தொலைய நினைப்பவனின் கதை (2)

முந்தைய பதிவை வாசிக்க - தொலைய நினைப்பவனின் கதை (1) (க்ளிக்கவும்)தேவராஜ் மீது சுற்றியிருப்பவர்கள் எல்லோரும் வெறுப்பை வெவ்வேறு விதமாக வெவ்வேறு காரணங்கள் கொண்டு உமிழும் போது தான் எங்கே செல்ல முடியும் என யோசிக்கிறான். அவனை சூழ்ந்து கொண்டிருக்கும் தளத்திலிருந்து அவனாகவே விடுவித்துக் கொள்ள பிரயாசைக் கொள்கிறான். தன் மீது குவியப்பட்டிருக்கும் அடையாளங்களை மாற்ற வேண்டும் என தீர்க்கமாக நம்புகிறான். அவன் செய்யும் நீண்டநெடும் பயணம் தான் நிமித்தம் நாவல். அந்த பயணத்தில் அவன் சந்திப்பவையெல்லாம் ஏமாற்றங்கள் மட்டுமே.

மேலும் மனித இயல்பு தன்னை உலகத்தோடு ஒன்றி ஒப்பிடுவதோடல்லாமல் உலகத்தையே தன் கோடுபாடுகளுக்குள்ளும் தன் வேதனைக்குள்ளும் இணைக்க முயல்வது. சர்க்கஸ் செல்கிறான். அங்கிருக்கும் மிருகங்கள் தங்களின் இயல்பை விட்டுத் தள்ளி எவனோ செய்யும் அதிகாரத்திற்கு அடிபணிந்து தேவையற்றதை செய்கின்றன. அதையும் தன் காதையும் இணைக்கிறான். நாவல் எங்கு சென்றாலும் எவற்றை பேசினாலும் காதில் வந்து முடிகிறது. கண்ணாடியில் காதைப் பார்க்கும் போது அவன் கொள்ளும் உணர்வுக்ள் அவனுக்குள் நிகழும் தர்க்கங்கள் அவ்வளவு அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

நாவலில் இரண்டாவது அத்தியாயம் மிக மிக முக்கியமான ஒன்று. ஒட்டு மொத்த நாவலிலும் எனக்கு பிடித்த பக்கங்கள் இரண்டாவது அத்தியாயமானகனவுகளும் வளர்கின்றனஎன்பது தான். ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தேன். இவர்களுக்கான மாற்றுப்பாதை எப்படி இருக்கும் என்பதையும் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார் என. அதற்கான உன்னதமான பக்கங்கள் இந்த இரண்டாவது அத்தியாயம். கனவுகள் என்பது நம் ஆழ்மனதின் வெளிப்பாட்டினை ஒத்தவையே. அதை நம்மால் மாற்ற இயலாது. இப்படிப்பட்ட கனவுகள் நமக்கு வரக்கூடாது எனில் நமக்குள்ளிருந்து நாம் வெறுக்கும் நிகழ்வுகள் சார்ந்த நினைவுகள் இருத்தல் கூடாது. நம்மால் நிர்ணயிக்கக் கூடியது அன்று அவை. நாம் கனவுகளை கொண்டாடுவதற்கான காரணமும் அதுவே. புறவுலகத்தில் நிகழ்த்த முடியாத அநேக விஷயங்களை ஆசையாய் மனதளவில் வைத்திருக்கிறோம். நம்மை மறந்து புறவுலகத்திலிருந்து தூக்கத்தின் மூலம் நம்மைப் பிரிந்து  இருக்கும் போது கனவுகளின் வாயிலாக அவை நம்மை சேர்கின்றன. கனவுகள் நீடிக்காதா என ஆசை கொள்கிறோம்.

பகல் வேலைகளில் கனவை அசை போட ஆசைப்படுகிறோம். இங்கோ தேவராஜ் மனதில் இருப்பதெல்லாம் சாமான்யனின் வாழ்க்கை மட்டுமே. ஆம் அவனை சமூகம் புறந்தள்ளுவதால் தானும் ஒரு சராசரியைப் போல சாமான்யனைப் போல வாழமுடியாதா என ஏங்குகிறான். அப்போது அவன் காணும் கனவுகள் அவனை எங்கெங்கோ இழுத்து செல்கிறது. அங்கு எஸ்.ரா சொல்லும் விஷயங்கள் கிறங்க அடிக்கும் அளவு வீரியம் கொண்டிருக்கின்றன. அவர் சொல்வதாவது

நிஜம் என்பதும் ஒரு வகை கனவு தான். அது உண்மையாக தெரிவது வெறும் கானல். நிஜத்தை உருவாக்குவது கனவுகள் தானே.

