Road to Perdition - 2002

சினிமாக்கள் பார்த்தே நாள் ஆகிவிட்டது போன்றதொரு உணர்வு என்னைக் கவ்விக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இன்று முழுக்க சினிமா தான் என்ற என் ஆசையில் மண்ணை வாரி போட்டது பசிபிக் ரிம் திரைப்படம். பார்க்க வேண்டும் என்ற ஆசையில் பதிவிறக்கம் செய்தேன். அது 1080 பிக்சலாம். என் கணினியின் ஸ்க்ரீன் அளவோ சிறிதாம்! விளைவு அங்கு வரும் மிருகம் கூட விட்டு விட்டு தான் நகர்கிறது. அதை சைஸ் மீண்டும் மாற்றி தான் பார்க்க வேண்டும். இந்த நிலையில் தான் டாம் ஹாங்க்ஸ் மற்றும் டேனியல் க்ரெய்க் நடித்த Road to Perdition என்னும் படம் பார்க்க நேர்ந்தது. இது குறுகிய பதிவாகவே இருக்கும்.


டாம் ஹாங்க்ஸின் சில திரைப்படங்கள் கைவசம் இருந்தாலும் நான் எதையும் பார்த்ததில்லை. அவருடைய ஒன்றைத் தவிர. அது டா வின்ஸி கோட். அதில் அவர் அதி புத்திசாலியாக மட்டுமே நடித்திருந்தார். மேலும் அது கதை சார்ந்து செல்லும் படமாதலின் அவரின் நடிப்பின் மேல் அவ்வளவு ஈர்ப்பு செல்லவில்லை.

அதே டேனியல் கிரேய்க் எனக்கு பிடித்த நடிகர். குறிப்பாக அவரின் ஆங்கில உச்சரிப்பு. அது தான் எனக்கு சுத்தமாக புரியாது. மற்றவர்களுடையதாவது எனக்கு கொஞ்சம் கொஞ்சம் புரிந்தது. இவரோ வாய்க்குள்ளேயே பேசிக் கொள்வதால் அவைப் போலவே பேச வேண்டும் என நிறைய நாட்கள் முயற்சித்தும் உள்ளேன். அவரால் ஈர்க்கப்பட்டு அவர் தொலைக்காட்சியில் வந்தாலே உற்று அவரின் உதட்டசைவுகளையும் மொழி உச்சரிப்பையும் கவனிக்க ஆரம்பித்துவிடுவேன். இப்போது அவருடைய ஆங்கிலத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.

இப்படம் இருவரின் நடிப்பையும் அழகுற கொடுக்கிறது. கதை மிக மிக மெலிதான கதை. ஜானிற்கு பிறந்த மகன் கானர்(டேனியல் கிரெய்க்). வளர்ப்பு மகன் மைக்கெல்(டாம் ஹாங்க்ஸ்). மைக்கெலுக்கு இரண்டு மகன்கள். தன் அப்பா என்ன செய்கிறார் என்பது இருவருக்கும் தெரியாது. அதை கண்டறிய மூத்தவன் அப்பாவிற்கு தெரியாமல் செல்லும் போது ஒரு உண்மையை கண்டறிந்து கொள்கிறான். கானர் செய்யும் கொலைக்கும் சாட்சியாகிவிடுகிறான். இதற்கு பின் நிகழும் விளைவுகளே மீதக் கதை.

விஸ்வரூபம் படம் வந்த போது அனைவரையும் கவர்ந்த முதல் விஷயம் படம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் வரும் சண்டைக் காட்சி. அதே போல் இப்படத்தில் படம் ஆரம்பித்த இருபத்தைந்தாவது நிமிடத்தில் ஒரு துப்பாக்கிச் சுடும் காட்சி காண்பிக்கப்படுகிறது. அதை ஸ்லோ மோஷனில் காண்பித்திருப்பார்கள். சாந்தமாக சென்று கொண்டிருந்த படத்தில் இப்படி ஒரு காட்சி வந்தவுடன் என்னையும் மறந்து கத்திவிட்டேன். அவ்வளவு அழகியலுடன் அதை செய்திருப்பார் இயக்குனர்.

மேலும் இரு நடிகருக்கும் இடையில் இருக்கும் உணர்வு ரீதியான விஷயங்களை அழகுற நடிப்பில் வெளிப்படுத்தியிருப்பார்கள். கானர் வேகம் மிக்கவன். யோசிக்க மாட்டான். மைக்கேலோ விவேகம் மிக்கவன். பகுத்தறிந்து இடமறிந்து செயல்களை நிறைவேற்றுபவன். இந்த நிலையில் தன் மகனை கொலை செய்ய வந்து விடுவானோ என சிந்திக்கும் காட்சிகளில் டாம் ஹாங்க்ஸின் நடிப்பு சூப்பர்.

குறிப்பாக ஒரு காட்சி. மைக்கேலும் மூத்தமகனும் பெர்டிஷனில் இருக்கும் சொந்தக்காரர் வீட்டிற்கு செல்லும் வழியில் ஓரிடத்தில் பேசும் போது, அப்பா மகனிடம் கேட்கிறார் உனக்கு எந்த பாடங்கள் பிடிக்கும் என. அப்போது மகன் தனக்கு பிடித்ததை சொல்லி பீட்டர்(இளையவன்)க்கு கணிதம் பிடிக்கும் என்கிறான். அப்படியா என்று கேட்டு மகனின் இச்சைகளை அன்றே உணர்ந்த அப்பாவாக டாம் ஹாங்க்ஸின் முகபாவனை அப்படியே கண்முன் நிற்கிறது.

கானரும் திரைப்படத்தில் செய்யும் ஒரு பிழைக்காக அவனுக்கு தண்டனை கொடுக்கிறார் அப்பா. தான் வீட்டினுள்ளேயே சிறைபட்டு இருக்கிறோமோ என நினைக்கும் இடங்களில் அவரின் நடிப்பும் நன்றாக வந்திருக்கிறது.

மூத்த மகனாக நடித்திருக்கும் சிறுவனின் நடிப்பு ஆரம்ப காட்சிகளில் என்னைக் கவர்ந்தது. பின்னோ, அவனை முக்கியப்படுத்தும் காட்சிகளில் கதையுடன் என்னால் ஒன்ற முடியவில்லை.

கதையில் கேமிரா காண்பிக்கும் காட்சிகள் மெய் சிலிர்க்கவைத்திருகிறது. சாதாரண கதைக்கு பெரிய உயிரோட்டமாக இந்த கேமிராவே இருப்பதாய் உணர்கிறேன்.

படத்தின் பிண்ணனி இசை எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. அங்கங்கு தெறிக்கும் வயலினின் இழை காட்சியுடன் மிக அழகாக மாறுகிறது. தனியாக கேட்டால் இந்த இசை பிடிக்குமா என்று தெரியவில்லை. காட்டப்படும் காட்சிகளை வர்ணிக்கிறது இந்த இசை. இசை அவ்வளவு உயிரோட்டமாக இப்படத்தில் இருக்கிறது.

படம் முடிந்த பின்னேயே உணர்ந்தேன். ஜான், மைக்கேல், கானர், கேமிரா, இசை போன்றவை தான் என்னை முழுப்படத்தையும் பார்க்க வைத்திருக்கிறது என்று.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக