Mystic River - 2003

பல காலமாக தமிழ்ப்படத்தினையும் பிற நாட்டுப் படங்களையும் இணைத்தே பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த முரண்பாடான தன்மையை சற்று நோக்கினால் தமிழ்ப்படங்கள் மட்டம் என்னும் நிலையிலேயே பேசப்படுகின்றது. ஆனால் காரணங்கள் சரியாக சொல்லப்படவில்லை. சமீபத்தில் ஒரு படத்தை கண்டு என் நண்பன் சொன்ன விஷயம் டிகேப்ரியோவின் நடிப்பை பார்க்கும் போது ஏன் கமலஹாசனை கொண்டாடுகிறார்கள் எனத் தெரியவில்லை என்றான். இதற்கான பதில் அப்படத்தின் இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுதுபவனிடத்தில் தான் உள்ளது.

கதையின் களன் மட்டுமே பார்வையாளனை கடைசி வரை இழுத்து செல்கிறது. இயக்குனர் சொல்லும் நடிப்பையே நடிகன் பிரதிபலிக்கிறான். அவை கொள்ளும் intense தன்மைதான் பாராட்டுதல்களை நிறைவேற்றுகின்றன.

மேலும் வெளிநாட்டுப் படங்கள், இப்படத்தை கணக்கில் கொண்டு பேசுவதால் ஹாலிவுட் படங்கள். இங்கு தயாரிக்கப்படும் படங்கள் போலவே தான் அங்கும் எடுக்கப்படுகின்றன. ஆனால் independent film making என்னும் கோட்பாடு அங்கு நிலைத் தன்மையை பெற்று மசாலா படங்களுடன் இணைந்து அவையும் கனிசமான படங்கள் என்னும் அளவில் வெளி வருகின்றன. 

Independent film making முறையை பார்த்தால் அங்கு nuances நிறைந்து இருக்கிறது. இந்த தன்மையை உணர்வுகளின் உச்சம் என சொல்லலாம். இந்த தன்மை நிறைந்து காணப்படும் படங்கள் ஏதேனும் ஒரு காட்சியிலாவது கலை என்னும் தன்மையை அடைந்து விடுகிறது. இது ஒரு கருவியே தவிர அதுவே முழுமை அல்ல. இந்த நுட்பத்தை சரியாக உபயோகபடுத்தப்பட்டு எடுக்கப்பட்டுள்ள படமே Mystic River.


இப்படத்தின் கதையை பார்த்தால் இங்கு வெளிவரும் ஒரு கமர்ஷியல் கதையை ஒத்திய ஒரு கதையமைப்பே. ஆனால் இதனுள் இருக்கும் படிமங்கள் ரொம்பவே சுவாரஸ்யமானவை. முடிந்ததை சொல்கிறேன்.

கதை யாதெனில் மூன்று சிறுவர்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஜிம்மி, ஷான், டேவ். சிமெண்ட் காரையில் தங்கள் பெயரை எழுதுகிறார்கள். அப்போது ஒரு போலீஸ் அங்கே வருகிறான். டேவை மட்டும் அழைத்துக் கொண்டு செல்கிறான். நான்கு நாட்கள் ஓரினத் தொல்லைகள் நிகழ்கின்றன. அங்கிருந்து எப்படியோ தப்பிக்கிறான்.

காலங்கள் பல கடந்து செல்கின்றன.
ஜிம்மியின் மகள் ஒரு இளைஞனை காதலிக்கிறாள். அவனை ஒரு சனிக்கிழமை மாலை சந்திக்கிறாள். அன்று பாரில் பீரை குடித்து நன்கு தோழிகளுடன் நடனமாடுகிறாள். அதே இரவு மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகிறாள்.
ஷான் அவளின் கொலையை ஆராயும் போலீஸ்.
டேவ் அவனுடைய குடும்பத்துடனும் மகனுடனும் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். அதே சனிக்கிழமை இரவு மூன்று மணியளவில் இரத்தக்கறையுடன் வீட்டிற்கு வருகிறான். மனவியிடம் தான் ஒருவனை அடித்துவிட்டேன் எனவும் அவன் மரணித்தும் இருக்கலாம் என்றும் புலம்புகிறான்.
இந்த மூன்று கதைகளின் முடிவே இப்படமும் கூட.

மிக மிக குறிப்பான விஷயம் இந்த மூன்று குறிப்புகள் இதை வாசிக்கும் எந்த வாசகனுக்கும் கதையை சொல்லப் போவதில்லை. சுவாரஸ்யத்தையும் குறைக்கப்போவதில்லை. படம் பார்க்கும் போதே நிச்சயம் இது நாவலிலிருந்து எடுக்கப்பட்ட படமாகத் தான் இருக்கும் என நினைத்தேன். அவதானிப்பு சரியாகவே இருந்தது. ஷட்டர் ஐலேண்ட் நாவலை எழுதிய டென்னிஸ் லெஹானே தான் இந்நாவலையும் எழுதியிருக்கிறார்.

இந்தப்படம் நுவான்சஸால் நிறைந்து உள்ளது என சொல்லியிருந்தேன். இங்கே வரும் பிரதான பாத்திரங்கள் எல்லாமே உணர்வுகளால் பிண்ணப்பட்டிருக்கிறது. யாருமே தங்கள் பௌதீக பூதவுடலை வைத்து தங்களின் பாத்திரத்தை நிர்ணயித்துக் கொள்ளவில்லை.

ஜிம்மியின் மனம் முழுக்க சோகமும் வெறியும் உழன்று கொண்டே இருக்கிறது. தன் மகளை கொன்றவனை பழிவாங்கியே தீர வேண்டும் என ஒவ்வொரு கணமும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறான்.

ஷான். இவன் போலீஸ் அதிகாரி. தர்க்க குதர்க்க ரீதியாக ஒரு கேஸை அணுக வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பவன். அவனின் மனதில் உணர்வுகள் ஆட்கொள்ள ஆரம்பித்தால் ஒரு கொலை சார்ந்து இயங்கும் தருணத்தில் பிசகுகள் ஏற்படலாம். இந்த விஷயத்தை நடிப்பில் மிக அழகாக காட்டியிருக்கிறார். தொழிலுக்குள் உணர்வுகள் மேலெழும் போதே நம் கொள்கைகள் தளர்ந்து விடுகின்றன. இறக்கி வைக்க வேண்டிய விஷயம் இந்த உணர்வென்னும் சுமை என்பதை விரிவாக படம் பேசுகிறது.

படத்தின் மிக மிக முக்கிய பாத்திரம் டேவ். டேவாக நடித்திருப்பவர் டிம் ராபின்ஸ். ஷாஷங்க் படத்தில் இவரின் நடிப்பை கண்டே நான் பிரமித்து போய்விட்டேன். இப்படத்தில் அவருக்குள் இன்னுமொரு ஆள் இருப்பதாகவே நடித்திருக்கிறார். மெய்மறந்து ஒவ்வொரு காட்சியையும் கண்டு களித்தேன்.

டேவிற்கு வாழ்க்கை முழுக்க நான்கு நாட்களின் அனுபவம் துரத்திக் கொண்டே இருக்கின்றது. மகன் இரவு தூங்கும் போது கதை சொல் என்கிறான். டேவோ தான் சிக்கிக் கொண்டதை ஓநாய்களாக்கிக் கொண்டு புனைவாக சொல்கிறான்.

டேவின் மனைவியாக நடித்திருப்பவளின் நடிப்பு டேவின் நடிப்பை இன்னமும் ஆழமாக்குகிறது. கணவன் யாரையோ கொலை செய்திருக்கிறான் என்பது தெரிய வந்தவுடன் செய்தித்தாள்களையெல்லாம் தொடர்ந்து கவனிக்கிறாள். அவன் சொன்னது போல சமூகத்தில் எதுவுமே நிகழவில்லை என்பதை அறிந்து கொண்டு அவனை சந்தேகிக்கிறாள்.

ஒரு ஆண் தன் மனைவியிடமே தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளனால் புணரப்பட்டோம் என சொல்லும் போது அந்த பெண்ணும் அவள் கொடுக்கும் பதிலி உணர்ச்சிகளும் எப்படி இருக்கும் என யோசிக்க முடிகிறதா ? படத்தில் பாருங்கள் டிம் ராபின்ஸின் நடிப்பும் மனைவியாக நடித்திருப்பவரின் நடிப்பும் அவ்வளவு தத்ரூபமாய் இருக்கும். ஏதோ ஒன்றிலிருந்து எல்லோரும் தப்பிக்க நினைக்கிறோம். காரணங்கள் எப்போதும் நமக்குளே அமிழ்ந்து கொண்டிருக்கிறது. இதையே அவரின் கதாபாத்திரமாக்கியிருக்கிறார்.

படத்தின் கடைசியில் இந்த பெண்ணே பிரதானமாகிறாள். எதில் என்பது தான் உணர்வு சார் கருவின் பெரும் முடிச்சு. இந்த க்ளைமாக்ஸே இந்த படத்தின் உச்சமும் கூட.

இந்த படம் நிறைய பாலியல் சார் விஷயங்களை தன்வசம் வைத்திருக்கிறது. இருந்தும் பாலியலை காண்பிக்காமல் ஆனாலும் அதன் உணர்வை கொடுத்து செல்வது படத்தின் இன்னுமொரு நல் விஷயம்.

மீண்டும் சொல்கிறேன் இது சாதாரணதொரு படமே!

Share this:

CONVERSATION

2 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

கையில் இருக்கும் கயிற்றைப் பொறுத்து, பொம்மைகளின் ஆட்டம் உள்ளது...

விமர்சனத்திற்கு நன்றி...

Maheshe said...

Most of Sean Penn movies will be good, try seeing Dead Man walking,Into the wild.

Post a comment

கருத்திடுக