வாசகனுக்கான பிரதி

இலக்கிய நண்பர்களுடன் அதிகம் பேசும் பொழுது ஒரு பொதுத் தன்மையான விஷயம் காண்பதுண்டு. அவையானது எந்த வகைமையில் இருக்கும் நாவலாகினும் வாசகன் தனக்கான பிரதி என்று எதை அப்பிரதியில் காண்கிறானோ அதுவே அவனைப் பொறுத்த வரையில் நாவலாகிறது. படைப்பாகிறது. இது எழுத்து தனக்கென வைத்திருக்கும் அரசியலும் கூட.

இந்த அரசியல் வாசகனின் வயதால் மாறுபட்டு ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு கதையை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதையே நாம் படைப்பு பன்முகம் கொண்டிருக்கிறது என்று சொல்கிறோம்.

பிருஹன்னளை நாவல் சார்ந்து இதுநாள் வரை வந்த விமர்சனங்களில் வினோத் ராஜ் ஃபேஸ்புக்கில் எழுதியிருப்பது முக்கியமானதாகப் படுகிறது. காரணம் நாவலுக்குள் புழங்கும் வயதுடன் அவரால் ஒன்ற முடிந்திருக்கிறது. அதை அவரின் விமர்சனமே தெளிவாக சொல்லுகிறது. பின்வருவது வினோதின் வரிகள்,

"கிருஷ்ணமூர்த்தியின் பிருஹன்னளை

நண்பர் கிருஷ்ணமூர்த்தியின் முதல் நாவல் "பிருஹன்னளை". நாவலை வாங்கும் பொழுதே, "பிருஹன்னளை" என்றால் என்ன? என்ற கேள்வி இருந்து கொண்டே தான் இருந்தது. நாவலை வாசித்து முடித்த பின்பு அதற்கு விடை கிடைக்குமென்று அதிகம் அலட்டிக்கொள்ளாமல் வாசிக்க ஆரம்பித்தேன். நாவல் மிக சிறியது, சரியாக சொல்லவேண்டுமெனில் 61 பக்கங்களுடைய நாவல். ஆனால் அது நம்முள் ஏற்படுத்தும் கேள்விகளும் வாதங்களும் அதிகம். நம்முள் கொஞ்சமாவது ஏதேனும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும்.

நாவலில் கதாப்பாத்திரங்களுக்கு இடையில் உரையாடல்கள் இல்லை, பேச்சு வார்த்தைகள் இல்லை. ஆனால் நாவல் முழுதும் உரையாடல் தான். ஆம், அது நாவலாசிரியர் நம்முடன் ஆற்றும் உரையாடல். கதை கூறும் முறையில், பேசுவதுப்போல் எழுதி செல்கிறார். அழகாக ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அறிமுகம் செய்துக்கொண்டே செல்கிறார். அவர் நமக்கு கதையை ஒன்றின் பின் ஒன்றாக கதாப்பாத்திரங்களாக இருந்து சொல்வதில்லை. தன் போக்கில், தன் அனுபவங்களை புனைவாக்குகிறார். ஒரு கலைஞன் பிறரை மறந்து தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த நாவலின் போக்கு அமைந்துள்ளது. 

நமக்கு மிகவும் பழக்கமான, அறிந்த கதைக்கருவும் கதையும் இந்நாவலில் இல்லை. தன் சுய அனுபவத்திலிருந்து எழுதப்பட்டவையாகவே தோன்றுகிறது. இதில் அனுபவம் குறைந்தபட்ச மாற்றங்களுடன் ஒரு வடிவம் பெற்று கலையாகிறது.

நாவலில் சில இடங்களில் நான் என்னை உணர்ந்தேன். அது ஜெயராமன் பற்றிய சில இடங்கள். அது: "இவனுக்கோ பள்ளியில் பெண் நண்பர்களே இல்லை. எப்போதுமெங்கு பார்த்தாலும் ஆண் நண்பர்கள் மட்டுமே. பெண்களிடம் பேசினாலும் அது ஒன்றிரண்டு வார்த்தைகளாக இருக்கும். பிறகு அவனே ஒதுங்கிவிடுவான். அவனுக்குள் இருந்த மனோபாவம் எங்கு பெண்கள் தன்னை தவறாக நினைப்பார்ளோ என்பது தான். இது கூட இவன் தனக்குள் வைத்திருந்த முன் முடிவுகளே." இந்த வரிகளில் நான் என்னையே கண்டேன். அதேப்போல இதைத் தொடர்ந்து வரும் வரிகள்.

சுனைத், நெய் வேத்தியம் செய்யப்பட்ட உணவை வாங்க மறுக்கும் போது, கிமு எழுப்பும் கேள்வி நியாயமானது. "இஸ்லாமிய மதம் பசியில் கூட கருணை இல்லை என்ற கொடூரத்தினையா சொல்கிறது?" இதுப்போல நிறைய கேள்விகள் உண்டு. இன்னொன்று, மரணத்தை பற்றியது. "காமத்தில் வலியினை கொண்டாட்டமாக மாற்ற முடியுமெனில் ஏன் மரணத்தில் மாற்ற முடியவில்லை?" அதேப்போல "கொண்டாட்டம் என்பது நிகழ்காலத்துக்குரியது இல்லையா?" என்ற கேள்வியை எழுப்புகிறார்.

பார்த்தசாரதி தன் கதை, கட்டுரைகளை வெளியிட செய்யும் முயற்சிகள், நாவல் வெளியிட ஆகும் செலவு பற்றி அறிந்தவுடன் வருத்தம் கொள்ளுதல், இணையத்தில் எழுதுதல், அதை விளம்பரம் செய்ய முயற்சித்தல், வாசிக்க ஆட்கள் இல்லையென புலம்புதல் எல்லாம் ஒவ்வொரு எழுத்தாளனின் துரதிஷ்டம் தான். ஒரு இடத்தில் கிமு சொல்கிறான். "அவனுடைய திறமைகள் மழுங்கடிக்கப்பட்டாலும் பரவாயில்லை. ஆனால் கண் எதிரே சிதைக்கப்படுகிறது. அதுவும் நுகராமல்.(நுகரப்படாமல்)". நியாயமான வாதம் தானே.

கிருஷ்ணமூர்த்தி கடைசியில் சில பின் குறிப்புகளில் சொல்கிறான். "(இந்த நாவலில்) ஏதேனும் புதிதாய் கிடைக்கும் எனக் கனவு கோட்டையினை கட்டியிருந்தீர்கள் எனில் உங்களுக்கு மிஞ்சப்போவது ஏமாற்றம் மட்டுமே. காரணம் நான் படைப்பாளி இல்லை. மொழிக்கு மற்றுமொரு உருவம் கொடுப்பவன், அவ்வளவே!" சரி தான். நாவலைப் படித்து முடிக்கும் முன்பே "பிருஹன்னளை" என்பதற்கான விளக்கம் கிடைத்து விட்டது. பிருஹன்னளை என்றால்.................................................... எல்லாத்தையும் உங்களுக்கு சொல்லனுமா?......... நாவலைப் படித்து நீங்களே தெரிந்துக்கொள்ளுங்கள்! 

ஙே....."

ஙேவிற்கான அர்த்தம் மட்டும் தெரியவில்லை!!!!

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக