In the Valley of Elah - 2007

பன்னிரெண்டாவதில் வாசித்தேன் என நினைக்கிறேன். அதே விஷயம் சற்று வேற மாதிரி. இரண்டு மலைகள். இரண்டிற்கும் இடையே ஒரு பள்ளத்தாக்கு. அது தான் ஈலா பள்ளத்தாக்கு. பள்ளத்தாக்கின் ஒரு முனையில் இஸ்ரேலிய மனிதர்கள். மறுமுனையில் philistine மக்கள். அவர்கள் ஒரு இனத்தவர்கள். அவர்கள் தான் இஸ்ரேலியர்களின் பிரதான எதிரிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர்களில் இருக்கும் ஒருவன் கோலியாத். அவன் பிரதி வாரத்தின் ஒரு நாள் பள்ளத்தாக்கினை தாண்டி வந்து இங்கிருக்கும் மக்களிடம் என்னை எதிர்த்து சண்டையிட முடியுமா என்று கேட்கிறான். சண்டைக்கு இழுக்கிறான். யாருமே முன்வர மறுக்கிறார்கள். அப்போது தாவீது என்னும் சிறுவன் தான் எதிர்க்கிறேன் என வருகிறான். அவனுக்கு அரச மரியாதைகளும் உடைகளும் தருவிக்கப்படுகின்றன. அதையெல்லாம் மறுத்து கவணும் ஐந்து கற்களும் வாங்கிக் கொள்கிறான். கோலியாத் ஓடி அவனை எதிர்க்க வரும் பொழுது அவன் உருவைக் கண்டு மனதளவில் கொள்ளும் அச்சத்தை முதலில் எதிர்கொள்கிறான். அதைத் தாண்டி கல் கொண்டு அவனை அடித்து அழிக்கிறான். 

இந்தக் கதை எழுதவிருக்கும் படத்தில் ஒரு சிறுவனிடம் வயதான, ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ஒருவர் சொல்வது. இதே கதை படத்தின் வேறொரு இடத்தில் படத்தின் நாயகி அதே சிறுவனிடம் சொல்கிறாள். அப்போது அச்சிறுவன் கேட்கும் கேள்வி

son : But why would he let him fight a giant? He was just a boy.
mom : I don't know, sweetheart.
son : Do you think he was scared?
mom : David?
son : Yeah.
mom : I think he would have been really scared.


போர் சம்மந்தப்பட்ட படங்களில் அனைத்தும் அவர்களின் செயல்களை மையமாக பேசுகின்றதாகவே கண்டு வந்திருக்கிறேன். இந்தப்படமோ போர் சம்மந்தமான படங்களில் மாறுபட்டதாகவும் முக்கியமானதாகவும் படுகிறது. அதற்கான காரணம் இப்படம் பல தளங்களில் இயங்குகின்றது.

கதையின் மேலோட்டத்தை முதலில் சொல்லி பின் இந்த விவாதங்களுக்கு செல்கிறேன். ஈராக் நாட்டிற்கு சென்ற படை வீரர்கள் திரும்பி வருகின்றனர். ஆனால் மைக் என்பவன் மட்டும் காணவில்லை. அவனின் அப்பா அவனைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என களம் இறங்குகிறார். அப்போது பல தடயங்கள் கிடைக்கின்றன. மேலும் போலீஸில் இந்த கேஸ் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்றே சொல்கின்றனர். காரணம் இது ராணுவம் சம்மந்தப்பட்டது. அதே நிலையில் அந்த இடத்திற்கருகில் வெட்டப்பட்ட மனிதனின் பாகங்கள் கிடைக்கின்றன. அது தான் மைக். எல்லாவற்றையும் படத்தின் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டு அதன்பின் இருக்கும் மர்மங்களை திகிலின் நிமிடங்களோடு சொல்லியிருப்பது படத்தின் மிகப்பெரிய விஷயமாகப் படுகின்றது.

இப்படம் நிறைய அரசியல்களை பேசுகிறது என்று சொல்லியிருந்தேன். அதில் முதன்மையானது இந்த கேஸ் எடுக்கப்படமாட்டது என சொல்வது தான். போலீஸிற்கும் ராணுவத்திற்கும் இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளோ அல்ல்து போர்க்காலம் என்பதால் இப்படி நிகழ்கிறதா என சந்தேகம் கொள்ளும் அளவு இருவருக்கும் இருக்கும் வேறுபாடுகளை காட்டியிருக்கின்றனர். மேலும் போலீஸ் அமைப்பினுள் பெண்களை தாழ்த்தப்படுத்தும் ஆணாதிக்க நிலையையும் இப்படம் அநேக காட்சிகளில் பேசுகின்றது. இதை சமன் செய்வதற்கு நாம் எல்லோரும் நிறைய படத்தில் பார்த்த க்ளீஷே காட்சிகள் இப்படத்திலும் இடம் பெற்றிருக்கிறது.

அடுத்து நாயகன். நாயகன் தான் படம் முழுக்க நம்மை கை பிடித்து இழுத்து செல்பவன். அப்பாவாக மகனின் மரணம் கட்டவிழ்க்கப்பட வேண்டும் என்னும் எண்ணம் தழைத்தோங்கி இருக்கிறது. ஆனால் போலீஸாக வரும் கதாபாத்திரம் ஒரு காட்சியில் அவரைப் பார்த்து கேட்கிறது ஏன் தங்கள் அன்பை நிரூபிக்க எத்தனிக்கிறீர்கள் என. பதிலறியா கேள்விக்கு அவர் அளிக்கும் மௌனம் அவருக்குள் இருக்கும் எத்தனையோ கேள்விகளுக்கு பதில் சொல்கிறது. எல்லாம் முகபாவனையில்.

மனைவியை விட்டு பிரிந்து வந்து மகனிற்காக அலைந்து கொண்டிருக்கும் போது அவருள் இருந்து சோகம் வெளிப்படும் காட்சிகள் எதுவுமே காண்பிக்கப்படவில்லை. காரணம் அவருக்குள் இருப்பதெல்லாம் குரோதம் மட்டுமே. கேள்விகளை பின் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கிறார். அப்போது ராணுவத்திற்கும் போதைக்கும் இருக்கும் தொடர்புகளை அறிந்து கொள்கிறார்.

கல்லூரியில் விமானப்படை அதிகாரிகள் செய்ய வேண்டியதைப் பற்றி நிறைய சொல்வார்கள். அதில் எனக்கு பிடித்தது யாதெனில் விமானப்படை அதிகாரியும் சாதாரண பயணிகள் செல்லும் விமான ஓட்டுனரும் உயிர் விஷயத்தில் ஒன்றே என்பது தான். ஆபத்தான வேலைகள். ஆனால் அவர்களுக்குள் இருக்கும் கொண்டாட்டங்கள் அழுத்தங்களுக்கான தீர்வுகள் இளமை சார்ந்தே அமைகின்றது. எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசுபவன் தன் மகன் என்பதற்கான ஆதாரங்கள் அவர் மனதில் நிறைந்து இருக்கும் போது அவர் சந்திக்கும் மனிதர்கள் எல்லோரும் சொல்வது mike always has secrets. தன் நம்பிக்கையின் மேலேயே அவருக்கு சந்தேகம் வர ஆரம்பிக்கிறது.

ஒய்வு பெற்று ஓய்வை வயோதிகத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் சகா ஒரு காட்சியில் வருகிறார். அவரும் இவரும் இரு வேறு துருவங்கள். அதே நேரத்தில் மனைவி ஒரு காட்சியில் நீங்கள் ஏன் என் இரு குழந்தைகளையும் கொன்று விட்டீர்கள் என கத்துகிறாள். நாயகனோ கல்லினையொத்த மனதுடன் ஒழுங்குடனேயே இருக்கிறான். மரத்துப் போன மனிதநேயம் மட்டுமே அவன் உணர்வுகளை சீண்டிக் கொண்டிருக்கிறது.

மேலும் ஈராக்கில் கைதிகளிடம் ராணுவ அதிகாரிகள் செய்யும் அராஜகங்களும் இப்படத்தில் காட்டப்படுகின்றது. எல்லாமே அவரின், அப்பாவின் பார்வையில் இருப்பதால் தராசினைப் போல உணர்கிறேன். நாட்டிற்காக வேலை செய்யும், உயிர் பணயம் வைக்கும் மனிதர்களுள்ளே மிருகத்தின் வெளிப்பாடு இவ்வளவு தூரம் இருக்குமா என்பதைப் போன்றதொரு பார்வை. அதே நேரத்தில் ஒரு காட்சியில் அவர் தன் மகன் சகாக்களுடன் நைட் க்ள்ப் செல்வான் எனும் போது அங்கும் செல்கிறார். வார்த்தைகள் அதிகமற்ற அவரின் பார்வையே அவர் வாழ்ந்த வாழ்க்கை சார்ந்த ஒப்புதலை நிறைவேற்றிக் கொள்கிறது. பார்த்துக் கொண்டே இருக்கிறார், மகனைக் கண்டீர்களா என கேட்க வந்த இடத்தில் மகனின் ஞாபகம் வதைக்க, எதிரே ஒரே ஒரு உள்ளாடை போட்டிருக்கும் அவள் யாரோ ஒருவனுக்கு தன் முலைகளை வைத்து கன்னத்தை தடவிக் கொண்டிருக்கிறாள். கண்கள் ஒவ்வொரு இளைஞனையும் கவனிக்கிறது. இதுவே எத்தனையோ கதைகளை நடிப்பின் மூலம் சொல்கிறது, அக்காட்சியில்.

கதையின் அமைப்பும் என்னை கவரவே செய்கிறது. ஒரே வழியில் செல்லும் கதை மென்மையாக இரண்டாக பிரிகிறது. ஒன்று நாயகனின் பார்வையில். அவனுக்கு கிடைத்த ஒரே தடயம் ஒரு மொபைல். அதிலிருக்கும் வீடியோக்களையே ஆதாரமாக கொண்டு எல்லாவற்றையும் அறிய முற்படுகிறான். இன்னொன்றோ நாயகியாக வரும் போலீஸின் விசாரணைகள்.

கதையின் கடைசியில் கொலைகாரர்களை காண்பிக்கிறார்கள். முன்னே நாயகன். தன் மகன் கொல்லப்பட்டத்தை அவர்களே விவரிக்கிறார்கள். அப்போது நாயகன் என்ன செய்திருப்பான் என நினைக்கிறீர்கள் ? நினைப்பதற்கு அப்பால் யதார்த்தம் நிரம்பி வழியும் உன்னதமான கலை அந்த காட்சி. அந்த ஒருக் காட்சியை மட்டுமே காண நினைக்கிறேன்...திரும்ப திரும்பக் கண்டேன்.

படத்தில் வரும் இசை மும்முரத்தை அதிகப்படுத்தும் நோக்கிலேயே அமைந்திருக்கிறது. படத்தின் கடைசியில் வரும் பாடல் க்ளைமாக்ஸ் நம்மை ஆக்கும் மென்மையை சற்றும் கலைக்காமல் அப்படியே வருடுகின்றது.

அரசியல், உணர்வுகள், அப்பா மகன் நம்பிக்கைகள், கொலைகாரர்கள் சார்ந்த கோபம், குரோதம், இயலாமை, வயோதிகம், அதிகாரம் என மென்மையாக க்ரைம் கதையை இசை போல இழைந்திருக்கிறார் இயக்குனர்.


Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக