மழை குடிகொண்டிருக்கும் தெரு

ஒவ்வொரு தெருக்களும் பன்முகம் கொண்ட மனிதர்களை தனதாக்கிக் கொண்டிருக்கிறது. அம்மனிதர்களுக்கென பல்வேறு குணங்கள் சந்தோஷங்கள் துக்கங்கள் அவற்றிற்கு பின்னிருக்கும் கதைகள் என தெருக்கள் எப்போதும் பிறருக்குரிய புனைவுகளாய் நிரம்பி வழிகின்றன. முகம் அறியாத மனிதர்களாலேயே அத்தெரு உருவாகிறது. ஆனால் தெருவிலுள்ள அனைவரும் தெரு என்னும் பதத்தால் எல்லோரையும் அறிந்தே இருக்கிறார்கள். சிலருக்கு சிலர் பிடிக்கிறது. சிலருக்கு சிலரை பிடிப்பதில்லை. பிரஸ்தாபங்கள் கொண்டாட்டங்கள் பண்டிகைகள் குடும்ப விழாக்கள் என யாவும் தெருவினுள்ளும் பிரஸ்தாபிக்கப்படுகின்றன.

உறவுகள் என்னும் பதத்தை அடுத்து தெருவே முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு வீட்டில் பிரச்சினை என்றவுடன் வந்து நிற்பவன் தெருக்காரனாக மட்டுமே இருக்கிறான். அருகாமையில் இருக்கும் ஒருவன் அத்தெருக்காரர்கள் மட்டுமே. இவர்களை தன்னுள் ஏற்றுக் கொண்டாலும் தெரு சலனமற்று அமைதியாய் இருக்கிறது. தெருவின் அமைதி அலாதியானதும் கூட.

யாருமற்ற நேரங்களில் தெருக்களை கவனித்திருக்கிறீர்களா ? தெரு காட்டும் அமைதி மிகவும் வருத்தமானது. ஒரு தெரு அத்தெருவில் இருக்கும் ஒருவனுக்கு அமைதியை காட்டும் போது அத்தெருவின் வரலாறு அவன் முன் நிழலாய் படியத் தொடங்குகிறது. இந்த அமைதியை தன் நாவலில் அழகாக காட்டியிருக்கிறார் வண்ணநிலவன். நாவலோ "ரெயினீஸ் ஐயர் தெரு". வண்ணநிலவனின் எழுத்துருக்களில் நான் வாசிக்கும் முதல் நூல்.


ஆறே வீடுகளும் அவர்கள் சார்ந்த கதைகளுமாக நாவல் நீளுகிறது. ஒவ்வொருவருக்குள்ளும் கதைகள் இருந்தே வருகின்றன. இந்தக் கதைகளை ஒவ்வொன்றாக எழுதிச் செல்கிறார் ஆசிரியர். நாவலில் இது தான் கதை என எதையுமே சொல்லிவிட முடியாது. ஆறு வீடுகளில் இருக்கும் கதையும், இந்த ஆறு வீடுகளும் எப்படி எண்ணங்களால் ஒன்று சேரந்திருக்கிறது என்பதையும் அழகுற சொல்கிறார்.

சிலர் ஒரே தெருவில் இருப்பினும் அடுத்தவர்களுடன் பேசாமலேயே இருப்பர். இருந்தும் அவர்களது எணங்கள் பேசாதவர்களை சுற்றி இருந்து கொண்டே தான் இருக்கும். இது தான் தெருவின் இயல்பு. இந்த இயல்பை மாற்றவியலாது. இந்த எண்ணங்களின் ஓட்டம் நாவலில் இருக்கும் குறுகிய தெருவில் பிசகாமல் வந்திருக்கிறது.

நாவலில் இரண்டு பாத்திரங்கள் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. அவற்றை சொல்ல ஆசைப்படுகிறேன்.

இடிந்தகரையாள் - இவளுக்கு எப்போதும் காது குடைய கோழியின் இறகுகளில் இருக்கும் குச்சிகள் தேவை. இதை ஆசிரியர் விளக்கியிருப்பதை பார்த்தால் உலகமே அழிந்தாலும் இந்த கோழி இறகில் இருக்கும் சுகம் அவளை விட்டு அகலாது என்பது போல இருக்கும். A madness!

பிலோமி - இவள் போல மங்கை எல்லா தெருக்களிலுமே இருக்க தான் செய்வாள். இதே குணத்துடன் இருக்கிறாளா என்பது நிதர்சனமில்லை. மேலும் பிலோமியின் பாத்திரமும் கூட யதார்த்தமான ஒரு குணாம்சமே தவிர புனைவு அல்ல. வயதிற்கேற்ற உணர்வுகள் அவளை தொத்திக் கொள்கிறது. அக்காள் திருமணம் ஆன பிறகு அவளின் உடலிலும் அணியும் ஆடைகளிலும் தினசரி நடவடிக்கைகளிலும் ஏற்படும் மாற்றங்களை கண்டு தன்னுள்ளேயே கேள்வி எழுப்புகிறாள். அக்காள் கணவன் மீது அவளுக்கு எழும்பும் எதிர்பாலின ஈர்ப்பு அவளுக்குள் ஒரு கவர்ச்சியை அளிக்கிறது. அவள் எழுப்பும் கேள்விகளே எனக்கு அவளை பிடிக்கச் செய்தது. அதில் சில கேள்விகள்
"சாய்ந்திரம் அவ்வளவு அழகாக இருக்கிற பட்டுச்சேலை காலையில் ஏன் அவ்வளவு கசங்கிப் போகிறது ?
தலையிலுள்ள பூவெல்லாம் உதிர்ந்து வெறும் நாறும், வாடிப்போன சில பூக்களுமாய், ஏன் அந்த அழகான மல்லிகைச் சரம் தொங்க வேண்டும் ?
அக்காவுடைய கண்ணில் ஏன் அந்த கள்ளம் புகுந்தது ?"

இவர்கள் இருவரே நாவல் முடிந்தும் என்னுள் நீங்காமல் இருக்கும் கதாபாத்திரங்கள். இவர்களை தவிர இன்னமும் தெருக்கே உண்டான பெண்களை கவர்ந்திழுக்க வேண்டி சுற்றும் இளைஞர்கள் நோய்வாய்ப்பட்ட மனிதர்கள் என இந்த தெருவும் வேறு வேறு தன்மை கொண்ட மனிதர்களால் நிறைந்தே இருக்கிறது.

இந்த தெருவில் இணைபிரியாமல் மனிதர்களுடன் வாழ்வது இரண்டு விஷயங்கள். ஒன்று சுவர். இங்கிருக்கும் சுவர்கள் அடிக்கடி விழக்கூடியன. அந்த சுவரை ஆசிரியர் உருவகமாக்கியிருக்கிறார். எல்லாவற்றையும் சுவர் காண்கிறது. ஒரே உணர்வான இடிதலை மட்டுமே தன்னால் வெளிக்காட்ட முடிகிறது என்பது போல் சுவராய் நாவலின் போக்கில் சொல்லியிருக்கிறார்.

அடுத்து மழை. சுவர் துன்பத்தின் குறியீடு எனில் மழை துய்ப்பின் குறியீடு. அத்தெருமக்கள் தங்களையும் தங்களை சூழ்ந்துள்ள துன்பவியல் சூழல்களையும் மறந்து இருக்கும் நிலை மழையை காண்பது மட்டுமே. நாவல் மழையில் ஆரம்பித்து மழையிலேயே முடிகிறது.

எனக்கு இந்த நாவல் nostalgic உணர்வை அளிக்கிறது. விடுதியில் தங்கியிருப்பதால் கூட இருக்கலாம். இன்னுமொரு காரணமாக கருதுவது பிருஹன்னளை. பிருஹன்னளை நாவலில் நான் எழுதிய ஐந்தாவது தெருவானது ஊரில் நான் வசிக்கும் தெரு. தனக்குண்டான வரலாற்றையும் முரண்பாட்டு உணர்வுகளையும் நுகர்வோர் அரசியலையும் கொண்டிருக்கும் தெருவையே நான் படைத்திருந்தேன். ஆனால் நான் எழுதியிருந்த ஐந்தாவது தெரு என்னும் பகுதி ரெயினீஸ் ஐயர் தெருவைப் போல இருக்க வேண்டும் என்பது என் ஆசை. அதற்கு ரெயினீஸ் ஐயர் தெருவில் இருக்க வேண்டும். மழையுடன் பேச வேண்டும். சுவர்களுக்கு இன்பங்களையே காட்சியாக கொடுக்க வேண்டும். இயற்கையுடன் வாழ வேண்டும். இது எல்லாமே என் கற்பனையில் நாவலின் வாசிப்பில் மட்டுமே எனக்கு நிகழ்கின்றது. இந்நாவலில் வரும் எந்த ஒரு விஷயத்தையும் என் தெருவில் காண இயலாது. இயல்பான விஷயங்கள் சுவாரஸ்யமாகவும் தனிமையாகவும் தெரிகின்றன. புன்முறுவலையே நான் அதிசயிக்கும் விஷயமாய் ரசிக்கிறேன். அது தான் நான் இருக்கும் தெரு. இந்த காரணத்தினாலேயே இந்நாவல் என்னுள்ளிருந்து வெகு தொலைவில் இருக்கிறது.

கடைசியாய் ஒவ்வொரு தெருவிற்கும் பொருந்தும் வரிகளோடு இப்பதிவை முடிக்கிறேன்...

"மழையை பார்த்துக் கொண்டிருக்கும் போது எல்லோருடைய மனமும் கடவுள் தன்மையை அடைந்துவிடுகிறது. யாரும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள் போல தோன்றுவார்கள் மழையின் போது"

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிக்க வைக்கும் விமர்சனம்... நூல் அறிமுகத்திற்கு நன்றி...

முடிவில் வரிகள் உண்மை...!

Post a comment

கருத்திடுக