நினைவுகளின் வழியே ஒரு கதைசொல்லி

சுஜாதாவின் கடவுள் என்ற புத்தகத்தில் வாசித்த ஞாபகம். அவர் சொல்வதாவது எல்லாம் நினைவுகளின் வழியே நடப்பவை தான் என. அதற்கு மேநாட்டு மேதைகள் சொன்ன தேற்ற ரீதியான விளக்கங்களையும் கொடுக்கிறார். அஃதாவது நாம் என்ன நடக்க வேண்டும் என்று மனதின் ஓரத்திலோ, அல்லது ஏதேனும் ஒரு பருவத்தில் இப்படி நிகழ்ந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று ஏதேனும் பருவத்தில் நினைத்தாலோ அது நிச்சயம் வேறு ஏதேனும் பருவத்தில் நிகழும் என்கிறார். அப்போது நாம் அந்த நினைப்பு அற்றவராய் இருக்கலாம். காரணமோ அந்த நினைப்பில்தான் சென்று அமிழ்கிறது என்கிறார்.

இந்த நினைவே ஒரு சுழி. எங்கு நம்மை இழுத்து செல்லும் என்பது நிச்சயமின்மையின் பக்கம் சாயக் கூடியது. இதற்கு இலக்கிய ரீதியான உதாரணம் நினைவுப் பாதை. அதில் நகுலன் செல்லும் நினைவின் தடங்கள் நம்மால் வாசிக்க மட்டுமே முடியும். அதைத் தவிர அசை போடவோ நினைத்துப் பார்க்கவோ இயலாது. நினைவு மனிதர்களுக்கு ஏற்ப பிரத்யேகமானது.

ஆனால் அதன் செயல்பாடோ ஒன்று போலத் தான் எல்லோரிடத்தும் இருக்கின்றது. புறவய செயல்களுக்கு சிந்தனை தர்க்க ரீதியான அர்த்தத்தை கொடுத்துக் கொண்டே இருக்கின்றது. இந்த தர்க்க ரீதியான விஷயங்களை, நமக்குள் நிகழும் விவாதங்களை நினைவு அசை போட்டுக் கொண்டே இருக்கின்றது. இந்த அசையும் ஒருவித தர்க்க குதர்க்க ரீதியான விவாதம் தான். இதை நாம் முழுமையாக சார்வதால் முடிவுகளை அதை சார்ந்து எடுக்கிறோம். இந்த முடிவுகள் அநேக நேரங்களில் அனுமானமாகவே வெளிவருகின்றது.

இந்த அனுமானங்கள் உணர்வு ரீதியான சில பாதிப்புகளை நமக்கு ஏற்படுத்துகின்றது. அப்படி நினைவுகளையும் அனுமானங்களையும் முடிவுகளையும் எடுக்கும் ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள நாவல் தான் சி.சு. செல்லப்பாவின் "ஜீவனாம்சம்".


நாவலை வாசிக்க ஆரம்பிக்கும் போது எனக்கு ஒரு பிடிப்பு இன்றியே முதல் அத்தியாயம் நகர்ந்தது. ஆனால் இரண்டாவது அத்தியாயத்திலிருந்து அந்த பிடிப்பு வந்துவிட்டது. நாவலின் கட்டமைப்பு என்னை வெகுவாக கவர்ந்தது.

ஒரு செயலில் நாவல் ஆரம்பிக்கின்றது. அந்த செயலில் இருக்கும் பிரதான பாத்திரத்தின் நினைவுகளின் வழியே கடந்தகாலம் கொஞ்சம் கொஞ்சமாக பின்னோக்க்கி நகர ஆரம்பிக்கின்றது. குறிப்பிட்ட நிலை வரை மட்டுமே இது பின்னோக்கி நகர்கின்றது என்பது முக்கியமான விஷயம். அதற்கு பின் தன் நினைவு செல்லும் இடங்களை அந்த கதாபாத்திரம் பிடித்துக் கொண்டு தர்க்க ரீதியாக தனக்குள் விவாதம் செய்ய ஆரம்பிக்கின்றது. இந்த தர்க்க ரீதியான விவாதத்தின் முடிவை நோக்கியே நாவலும் பயணிக்கின்றது.

அந்த கதாபாத்திரம் யாரெனில் சாவித்ரி. மணமாகி புக்ககத்திற்கு செல்கிறாள். சந்தோஷமாக தனக்கு கிடைக்கும் அதீத உரிமைகளை கொண்டாடிக் கொண்டிருக்கிறாள். கணவன் இறக்க மீண்டும் பிறந்தகம். அப்போது ஜீவனாம்சம் கேட்டு அண்ணன் கோர்டில் கேஸ் தொடுக்கிறான். இது எதற்கு எடுக்க வேண்டும் ? பாசத்திற்கா ? பணத்திற்கா ? என்று சில கேள்விகளை அவளின் நினைவு செய்யும் தர்க்க போராட்டத்தின் முடிவாய் தெரிய வருகிறது.

பாசத்திற்கா பணத்திற்கா என்பதற்கு நாவலில் எவ்வித பதிலும் இல்லை. காரணம் புக்ககத்திலே பாசம் தான் என பாசத்தின் எல்லை வரை சென்று பணமாகவும் இருக்கலாம் என்று நூதனமாக சொல்லி செல்கிறார். பிறந்தகத்திலோ இதே விஷயத்தை மாற்றாக சொல்லிச் செல்கிறார். நாவலின் கடைசியும் புதிராக முடிந்துவிடுகின்றது.

நாவலில் இருக்கும் சி.சு செல்லப்பாவின் முன்னுரை அதி முக்கியமானது என்று கருதுகின்றேன். எழுத்து இலக்கியம் சார்ந்து மட்டுமே புழங்கிக் கொண்டிருக்கும் இச்சைக்கு அளவற்ற ஒரு மனிதரின் வார்த்தைகளாக அதைப் பார்க்கிறேன். இந்நாவலில் வரும் சாவித்திரி எந்த ஒரு கோட்பாட்டுகளுக்குள்ளும் சிக்கமாட்டாள் ஆனால் எல்லா கோட்பாடுகளுக்குள்ளும் சென்று வருவாள் என்று அவரே கொண்டாடுவது அநாயாசமாகவும் நாவலை வாசிக்கும் போது உண்மையாகவும் இருக்கிறது.

குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் அவர் நாவலுக்கான சிறந்த விமர்சனம் அவர் எழுதியதே.

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல விமர்சனம் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது... நன்றி...

Post a comment

கருத்திடுக