இலக்கியமும் பாலபேதத்திற்கு உட்பட்டதே!!

எப்போதும் போல் சென்ற வாரமும் கோவை இலக்கிய சந்திப்பிற்கு சென்றேன். ஆனால் இம்முறை எனக்குள் சின்னதொரு சந்தேகம் இருந்து கொண்டே வந்தது. அது என்னால் அங்கு அமர முடியுமா என்பதே. அதற்கு காரணம் முன் தினம் எனக்கு சரியான தூக்கம் இல்லை. பேருந்தில் வரும் போது கூட உறங்கியே வந்தேன். இதைவிட பயம் தீவிரமாக இன்னுமொன்றில் இருந்தது. அது அடுத்த பதிவில் வரும். இருந்தும் ஆர்வம் என்னை இழுத்து சென்றது. விவாதம் அறிமுகம் என இனிமையாய் நிறைவை நோக்கி பயணித்தது இலக்கிய சந்திப்பு.

இரா. முருகவேளும் வந்திருந்தார். அவரை சந்தித்து வெகு நாட்கள் ஆகியிருந்தன. அவரைப் பார்க்கும் போதே என் நாவல் வெளியீடு என்னுள்ளே நினைவுகளாய் சென்று வந்தது. அவரும் நானும் இலக்கிய கோட்பாடுகளின் இருவேறு முனைகளில் பயணிப்பவர்கள் என்றொரு கற்பிதம் எனக்குள் உண்டு. அவரின் எழுதும் பாணி எனக்கு பிடிக்குமே ஒழிய எனக்குள் எந்த ஒரு அல்கெமியையும் நிகழ்த்தாது. இது அவரைப் போன்று எழுதும் யதார்த்தவாத எழுத்தாளர்கள் எல்லோருக்கும் பொருந்தும். ஆனால் அவருடன் பேசும் போது என்னை மறந்து சிரித்துக் கொண்டிருந்தேன். ஒட்டு மொத்த இலக்கிய உலக ஸ்தூலங்களை சாமான்யனாய் அவர் பகடி செய்கிறார். இலக்கியம் உள்ளங்கையின் நெல்லிக்கனி என்று சொல்லும் போது குழந்தைத் தனமே தெரிந்தது. ரசித்தேன். அவரின் பேச்சுகள் நியாயமாக பட்டாலும் உள்ளே செல்ல மறுக்கிறது. என்னை மறந்து சிரித்து இலக்கியம் பேசும் ஒரே நபர் அவர் தான் என நினைக்கிறேன்.

நிகழ்வு ஆரம்பித்தது. எனக்கு பிடிக்காத சில விஷயங்கள் அடுக்கடுக்காய் நிகழ்ந்தன. இளங்கோ கிருஷ்ணனிடம்(அவரை மட்டும் நன்றாக அறிந்தமையால்) நேரடியாகவே என் மனதை உருத்திய விஷயத்தை கேட்டேன். தொடர்ந்து வந்து கட்டுரையை வாசிக்க ஆரம்பித்தனர். பேச்சு என்பதே கலை சார்ந்த ஒரு சாதனம். பேச்சிற்கு முன்மாதிரியோ தாள்களோ தேவையில்லை. இந்நிலையில் வந்தவர்களெல்லாம் வாசிக்கும் போது தளர்வு ஏற்பட்டது. உடல்நிலையும் எனக்கு இடம் கொடுக்கவில்லை. இதையே அவரிடம் கட்டுரை என்பது வாசிக்கத் தானே என கேட்டேன். அவர்வசம் காரணம் இருந்தது. காரணம் கண்டு மிரண்டும் போனேன் - நாற்பது பக்கங்களுக்கு முடிவடையா குறிப்புகள்!!!

அப்போது நறுமுகை தேவி என்பவர் எச்.பீர் முகம்மது என்பவரின் நூல் ஒன்றின் சில பகுதிகளைப் பற்றி பேச வந்தார். அப்போது தான் எனக்குள் ஒரு புத்துணர்ச்சி எழுந்தது. கைவசம் காகிதங்களே இல்லை. இருந்தது. அவற்றையும் அவர் மேஜையின் மீது வைத்துவிட்டார்.

அன்றைய நிகழ்வே முக்கியமாக எச்.பீர் முகம்மது எழுதிய நவீன அரபு இலக்கியம் என்னும் நூலை குறித்தே நிகழ்ந்தது. நறுமுகை தேவி பேச வந்தது அத்தொகுப்பில் இருக்கும் பெண்ணிய எழுத்தாளர்கள் சார்ந்த அறிமுகங்களைப் பற்றி. பெண் எழுத்தாளர்கள் காலம் காலமாக ஒடுக்குமுறைகளின் வழித்தோன்றல்களாகவே இருக்கிறார்கள் என்று நறுமுகை தேவியும் அவருக்கு முன் பேசிய அகிலாவும் சொன்னார்கள்.

அகிலா சொன்ன ஒரு விஷயம் எனக்கு நெருடலாய் பட்டது. அஃதாவது கணவன்களுக்கு மனைவியின் புகழ் தேவை ஆனால் அவனுக்கு முன் எழுதக் கூடாது. அவனின் அனுமதி தேவை அல்லது அவனில்லாத நேரங்களில் கவிதைகளை தன்னுள் அனுமதிக்க வேண்டும் என. இந்த நெருடலை நறுமுகை தேவி போக்கினார். கவிதை ஓடும் நதி போல. அங்கு யாரின் அனுமதியும் முக்கியமற்றதாகவே அமைகிறது.

இந்த ஒடுக்குமுறையிலிருந்து எந்த ஒரு பெண்ணும் வெளி வர முடியாமல் ஒவ்வொரு நாட்டின் இலக்கியங்களிலும் இது சார்ந்து பதிவுகள் இடம் பெற்றுக் கொண்டே வருகின்றன என சொன்னார். அப்போது அவர் சொன்ன ஒரு விஷயம் பிரச்சினையை ஏற்படுத்தி விட்டது. அஃதாவது ஒரு பெண். அப்பெண்ணை அவளின் அப்பாவிற்கே பிடிக்கவில்லை. அடிக்கிறார். எப்போதும் வெளியே அனுப்புகிறார். பெண்ணிற்கோ காரணம் தெரியவில்லை. ஒரு நாள் வீட்டினுள் செல்லும் போது அப்பாவும் அம்மாவும் புணர்கின்ற காட்சியை பார்க்கிறாள். காரணம் தெரிகிறது என்று சொன்னார். அப்பா மகள் உறவே இங்கே அபத்தமாய் இருக்கிறது என்று சொன்னார்.

தனசக்தி என்பவர் இதை எதிர்த்தார். அப்பா மகள் உறவை கொச்சை செய்ய வேண்டாம். தாங்கள் சொல்வது பத்து சதவிகிதமாய் இருக்கலாம். அதை மட்டுமே பிடிப்பது இலக்கிய உலகில் அபத்தமானது என்பது போல சொன்னார். அதை அவர் சொன்னதன் காரணம் பர்தாவின் முக்கியத்துவம் பற்றி பேசும் தருணத்தை ஒடுக்குமுறையின் குறியீடாய் சொன்னார். மேலும் அரபு நாடுகளில் பெண்களின் ஒடுக்குமுறைகள் இங்கிருப்பதை விட அதிகமாய் இருப்பதற்கும் உதாரணமாய் இங்கிருக்கும் பத்து சதவிகிதத்தை கையாண்டார்.

இவர்களுக்கு பின் வந்த முருகவேள் வழக்குரைஞரும் ஆகையால் தமிழகத்தில் பெண்கள் ஒடுக்குமுறையின் பகுதியாயிருக்கும் சொத்துரிமையைப் பற்றி விரிவாக கூறினார். அப்பா மகள் உறவு பலவீனமாகும் தருணமே சொத்தாய் இருக்கும் இடங்கள் தான். அதிலும் அதிகம் தமிழகமாய் இருப்பது அபத்தத்தின் அறிகுறி என சொன்னார்.

கடைசியாக பீர் முகம்மது பேசும் போது அரபு எனும் போதே நாம் எலோரும் இஸ்லாமிய மதத்தை நினைக்கிறோம். அதே தவறு. இந்தியா என கூறும் போது இந்து மதம் மட்டும் நினைவுக்கு வரக் கூடாது. அதே போல் தான் அரபு நாடுகளும் பல்வேறு பிரிவு மக்களாலும் மதங்களாலும் சூழப்பட்டு அவர்களின் மூலம் உலகிற்கு அரிய இலக்கியங்கள் வந்து கொண்டிருக்கிறது என விரிவாக சொன்னார்.

பீர் முகம்மதின் பேச்சினை ஏற்கனவே கேட்டிருக்கிறேன். அப்போது அவர் எஸ்.ரா சார்ந்து ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். யதார்த்தவாதம் இல்லை என்னும் கூற்றை அவரின் புனைவுகளுக்கு வைத்தார். அது தவறு உறுபசி அவரின் யதார்த்தவாத நாவல் என சொல்லியிருந்தேன். அதை அன்று அவரிடமே கேட்டேன். வாசித்ததில்லை வாசித்து நிச்சயம் தொடர்பு கொள்கிறேன் என்றார்.

பீர் முகம்மதுவின் பேச்சு சர சரவென செல்லக் கூடியது. அறியக் கூடிய விஷயங்களே நிறைய இருக்கும். கவனிப்பதே கடினமும் கூட. இம்முறை அந்த சரளம் அரபு இலக்கியமாய் தமிழில் அமைந்திருந்தது.

பி.கு 1 : அரபு இலக்கியங்கள் என்றாலே சாரு நிவேதிதா எழுதிய தப்புதாளாங்கள் எனும் கட்டுரை தொகுப்பே எனக்கு நினைவில் வரும். அதில் அஃப்தல் லடிஃப் லாபி என்பவர் பற்றிய ஒரு கட்டுரை இருக்கிறது. மிக முக்கிய ஆவணமும் கூட.

பி.கு 2 : இலக்கிய சந்திப்பில் இரண்டு நூல்கள் அன்பளிப்பாய் கிடைத்தன. அண்மையில் வெளியானவை. வாசித்து விரைவில் பகிர்கிறேன். கல்லூரி வேலைகளால் எல்லாம் வார்த்தைகளில் குறைக்கப்பட்டு தாமதமாகவும் கிமு பக்கங்களில் வருகிறது. . . 

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆணாக இருந்தாலும் சரி... பட்டம் தொடந்து நிலை தடுமாறாமல் பறப்பதற்கு நூல் என்ற கடிவாளம் தேவை... கடிவாளம் என்பது தந்தை, கணவன், மனைவி, சகோதரி, சகோதரர், நண்பர் என யாராகவும் இருக்கலாம்... நிகழ்ச்சியினை அறிய வைத்தமைக்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

Post a comment

கருத்திடுக