ஒருவன் கனவின் வழியே மட்டுமே விசித்திர அனுபவங்களைப் பெறுகிறான். பிரச்சினை அவன் விழித்துக் கொள்வதே.

கனவுக்குள் ஒரு பேச்சுவார்த்தை வருகிறது,

உன்னை விசாரண செய்ய வேண்டும்
நான் ஒரு தவறும் செய்யவில்லையே
கடந்தகாலத்தை நினைவில் வைத்திருப்பது குற்றம் என உனக்கு தெரியாதா ?’”

தேவராஜின் தனிமை நாவலில் முக்கியமான ஒன்று. அதை பல இடங்களில் பிறருடன் இணைத்து காட்டுகிறார். அதே விஷயத்தை கனவுகளினுடாக காட்டுவது மனதை உருக்குகிறது. கனவுகளில் நாம் கொணர விரும்புவதை வார்த்தைகளாக நினைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒருவர் சொல்கிறார். அப்போது அவன் நினைத்துக் கொள்வது குகை. காரணம் அங்கே கிடைக்கும் தனிமையும் இருளும். இது போன்ற இடங்களில் எல்லாம் தாஸ்தாயெவ்ஸ்கியின் நினைவே வருகின்றது. தாஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளில் நாயகன் எப்போதும் தனிமைக்குள் நிர்பந்திக்கப்படுபவன் போலவே சித்தரிக்கப்படுகிறான். இங்கோ தேவராஜ் தனிமையை தேடி செல்கிறான். தாஸ்தாயெவ்ஸ்கியைப் போல வீடால் தனிமை பக்கம் தேவராஜ் துரத்திவிடப்பட்டாலும் அத்தனிமையை தனதாக்கிக் கொள்கிறான். இங்கு எஸ்.ராவின் எழுத்து தாஸ்தாயெவ்ஸ்கியிடமிருந்து பிரிந்து தனித்துவம் பெறுகிறது.

அவன் செல்லும் இடங்களிலும் தனிமை துரத்துகின்றது. அதில் ஓர் இடத்தில் தான் நிகோஸ் கஸான்சாகிஸின் நினைவு ஏற்பட்டது. அவர் எழுதிய நாவல்களுள் ஒன்று ஸோர்பா தி க்ரீக். அதில் ஸோர்பா முன்முடிவுகளற்றவன். அனுபவமே வாழ்க்கை. நாம் நிர்ணயித்து நடக்காவிட்டால் மனம் கணம் கொள்கிறது. அதே நேரம் நடந்துவிட்டாலும் வேறு சில கவலைகளுள் மூழ்கி விடுகிறோம். சில நேரங்களில் அடுத்த கட்ட சிந்தனைகளுக்குள் சென்று விடுகிறோம். யாரும் முடிவுகளற்ற செயல்களை செய்வதேயில்லை. எல்லாம் முடிவு செய்யப்பட்டது என்பதும் நிலவும் கோட்பாடு. அதை நாம் வலிய இழுத்து வைத்து நினைக்க தேவையில்லை எனதே ஸோர்பா சொல்வது. இந்த நிலையை நாவலில் ஓரிடத்தில் மட்டுமே தேவராஜ் அடைகிறான். புத்தாண்டை யாரென அறியாத ஒரு மனிதனுடன் அவன் செய்யும் தர்க்க ரீதியான விவாதம் ஸோர்பா நாவலையே சில பக்கங்களில் அடக்கிய உணர்வை அளித்தது. கோணம் மட்டுமே வேறு. எப்படியெனில் ஸோர்பா சொல்வான் எனக்கு வயது அறுபது. உனக்கு அறிவுரை சொல்கிறேன். ஆனால் உன் வயதில் நானும் அதைத் தான் செய்து கொண்டிருந்தேன் என. இந்நாவலில்

நீங்களும் ஒரு வயசுல அட்வைஸ் பண்ணுவிங்க. எதை எல்லாம் செய்யக் கூடாதுன்னு நினைக்குறோமோ அதை செய்ய வைக்கறதுதான் வாழ்க்கை

மேலும் இந்நாவல் தமிழின் க்ளாஸிக் வகையுள் நிச்சயம் சேர்க்கப்பட வேண்டும். நிலப்பகுதியை விரிவாக சொல்லவில்லை. எனினும் இது கலைகள் சார்ந்து இருக்கும் அழகியலை மிக விரிவாக பகுப்பாய்கிறது. நாவலில் வரும் சில வரிகள்,

கோடுகள் முணுமுணுக்கக் கூடியவை. அவை என்னோடு பேசுகின்றன. கோடுகள் ரகசியமானவை. ஒரு கோட்டிற்கு மறுபக்கம் என்ற ஒன்றே கிடையாது. கோடுகள் தான் எழுத்துகளாக மாறியிருக்கின்றன. எண்களாக உலவுகின்றன. இந்த உலகம் கோடுகளால் ஆனது

இது மட்டுமின்றி ஃபேக்டரிகள் சார்ந்து வாசனை சார்ந்து விரிவாக பேசுகிறது. வாசனை எனும் போது யாமம் நாவலில் வரும் அத்தரை விட இந்த குறுகிய பக்கங்கள் வீரியம் மிகுந்ததாய் வாசிப்பில் தோன்றுகிறது. தமிழ் சினிமாக்கள் சார்ந்து நிறைய பக்கங்கள் வருகின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் சினிமாக்கள் மக்களுடன் இணைந்தே பயணித்து வந்திருக்கின்றன. அதை வாசிக்கும் போது மனம் சார்ந்த ஒரு ஆவணமாகவே நாவல் என்னுள் திகழ்கின்றது.

சாரு அடிக்கடி சொல்லும் விஷயம் நாம் ஹாலிவுட் பாணிகளில் திரைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஐரோப்பிய லத்தின் அமேரிக்க வகையிலான திரைபடங்களை கலையில் அணுக மறுக்கிறோம் என. ஒரு வேளை நிமித்தம் நாவலின் ஏதேனும் ஒரு பக்கத்தை திரையாக்க முயன்றாலும் அது கிழக்கில் உருவாகும் திரைப்படங்களை ஒத்தே இருக்கும். இதில் எனக்கு எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆரம்பத்தில் சொன்னதுபோல் எஸ்.ராவையே வெறுத்த நான் இப்போது நிமித்தம் நாவல் சார்ந்து, வாசித்து கொண்டாடுகிறேன். வேறு ஒரு நாவலை இப்போதே வாசிக்க வேண்டுமா இந்த போதை இன்னமும் சில நாட்களுக்கு இருக்கட்டுமே என நினைக்கிறேன் அதற்கு பிரதானமான காரணம் நாவலில் இருக்கும் களம்.

பேருந்து நிலையங்களில், கோயில்களில் தேவாலயங்களில் பிச்சைக்காரனுக்கு காசு இடும் போது தன்னை மேதாவியாக பெருந்தன்மை கொண்டவனாக தினம் தினம் ஆயிரம் பேர் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். திரிகிறார்கள். சொந்தக்காரர்களில் யாரேனும் ஊனம் எனில் அவர்களின் மேல் பச்சாதாபம் காட்டும் விதத்தில் தன் கௌரவத்தை உயர்த்த முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து எந்த ஒரு குடும்பமும் தப்பிவிடாது. யோசித்து ஒவ்வொருவரின் குணத்தையும் அருகில் இருந்து பழகிப் பார்த்தால் நன்றாக தெரியும். எனக்குள்ளும் இருக்கலாம். உங்களுக்குள்ளும் இருக்கலாம். ஆனால் பச்சாதாபமும் பரிதாப உணர்வும் வன்முறையின் ஊன்றுகோல்கள். அது சொல்பவனுக்கு எப்போதும் தெரியப் போவதில்லை. இந்த வன்முறையை எதிர்த்து ஒவ்வொரு பக்கத்திலும் தன் நிலைப்பாட்டை புனைவடிவத்தில் சொல்லியிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

ஒரு இடத்திலும் பிசகாமல் தொலைந்து போக நினைக்கும் ஒரு மனிதனின் கதையை, உருக்கமான கதையை அழகியலுடன் சொல்லியிருக்கும் நிமித்தம் எழுத்தின் உச்சம் என்றே சொல்ல நினைக்கிறேன். நினைப்பதெல்லாம் சொல்ல முடியவில்லையே என ஆற்றாமை என்னை நிறைக்கிறது. ஒரு விதத்தில் இந்த ஆற்றாமையும் தேவராஜ் கொள்ளும் உணர்வும் இணைகிறதோ என்றும் தோன்றுகிறது.

பின் குறிப்பு : இந்த நாவலை உலகளாவிய க்ளாஸிக் என கொண்டாடினாலும் இதை நான் மீள்வாசிப்பு செய்ய மாட்டேன். அதை அடுத்த பதிவில் எழுதுகிறேன். அது என் தனிப்பட்ட வாழ்க்கையுடன் தொடர்புடைய கருத்தாக்கம் என்பதால் நூல் சார்ந்து எழுதிய இப்பதிவுகளுடன் இணைக்க விரும்பவில்லை. மேலும் தாஸ்தாயெவ்ஸ்கி மற்றும் கஸான்சாகிஸ் படைப்பின் சிலவற்றை இணையத்தில் எழுதியுள்ளேன். அவற்றின் லிங்குகள். . . 

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_15.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Post a comment

கருத்திடுக