அதை கருதுகிறேன். நாம் செய்யும் செயல்களுக்கு, நம்மால் ஆகும் செயல்களுக்கு நமக்குள் நாமே காரணமாக இருக்கிறோம். இதை அப்படியே படமாக்கியிருக்கிறார் ஆனந்த் காந்தி. அவருக்கு என மனமார்ந்த பாராட்டுகள்.

திரையிடலுக்கு முன் அதை நிகழ்த்துபவர் சொன்ன ஒரு விஷயம் ஆச்சர்யமாகவும் இருந்தது. அந்த இளைஞர்கள் இப்படத்தை இலவசமாக இணையத்தில் ஏற்றி யார் வேண்டுமெனினும் பார்க்கலாம் என்னும் வசதியை ஏற்படுத்தியிருக்கின்றனர். என் அன்பான வேண்டுகோள் தயை கூர்ந்து இப்படத்தை பாருங்கள். இந்தியாவில் இப்படி ஒரு முயற்சி, க்ளாஸிக், சமகாலத்தில் வருவது அரிதினும் அரிது.


படத்திற்கு முன் ஆனந்த் காந்தியின் பேட்டி ஒன்றை காண்பித்தனர். அதில் இரண்டு விஷயங்கள் பிடித்திருந்தன. ஒன்று இப்படத்தில் அநேகம் பேர் ரசிக்கும் பாத்திரமேந்தி நடித்திருப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் நடிகர்களே இல்லை. மேலும் நவீனாக நடித்திருப்பவர் ஒரு தருணத்தில் தானே தாயாரிப்பாளர் ஆகிறேன் என்றாராம். அப்போது ஆனந்த் காந்திக்கு பணப் பற்றாக்குறை. ஆனந்த் காந்தி பதிலாய் சொன்னது இயக்குனர் என்பது உணர்வு சார் விஷயம். தாங்கள் நடிகனாக இருக்கும் வரையில் தான் என்னால் நல்ல திரைப்படத்தை தங்களை கொண்டு கொணர முடியும் என.

இப்போது படத்திற்கு செல்வோம். இத்திரைப்படத்தில் மூன்று வெவ்வேறு கதைக்களங்கள். கடைசியில் ஒன்றாக முடிவற்று ஒன்று சேர்கிறது. இந்த மூன்று கதைகளும் முதலில் சுயம் சார்ந்த தத்துவத்தையே பேசுகிறது. அவர்கள் பேசும் மொழியோ அநேக இடங்களில் மௌனமாக செல்வது படத்தின் உச்சம். இப்படத்தின் கதையை விட இதில் நான் ரசித்த காட்சிகளை சொல்லலாம் என்றே இருக்கிறேன்.

ஆலியா

கண் பார்வையை இழக்கிறாள். ஆனால் சிறந்த புகைப்பட நிபுணர். இவரின் கதாபாத்திரம் உண்மையானதும் கூட. படம் திரையிடுவதற்கு முன்னர் அவரின் டாக்குமெண்ட்ரி ஒன்றையும் காண்பித்தார்கள். அவர் செஸ் விளையாடுகிறார் போட்டோக்களை எடுக்கிறார் அடிபிசகாமல் இயல்பாய் நகர்கிறார். அவரை கொண்டாடுகிறார்கள். அவரிடம் நேரே சென்று பழகி ஆலியாவின் பாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார். ஆலியாவின் பகுதியில் நிறைய விஷயங்கள் கவர்ந்தன.

அவள் ஒலியின் மூலம் போட்டோக்களை எடுக்கிறாள். எடுத்த போட்டோவை வீட்டில் லேப்டாப்பில் போட்டு கணவனை விவரிக்க சொல்கிறாள். அவனுக்கு அந்த புகைப்படங்கள் பிடித்து போய்விட்டன. ஒவ்வொரு விஷயமாக வர்ணித்து கொண்டாடுகிறான். அவனின் வார்த்தைகளால் அவளுள் ஒரு படம் உருவாகிறது. அவளோ பிடிக்கவில்லை அழித்துவிடு என்கிறாள்.

ஆப்ரேஷன் மூலம் கண்பார்வை கிடைக்கிறது. அப்போது அவளின் புகைப்படக் கலையில் திருப்தியில்லாமல் மனதளவில் கொள்ளும் சஞ்சலத்தில் அவதியுருகிறாள். இதன் முடிவு என்ன என்பது முதல் பாதியின் முடிவு.

இதில் ஒரு காட்சி வருகிறது. நதி பிரவாகமாக ஓடுகிறது. ஆலியா அதன் மேல் இருக்கும் மரத்தாலான பாலத்தில் நின்று கொண்டிருக்கிறாள். கையில் கேமிரா. பிண்ணனி இசை இல்லை. திரையில் இருப்பதெல்லாம் நீரின் சலசலப்பு மட்டுமே. ஆலியாவின் உணர்வுகளை காட்ட முனையும் போதெல்லாம் மௌனம். மௌனமும் அலையின் சப்தங்களும் மோதிக் கொள்கின்றன. கேமிராவை மூடுகிறாள். ஆனால் அந்த மூடி கைதவறி நதியில் சென்றுவிடுகிறது. காட்சி முடிகிறது. இந்த காட்சியை காணும் போதெல்லாம் எனக்கு ஒரு சிறுகதையே நினைவிற்கு வந்தது.

அது சாரு நிவேதிதாவின் சிறுகதை. உன்னத சங்கீதம். அக்கதையில் ஒரு துறவி இருப்பார். அவரிடம் கடவுள் இருக்கிறாரா என ஒருவன் கேட்பான். அதற்கு பதிலாய் அவர் சொல்லும் விஷயம் பறவை பறந்து கொண்டிருக்கிறது என்பதே. அந்தப் பறவையும் இந்த நதியும் எனக்கு ஒரே விஷயமாய் தெரிந்தது. மீண்டும் காட்சி போட மாட்டார்களா என ஏங்கிய தருணம் அது.

மைத்ரேயர்

தத்துவத்தை தத்துவ ரீதியாகவே சொல்லும் படலம் இந்த இரண்டாவது. இதில் ஒரு காட்சியை சொல்கிறேன். அதிலேயே நான் சிக்கிவிட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.

மழை காலத்தில் கறுப்பு நிறத்தில் புழு போன்ற பூச்சி ஒன்று எல்லோர் வீட்டிலும் செல்லுமே, சிறுவர்கள் கூட ரயில் பூச்சி என்று சொல்வார்களே அந்த பூச்சி காண்பிக்கப்படுகிறது. பல மக்களின் கால்கள். யாரேனும் மிதித்துவிடுவார்களோ என ஐயம் எழுந்து கொண்டே இருக்கிறது. அப்போது ஒருவர் தாளொன்றை நீட்டி அந்த பூச்சியை எடுத்து செடியில் விடுகிறார். அவர் தான் மைத்ரேயர். அவருக்கு அருகில் இருப்பவர் அவரிடம் கேட்கிறார்
"எப்படி இருந்தாலும் இந்த பூச்சி சாகத்தானே போகிறது... அதை அங்கு விட்டு மட்டும் என்ன ? தாங்கள் சொல்லும் மோட்சம் அதற்கு கிடைக்கட்டுமே ?" என. அதற்கு அவரின் பதில்
"ஜனனம் மரணம் என்பதன் பிடியில் சிக்காமல் ஆன்மா விடுபட்டு பயணம் கொள்வதே மோட்சம். ஆனால் அதை அவரவர் தெரிவு செய்ய வேண்டுமே அன்றி அடுத்தவர் அல்ல"

இந்தப் பகுதியில் மருத்துவ தொழிற்சாலையில் மிருகங்களை வதை செய்கிறார்கள் என்பதை தடுக்க இவர் உண்ணா நோன்பு இருக்கிறார். மருந்துகளை உட்கொள்ள மறுக்கிறார். இவரின் நடிப்பு அபாரமானதும் கூட. இப்பகுதியில் நிறைய குறியீடுகள் உள்ளன. எல்லாவற்றையும் அறிந்தால் இன்னமும் கொண்டாடலாம்.

மைத்ரேயர் என்பது கூட பௌத்தத்தில் உள்ள ஒரு விஷயம். பௌத்தம் சொல்வதாவது சட்டமும் சுழற்சி முறைக்கு உட்பட்டதே. இன்று கடைபிடிக்கப்படும். நாளை மழும்பும். நாளை மறுநாள் மீண்டும் மறந்து போகும். அப்போது நான் வேறொருவனாக இருப்பேன் என்கிறார். அப்படி வந்தவர் தான் மைத்ரேயர். இதை நினைவில் வத்து அந்த பகுதியை பாருங்கள் ஆனந்த் காந்தி எப்படி உபயோகம் செய்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

நவீன்

நவீனுக்கு சிறுநீரகம் மாற்றம் நிகழ்கிறது. அடுத்து அவனுடைய அம்மாவிற்கு உடல் நலமில்லாமல் போக அவளையும் மருத்துவமையில் சேர்க்கிறான். அவன் பங்குச்சந்தை சார்ந்த தொழில் செய்பவன். சமூகப் பொறுப்புணர்ச்சியின்றி எப்போதும் பணம் என்று இருக்கிறாயே என அம்மா திட்டுகிறாள். அதே சமயம் அந்த மருத்துவமனையில் ஒரு சம்பவம் நிகழ்கிறது. ஷங்கர் என்னும் கட்டிட தொழிலாயின் சிறுநீரகத்தை அதே மருத்துவமனையில் திருடியிருக்கிறார்கள். அவனோ அப்பென்டிக்ஸ் ஆப்ரேஷனுக்காக வந்தவன். அவனுக்கு ஆப்ரேஷன் நிகழ்ந்த அடுத்த நாள் தான் நவீனுக்கு ஆப்ரேஷன் நிகழ்ந்திருக்கிறது. இதற்கு பின் என்ன நிகழ்கிறது என்பதை நகைச்சுவையோடும் சுவாரஸ்யத்தோடும் தத்துவக் கீற்றோடும் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர். படத்தின் க்ளைமாக்ஸ் க்ளாஸ்!!!!

இரண்டம் பகுதிக்காகவே மீண்டும் இத்திரைப்படத்தை என்றேனும் நிச்சயம் பார்ப்பேன். மைத்ரேயரின் பேச்சுகள் ஒவ்வொன்றும் கேட்கும் போது அவ்வளவு சுவரஸ்யமூட்டின. இப்போது கானல் நீராய் இருக்கிறது.

ஒட்டுமொத்தமாய் பார்க்கும் போது எனக்கு தருண் தேஜ்பாலின் நினைவும் வந்தது. அவரின் மூன்று நாவல்களைப் போலவே தான் இந்த மூன்று கதைகளும் பிண்ணப்பட்டிருக்கின்றன.

Alchemy of Desire - ஆலியா 
The Story of my Assassins - நவீன்
The Valley of Masks - மைத்ரேயர்

ஆனந்த காந்தியை என்றேனும் பார்க்க நேர்ந்தால் நிச்சயம் நான் கேட்கும் கேள்வி தருண் தேஜ்பாலை வாசித்திருக்கிறீர்களா என்பதே. இவ்வளவு பெரும் ஒற்றுமையை பார்க்க மெய் சிலிர்க்கவே செய்தது. மௌனத்தை கையாண்ட விதம் என்னை பல மணி நேரம் மௌனத்திலேயே உழல வைத்தது.

இப்படம் முடிந்த பின்னும் இரண்டு டாக்குமெண்ட்ரிக்களை திரையிட்டனர். எனக்கு கடைசி பேருந்து சென்று விடும் என்பதால் எழுந்து வந்துவிட்டேன்.

இப்போது யோசிக்கையில் நானும் சிக்கிக் கொண்டுள்ளேன் - இப்படம் பார்க்காமல் பலகாலம் இருந்திருக்கிறேன். இப்போது பார்த்துவிட்டேன். அப்படியேனில் நான் அதே கிருஷ்ணமூர்த்தி தானா ??????

பின் குறிப்பு : http://cineoo.com/sot/ இந்த தளத்தில் சென்று இலவசமாகவே திரைப்படத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

// நம் மனம் புரிதல் கொண்டுவிட்டால் வாழ்வியல் முறையே மாறக் கூடும்... // - உண்மை... உண்மை...

உங்களின் புரிதல் கொண்டு மறுபடியும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது...

உங்களின் மாற்றத்தை பின் குறிப்பிற்கு முன் அறிய முடிகிறது...

பாராட்டுகள்... நன்றி...

Post a comment

கருத்திடுக