மர்மமாய் ஒரு மர்மநாவல்

மர்ம நாவல்கள் எனும் போதே என் நினைவுகள் எல்லாம் கல்கியின் பக்கமே சென்று விடுகின்றது. கல்கயின் பொன்னியின் செல்வனாகட்டும் சிவகாமியின் சபதமாகட்டும் பார்த்திபன் கனவாகட்டும் அதில் பல முடிச்சுகளை வைத்துக் கொண்டே சென்று பின் ஒவ்வொன்றாக அவிழ்ப்பார்.

இலக்கிய பிரதி யாதொன்றை அலசினாலும் அங்கே பிரத்யேகமாக சில நுட்பங்களை ஆராய்ந்து கதையினூடாக அவ்வெழுத்தாளர் சொல்லிச் சென்றிருப்பார். அப்படி வெறுமனே சொல்லிச் செல்லாமல் அந்த நுட்பம் உலகியலுடன் எங்கு எப்படி ஒன்றாகிறது என்பதையும் சொல்லிச் செல்வார். இந்த இணைப்பு தான் ஒரு படைப்பை இலக்கியமாக்குகிறது என்பது நிலவும் கூற்று.

இந்த இணைப்பை வெளிப்படுத்தும் முறை எப்படி உள்ளதோ அதே அளவுகோளில் தான் முழுநாவலும் ஒப்பிடப் படுகின்றது இதை இங்கு சொன்னதன் காரணம் சிவகாமியின் சபதம் நாவலில் ஆயன சிற்பியின் சிற்பங்கள் சார்ந்த கலைக் கோட்பாடுகள் நிறைய சொல்லப்படும். ஆனால் அவை வெறும் கற்பிதம் என்னும் அளவிலேயே சொல்லப்படும். மேலும் முழு நாவலும் கூட ஒரு வரலாற்றை மட்டுமே மர்மமாய் ஒப்பித்து செல்லும்.

இப்போது என் இணையம் மூலம் அறிமுகம் செய்ய இருக்கும் நாவலோ மர்ம நாவல் என்பதையே தன் அகக் கோட்பாடாய் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. இதுவே அந்த நாவல் சார்ந்த என் முதல் ஆச்சர்யம். அந்த நாவல் தமிழவனின் "ஜி.கே எழுதிய மர்மநாவல்".


இந்த நாவலை வாசிக்க ஆரம்பித்த பொழுது எனக்கு சலிப்பே ஏற்பட்டது. காரணம் சிவகாமியின் சபதம் சாயலை ஒத்த நாவல் ஒன்றை வாசித்துக் கொண்டிருக்கிறோமே என. இந்த ஏமாற்றத்திற்கான மூலக்காரணம் யாதெனில் நான் வாசித்த தமிழவனின் மீத மூன்று நாவலகளின் மூலம் நான் ஆச்சர்யமே கொண்டிருந்தேன். இந்நிலையில் சாதாரணத்தனமான ஒரு நாவலை வாசிக்கும் போது எனக்கு ஆச்சர்யமே எழுந்தது. எதற்காக தமிழவன் மூன்றாந் தரப்பில் ஒரு நாவல் எழுத வேண்டும் என.

நாவல் சாதாரணமாக சில கதாபாத்திரங்கள் அவர்களுக்கு ஏற்படும் திடிர் திருப்பங்கள் அதன் தாக்கத்தை எழுத்தின் வீரியம் மூலம் வாசகர்களுக்கு அளிப்பது என்று நாவல் சென்று கொண்டிருந்தது. முப்பத்தி நான்கு பக்கங்கள் தாண்டியவுடன் "குறிப்பு 1" என்றொரு பதம் வந்தது. இதிலிருந்து தான் நாவலின் மேல் இருக்கும் எதிர்மறை கருத்து என்னுள்ளிருந்து அப்படியே நீங்கியது.

ஒவ்வொரு எழுத்தாளனும் தனக்கே உண்டான பாணியில் இலக்கிய ரீதியாக வாசகனை சில பொறிக்குள் இழுத்துக் கொள்கிறான். தமிழவனுக்கான பாணி இந்த குறிப்புகளில் தான் இருக்கின்றன. நாவலில் பதினோரு குறிப்புகள் இடம்பெறுகின்றன. இந்த பதினோரு குறிப்புகள் தான் நாவலின் திசையை அடியோடு மாற்றுகின்றது. நாவல் முடிந்தவுடன் நாம் புரிதல் கொள்ள வேண்டிய கதை என்ன என்பதை சிந்திக்க வேண்டுமளவு நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது.  கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதே சரியான வார்த்தையாக இருக்கும். எல்லாம் ஒருவன் செய்யும் விசித்திர சேஷ்டைகள்.

மர்மநாவல் எனும் பட்சத்தில் வாசகனுக்கு மர்மம் என்பது அதிதேவையாக இருக்கிறது. எடுத்த நூலை கீழே வைக்க முடியாமல் தொடர வேண்டிய சந்தர்ப்பத்தை கொடுக்க வேண்டிய நூலாய் இருத்தல் வேண்டும். அதற்குண்டான கதை ஒன்று நாவலில் செல்கிறது.

யுனசேனன் என்றொரு சரித்திரக்காரன் சுருங்கை நகரத்தில் இருக்கிறான். அவனைக் காண வேண்டும் என்று தேவமித்திரர் வருகிறார். அவருக்கு துணையாய் குவலயபுரம் என்னும் ஊரிலிருந்து அரையநாதர் என்பவர் வருகிறார். தேவமித்திரர் நல்ல துப்பறிவாளர். புத்த பிக்குவும் கூட. வரலாற்று நூலைப் பற்றி அறிய வந்த இடத்தில் யுனசேனன் மர்மமான முறையில் உடலில் காயங்களின்றி இறக்கிறான். அறிந்து கொள்ள வந்த இடத்தில் தேவமித்திரரும் அரையநாதரும் சேர்ந்து செய்யும் துப்பறிவுகள் தான் மீத நாவல்.

இந்த துப்பறிதல் முழுக்க முழுக்க நூல் சார்ந்து இயங்குகின்றது. இவை நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நாட்டின் நாமறிந்த சில பகுதிகளின் வரலாற்றின் மறு புனைவோ என்றும் எண்ண வைக்கிறது. வெகு எளிதாக அர்த்தம் கொள்ளும் படி புனைவை செய்து வைத்திருக்கிறார். ஆனால் அவையெல்லாம் நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று தான். இதை வாசிக்கும் போது என்ன இவ்வளவு வெளிப்படையாக உள்ளதே என்று நினைத்தேன். தமிழவன் மீது மனதளவில் ஒரு ஏளனமும் எழுந்தது.

வாசகனின் பலவீனத்தை தன் பொறியாக இந்த நாவல் கொண்டிருக்கிறது. நாவலுக்குள்ளேயே ஒரு கருத்து வருகிறது நாம் பெரிய பெரிய விஷயங்களை கவனித்து சிறு சிறு விஷயங்களை கண்டு கொள்ளாமல் சென்று விடுகிறோம் என. இந்த அபத்த மனோபாவம் நாவலின் கட்டமைப்பில் வாசகனின் வாசிப்பில் தெரியும் வண்ணம் வந்திருப்பது பிரமிப்பை அளிக்கிறது.

நாவலில் கிரேக்க முறை கட்டடக்கலை தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றது. அது சார்ந்த நிறைய விவாதங்களும் நிகழ்கின்றது. மேலும் கிரேக்கத்தையே நாவல் தன் மையமாக கொண்டிருக்கின்றது என்பதும் தெரிகிறது. அதற்கான காரணம் கிரேக்கம் ஒரு சமயத்தில் கணிதத்தை தன் மொழியாக கொண்டிருந்தது. இந்நாவல் கிரேக்கத்தின் மீதுள்ள இச்சை கொண்ட ஒரு சமூகத்தில் நிகழ்வதை மையமாக வைத்து நகர்கிறது. அங்கு நிகழும் மர்மங்களுக்கு பின்புலத்தில் எண்கள் வெவ்வேறு குறியீடுகளாய் திகழ்கின்றது. கிரேக்க தத்துவங்களை தமிழுக்கு இணைத்து கூறியிருக்கும் விஷயம் புதுமையாக இருக்கிறது.

இந்நாவலில் இருக்கும் பிரதான விஷயம் மதம். மதம் சார்ந்து மனிதனுள் திணிக்கப்படும் வெறி அவனாக எடுத்துக் கொண்டதே என்பதை நாவல் சொல்லிச் செல்கிறது. எந்த ஒரு மதமும் தன்னை அடுத்தவனிடம் திணி என்று சொல்வதில்லை. ஆனால் மதத்தை சுயநலமென எடுத்து பிறரை அடிமைபடுத்த நினைப்பவன் பிறரை ஏவுகிறான். மதத்தின் பெயரில் நிலவும் மனவுலக அரசியலை நாவலில் புனைவுலகத்தில் செய்திருக்கிறார் தமிழவன்.

துப்பறியும் நுட்பத்தைப் பற்றி நிறைய தகவல்கள், புராதனம் என்று சொல்லி வருகின்றது. இந்த மர்ம நாவல் இன்னுமொரு இடத்திலும் மற்றதைக் காட்டிலும் தனித்து நிற்கிறது. அது எந்த மர்ம நாவலாகினும் அதன் பிண்ணனியாக இருக்கும் கதையை கடைசியில் தான் சொல்வார்கள். அல்லது ஒரே இடத்தில் சொல்வார்கள். பிண்ணனி தனக்கென ஒரு குவிமையத்தை கொண்டிருக்கும். இங்கோ சொல்லப்படும் கதையே பல புதிர்களை கொண்டுள்ளது. இதுவே பிண்ணனியாக இருக்கும் என்று யூகிக்க முடியா வண்ணம் நாவல் சென்று கொண்டே பல வித வரலாற்றுக் கதைகளை மத ரீதியாக சொல்லியே செல்கிறது. இது வாசிப்பை தீவிரமாக்குவதோடு அல்லாமல் நன்கு குழப்பவும் செய்கிறது. இந்த யுக்தி எழுத்திலும் தன் தீவிரத்தை காட்ட மறக்கவில்லை.

நாவலில் நுண் சிரிப்புணர்வுகளை நிறைய வைத்து செல்கிறார். துபல் என்னும் கட்டடக் கலைஞர் தேவமித்திரரிடம் சொல்கிறார் கௌதமனின் மனைவியை இந்திரன் புணர்ந்து செல்லும் வரை தெரியவில்லை இருப்பது கணவனா வேறொருவனா என. அது போல் தங்களின் குரல் நீங்கள் தேவமித்திரனா என அறியா வண்ணம் மாறியிருக்கிறதே என்கிறார். துபலின் பார்வை மிக மிக குறைவு. வயதானவர் வேறு. அப்போது அரையநாதர் சொல்லும் வார்த்தை "உங்களுடன் பேசுவது தேவமித்திரரா என்று நாங்கள் பேசி முடித்து போகும் முன்பே சந்தேகம் வந்துவிட்டதே" என்று. இது போன்று நிறைய இடங்கள் நாவலில் வருகின்றன.

பௌத்தமும் கணிதமும் கொண்டிருக்கும் ஒற்றுமைகளை விளக்கியிருப்பது ஆச்சர்யமாகவும் அழகாகவும் இருக்கின்றன. எனக்கு தெரியாத விஷயங்களால் நாவல் நிறைந்து இருக்கிறது.

குறிப்புகள் தான் இந்நாவலை தனித்துவமான இலக்கியமாக ஆக்குகின்றது. இருந்தும் அந்த குறிப்புகள் மிகச் சிறிதாகவே இடம் பெறுகிறது. அதை விஸ்தாரமாக எழுதியிருக்க வேண்டும் என்பது என் சிறு ஆதங்கம். அப்படியிருப்பின் இந்நாவல் கொடுக்கப்பட்ட விதத்தில் உச்சமாக இருந்திருக்கும். இப்போதோ நாவலின் மையம் பலகீனமாக இருக்கின்றது. இது என் வருத்தமும் கூட.

நாவலில் வரும் கொலைகாரனை வாசகன் மனம் கண்டுவிட்டோமே என கொண்டாடினால் அதுவே வாசகனின் மேம்போக்கான வாசிப்பை குறிக்கும் பகுதியாகும். அதுவே இந்த நாவலின் வெற்றியும் கூட. 

அவரின் நாவல்களில், இதுகாறும் வாசித்த வரையில் இதுவே என்னுள் உயர்ந்து நிற்கிறது. போதையூட்டக் கூடிய அனுபவத்தை தரக் கூடியது ஜி.கே எழுதிய மர்மநாவல்

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக