Pleasure of the words

இன்று சேலம் பாலம் புக் மீட்டில் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் வருவதாக சென்ற வாரமே சொல்லியிருந்தனர். அவரின் அறிமுகம் எனக்கு இல்லாததாகவே இருந்து வந்திருக்கிறது. இந்நிலையில் அவரின் எழுத்துகளை வாசித்ததும் இல்லை. இருந்தாலும் செல்லலாம் என்று சென்று கடைசி சேரில் அமர்ந்து கொண்டேன். அங்கிருந்து வெளிவரும் போது ஒரே ஒரு உணர்வு மட்டுமே என்னுள் இருந்தது. என் புரிதல் மட்டுமே நித்தியத்துவம் பெற்றது அல்ல என்பதே அது. ஆம் சற்று விரிவாக சொல்கிறேன்.

யுவன் சந்திரசேகரின் தீவிர வாசகர்கள் அவரின் நூல்களைப் பற்றி விரிவாக பேசினர். அவற்றிலிருந்து புரிந்து கொண்டவை அவரின் படைப்புகள் நான் லீனியர் முறையில் நிறைய கதைகளை சொல்லிச் செல்பவை. அப்படி செல்லும் கதைகள் ஒரே குவி மையத்தில் சென்று சேர்கின்றன.மேலும் அவர் காண்பிக்கும் கருவும் பலரை எங்கோ தூக்கி சென்றிருக்கிறது.

இதன் பின் மிக நீண்ட விவாதம் நிகழ்ந்தது. அவற்றை கோர்வையாக எனக்கு கொடுக்க தெரியவில்லை என்பதால் தனித்தனியாய் சொல்கிறேன்.

COMFORT ZONE

இவரின் வடிவத்தையே நிறைய பேர் புகழ்ந்தமையால் காமேஸ்வரன் என்பவர் சடாரென ஒரு கேள்வியை எழுப்பிவிட்டார் உள்ளே எதுவும் இல்லையா என. இருந்தும் யுவன் சந்திரசேகர் மிக பொறுமையாய் பதில் அளித்தார். அவர் பதில் கொடுப்பதற்கு காரணம் கூட கேட்டவர் பாரதி புதுமை பித்தன் என்ற இருவருடைய எழுத்துகளுடன் இணைத்து சொன்னார்.  எழுத்தாளனிடம் சென்று ஏதேனும் கருத்து சொல் என்று கேட்பதே தவறு. எழுத்தாளனின் வேலையும் அதுவல்ல. மேலும் பாரதியிலிருந்து பல கிளைகள் உருவாகி அவர்களின் எழுத்துகள் சிலாகிக்க பட்டிருக்கின்றன. அதே போல் புதுமைபித்தனுக்கு பின் மணிக்கொடி எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இவர்களின் படைப்புகளை வாசிக்கும் போது முன்பே உருவாக்கப்பட்ட கோட்பாடுகளுடன் இணைத்து வாசகன் இன்புறுவான். ஆனால் இவர்கள் இரண்டையும் தாண்டி ஒரு நிலை உள்ளது. அது சற்று புரியா நிலையும் கூட. இந்த comfort zone ஐ விட்டு வெளியே இயங்குபவன் தான் நான். எனது நூல்களும் அது சார்ந்ததே என்று விரிவாக பேசினார்.

NON - LINEAR

மேலும் இந்த comfort zone இல் நேர்க்கோட்டு எழுத்துகளே அதிகம் தெரிகின்றன. அதற்கான காரணம் நேர்க்கோட்டு எழுத்து எனும் போது அங்கு ஒரே கதாபாத்திரத்தின் பல செயல்களை சொல்லிச் செல்ல வேண்டும். இவர்கள் கேட்கும் அறம் சார்ந்த ஒரு கோட்பாடு அங்கே இயங்குகின்றது. அதே நான் லீனியர் எனும் பட்சத்தில் எழுத்தாளன் என்ன சொல்ல வருகிறான் என்னும் கேள்வி எழும். காரணம் வாசகனுக்கு புரியாத பிரதி. கலைத்துப் போடபட்ட படைப்பை அடுக்கினால் அங்கு அவன் தேடுவது கிடைக்கலாம். கிடைக்கும் என்னும் எண்ணத்திலேயே வாசகன் தேடிக் கொண்டிருக்கிறான். இந்த மாதிரியான வாசிப்பு சிலருக்கு சலிப்பையும் கொடுக்கலாம்.

வாசிப்பு

வாசிப்பு எனும் போது அவர் ஒரு விஷயத்தை சொன்னார். அவர் கதைகளை வாசிப்பவர்கள் அவரிடம் கதாபாத்திரங்களின் பெயர்களைச் சொல்லி இது நீங்களா நீங்களா என்று கேட்கிறார்களாம். அதற்கான காரணம் நான் என்னும் பதம் நாவலில் வரும் போதே நான் என்பது எழுத்தாளனை குறிப்பதாக எண்ணி டைரியாக வாசிக்கிறார்கள். அதனாலேயே என் கதையில் வரும் 'நான்'ஐ தற்கொலை செய்ய வைக்கிறேன். நான் இருநூறு கதாபாத்திரங்களை படைத்திருக்கிறேன் எனில் அந்த இருநூறும் நான் மட்டுமே. இந்த இடத்தில் அவரின் கொண்டாட்டம் எனை வெகுவாக கவர்ந்தது.

METAPHYSICS

சுயத்தை மட்டுமே எழுதி கொண்டிருக்கிறீர்களா என்னும் நூதன கேள்வி எழுந்தது. அதுவும் சமூகம் என்னும் பதத்தில் கேட்கப்பட்டது. அவர் அதற்கு தான் METAPHYSICS என்னும் பதத்தை அறிமுகம் செய்தார். METAPHYSICS எனில் பௌதீகத்திற்கு அப்பால் என்றார். அமர்ந்திருக்கும் நாற்காலி போட்டிருக்கும் சட்டை நூல்களில் இருக்கும் காகிதம் அனைத்தும் பௌதீகத்தின் வெளிப்பாடு. ஆனால் அருகில் இருக்கும் புங்கமரம் பௌதீகத்தினால் வந்தது இல்லையே ? நான் கண் திறந்து இருக்கும் போது பௌதீக உலகத்தை என்னால் காண முடிகிறது. கண்ணை மூடிய உடன் நான் காணாமல் போகிறேன். கண்களை மூடியவுடன் என் மனைவி தாம்பரத்தில் பத்திரமாக இருப்பதாக தெரிகிறது. என் முன் இருப்பவருக்கு என்னால் அதை சொல்ல முடியுமே தவிர நிரூபிக்க முடியாது. அதே போல் அவர் என் கண்களுக்குள் எதுவுமே தோன்றவில்லையென்று சொன்னாலும் அதை அவரால் நிரூபிக்க முடியாது. இது தான் அனுபவம். இந்த அனுபவத்தை எழுத தான் எழுத்தாளர்கள் இருக்கிறார்களே ஒழிய சமூகத்திற்கு அறம் புகட்ட அல்ல என்று அவர் பங்கை சொன்னார்.

METAPHYSICS என்னும் பதத்தால் நகுலனின் எழுத்து மேல் இருந்த பார்வை புரிதல் அனைத்தும் மாறுதல் அடைந்திருக்கிறதோ என்று சந்தேகம் கொள்கிறேன். அனுபவத்திற்கு கொடுக்கப்படும் ஒரு மாறூபட்ட விளக்கமாக எண்ணுகிறேன்.

(SUB)(UN)CONSCIOUS

எழுத்து குறிப்பாக நான் லீனியர் எழுத்துகள் CONSCIOUSஇலிருந்து தான் வருகிறதா என்ற கேள்விக்கு அவர் கொடுத்த பதில் வியக்க வைத்தது. எல்லா எழுத்துகளுமே நினைவோடையிலிருந்து தான் வருகிறது. எதுவுமே ஆழ்மன நிலை என்று சொல்லிவிட முடியாது. எழுத ஆரம்பித்த பிறகு எழுத்து தடம் மாறுகிறது எனில் அது more CONSCIOUS ஏ ஒழிய ஆழ்மனம் கிடையாது.

AUTO(FICTION & MATIC WRITING)

AUTOFICTION பற்றி கேட்ட பொழுது எல்லா எழுத்துகளுமே இப்படி தான் ஆரம்பிக்கிறது என்கிறார். மேலும் அவர் அதற்கு ஒரு வேறுபட்ட விளக்கமும் கொடுத்தார். அஃதாவது செய்தித் தாள்களில் வரும் செய்திகளில் சிறு புனைவை சேர்த்தால் கூட அந்த அபுனைவு நம்பகத்தன்மையை இழந்து விடுகிறது. அதே புனைவில் சிறு informative விஷயங்களை சேர்த்தால் கூட நம்பகத்தன்மை அதிகமாகிறது. இது தான் AUTOFICTION உம் என்றார்.
AUTOMATIC WRITING பற்றி ஒருவர் கேட்ட பொழுது அவர் அப்படி ஒரு தனி எழுத்துவகை இல்லை என்கிறார். எல்லா எழுத்துகளுமே இதன் அடியில் வரும். எழுத்தின் ஒரு அங்கமே இது. எழுத்து தானாக எதையும் உருவாக்காது. எழுத்தாளனின் உள்ளே இருக்கும் விஷயங்களை அது வெளிக்கொண்டு வருகிறது அவ்வளவே!


PLEASURE OF THE TEXT 

ஃபூக்கோவின் கோட்பாடு எண்பதுகளிலிருந்து தமிழகத்தில் புழக்கத்தில் இருக்கிறது என்கிறார். அவர் எழுப்பும் கேள்வி அதற்கு முன் இருந்த நூல்கள் எதுவுமே வாசிப்பில் இன்பம் கொடுக்கவில்லையா என்பதே ? இந்த கோட்பாடு வாசகனிடம் வேலை செய்கிறதே ஒழிய எழுத்திலோ எழுதுபவனிடமோ இல்லை. ஒரு வாசகன் எதிர்மறை கருத்துகளை அதிகம் விரும்புபவன் எனில் அவனுக்கு அதில் மட்டுமே இன்பம் கிடைக்கும். அந்த இன்பத்தை அடைய விடாமல் தடுக்கலாமே ஒழிய அவனிடமிருந்து இன்பத்திற்கான ரசனையை பிரிக்க இயலாது.

எழுத்தாளன் - வாசகன்

எழுத்தாளனா வாசகனா எது தங்களுக்கு வசதியானது என்ற போது வாசகன் என்றே சொன்னார். அதற்கு அவர் சொன்னது எழுத்தாளன் எனும் போது நான் எனக்கு தெரிந்ததை மட்டுமே எழுதுகிறேன். அதே வாசகன் எனில் எனக்கு தெரியாததை அதிகம் நான் தெரிந்து கொள்கிறேன். மேலும் எழுத்தாளனாக நான் முழுமையடையவில்லை. வடிவங்களில் பலவற்றை முயற்சி செய்கிறேன். எதிலுமே நான் முழுமையடைவில்லை. அதே எனக்கு சந்தோஷம் அளித்து தேடலை அதிகப்படுத்துகிறது என்றார். அதற்கு ஒருவரின் பதில் முழுமையடைந்திருந்தால் அவர் ஜெயகாந்தன் ஆகியிருப்பார் என்றார்.

வேறு சில விஷயங்கள்

* ராபர்ட் ஃபெய்ன்மேன் என்பவர் தன் நூலில் எழுதியிருந்தாராம். அணுவை காண முடியுமா என்னும் கேள்விக்கு முடியும் என இரண்டு வாய்ப்புகளை கொடுத்திருந்தாராம்.
1. ஒரு துளி நீரை இருநூற்றி ஐம்பது மைலிற்கு பிரிக்க முடிந்தது எனில் அணுவை ஒரு துளியாய் காணலாம்.
2. ஒரு ஆப்பிளை உலக அளவிற்கு பெரிது செய்தால் ஒரு ஆப்பிளின் அளவில் அணுவைக் காணலாம்.

* அவர் ராமநாதபுரத்தில் வேலை பார்த்த பொழுது அவர் அலுவலகத்தில் வேலை பார்த்தவர் பொழுது போகவில்லை எனில் தாமஸ்ஹார்டி, கார்ஸியா மார்க்வேஸ் என்று வாசிப்பாராம். எப்படி இருந்தது என கேட்டால் சூப்பர் நிச்சயம் வாசிக்கணும் என்று மட்டுமே சொல்வாராம்!!!! அதே போல் சந்திப்பிலும்!!!

* மீண்டும் மீண்டும் அவரிடம் வடிவம் மட்டுமே சமூகத்திற்கு எதையும் சொல்லப் போவதில்லை எனும் போது சுந்தர ராமசாமியின் வரிகளை சொன்னார் -  நான் செய்யும் சாவி என் பூட்டை திறக்கும். உன் பூட்டையும் திறக்க வேண்டும் என்பது நிச்சயம் இல்லை.

செவிக்கும் என் புரிதலுக்கும் இன்பமாய் அவருடன் நிகழ்ந்த கலந்துரையாடல் இருந்தது. முடிந்தவரை சொல்லியிருக்கிறேன். சில விஷயங்கள் என்னுள் தேக்கமாய் தேங்கி வார்த்தை உரு எடுக்க மறுக்கின்றது. வலிய எழுத தெரியாததால் இத்துடன் முடிக்கிறேன்.

விரைவில் அவர் படைப்புகளையும் வாசிப்பேன். . . 

பின் குறிப்பு : http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5470 - இந்த லிங்கில் எனது சிறுகதை "பேனா சொல்லும் கதை" இடம் பெற்றிருக்கிறது. இது வெளிவந்து நாட்கள் எத்தனையோ கடந்து போயிருக்கிறது. இன்று தான் அறிந்து கொண்டேன். . . 

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக