North 24 Kaatham - 2013

நான் மலையாளத்தில் பார்க்கும் இரண்டாவது திரைப்படம். நான் படிக்கும் கல்லூரியில் மலையாள நண்பர்கள் அதிகம் என்பதால் எத்தனை  மலையாள சினிமா வேண்டுமென்றாலும என்னால் பார்க்க முடியும். ஆனால் அதில் ஒரு ஈர்ப்பு இல்லாமலேயே இருக்கிறது. இந்நிலையில் கேரளத்து தோழி கொடுத்த பென் ட்ரைவில் இருந்த படம் தான் North 24 Kaatham.

இதன் அர்த்தம் வடக்கே 24 மைல்கள். 


ஹரி கிருஷ்ணன்

ஐ.டியில் பணிபுரிபவன். கதையின் நாயகன். சுத்தத்தின் பால் காதல் கொண்டவன். படத்தின் முதல் காட்சியிலேயே அவன் காலை எழுந்தவுடன் செய்யும் பல் துலக்குதல், சிரிப்பு பயிற்சி, யோகா முதலியவற்றை காண்பிக்கிறார். அதனால் அடுத்தவர்களுக்கு அவன் செய்யும் இன்னல்களையும் காட்டுகின்றார். சுத்தத்தை எல்லா இடங்களிலும் பேணுபவன். உலகமே அழுக்கு தான் மட்டுமே சுத்தமானவன் என்பதை செயல்களில் காட்டும் ஒழுக்கவாதி. சுத்தத்தை தவிர எதுவுமே அவனுக்கு தெரியாது.

ஒரு அமைப்பில் ஒருவன் மட்டுமே முழுக்க ஒழுக்கவானாக இருப்பின் அந்த கூட்டத்துடன் அவனால் இயங்க முடியாது. இங்கே எல்லா கூட்டங்களும் ஒழுங்கின்மையின் கொள்கையை பின்பற்றியே வருகிறது. ஒரு நதி கட்டற்று ஓடுகின்றது. அணை கட்டுகிறோம். நதிக்கு அணை இடைஞ்சல் தான். அணையோ நன்மை செய்பவை. ஆனாலும் அதன் இயக்கம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இந்த அணை போலத் தான் நாயகனான ஹரி கிருஷ்ணன்.

இவனுடன் அலுவலகத்தில் பணிபுரியும் எவருக்கும் இவனை பிடிக்கவில்லை. இப்படி கொள்கைபிடிப்புடன் இருப்பது ஒரு வித மனநோய். அப்படிப்பட்டவன் எப்படி சகஜமாக கொண்டாட்டமாக பேசுவான் ? எல்லோரிடத்திலும் ஒரு வித தூரமே மேற்கொள்கிறான். அது பெற்றோர் ஆனாலும் சரி வேலை செய்யுமிடம் ஆனாலும் சரி. இவனை ஏதேனும் செய்ய வேண்டும் என அவனை திருவனந்தபுரத்திலுள்ள அலுவலகத்தில் நிகழும் கூட்டத்திற்கு செல்ல வைக்கின்றனர் அவனை விரும்பாதவர்களுள் சிலர்.

கோபாலன்

வயதானவர். இவன் திருவனந்தபுரம் செய்யும் ரயிலில் எதிர் பெர்த்தில் பயணம் செய்பவர். அவருக்கு ஒரு அழைப்பு வருகிறது. மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என. உடனே தான் கோழிக்கோடு செல்ல வேண்டும் என்கிறார். அடுத்த ரயில் நிலையத்தில் இறங்க முடிவெடுக்கிறார். இறங்கும் போது அலைபேசி கீழே விழுகிறது. ஒரு பெண் அவரை கைத்தாங்கலாக ப்ளாட்ஃபார்மிற்கு அழைத்து செல்கிறாள். விழுந்த அலைபேசியை நாயகன் எடுத்துக் கொள்கிறான்.

நாராயணி

பெரியவரை அழைத்து செல்லும் பெண் தான் நாராயணி. அவள் திருவனந்தபுரம் செல்ல வேண்டியவள். அவளே அவரை கோழிக்கோட்டில் விட்டுவிட்டு செல்வதாய் சொல்கிறாள். அவள் சொல்வதன் காரணம் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை என்பதறிந்தவுடனேயே அவரது உடல் க்ஷீணமடைந்துவிட்டது. அவரால் அவரின் உடலையே தூக்கிக் கொள்ள முடியவில்லை. இந்நிலையில் இவரை தனியாக விடுதல் அபாயமானது என்னும் எண்ணமே நாராயணியை அவருடன் செல்ல வைக்கிறது.

நாயகன் கைப்பேசியை கொடுக்க நினைக்கிறான் சில காரணமாக கொடுக்காமல் அவர்களின் அனுமதியும் வாங்காமல் அவர்களை பின் தொடர்கிறான். இம்மூவரின் நெடும் பயணமே இந்த கதையாய் அமைகிறது.

இவர்கள் கோழிக்கோட்டிற்கு அவசரமாக செல்ல வேண்டும் எனும் போது தான் கேரளத்தில் பந்த் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ரயில்கள் இல்லை. கடைகள் இல்லை. பேருந்துகள் சில மட்டுமே. அதிலும் இவர்கள் செல்லும் பேருந்துகள் பிரேக் டௌன் ஆகின்றன. இப்படி தொடர் இன்னல்களை கடந்து அவர்களின் பயணம் பல மனிதர்களின் ஊடாக அரங்கேறுகிறது.

கதையின் நாயகன் மற்ற இருவர்களுடன் சேர மறுக்கிறான். அவன் இருந்த நுகர்வோர் தளத்திலிருந்து வெளிவந்து விட்டான் என்பதை அவனால் உணர்ந்து கொள்ள முடிகிறது. சூழல்களின் நாற்றம் அவனை நிலைகுலையச் செய்கின்றன. தாம் எப்படி வாழ நினைத்தோம் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்னும் எண்ணம் அவனை கேள்விக் குறியாக்குகின்றது. அவனின் பயணமோ காரணமற்று மௌனத்தின் சாயலாய் நிகழ்கிறது.

இப்படத்தை பார்க்கும் போது தலைமுறைகள் படமே நினைவிற்கு வருகிறது. பாலுமகேந்திராவினைப் போன்றதொரு ஒளிப்பதிவு அழகியல் படத்தில் உள்ளது. நுகர்வோர் இழந்த பெரும் விஷயம் இயற்கை. இப்படத்தில் ஒரு காட்சி இப்படி வருகிறது. மரக்கட்டைகளால் ஆனதொரு பாலம். அதன் மேல் நடக்கும் போது பாலமே ஆடுவது போல உணரலாம். அதனடியில் நீர் ஓடி கொண்டிருக்கிறது. நாயகன் முன்னேறி பாலத்தின் மற்றொரு விளிம்பில் சென்று நின்று கொண்டான். நாயகியும் தாத்தாவும் பாலத்தின் நடுவில் நின்று நீர் கொள்ளும் சுழற்சியினை ரசிக்கிறார்கள். இங்கேயே குதிக்கலாமா என கேட்கிறாள். ரசனையின் வார்த்தைகளை பரிமாறிக் கொள்கிறார்கள். அவன் மௌனமாய் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அவர்கள் சென்ற பின் அங்கே சென்று சுழற்சியை காண்கிறான். அப்போதும் மௌனம் மட்டுமே அவனிடம் பதிலியாய் இருக்கிறது.

படத்தின் ஆதார சுருதி அன்பு. அன்பு மொழிகளற்ற உணர்வு சார்ந்த விஷயம் என்பதை பல சிறுகதைகளின் மூலம் படத்தில் காட்சியாய் விளக்கியிருக்கிறார். நாயகனை பொறுத்தவரை தனக்குள் இருக்கும் இந்த ஒழுங்கு சார் தன்மை ஒரு வியாதி என்பதே அன்பின் மூலம் தெரியவருகிறது. கோபாலன் ரயிலில் படுக்கையிலிருந்து கீழே விழும் போது அவர் தன்னை தீண்டி அழுக்கு செய்துவிடுவாரோ என கால்களை தூக்கிக் கொள்கிறான். அப்படிப்பட்டவனை அன்பு கொண்டு செல்லும் பாதை வாழ்க்கைக்கு தேவையானதை கொடுக்கிறது. எப்படி அவனை மாற்றுகிறது எனில் ஒரு காட்சியில் காலில் உள்ள சாக்ஸினை கழற்றி புல் தரையில் தன் காலை பதித்து பாதம் கொள்ளும் உணர்தலை ரசிக்கிறான்.

பயணம் தான் மனிதனுக்கு சிறந்ததொரு ஆசிரியர் என்பதை பயணம் சார்ந்த எல்லா படங்களிலும் காண முடிகிறது. இப்படத்திலும் அந்த உணர்வு குறைவின்றி வருகிறது. அனுபவமே காதல் என்று கூட ஒரு சிறுகதை வருகிறது. பழங்குடியினர் வேடத்தில் பிரேம்ஜி நடித்திருக்கிறார். அவர் தமிழர். காதலித்து திருமணம் செய்த மனைவியோ குஜராத்தி. இருவருக்கும் பரஸ்பர மொழி தெரியாது. கோபாலனுக்கோ இரண்டு பேரின் மொழிகளும் தெரியும். அப்போது கோபாலன் மூலம் அவன் அவளிடம் ஒரு கேள்வியை கேட்க சொல்கிறான். அந்த கேள்வியை பார்வையாளனாய் கேட்டவுடனேயே உடலெல்லாம் புல்லரித்து மயிர்கள் எழுந்து நின்றன. அந்த கேள்வி "அவளுக்கு என்னிடம் என்ன பிடிக்கும் என கேட்டு சொல்லுங்களேன் " என்பதே. மொழியால் ஒடுக்கப்பட்ட அன்பின் வெளிப்பாடு.

காதல் கோபாலனின் உணர்வுகளிலும் பாவங்களிலும் அவ்வளவு வெளிப்படையாய் தெரிகிறது. அழகியல் ஓவியமாய் அமைந்திருக்கிறது. தன் மனைவி மீது அவர் கொண்டிருந்த அன்பை காட்சியில் பிரமாதமாய் காட்டியிருக்கிறார்கள். நாராயணி மீது ஹரிக்கு வரும் காதலை மௌனத்தின் துணை கொண்டு காட்டியிருக்கிறார். மௌனமே ஹரி கிருஷ்ணன் யாரென சித்தரிக்கிறது.

படத்தில் கேமிரா ஒளிப்பதிவின் மூலம் இயற்கையின் ரீதியான அன்பினை காட்டியிருக்கிறார் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. படத்தில் குறைகளாக சில விஷயங்கள் தோன்றினாலும் பல நல்ல விஷயங்கள் அவற்றை மறக்க செய்கின்றன. படத்தில் நிறைய விஷயங்களை இயக்குனர் பாதி சொல்லி மீதியை சொல்லாமல் சென்றுவிடுகிறார். இதுவே நான் குறிப்பிடும் குறையானது.

ஒட்டு மொத்த படத்தில் வரும் கதாபாத்திரங்களெல்லாம் ஒருவருக்கு ஒருவர் அறிந்திராத வழிப்போக்கர்கள். அன்பினாலும் மனிதாபிமானத்தாலும் இணைகிறார்கள். அன்பு ஒரு வடிவம் கொண்டது மட்டும் அல்ல என்பதை ஒவ்வொரு காட்சியிலும் கதையின் மூலம் நிரூபிக்கிறார் இயக்குனர். படத்தின் க்ளைமாக்ஸ் க்ளாஸான ஒரு காட்சி. அது கொடுத்த உணர்வு என்னுள்ளிருந்து செல்ல மறுக்கிறது. ஆனால் இந்தக்காட்சியை பார்வையாளர்களுக்கு படத்தின் ஆரம்பத்திலேயே நாயகனின் வேறொரு உணர்வு மூலம் சொல்லிவிடுகிறார். அதை சொல்ல வேண்டாம் என இப்பதிவில் நூதனமாய் விஷயத்தை சொல்லியிருக்கிறேன். இருந்தும் சுவாரஸ்யம் குன்றவில்லை. இதையே படத்தின் மிகப்பெரிய பலமாக கருதுகிறேன். 

இது இந்த இயக்குனரின் முதல் படமாம்!!!


பின் குறிப்பு : இதில் உள்ள நிறைய காட்சிகள் தமிழில் வந்த 'தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தை ஒத்தி இருக்கும். ஆனால் அங்கே மசாலா. இங்கே உணர்வு!!!

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யமான விரிவான விமர்சனம்... நன்றி...

ரசனைக்கு வாழ்த்துக்கள்...

Post a comment

கருத்திடுக