முகவரியில்லாமல் அலைவுறுகிறேன் (1)

சில நாட்களுக்கு முன் மோக முள் நாவல் சார்ந்து சேலத்திலுள்ள பாலம் புக் மீட்டில் பேசினேன். பதிவு செய்தல் எனக்கு பிடித்தமான ஒன்று. பேச்சு வடிவத்தில் அதை அங்கு செய்தேன். அது எனக்கு முழுதும் புதுமையான அனுபவம். இருந்தும் எழுத்தில் செய்யும் பதிவு ஒரு திருப்தியை கொடுக்கிறது. அந்த ரீதியில் மோக முள் சார்ந்த என் கருத்தை பதிவாய் அளிக்கிறேன்.

                                    *****

அளவில் பெரியதாய் இருக்கும் நாவல்களைக் கண்டாலே எனக்கு சற்று பயம் ஏற்படும். அதற்குண்டான காரணம் சில நேரங்களில் அவை அதி சுவாரஸ்யமாய் நம்மை இழுத்து கடைசி பக்கம் வரை கொண்டு சென்று பேரின்பத்தை கொடுக்கும். இதன் மறுபுறம் நம்மை அப்படியே இன்னமும் எத்தனை பக்கங்கள் இருக்கிறது என்று பார்க்கத் தூண்டிக் கொண்டே இருக்கும். இந்த இரண்டாம் ரகத்தை இதுநாள் வரை உணர்ந்ததில்லை. இருந்தும் பயம் மட்டும் என்னிடம் எப்போதும் சேகரமாய் இருக்கிறது.

இந்த பயமே ஆச்சர்யம் கொள்ளும் வகையாய் ஒரு நாவலை வாசித்தேன். அவ்வளவு வேகமான வாசிப்பை, வெறும் வாசிப்பு என்பதை விட வாசிப்பனுபவத்தை நான் உணர்ந்ததில்லை. அப்படி ஒரு உன்னத அனுபவத்தை அளித்த நாவல் தி.ஜானகிராமனின்மோக முள்”.இந்த நாவலை அநேக முன்னணி எழுத்தாளர்களும் இலக்கியவாதிகளும் இலக்கிய அறிமுகமாக சொல்லியிருக்கிறார்களே அன்று கொண்டாடவில்லை. முக்கால்வாசிப் பேர் கொண்டாடுவது எல்லாம் அம்மா வந்தாள் என்னும் நாவலைத் தான். இந்நாவலோ என்னை எங்கோ இழுத்து செல்கிறது. அநேக இடங்களில் தாஸ்தாயெவ்ஸ்கி நாவலை வாசிக்கும் போது ஏற்படும் அனுபவங்களை கொடுக்கின்றது.

இந்த நாவல் சார்ந்து முதலில் சொல்ல வேண்டுமெனில் அது எனக்கு கொடுத்த முழுமை என்ற திருப்தி தான். ஆம். ஒரு புன்னைவின் முழுமையை என்னால் இங்கு உணர முடிந்தது. இதைத் தான் முன்னுரையில் சுகுமாரன் கதையாடல் கட்டுக் கோப்பானதாக இல்லை நாவல் மிக நீளமானதாக உள்ளது என்று எழுதியுள்ளார். நான் அதை முற்றிலும் மறுதலிக்கிறேன். பொன்னியின் செல்வன் நாவலை எடுத்துக் கொள்வோம். அந்நாவலில் காஞ்சி இலங்கை உறையூர் என்று அநேக ஊர்களின் வர்ணனைகள் மிக நீளமாக சொல்லப்படுகிறது. அப்படி சொல்லப்பட்டும் வாசகன் அந்த இடங்களை கற்பனையில் கொணரவில்லையெனில் கல்கி தோல்வியே தழுவுகிறார். அதைப்போலத் தான் இங்கும் நாவலின் படிமங்கள் கையாளப்பட்டுள்ளது. நாவலில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் வாசிப்பிலேயே தோன்றி வாசிப்பிலேயே தத்தமது வரலாற்றை உருவாக்கிக் கொண்டு மறைந்து விடுகிறார்கள். எந்த ஒரு கதாபாத்திரத்தையும் என்னால் நிராகரிக்க முடியவில்லை.

மேலும் இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் பல்வேறு குணம் கொண்டவைகளாகவும் அவர்களுக்கென கிளைக்கதைகள் இருந்தாலும் ஓர் இடத்தில் வந்து சேர்கிறது. நன்கு பிண்ணப்பட்ட ஒரு புனைவு என்று என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இங்கு எல்லாமே தர்க்கத்தின் அடிப்படையில் பிண்ணப்பட்டிருக்கிறது.

மோக முள் என்று பெயர் வைத்திருக்கிறாரே ஒழிய உள்ளே விரசத்திற்கு உகந்த பக்கங்கள் எதுவுமே இல்லை. மனித உணர்ச்சிகளுக்கு நாம் வைக்கும் பெயர்கள் தான் இவை. காதல் மோகத்திலும் முடியலாம், மோகமே முக்தியையும் அளிக்கலாம். இந்த இரண்டையும் அவர் குழப்பமாக முன்வைத்து செல்கிறார் நாவலில். நாம் செய்யும் உணர்வு சார் விஷயங்கள் நமக்கு எப்போதும் புலனாகப் போவதில்லை. நம் உணர்வை இன்னது தான் என்று அறுதியிட்டு ஆதாரங்களுடன் சொல்ல முடியாது. பிறர் மூலம் அவை சொல்லப்படும் போது நாம் குழப்பத்தினுள்ளேயே சென்று விடுகிறோம். இதனால் தான் தர்க்கத்தின் அடிப்படையில் பிண்ணப்பட்ட நாவல் என்றிருந்தேன்.

மோகம் சார்ந்து மட்டுமல்ல தர்க்கம். இந்நாவலில் பாபு என்றொரு கதாப்பாத்திரம் வருகிறது. அவனை சுற்றி நிகழ்வதே முழு நாவலும் கூட. அவன் இருபது வயதை தொடும் ஒரு இளைஞன். அவனின் மூளை எல்லாவற்றையும் ஏற்கும் நிலையில் இருக்கக் கூடியது. அப்படியிருக்கும் போது ஐந்து துறவிகள் போதனைகளை கொடுத்தால் அவனின் மூளை என்ன ஆகும் ? விஷயம் யாதெனில் ஐவரும் ஒரே போதனைகளை தர்க்க குதர்க்க ரீதியாக சொல்லிவிடுகிறார்கள். அவனது மூளை நிதர்சனத்தை காண மல்லுகட்டுகிறது.

இன்று யதார்த்த வாழ்க்கையில் அநேகம் பேரின் மனம் இப்படி தான் ஊஞ்சலாடிக் கொண்டு இருக்கிறது. சமூகம் மற்றும் குடும்பவியல் பிரச்சினைகளில் நாம் எடுக்கும் முடிவுகளில் ஸ்திரம் கொள்ளாமல் அடுத்தவன் சொல்வதில் கொஞ்சம் செவி சாய்க்கிறோம். விளைவு நம்மை குழப்பத்தில் ஆழ்த்திவிடுகிறது. இந்த குழப்பத்திலிருந்து விடுதலைப் பெற மனிதன் காலம் தொட்டு மாற்று வழியை தேடிக் கொண்டிருக்கிறான். பாபுவும் அப்படியே செய்கிறான். அவன் செல்லும் அந்த வழியையும் விரிவாக அழகுற எழுதியிருக்கிறார் தி.ஜானகிராமன்.

மனிதனின் மனம் பலகீனமானது என்பதை இந்த பகுதியில் சூசகமாக சொல்லி சென்றிருக்கிறார். அஃதாவது நாம் மாற்றுப் பாதையின் பிடியில் சிக்கிக் கொண்டு அதன் வழியிலேயே செல்லும் போது அதனால் நாம் பழைய நிலைக்கு செல்ல முடியாமல் திண்டாடுகிறோம். பழைய இச்சைகள் பழைய குழப்பங்கள் நம்மை விட்டு ஓடியிருந்தாலும் நம் இருத்தல் சார்ந்த ஒரு குழப்பத்தை இந்த மாற்றுப்பாதை விட்டே செல்கிறது. அப்போது அவன் செல்ல வேண்டிய இடம் மாற்றுப்பாதையா அல்லது யதார்த்த வாழ்க்கையா என்பதே முக்கியமானது. இதை நாவலில் மிக அழகாக சொல்லுகிறார் தி.ஜானகிராமன்.

ந்நாவலின் கதை யாதெனில் பி. படிக்கும் பாபு என்னும் ஒரு இளைஞனுக்கு யமுனா என்ற தன்னை விட பத்து வயது மூத்த பெண் மீது காதல் ஏற்படுகிறது. இந்த காதலை வெளியிலும் சொல்ல முடியாமல் அவளுடைய வீட்டிற்கு தெரிந்தவனாய் அடிக்கடி சென்று சென்று அவளிடமும் சொல்ல முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறான். இவனின் மன உணர்ச்சிகளை மிகத் தெளிவாக சொல்கிறார்.

வேடிக்கை யாதெனில் நாவல் முழுக்க உரைநடையில் செல்கிறது. வாசிக்கும் போதோ அவனின் அகவுலகம் பேசுவதைப் போலவே இருக்கிறதுஅவன் சமூக கோட்பாடுகளால் சூழப்பட்டவன். மாற்று சிந்தனைகள் சமூகத்தில் புறந்தள்ளப்படும் போது தான் மற்றும் மாற்றாக இருந்து என்ன செய்ய முடியும் என மனதால் பயம் கொண்டு இருப்பவன்.

இந்த பயத்தை ஆரம்ப சில பக்கங்களிலேயே பார்க்க முடியும். யமுனாவை பெண் பார்க்க கோயமுத்தூரிலிருந்து ஒருவர் வருவார். அவரிடம் யமுனாவின் அம்மா இரண்டாந்தாரம் ஆனால் இரு மனைவிகளும் சுமுகமாக வாழ்கிறார்கள் எனும் போது வந்தவர்க்கு கோபம் வந்துவிடும். மேலும் அம்மா மராத்தியர் அப்பா அய்யர். இந்த ஜாதி வேறுபாட்டால் அவர் மனம் சினம் கொண்டு பாபுவிற்கும் அவருக்கும் வாய்ச்சண்டை ஏற்படும். அப்போது எனக்கு எந்த பேதமும் தெரியவில்லையே என்கிறான். இதே போன்று பல இடங்களில் எனக்கு பேதம் தெரியவில்லையே என்கிறான்.

இந்த பேதம் என்னும் விஷயம் கூட சமூகம் அவன் மேல் திணிக்கும் ஒரு அழுக்கு. அவன் தனக்குள் எக்ஸிஸ்டென்ஷியலிஸ்டாக, தனிமனிதத்துவவாதியாக இருக்கிறான். அது பல இடங்களில் சமூக எல்லைகளை மீறுவதாய் இருக்கிறது. இதை அவனுக்கு யார் மூலமாவது நாவலில் தெரியப்படுத்தும் போதெல்லாம் எனக்கு பேதம் தெரியவில்லையே என வெவ்வேறு விதமாகச் சொல்கிறான். இது பாபுவிற்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல்.


(தொடரும்)

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

உரைநடையில் எழுதுவது மிக மிக சிரமம்... ரசனையை தொடருங்கள்...

Post a comment

கருத்திடுக